[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ...
'தோர்ன்கிளிவ் பார்க்'... 'டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில் அமைந்திருந்த பகுதி. 'ஷாப்பிங் மால்' , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், 'டொராண்டோ டவுண் டவு'னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி. அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான். அவனது மாமா மகனின் 'அபார்ட்மென்ட்'.
தனிமையான பொழுதுகளைத் துருவித் துருவி ஆராய்ந்து , புரியாத காரணங்களுக்கு அர்த்தங்களைத் தேடுவதில் தாகமெடுத்துக் கிடக்கும் மனதின் அலைச்சலில் கழிந்து கொண்டிருந்தன பொழுதுகள் ....
கடைசியாகச் செய்துகொண்டிருந்த தொழிற்சாலை வேலை 'லெய்ட் ஓஃப்' ஆனதிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக 'அனெம்பிளாய்மென்ட்'டில் ஓடிக்கொன்டிருந்தது வாழ்க்கை. கடந்த நான்கு மாதங்களாக மாலை நேரங்களில் அந்தப் 'பார்க்கி'லேயே பெரும்பாலும் அவனது பொழுது போய்க்கொண்டிருந்தது. மாமா மகன் 'போஸ்ட் ஆபிஸ்'இல் வேலை செய்து கொண்டிருந்தான். விரைவில் அவனும் திருமணம் செய்யவிருக்கிறான். அதற்குப் பிறகு வேறிடம் பார்க்க வேண்டியதுதான்.
பார்க்கில் நன்கு இருண்டு விட்டதும் அப்படியே படுத்துக் கிடப்பான். விரிந்திருக்கும் ஆகாயத்தில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, உருமாறிக் கொண்டிருக்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பான். பார்க்கில் நடமாட்டம் குறைந்து அமைதி பூரணமாகக் குடிகொன்டிருக்கும்போதும் அவன் படுத்திருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டான். இடைக்கிடை 'பட்ரோலி'ற்காக வரும் பொலிஸ்காரும் சற்றுத் தொலைவில் நோட்டம் விட்டுச் செல்லும்.
ஆனால் அது பற்றியெல்லாம் அவன் அலட்டிக்கொள்வதேயில்லை. சுற்றிவர அவனைச் சுற்றி நடப்பவைகளைப் பற்றிய நினைவுகளே ஏதுமற்ற நிலையில் விண்ணையே வெறித்துப் பார்த்தபடி இருக்கும் கண்கள்... எதைப்பற்றி அவன் சிந்தனை வலை பின்னுகிறதோ? நடந்து விட்ட சம்பவங்களை, நிகழ்வுகளை அசை போடுவதிலா? அல்லது பிரபஞ்சத்துப் புதிரை அறியும் ஆவலிலா? சூழலில் உருவாகி விட்ட அவனது இருப்பைப் பற்றிய தேடலிலா? எதைப் பற்றி அவனது சிந்தனை மூழ்கிக் கிடக்கிறதோ?
அங்கு வழக்கமாகப் பொழுதைக் கழிக்க வருபவர்களுக்கோ அவன் பார்க்கில் ஓரங்கமாகவே மாறி விட்டிருந்தான். அண்ணாந்து வெறித்தபடி சிலையாக உறைந்துகிடக்கும் அவனை ஒருவித வியப்புடன் , ஆவலுடன் இரசித்தபடி செல்வார்கள். இடைக்கிடை செல்லும் Go புகையிரதங்கள்.. ஒரு கணமும் உறங்காது இரையும் 'டொன்வலி பார்க்வே' (Don Valley Parkway).. எதைப்பற்றியும் கண்டுகொள்ளாத, பொருட்படுத்தாத ஒருவித மோனநிலையில் .. கனவுலகில் உறைந்தநிலையில்.. தலைக்கு இரு கைகளாலும் முண்டு கொடுத்தபடி ஒரு காலை முழங்கால்வரை உயர்த்தி அதன்மேல் குறுக்காக மற்றக் காலைப் போட்டபடி ... படுத்திருப்பான். சுட்டெறித்த சூரியனும் தொலைவில் தொலைந்து நெடுநேரமாகி விட்டிருக்கும். மெல்லிய குளிர்காற்று வீசத்தொடங்கிவிடும்.
அவன் அபார்ட்மென்ட் திரும்புகையில் இரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டிருக்கும். மாமா மகன் நண்பர்களுடன் குடித்து ஓய்ந்து சோபாவில் சாய்ந்து கிடப்பான். தின்று முடித்த கோழிக் கால்கள்... அரைகுறை பியருடன் கிளாஸ்கள்.. ஓஃப் பண்ணாத நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் டி.வி. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விட்டு, ஒரு பியரைக் குடித்துவிட்டு, இருப்பதைக் கொஞ்சம் உள்ளே தள்ளிவிட்டுப் படுக்கையில் நெடுநேரம் புரண்டு கிடப்பான். அப்படியே தூங்கிவிட்டு எழும்பும்போதோ.. மாமா மகன் வேலைக்குப் போய் நெடுநேரமாகி விட்டிருக்கும். பகல் நேரம் பதினொன்றை நெருங்கி விட்டிருக்கும். பிரிட்ஜிக்குள் கிடக்கும் கோழியை ஊறவைத்து, இருப்பதை வைத்து ஏதாவது ஆக்கி வைக்கையில் பொழுது மூன்றாகிவிடும். அதன்பிறகு பழையபடி சோபாவில் சாய்ந்தபடி டி.வி.யைத் தட்டி விடுவான்.
