இரண்டாம் பாகம்
சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச் சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில் தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு சொந்தமாக வீடு வேண்டும் என்ற நினைப்பு மனத்தில் வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக் கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் தருவதாக கூறினார்கள்.
பிரித்தானிய காலனியாக இருந்த காலத்தில் காணிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமே வாக்களர்களாக இருக்கலாம் என்ற நியதி விக்ரோரியாவில் இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் வந்த குடியேற்றவாசிகளுக்கும் அதே மனநிலை தொடர்கிறது.
சிட்னிப் பெருநகரம் குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் மெல்பேன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல. மிகவும் வித்தியாசமான சரித்திரத்தை தன்னுள் கொண்டது . அவுஸ்திரேலியாவின் மற்றய இடங்களை ஆங்கிலேய காலனியினர், ஆதிவாசிகள், மனிதர்கள் இல்லை. எனவே எந்த மனிதர்களும் இல்லாத நிலப்பரப்பு என்ற கருத்தியலை தங்களது மனநிறைவுக்கான கொள்கைப் பிரகடனமாக வைத்துக் குடியேறிய போது, ஜோன் பற்மேன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி ஆதிவாசிகளிடம் பண்டமாற்றாக மெல்பேனை 1835ல் வாங்கியதாக ஒப்பந்தப் பத்திரம் உள்ளது. இது ஆங்கிலேய கவர்னரால் பின்னால் இரத்து செய்யப்பட்டாலும் அவுஸ்திரேலிய சரித்திரத்தில் முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தமென ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிப்பட்ட சரித்திரம் உண்டு.
1851ல் பெண்டிகோ, பாலரட் என்ற இடங்களில் தங்கம் கிடைத்ததால் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து குடியேறியதால் உருவான இந்த மெல்பேன் நகரத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மற்ற ஐரோப்பியர்கள் முக்கியமாக இத்தாலியர்கள், கிரீக்க தேசத்தவர்கள் குடியேறினார்கள். ஆசியர்களில் சீனர்கள் மட்டும்தான் தங்கம் தோண்ட ஹொங்கொங்கில் இருந்து வந்தார்கள். தங்கத்தை தேடி வந்தவர்களால் உருவான இந்த மெல்பேனில் தற்பொழுது நூற்று நாற்பது உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்.
இலண்டன் அளவு நிலப்பரப்பில் உள்ள மெல்பேனில் இப்பொழுது எந்த இடத்தில் வீடு வேண்டுவது என்ற கேள்வி சுந்தரம்பிள்ளை குடும்பத்தில் எழுந்தது. சுந்தரம்பிள்ளையின் மனைவி சாருலதா வேலை செய்யும் மருத்துவமனை மெல்பேனின் தெற்கு திசையில் இருக்கிறது. சுந்தரம்பிள்ளை சிற்றியில் வேலை செய்யும் போது இரண்டுக்கும் இடைப்பட்டதான இடத்தில் வாங்குவது தான் நியாயமாக இருக்கும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இதை விட முக்கியமானது மெல்பேனில் குடியேற்ற வாசிகள் மனத்தில் கொள்ளுவது பிள்ளைகள் படிப்பதற்கான பாடசாலைகள். மெல்பேனில் சிறந்த அரசாங்க பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளும் அதிக அளவில், மத்திய வகுப்பினரும் உயர்வகுப்பினரும் வாழும் மெல்பேனின் கிழக்கு பகுதியில் அதிகம் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தினர் வசிக்கும் மேற்கு அல்லது வடக்கு பக்கங்களில் இப்படியான பாடசாலைகள் அதிகம் இல்லை. மெல்பேனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிளன்வேவலி புற நகரத்தில் வீட்டை வாங்க முடிவு செய்யதார்கள்
சாருலதாவின் தாய் தந்தையினர் மழைக்கால அட்டைகள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டுவது போல் மகளுடன் ஒட்டிக் கொண்டு கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் அவர்களும் சேர்ந்து இருப்பதற்கு பெரிய வீடாகப் பார்க்க வேண்டியதாக இருந்தது.
மெல்பேனில் சனிக்கிழமைகளில்தான் வீடு விற்பனைகளும், வீட்டு ஏலங்களும் நடைபெறும். இது ஒரு சட்டம், சம்பிரதாயம் என இரண்டும் கலந்த சடங்கு போல் நடைபெறும். வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் பெரும்பாலான ஏலமும் கோடை மற்றும் குளிர்காலத்தில் குறைவாகவும் நடைபெறும். வீடுகள் ஏலத்திலே விடப்பட்டு அதிக பணத்துக்கு கேட்பவருக்கு கொடுக்கப்படும். இதே வேளையில் உரிமையாளர் எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டால் வீடு விற்பனையாகாது. சனிக்கிழமையில் வேலை செய்வதால் இந்தச் சடங்கில் ஈடுபடுவதற்கு சுந்தரம்பிள்ளையால் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமைதான் முடிந்தது.
வீடு வேண்டுவதற்கு விருப்பமான புறநகரமாக கிளன்வேவலியை தெரிவு செய்து விட்டு பாடசாலைக்கு பக்கத்தில் வீடு பார்க்கும் போது வீடு எல்லோருக்கும் பிடித்திருக்கவேண்டும். வீடு பிடித்திருந்தால் சமையல் அறை பிடித்திராது. எல்லாம் எல்லோருக்கும் பிடித்திருந்தால் இவர்களது வீட்டின் விலை பட்ஜட்டுக்கு மேல் இருந்துவிடும்.
வசந்த காலத்தின் இளம் காலை நேரம் மெதுவாக மெல்பேனின் மெல்லிய துகிலை மெதுவாக உரியத் தொடங்கிய போதே சுந்தரம்பிள்ளையின் வீடு அல்லோலகலப்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு காலைக் கடன்களை முடித்துக் கொண்டார்கள். புதிதாக வாங்க எண்ணும் வீட்டை தரிசிப்பதற்காக அந்த சனிக்கிழமை முழுக் குடும்பமும் அவசரமாக காலையுணவை முடித்துக் கொண்டு பழைய ஹொண்டா காரில் வீடு விற்கும் இடத்திற்குப் போனார்கள்.
சுந்தரம்பிள்ளையின் குழந்தைகளுக்கு பிக்னிக் போவது போன்ற மனநிலையில் இருந்தனர்.
அந்த வீட்டை சுற்றிய இடத்தில் ஏற்கனவே ஆண்களும் பெண்களுமாக நூறு பேருக்கு மேல் நின்றார்கள். வீதி, நடை பாதை எங்கும் புவியில் வாழும் சகல இன மனிதர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அந்த இடத்தில் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் மனத்திலும் ஏதோ ஒலிம்பிக்கில் போட்டி போடுபர்களாக நினைக்க வைத்தது. இப்படியான ஏலத்தில் அனுபவம் அற்ற சுந்தரம்பிள்ளை குடும்பத்தினருக்கு இவர்கள் மத்தியில் சென்று ஏலத்தில் வீடு எங்களுக்கு கிடைக்காது என்ற அவநம்பிக்கை உணர்வே சுந்தரம்பிள்ளை குடும்பத்தினருக்கு இருந்தது.
கோயிலுக்கு வந்தவர்களில் சிலர் ஆலய முன்றலில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதுபோல் நின்றுவிட, பெரும்பான்மையானவர்கள் வரிசையாக வீட்டினுள் ஆலய தரிசனத்துக்கு செல்பவர்கள் போல் மவுனமாக சென்று பார்த்தார்கள். அவர்களோடு வந்த சிறுவர்கள் மட்டுமே ஓடிக் குதித்து அந்த இடத்திற்கு உயிர் கொடுத்தார்கள். இரண்டு சீனப் பெண்குழந்தைகள் ஒளிந்து விளையாடினார்கள்.