எப்போதாவது அவனுடன் பழகிய சிலர் போன் பண்ணுவார்கள். மற்றும்படி அதே மோனநிலையில் சோபாவில் உறைந்து கிடப்பான்.
மாமா மகன் நான்கு மணிக்குப் பிறகுதான் வருவான். ஆறு மணிக்கெல்லாம் இவன் இறங்கி விடுவான் பார்க்கை நோக்கி. பிறகு வழக்கமான அதே மோனநிலை. அதே கைகளைத் தலைக்கு முண்டு கொடுத்தபடி, ஒரு காலை முழங்கால்வரை உயர்த்தி, அதன்மேல் மறுகாலைக் குறுக்காகப் போட்டு... விரிந்து கிடக்கும் ஆகாயத்தை, கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தபடி .. உறைந்து கிடக்கும் அதே மோனநிலை. சுற்றுச் சூழலில் நிகழ்வுகளை... மாற்றங்களை... இயக்கங்களைப் பற்றிய எவ்விதப் பாதிப்புகளுமேயற்ற , ஒருவித மோனநிலை. நோக்கத்தை, காரணத்தை அறிந்துவிட வேண்டும் போலொரு ஆவலில் நிலைத்து வெறித்து நிற்கும் பார்வை.
அவ்விதம் மோனநிலையில் உறைந்து கிடக்கும் நேரங்களில் அவன் முகம் பெரும்பாலும் எவ்வித சலனங்களுமேயற்ற நிலையில்தான் இருக்கும். எப்போதாவது இருந்திருந்துவிட்டு சில வேளைகளில் மெல்லியதொரு புன்னகை இழையோடி ஒரு கணப்பொழுதிலோடியொழியும். எதைப்பற்றி அவன் சிந்தித்தானோ?
அவனுக்கு என்ன நடந்தது? வழிமாறி வந்துவிட்டானா என்ன? சுற்றியிருக்கும் யதார்த்தத்தை, நிகழ்வுகளை அவனால் உணர முடியவில்லையா? அல்லது அவனாகவே அவற்றிலிருந்து விலகியோடுகின்றானா?
இப்படிப்பட்டதொரு நாளில்தான் அவள் அவனைச் சந்தித்தாள். அவனது நிலை, தோற்றம், பார்வை ... அவளுக்கு அவன் ஒரு புதிராகத் தென்பட்டான். அவனை ஆரம்பத்தில் ஒருவித ஆச்சரியத்துடன் பார்த்த அவள் அவனைப் பார்ப்பதற்காகவே தொடர்ந்து வரத் தொடங்கினாள்.
சற்றுத் தொலைவில் இருந்த அவனை நோக்கத் தொடங்கினாள். அவனோ இதுபற்றியெல்லாம் கவனித்ததாகவே தெரியவில்லை. ஆனால் அவனைப் போல் அவளால் நெடுநேரம் தங்கி நிற்க முடியாது. பார்க்கில் மெல்ல மெல்ல சனநடமாட்டம் குறையத் தொடங்குகையில் அவளும் புறப்பட்டு விடுவாள். போகும்போது ஒருமுறை கடைசியாக அவனை விழுங்குவதுபோல் பார்த்துவிட்டுத்தான் செல்வாள்.
இவ்விதமாக ஓடிக்கொண்டிருந்த கணங்களில் இருவரும் முதன்முதலாகப் பேசிக் கொண்டதே ஓர் அபூர்வமான செயல்தான். ஒரு தடத்தில் சென்று கொண்டிருந்த வாழ்வை மாற்றி வைத்து விட்ட சந்திப்பு; தொடக்கம்.
நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும். இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்
ஆரம்பத்தில் அவனைப் பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக்கொன்ட அவளால் நாளடைவில் அவள் மனதினுள் ஏற்பட்ட குறுகுறுப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. தனிமையில் ஒருவித மோனநிலையில் படுத்துக்கிடக்கும் அவனை விட்டுப் பிரிகையில் முதன் முறையாக ஒருவித தவிப்பை, இழப்பை மனம் உணர்ந்துகொண்டு அடித்துக் கொண்டது. அவனது அந்தத் தனிமையைச் சிறிதளவாவது பகிர்ந்து கொள்ள வேண்டும்போல் பட்டது. அவனது தலைமயிரைக் கோதிவிட்டு ஆறுதல் கூற வேண்டும் போலிருந்தது. அந்த மனதினுள் அலைபாயும் எண்ணங்களுக்குள் குளிக்க வேண்டும் போலொரு ஆவல்...