ஆமாம் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றியே அல்லது வீட்டைப் பற்றிய சிந்தனை அற்று மகிழ்ச்சியாக இருக்கமுடியும். பெரியவர்களால் இருக்கமுடியுமா? பெரியவர்கள் மனத்தில் சுமையோடு மவுனமாக வீட்டை சுற்றி பார்த்தார்கள். சுந்தரம்பிள்ளை குடும்பத்தினர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர். நாலு அறைகள் கொண்ட பெரிய வீடு. சுத்தமான தரைவிரிப்புகள் உள்ள அறைகள்.
விசாலமான, புதிய சமயலறை. அதே போல் குளியலறையும் புதிதாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பாக சமயலறையும் குளியலறையும புதுப்பிக்கப்பட்டதாக வீட்டு ஏஜன்ட் சொன்னது காதில் விழுந்தது. பின்னால் பெரியவளவும் இருந்தது. அதில் பெரிய எலுமிச்சை காய்கள் பழங்கள் என காய்த்து நிலத்தை தொடுவது போல் தொங்கியது. எலுமிச்சைக்கு சிறிது தள்ளி கரட் மற்றும் சில கீரை வகைகளும் பயிரிடப்பட்டிருந்தது. வளவை சுற்றிவர இரண்டு மீட்டர் உயரத்திற்கு வேலி எழுப்பட்டிருந்தது.முன்பாக அமைந்திருக்கும் கார் நிறுத்தும் இடத்திற்கு செல்வ சிறிய மரப்படலை இருந்தது.
வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தது. பத்து மணியில் இருந்து பதினொருமணி வரையும் வீட்டை பார்பதற்கும் அதன் பின்பு பதினொரு மணியளவு ஏலம் தொடங்குவதாக ரியல் எஸ்ரேற் ஏஜெண்ட் கூறி இருந்தார்.
ஒன்பது மணியில் இருந்து வீட்டை பார்த்தும் ஏஜென்டின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த புதுவிதமான அனுபவம், பதினொரு மணியில் இருந்து ஏலமாக தொடர்ந்தது. இரண்டு ஏஜென்டில் குண்டாக, வெள்ளைச் சட்டையணிந்து நீல கோட் போட்டிருந்த மனிதர் கழுத்து ரையைின் இறுக்கத்தை குறைத்துவிட்டு ஒரு தொகையைச் சொல்லி கூவினார். ஆரம்பத்தில் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைகளை உயர்த்தி விலைகளை ஏற்றிய போது சுந்தரம்பிள்ளையின் இதயத்துடிப்பு கூடி நாவறண்டு விட்டது. இவர்கள் மத்தியில் மெதுவாக கையை உயர்த்தி ஒரு விலையை கேட்ட போது ஏலக்காரர் அந்த தொகையை இரு முறை கூறினார். அதை கேட்ட இரண்டு சீனாகாரர் விலையை கேட்டு உயர்த்திவிட்டார்கள். இதைப் பார்த்த சாருலதா தெருவில் சிவப்பு விளக்கு வருவது போல் ஏலத்தில் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கையைச் சுண்டியதும் ஏலத்தை கைவிட்டு விட்டான் சுந்தரம்பிள்ளை. காலம் காலமாக சுந்தரம்பிள்ளை குடும்பத்தின் சாரதியாகவும் சாருலதா பிரேக்காகவும் ஏற்றுக்கொண்டதால் குடும்பம் பல விபத்துகளில் இருந்து தப்பியது.