ஆரம்பத்தில் சிறு பொறியாக மலர்ந்த அந்தக் குறுகுறுப்பு விரைவிலேயே பெரும் தீயாகச் செறிந்து படர்ந்தது.
அன்று ஒரு பெளர்ணமி தினம். முழுமதியின் தழுவலில் இரவு மயங்கத் தொடங்கியிருந்த சமயம். அவளால் வழக்கம்போல் போக முடியவில்லை. தனக்குள்ளேயே முடிவு செய்தவளாக நெடுநேரமாக அவனையே பார்த்தபடி அவளும் சற்றுத் தொலைவில் தன்னை மறந்த நிலையில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தாள்.
அத்தியாயம் இரண்டு: தூண்டிற் புழுவினைப் போல்....
பார்க்கில் சனநடமாட்டம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. வழக்கமான அதே மோன நிலையில் ஆழ்ந்த போனபடி, சூழலுக்குள் உறைந்து விட்டவனாக அவன். முழுநிலவின் தண்மையான ஒளிச்சிதறல்கள் இதமாகப் பரவிக் கிடந்தன. மனதை நன்கு ஒரு நிலையில் நிறுத்தியவளாக மெல்ல எழுந்து அவனருகே சென்றாள். அவள் வந்ததையோ, அவனருகே நின்றபடி அவனையே வைத்த கண் வாஙகாது பார்த்தபடி அவள் நிற்பதையோ அவன் கண்டு கொள்ளவேயில்லை.
வெளியிலோ விரிந்து பரந்து கிடந்தது வெளி; பொருளும் சக்தியுமாக வியாபித்து உயிர்த்துடிப்புடன். அவன் உள்ளேயும் விரிந்து பரந்து முடிவற்று நீண்டு கிடந்தது இன்னுமொரு வெளி. அவனுக்கு மட்டுமேயுரிய அந்தரங்கமான இன்னுமொரு தளம். புற உலகின் யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்ட , உணர்வுகளே யதார்த்தங்களாக மாறிவிட்ட இன்னுமொரு உலகம். அந்த உலகத்தை ஆக்கிரமித்தநிலையில் இருப்பது .... அவன்தான் ..எக்ஸ்.. எக்ஸ்... அவனது பால்யகாலத்து நட்பின் விளைவாக உருவானவன். சுருண்ட தலையும், சிரித்த முகமும்... கனவுலகில் திரியும் கண்களும்....
கிராமத்தின் ஒரு கோடியில் நீண்ட காலமாகப் பூட்டிக்கிடந்த 'எஞ்சினியர்' வீட்டு வளவுக்குள் ஏறிப்பாய்ந்து சீமைப்பழம், விலாட், கறுத்தக்கொழும்பான் பிடுங்கிக் கவனிப்பாரற்றுக் கிடந்த 'கராஜி'னுள் வைத்துச் சுவைத்தது...
வயல் வெளியும், குளக்கரையுமாக வளர்ந்து படர்ந்த உறவின் இறுக்கம்.....
திடீரென்று இன்னுமொரு காட்சி மனவெளியில் விரிந்தது. ஆடிப்பாடிச் சிரித்து நின்ற எக்சைக் காணவில்லை. அதற்குப் பதிலாக, முகம் சோர்ந்து, வாடித்துவண்ட நிலையில் , நம்பிக்கையிழந்து, ஒடுங்கிப் போய்க் கிடக்கின்ற எக்ஸின் உருவம்... நீயுமா? பார்வையில் இயலாமை.. ஏமாற்றப்பட்ட ஒருவிதமான உணர்வுகள்... இவ்வுலகின் ஒவ்வொரு துளியின் மீதும் நம்பிக்கையிழந்து விட்ட முகம்... 'நீயுமா?' ... வேதனை கலந்த உணர்வொன்றின் வெளிப்பாட்டில் அவன் முகத்தில் மெல்லிய கோடொன்று படர்ந்திருக்கும்.
உதடுகளைக் கோணிச் சிலிர்த்துக்கொள்கிறான். அவ்வளவுதான் ... காலக் கடலுக்குள் கலந்துவிட்ட துளிகளிலொன்றாக, உணர்வுகளாகிவிட்ட உண்மை.....
"எக்ஸ்கியூஸ் மீ"
இவன் அசைவதாகக் காணோம். மோனநிலையில் உறைந்தவனாயிருக்கின்றான்.
"எக்ஸ்கியூஸ் மீ"
மீண்டும் சற்றுப் பலமாக அவள் அழைக்கின்றாள். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அரைகுறையாக விழிப்பவனின் கண்களைப் போல் ... அரைகுறையாகத் திறந்த நிலையில் அவனது பார்வை அவளை நோக்கி வெறித்து நிற்கிறது.
அளவான உயரம். மாநிறம். சேலை கட்டியிருந்தாள். சுருண்ட கூந்தலைப் பிடித்திறுக்கிய கொண்டை போட்டிருந்தாள். மதர்த்து, ஒடுங்கி, விரிந்து கிடந்த உடல்வாகு. அவளது உடலில் கண்கள் மட்டும் மிகவும் முக்கியமானதொன்றாக, ஒருவித சக்தியுடன் மின்னிக் கிடந்தன. இதயத்தைக் கூறுபோட்டு விடும் கண்கள். ஒரு வித மோகத்துடன் முகச் சாயல்.
"எக்ஸ்கியூஸ் மீ" மூன்றாவது முறையாக அவள் அழைத்தாள். அவன் மெல்ல இவ்வுலகுக்கு வரத் தொடங்கினான். தொடங்கியவன் மீண்டும் அரை வழியில் நின்று விட்டான்.
'இவள் யாராகவிருக்கும்? ஒரு காலத்தில் நல்லூர்த் திருவிழா, சுப்பருடைய 'டியூசன் கிளா'சென்று ஒருத்திக்குப் பின்னால் அலைந்து திரிந்தது மனதின் அடியிலிருந்து வெளிவந்தது. அந்த ஒருத்தியுடன் எப்பொழுதும் இன்னுமிரண்டு பெண்கள் கூடவே திரிவதும் நினைவில் தெரிந்தது. அந்த இரண்டுபேரில் யாராவது ஒருத்தியாக இருக்குமோ?'
இவளை எங்கேயோ பார்த்தது போல் நெஞ்சு உணர்ந்தது. 'எங்கே பார்த்திருக்கிறோம்... எங்கே?' நெஞ்சிற்குப் புரியவில்லை.
"ஆம் ஐ பொதரிங் யூ?" இவ்விதம் கேட்டாள். ஆனால் இம்முறை அவனிடமிருந்து எந்தவிதப் பதிலையும் எதிர்பார்க்கவில்லை. தனக்குள்ளாகவே ஏதோ முடிவு செய்தவளாக அவனருகில் அமர்ந்தாள்.
அவளது அருகாமையில் அவள் உடலிலிருந்து வீசிய நறுமணத்தை அவனால் உணர முடிந்தது. இம்முறை ஏதாவது அவளுக்குப் பதில் கூற விரும்பினான். முடிவு செயவதற்கிடையில் கேள்வி ஒன்றிற்குப் பதில் கூறவேண்டிய கால அவகாசத்தைத் தாண்டிவிட்டதாக உணர்ந்தான். மெளனமாயிருந்தான். அவளுக்குப் பதிலிறுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாக ஏதாவது அவளுடன் கதைக்க வேண்டும்போல் பட்டது. அதே சமயம் இதுவோர் முக்கியமான நிகழ்வல்ல என்றும் பட்டது. தொடர்ந்து பேசாமலிருந்தான். இதற்குள் அவளோ அவனை நன்கு விளங்கியவள் போல் எண்ணி அவனையே நோக்கி நின்றாள்.
இப்படித்தான் அவர்களது உறவின் முதல் இழை பின்னப்பட்டது. அன்றிலிருந்து வளரத் தொடங்கிய உறவின் வளர்ச்சி இருவரையும் மேலும் நெருங்கிய நிலைக்குத் தள்ளி விட்டது.
அவளும் அவனது 'அபார்ட்மென்ட்'டிற்கு அருகிலிருந்த தொடர்மாடியொன்றில்தான் , தனியறை 'அபார்ட்மென்ட்' ஒன்றில் தனியாக வசித்திருந்தாள். 'டவுண்டவுன்' வங்கியொன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள். 'பார்க்கும்' , 'அபார்டெம்ன்ட்'டுமாய் இருந்த அவனின் வாழ்விலுமோர் மாற்றம்.
வழக்கமாக நீண்ட நேரமாக 'பார்க்கில்' படுத்திருப்பவன் நன்கு இருண்டதும் அவளுடன் கூடவே அவளது 'அபார்டெம்ன்ட்'டுக்குச் செல்லத் தொடங்கினான். இரவு நெடுநேரமாக அங்கேயே அவளுடன் தங்கியிருப்பான். இடைக்கிடை டீ அல்லது 'கோப்பி' அருந்தியபடி, வீடியோவில் ஏதாவது படம் பார்ப்பார்கள். அல்லது சதுரங்கம் விளையாடுவார்கள். அல்லது ஏதாவதொரு விடயத்தைப் பற்றி உரையாடிக்கொள்வார்கள். ஆனாலும், பெரும்பாலும் அவர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் குறைவாகவே இருந்தன. இருவருக்குமே உரையாடல்களின் தேவை மிக அவசியமாகப் படவில்லை. அவன் அமைதியாக, உறைந்தவனாக , சதுரங்கம் விளையாடும்போதும் சரி, வீடியோ பார்க்கும்போதும் சரி, அவள் அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதாக எண்ணிக்கொண்டாள். ஆனால் அவனைப் பற்றி எண்ணுகிற அளவுக்கு அவன் அவளைப் பற்றி எண்ணுகிறானா என்றால்....... ஆனால் அவளது நெருக்கத்தின் துணையில், உபசரிப்பில் மனம் ஒருவிதமான இதமான அணைப்பை, தண்மையினை உணர்ந்தது. இனம் புரியாத ஒரு விதமான அமைதி கலந்த உணர்வு இடைக்கிடையே நெஞ்சில் தலை காட்டியது.