போட்டியாக கேட்ட சீனர்களும் சொல்லி வைத்தது போல் கையை விட்டார்கள். ஏலம் போடுபவர் திரும்பி திரும்பி வளர்த்த நாய் மாதிரி சுந்தரம்பிள்ளையின் முகத்தைப் பார்த்த போது சங்கடமாகி விட்டது. சுந்தரம்பிள்ளைக்கு வங்கி தர சம்மதித்த விலையிலும் பார்க்க சில ஆயிரத்தால் கூடி விட்டபோது ஏலத்தில் பங்கு பற்றும் விருப்பத்தை கைவிட்டு மற்றவர்களை வேடிக்கை பார்க்கத் தொடர்ங்கிய போது மனத்தில் ஒரு அமைதி ஏற்பட்டது. ஆனாலும் தேவையில்லாமல் விலையை உயர்த்திய சீனர்களில் ஆத்திரம் ஏற்பட்டது. கடைசியில் யாரும் வாங்காமல் அந்த வீடு அடுத்த மாதம் ஏலத்துக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
இப்பொழுது மதியமாகிவிட்டது. இருந்த கூட்டமும் மெதுவாக கலைந்து விட்டதும் சுந்தரம்பிள்ளை குடும்பம் தனித்து விடப்பட்டது.
அவுஸ்திரேலியர்களில் மீசை வைத்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் ஏலம் கூறாது பக்கத்தில் நின்ற கறுத்த கோட் அணிந்த இரண்டாவது றியல் எஸ்ரேட் ஏஜெண்டுக்கு தலையில் மருந்துக்கேனும் மயிர் இல்லாவிடிலும் கம்பளி பூச்சி போல் கறுத்த மீசை இருந்தது. அத்துடன் வீட்டை விற்க முடியாத சோகமும் அவரது முகத்தில் தெரிந்தது. அவரை மெதுவாக அணுகிய சுந்தரம்பிள்ளை ‘இந்த வீட்டை ஏலத்தில் இல்லாது வாங்க முடியுமா? என்று கேட்டபோது அடுத்த சனிக்கிழமை வந்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அப்பொழுது, இரண்டாவது சனிக்கிழமை வருவதாக சுந்தரம்பிள்ளை நாள் குறித்து விட்டு சென்றான்.
மறு சனிக்கிழமை வந்து, வீட்டைப் பார்த்த போது மீசைக்கார ஏஜெண்ட் வெள்ளி நிற பி.எம்.டபிள்யு காரில் காத்திருந்தார். காரில் இருந்து இறங்கி வந்தவர் சுந்தரம்பிள்ளையையும் மனைவியையும் உள்ளே அழைத்து சென்றார். அந்த வீட்டின் உட்புறம் சுருட்டுப் புகையின் நாற்றமாக இருந்தது.
இங்கிலாந்தில் இருந்து வந்து கால் நூற்றாண்டுகள் அவுஸ்திரேலியாவில் வாழும் வயதானவர்களுக்கு சொந்தமானது அந்த வீடு. வயதான மனிதர் இங்கிலாந்து ஆமியில் இருந்து ரிட்டயரான மிலிடரிக்காரர். சுந்தரம்பிள்ளை குடும்பத்தினர் வீட்டைப் பார்க்கச் சென்ற போதும் ஆறடிக்கு மேலான அந்த மனிதர், வீட்டுக்கு முன் பகுதியில் நின்றபடி சுருட்டு புகைவிட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மரியாதைக்காக வெளியே நின்று புகைத்தார். மற்றப்படி முழுப் புகையும் திறந்த வீட்டின் கதவூடாக சிறிய மேகக் கூட்டங்களாக உள்ளே சென்றன.
மீண்டும் வீட்டைப் பார்த்து விட்டுச் சுருட்டுப் புகைக்காக விரும்பிய வீட்டை விட முடியாமல் வீட்டின் தரைவிரிப்பை சில காலத்தில் மாற்றுவது என முடிவு செய்தபடி, வீட்டு விற்பனை ஏஜன்டிடம் ஏலத்துக்கு வராமல் வீட்டை எடுக்கமுடியுமா என கேட்டபோது, அந்த ஏஜண்ட், “உங்களுக்கு வீடு பிடித்திருக்கா? சுருட்டுமணம் பிரச்சனை இல்லையா?“ எனக் கேட்டார்.
‘வீடு பிடித்திருப்பதால் தரைவிரிப்பை வெகு சீக்கிரத்தில் மாற்ற விரும்புகிறேம்.’