இந்தவிதமான இதமான ஒத்தடம் கொடுக்கும் உணர்வலைகளை ஏற்படுத்துவது எது? அவளது அழகான உடல் செழிப்பா? இல்லை, அந்தப் பூவுடலை இயக்கும் அந்தக் கண்களினூடு வெளிப்படுகிறதே ஒருவிதமான அமானுசியமான உணர்வலைகள்.. அந்த உணர்வலைகளா? .. எது? வெறும் அடிப்படைத் துணிக்கைகளினால் ஆன அவளது உடலின் சக்தியா? கண்களினூடு வெளிப்படும் அந்த உணர்வுகளின் வலிமையா? எது எதனை ஆட்டிப் படைத்து வருகின்றது? அந்த உணர்வுகள் ஆக்கப்பட்ட அடிப்படை எதுவோ? இருப்பின் உண்மை.. நேற்று இல்லாத இடத்தில் , நாளை இல்லாத இடத்தில், இன்று இவன் இருக்கின்றானென்றால், விசித்திரமான உணர்வுகள்.... விசித்திரமான உள்வெளி, புறவெளித் தளங்கள்.... பல்வேறு பரிமாணங்களுக்குள் பிரகாசிக்கும் யதார்த்த உலகு...
அதே சமயம் அவள் மிக மிக அழகாகவும் பாடுவாள். பாரதியின் 'மனதிலுறுதி வேண்டும்', 'தூண்டிற் புழுவினைப் போல்' பாடல்களை மிகவும் இனிமையாக, இதயத்தை உருக்கும் வகையில் பாடவும் செய்வாள்.
'தூண்டிற் புழுவினைப் போல் வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எனது
நெஞ்சம் துடித்ததடீ.
கூண்டுக் கிளியினைப் போல்
தனிமை கொண்டு மிகவும்
நொந்தேன்'
அவள் பாடும்போது உண்மையாகவே, உருகி உருகிப் பாடுவதுபோல் அவன் உணர்ந்தான். அந்த அதிர்வுகள் வெளியில் பரப்பிய இனிமையான தொனி நெஞ்சைத் தடவிச் செல்கையில், அப்படியே மோனித்த நிலையில் மூழ்கிக் கிடப்பான்.
'அவள் யார்? எங்கிருந்து வந்தாள்? ' இது பற்றியெல்லாம் அவன் கேட்கவில்லை. அவளும் அவன் பூர்வாசிரமத்தைப் புரிந்து கொள்வதற்கு முயலவில்லை. இருவருமே இருவரதும் நிகழ்கால இருப்புகளை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டதுடன் திருப்தியுற்றவர்களாகத் தெரிந்தார்கள்.
சில வேளைகளில் அவளுடன் சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பான். அல்லது வீடியோ பார்த்துக்கொண்டிருப்பான். இடையில் திடீரென வெறித்தவனாக உறைந்து விடுவான். அச்சமயங்களிலெல்லாம் அவனுக்கு மட்டுமேயுரிய அந்த இன்னுமொரு சித்திரமாக உறைந்து கிடப்பான்.
அவனோ ... உள்ளே இன்னுமொரு உலகம் மெல்ல மெல்ல விரிந்துகொன்டே செல்கையில், எக்ஸின் வாடிச் சோர்ந்து தொய்ந்துவிட்ட முகம் நம்பிக்கையிழந்து இயலாமையில் வெந்து கிடக்கும். கூடவே ஒரு விதமான சக்திமிக்க தொனியில் குரலொன்று பிறந்து பொசிந்து பரவிச் செல்லும்.
நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும். இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்
'இன்பமும் , துன்பமும், வெற்றியும், தோல்வியும், , இலாபமும், நட்டமும் உன்னைத் தீண்டாமலிருகட்டும். ஆயுதம் தரித்து விடு! யுத்தத்திற்குத் தயாராகிவிடு. புனிதமான யுத்தம். தீமையான உணர்வுகள் உன்னைத் தீண்டிட ஒரு போதும் விட்டிடாதே. நானே இப்பிரபஞ்சத்தின் ஆணிவேர். எல்லா உயிரினங்களும் உருவாகக் காரணமான வித்து நானே! சித்தும் அசித்தும் உயிரும் சடமும் நானின்றி வேறில்லை அறிவாய். அளவற்ற எனது தெய்வீக சக்தியினால் , பராக்கிரமத்தால் இப்பிஞ்சத்தை தாங்கி வருகின்றேன். ஆக என் வாக்கை நீ கேட்பாய். மிக அதிகமான சிந்தனையால் உனக்கென்ன இலாபம்? தளர்வை ஒழிப்பாய். வீறு கொண்டெழுவாய். கடமையச் செய்வாய். பலனை என்னிடமே விட்டுவிடுவாய். பின்னுமேன் தயக்கம்... தளர்வு... என்னிலேயே கருத்தை ஒருமித்து வைத்து விடு. பந்தபாசங்களைக் களைந்து விடு. எனக்காக செயற்படுவதொன்றே உனது இயக்கமாக இருக்கட்டும். சோர்வகற்றி எழுந்து விடு. எழுந்து விடு.'
அந்தக் குரலின் வலிமை, உறுதி, கம்பீரம் நெஞ்சைக் கட்டிப் போட்டுவிடும்படியான சக்தி... மறுபுறமோ.. எக்ஸின் இயலாமை கலந்த உருவம்... வாடிய, வதங்கிய, ஒடுங்கிய உருவம்.
மீண்டும் புற உலகின் யதார்த்தத்தைத் தரிசிக்கையிலோ மனது கிடந்து துடித்து நிற்கும். நடந்து விட்ட நிகழ்வுகளுக்குக் காரணம் தேடித் தேடி அலுத்துச் சோர்ந்து கிடக்கும் நெஞ்சினை அவளது இனிய குரல் இதமாகத் தடவிக்கொடுக்கும்.
'எங்கிருந்து வருகுதோ? ஒலி
யாவர் செய்குவதோ? அடி தோழி!
குன்றினின்றும் வருகுவதோ? மரக்
கொம்பினின்றும் வருகுவதோ? வெளி
மன்றினின்றும் வருகுவதோ? என்றன்
மதி மருண்டிடச் செய்குதடீ'
இந்தத் தழுவலில், இதத்தில், தண்மையில் நிம்மதி நாடியவனாக இருப்பவனின் தலை முடியை மெல்ல அவள் கோதி விடுவாள்.
அத்தியாயம் மூன்று: மாமா மகன்
மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு.... வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. 'பார்க்' ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது. மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான. இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள். குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள். தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய். தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில் அதன் அளவினை உணரமுடிந்தது.
இன்னும் அவளைக் காணவில்லை. அவனுக்கு திடீரென்று மாமா மகனின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நாட்களாகவே இருவருக்குமிடையில் பிளவு ஒன்று அதிகரித்து வருவதாகப்பட்டது. இவன் வாடகை கொடுக்கின்றான். 'குரோசரி' வாங்கிப் போடுகிறான். பெரும்பாலும் வீட்டு வேலைகள், சமையல் எல்லாம் இவன்தான். இருந்தும் நாளுக்கு நாள் பிளவு அதிகரித்தபடியேயிருந்தது. அவனது மனைவி விரைவில் வரவிருக்கிறாள். அதற்கு முதற்படியாக அவனை அங்கிருந்து அகற்றுவதற்கான செயல்முறைகளின் முதற்படியாக மாமா மகனின் நடவடிக்கைகளிருக்கலாம்.
மாமா மகனின் நடவடிக்கைகள் இவனுக்குச் சிரிப்பைத் தந்தன. எவ்வளவு 'சீப்பா'க இவனை அவன் எடை போட்டிருக்கிறான். ஆனால் இத்தனைக்கும் காசு செலவழித்து, தலை மாற்றி, விசா குத்தி, யாருமே வராத 'ரூட்' ஒன்றைக் கண்டுபிடித்து இவனைக் கனடாவுக்குக் கூட்டி வந்ததே மாமா மகன்தான். வந்த கடனை ஒரு மாதிரி அண்மையில்தான் இவன் முடித்திருந்தான்.
இந்நிலையில் மாமா மகன் தேவையற்று இவனுடன் முரண்படத்தேவையேயில்லை. ஒரு வேளை இவனைப் போகச் சொல்லுவதை அவனது உள்மனம் விரும்பாமலிருக்கலாம். யதார்த்தத்தில் இவன் போக வேண்டிய நிலை. இருவகையான போக்குகளூக்குள் சிக்கியதால் உருவான காரணமற்ற வெறுப்பின் விளைவாகவிருக்கலாம். மாமா மகனின் அன்றைய நடவடிக்கைகள்.
ஆனால் அன்று காலை நிகழ்ந்துவிட்ட மோதல் வழமைக்கு மாறாக சிறிது காரமாகவிருந்தது. வழமைக்கு மாறாக இவனும் நேரத்துடனேயே எழுந்து விட்டான். நித்திரை வரமாட்டேனென்று முரண்டு பிடித்தது. எழுந்து முகம் கழுவி, கோப்பி போட்டபடி சோபாவில் நாய்ந்தபடி, டி.வி.யை 'ஆன்' பண்ணினான். டி.வி. மாமா மகனது 'சொனி'. அண்மையில் வாங்கியிருந்தான். சிறிது நேரம் 'கொன்வேட்டரை' மாற்றி மாற்றி இயக்கியவன் கடைசியில் சி.பி.சி.யில் விட்டான். இது மாமா மகனுக்கு ஒரு வித ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது போலும். வாங்கிய புது டி.வி.யை இவன் பழுதாக்குவதாக அவன் எண்ணியிருக்கலாம். ஆனால் நேரடியாக 'டி'வி'யைப் போடாதே என்று கூற முடியாதே. நாகரிகத்துக்கு இழுக்காக அவன் கருதியிருக்கலாம். மோதல் வேறு வழியில் உருவானது.