‘இதற்கு முதல் வந்த ஒரு இளம் குடும்பத்தினர் சுருட்டு மணம் என வேண்டாம் எனக் கூறிவிட்டார்கள்.’
‘நாங்கள் சுருட்டுக்கு பயப்படவில்லை. ஆனால் நீங்கள் வீட்டை ஏலத்துக்கு போடாமல் பேரம் பேசவேண்டும்’
அந்த ஏஜன்ட் உடனே அந்த மிலிட்டரிக்காரரிடம் சென்று பேசிவிட்டு ஒரு ஒரு தொகையைச் சொன்ன போது சுந்தரம்பிள்ளை அதற்கு சம்தித்து விட்டான். காரணம் எதிர்பார்த்த தொகையிலும் சிறிது குறைவாக இருந்தது.
அந்த வீட்டைப் பேசி முடிவாக்கப்பட்டபோது அந்த ஏஜென்ட் சொன்னார், ‘சுருட்டு மணத்தால் உங்களுக்குப் பத்தாயிரம் டாலர்கள் இலாபம் அடைந்திருக்கிறீர்கள். வீட்டை விற்பதற்காக இரண்டு முறை ரீம் கிளீனிங் செய்து ஏலம் போட்டோம். ஏலமும் போகவில்லை அந்த மணமும் போகவில்லை பலர் இதன் காரணமாக வீட்டைப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். வீட்டை விரைவில் விற்று விட்டு அந்த தம்பதிகள் இங்கிலாந்துக்கு திரும்பவும் போக விரும்புகிறார்கள். அது உங்களுக்கு சாதகமாக முடிந்து விட்டது.’
ஒரு படியாக நாலு அறை கொண்ட பெரிய வீடு, பாடசாலை, பெரிய பூங்கா, சொப்பிங் சென்ரருக்கு அருகாமையில் அமைந்தது எல்லாருக்கும் மன நிம்மதியாக இருந்தது. வீட்டை வைத்துக்கொண்டே மற்றைய விடயங்களான பாடசாலை, போக்குவரத்து
என்பவற்றைத் திட்டமிடவேண்டி இருக்கிறது.
ஷரன் புதிதாக வேலைக்கு சேர்ந்ததோடு சிறிய குழந்தைக்குத் தாயாக இருந்ததால் பல அசௌகரியங்களைச் சுந்தரம்பிள்ளை ஒன்றாக வேலை செய்யும் நாட்களில் கண்டும் காணாமல் இருக்க வேண்டி இருந்தது. அதற்கு மேலால் ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சி அவள் மேல் இருந்தது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சாம் போன்று நெருங்கிப் பழகியவர்களுக்குப் புரிந்திருந்தது. வைத்தியசாலையில் பலரது புரிந்துணர்வுகளை ஷரனது செய்கைகள் ரப்பரப்போல் இழுத்துச் சங்கடப்படுத்தியது.
வேலைக்கு ஒரு மணி நேரம் ஷரன் பிந்தி வந்தால் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். செல்லப்பிராணியை கொண்டு வந்தவர்கள் வெளி நோயாளர் பிரிவில் காத்திருக்கவேண்டும். நோய் குணமாகி தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டுக்கு கொண்டு செல்ல விரும்புவர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். இதனால் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் பொறுமை இழந்து விடும். இதன் விளைவால் பல நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்து குரைக்கத் தொடங்கும். பூனைகள் தங்களுக்கிடையே இருந்த சமாதான ஒப்பந்தத்தை மீறி ஒன்றுடன் ஒன்றும் நாய்களைப் பார்த்தும் சீறும். உரிமையாளர்களுக்கு இடையில் வாய்த் தர்க்கங்கள் கூட ஏற்படும். காலை வேளைகளில் சம வெளியில் ஓடும் ஆறு போல் வேலைகள் நடக்க வேண்டும். சிறிது தேக்கம் ஏற்பட்டால் ஆறு அணைகரையை உடைத்து விடுவது போல். இப்படியான தாமதங்களால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க மற்றைய வைத்தியர்கள், நர்சுகள் வேகமாக செயல்படவேண்டும்.வேகமாக செயல்படும் போது அவர்களது மனத்தின் அவசரம் அவர்களது வேலையைப் பாதிக்கும். இதைவிட முக்கியமனது ஷரன்,சில செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுடன் அதிக நேரம் எடுப்பதால் மற்றய வைத்தியர்கள் அதிக வேலையை செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இபபடியாக பலதடவை சுந்தரம்பிள்ளை பதிக்கப்படுவது உண்டு.