மாமா மகனுக்குக் கோபம் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுவான். சரியோ, பிழையோ என்பதல்ல முக்கியம். ஆங்கிலத்தில் திட்டுவது தமிழில் திட்டுவதைவிட நாகரிகமானதாக அவன் எண்ணியிருந்தான்.
கோப்பி போட்டபடி இவனுக்கருகில் வந்தமர்ந்தவன் 'கொன்வேட்டரை' வாங்கி டி.வி.சத்தத்தைக் குறைத்தான். அதில் தன் மனநிலையினைக் காட்டினான்.
"வாட் இஸ் இன் யுவர் ஹெட்?" மாமா மகன் எப்பொழுதும் இப்படித்தான் திடீரென , முறைப்பாகத் தாக்குதலை ஆரம்பிப்பான்.
'தலைக்குள் மூளை' என்று கூறலாமென்று இவனுக்குப் பட்டது. பேசாமலிருந்தான். மாமா மகன் தொடர்ந்தான்.
"தீஸ் டேய்ஸ் யு பிகம் சோ லேஸி... யூ ஹாவ் டு பி மோர் அக்டிவ். மோர் எனர்ஜடிக். மோர் சியர்ஃபுல். மோர் ரெஸ்பான்சிபிள். மோர் பொசிடிவ்"
இவனுக்கு உள்ளுக்குள் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். சிரிப்பு மாமா மகனின் கோபத்தை மேலும் அதிகமாகக் கிளறிவிடும்.
இத்தனைக்கும் இவன் சமையல், வீட்டு வேலைகள், 'ஷொப்பிங்' என்று எல்லாவற்றையும் செய்கின்றான். இவன் 'லேஸி'யாம். திடீரென்று அச்சமயம் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் ஞாபகம் கூட இவனுக்கு வந்தது. இப்பிரபஞ்சத்தில் நிகழும் யாவுமே சார்பானவை. ஒருவேளை மாமா மகனின் அர்த்தத்தில், சார்பில் 'லேஸி'யாகவிருக்கலாம்.
இவன் தொடர்ந்தும் மெளனமாகவிருந்தான். மாமா மகனின் கோபம் எல்லை கடந்தது. 'கொன்வேட்டரை' இழுத்து அமுக்கி டி.வி.யை ஓஃப் பண்ணினான். இப்பொழுது தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசினான்.
"டு யு திங் ஐ ஆம் அ ஸ்டுபிட், நான் பேசிக் கொண்டே போறன் உன்ரை வாயிலை என்ன கொழுக்கட்டையா?"
மாமா மகன் கொழுக்கட்டை என்று சொன்னதும் அச்சமயம் இவனுக்கு பீறிட்டுக்கொண்டு சிரிப்பு வந்தது. கொழுக்கட்டை என்ற சொல் சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! .. கூழும் பனங்கட்டி, கொழுக்கட்டை தின்னலாம்..' என்னும் பாடலை நினைவுக்குக்கொண்டு வந்தது. இதுதான் அவன் சிரிப்புக்குக் காரணம். அது இவனது சிரிப்பு மாமா மகனின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கியது. தொடர்ந்த சொற்களில் மரியாதை பறந்தது.
"என்னடா சிரிப்பு ... வாட் த ஹெல் யூ ஆர் திங்கிங்.. சிரிப்பென்னடா சிரிப்பு.. சீரியஸா நானிங்கை கதைக்கிறன்.. நீ என்னடாவென்றால்..."
'சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாட்டு ஞாபகம் வந்தது நீ கொழுக்கட்டை என்று சொன்னபோது' இவ்விதம் கூறலாமாவென்று பட்டது. எப்படிக் கூறுவது? இப்படித்தான் இருந்தாற்போலிருந்து எதிர்பாராத சமயங்களில் ஒரு சிறு நினைவு, சொல், காட்சி, நெஞ்சின் ஆழ்மனத்தே பதிந்துள்ள நினைவுப் பெட்டகத்திலிருந்து ஒரு சில நிகழ்வுகளின் பதிவுகளை, எந்தச் சமயத்தில் அத்தகைய உணர்வுகள் தோன்றக்கூடாதோ அந்தச் சமயத்தில் அவற்றைத் தோன்ற வைத்து ஒருவித இக்கட்டான நிலைமையினை ஏற்படுத்தி விடுகின்றன.
மாமா மகனின் வாயில் வந்த கொழுக்கட்டை சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை' பாடலை இவனுக்கு நினைவுபடுத்திச் சிரிப்பை உண்டாக்கிவிட்டது கூட இத்தகையதொரு விதமான நிலைமைதான்.
தொடர்ந்து பேசிய மாமா மகனின் சொற்கள் தமிழிலேயே வெளிவந்தன. அதற்குக் காரணமும் இருந்தது. "வட் த பிளடி ஹெல்', 'யூ சன் ஒ1ப் அ கன்' இவ்விதமாக சிறு சிறு வசனங்களாகப் பேசும் போதெல்லாம் சரளமாக வரும் ஆங்கில வார்த்தைப் பிரயோகம் தொடர்ந்து சிறிது நேரம் கூடுதலாக வார்த்தைகளைப் பாவித்துப் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டும் சரளமாக வருவதற்குத் தயங்கி நிற்கும். கோபம் அதிகரித்து இவ்விதம் பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலேயே 'யூ... யூ... பிளடி' என்பன போன்ற வார்த்தைகளுக்கு மேல் வராத நிலையில் திக்குமுக்காடுவான். தனது இந்தப் பலவீனத்தை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அத்தகைய சந்தர்ப்பங்களில்தான் அவன் தமிழிலேயே பேசுவான். இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் தாய் மொழியின் அருமையே அவனுக்குத் தெரிய வருவதுண்டு.
'ஏதோ இந்தா பார் ... வெட்டிப் பிடுங்கிறன் என்றுதானே போனனீங்கள். ... என்னடா வெட்டிக் கிழிச்சியள்... உங்கட மூஞ்சிக்கு உங்களுக்கெல்லாம் ஒரு இயக்கம்... போராட்டம்... விடுதலை... ' முதன் முறையாக இவனது நெஞ்சின் ஒரு கோடியில் சுரீரென்று ஒருவித வலியின் பாதிப்பு. மாமா மகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
"போதாதற்கு ஊரிலை கூட்டிக் கொண்டு போனவனுக்கே மண்டையிலை வைச்சனீங்கள்... உங்களையெல்லாம் ..." உணர்ச்சி வசப்பட்டவனாகப் பல்லை நறநறவெண்டு நறுவிக்கொண்ட மாமா மகன் தொடர்ந்தான்.
"இன்றைக்கு மண்டையிலை போட்டவவன்ரை சொந்தங்கள் தேடி அலைஞ்சபடி.. நீங்களெல்லாம் ஏன்தான் இருந்து கிடந்து கழுத்தறிக்கிறீங்களோ"
மாமா மகன் மேலே பேசிக்கொண்டே போனான். ஆனால் இவனோ... காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன. சோபாவில் அப்படியே உறைந்துபோய் விட்டான். மோனத்துள் மூழ்கி விட்ட நிலை. காதுகளில் மாமா மகனின் சொற்களுக்குப் பதில்....
'நீயூமா? நீயுமா?' வாடி வதங்கித் துவண்டு வெந்து கிடந்த அந்த மெல்லிய உருவம்... உரோமம் மண்டிக் கிடந்த முகம்..
சிலையாக, துறவியைப்போல் மோனித்து உறைந்துவிட்ட இவனது நிலைமை... மாமா மகன் தான் எல்லை மீறிப் போய் விட்டதை உணர்ந்தான். இவனது உறைந்தபோக்கு ஒருவித கலக்கத்தை அவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். இவ்னது தோள்களைப் பற்றிச் சிறிது பலமாகக் குலுக்கினான். இவன் மெல்ல நனவுலகிற்கு வந்தான்.
"ஐ ஆம் சாரிடா" மாமா மகன் வேலைக்குப் போய் விட்டான்.
இவன் சிறிது வேதனைப் பட்டான். அண்மைக்காலமாகவே அவளது உறவின் வளர்ச்சி அவனிதயத்தில் பழையபடி மெல்லிய உணர்வலைகளைச் சிறிது ஏற்படுத்தியிருந்தது. ஓரளவுக்கு அவனது உறைந்த் நிலையைச் சிறிது நெகிழ்த்தியிருந்தது. அதன் விளைவாக சிறிதளவு வேதனைப்பட, சிரிக்க, உருக, இரசிக்க, மோகிக்கக் கூடிய அளவுக்கு நெகிழ்ந்திருந்தான். அதன் விளைவுதான் அவன் வேதனைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
"ஹாய்.."
இதயத்தைச் சுண்டியிழுத்த இனிமையான குரல். இவன் எதிரில் அவள்.
'டெனிம் பான்ற்ஸ்' போட்டிருந்தாள். நீலக் கோடுகளிட்ட வெள்ளை 'டீ சேர்ட்'டும் , 'லெதர் ஜாக்கற்'றும் அணிந்திருந்தாள். இறுக்கமான உடைக்குள் உடல் வளைவுகள், பார்ப்போரை மோகிக்க நின்றிருந்தாள். கூந்தலை இரண்டாகப் பின்னி, பொட்டு வைத்திருந்தாள். கண்கள் மின்ன, மோகனச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி நின்றிருந்தாள்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.