ஷரன் வேலைக்குப் பிந்தி வருவதால் பலருக்கு ஷரனைப் பற்றி நக்கலாக பேசுவது பொழுது போக்காகிவிட்டது. சாப்பிட்ட பிறகு வாய்க்குப் போடும் வெற்றிலை போல் அவளது விடயங்கள் மற்றவர்களுக்கு அமைந்து விடுகிறது. வேலைக்குத் தாமதமாக வந்த பின், அதற்காக ஷரன் சொல்லும் காரணங்கள் நகைச்சுவைக்குரியதாகி விடுகிறது. உண்மையைச் சொன்னாலும் மற்றவர்கள் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை வந்து விட்டது.
மிகவும் பிரபலமாக பலரும் சிரித்த கதை ஒன்று உள்ளது. மெல்பேனின் மேற்குப்பகுதியை கிழக்குப் பகுதியோடு இணைக்கும் மிகப் பெரிய பாலம் வெஸ்ட் கேட் பிரிஜ். அதைக் கடந்து தான் ஷரன் வேலைக்கு வரவேண்டும். ஒரு நாள் வரும் போது வெஸ்ட் கேட் பிரிஜ்ஜில் ஒரு பெண்ணின் கார் ரயர் வெடித்து விட்டது. அதனால் மற்ற கார்கள் அந்த பகுதியால் வருவதற்கு தடை ஏற்பட்டு சில மணித்தியாலம் போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது எனக் கூறியதோடு நிற்காமல் நகைச்சுவையோடு அந்தப் பெண் மினிஸ் கேட் உடை அணிந்தபடி ரயரை மாற்ற மிகவும் கஷ்டப்பட்டாள். அவளது அழகிய தொடைகளை காரில் போனவர்கள் பார்த்து இரசித்தபடி மெதுவாக சென்றதால் ரோட்டு போக்குவரத்து நிலவரம் மேலும் மோசமாகி விட்டது. இதைக் கேட்டு விட்டு வெளியே வந்த காலோஸ் சேரம் இது ஒரு பொய். இந்த குளிர்காலத்தில் எந்தப் பெண் மினிஸ்கேட்டை போடுவாள் என நம்ப மறுத்தது மட்டுமல்ல, இதை அன்று முழுவதும் சந்திக்கும் பலரிடம் நகைச்சுவையாக சொல்லி சிரித்தான். சுந்தரம்பிள்ளையின் அடி மனத்தில் ஷரனை நகைச்சுவைப் பொருளாக மாற்றுவது மனத்திற்கு உறுத்தியது. இனம்புரியாத கவலையாக இருந்தது. ஆனால் ஷரன் தொடர்சியாக இப்படியான செயல்களிலும் பேச்சுகளிலும் ஈடுபடுவது சிறு பிள்ளைத்தனமாகவும் அதேபோல் பலரது கவனத்தை கவர்வதற்காகவும் போல் இருந்தது.சிறுபிள்ளைகள் பெற்றோர் கவனத்தை கவரச் செய்யும் குறும்புகளுக்கு சமனாக இருந்தது.
--------
இந்த வைத்தியசாலைக்கு பல வேளைகளில் காட்டுப் பூனைகள் கொண்டு வரப்படுகிறது. இந்தக் காட்டு பூனைகள் வீடுகளில் வளரும் பூனைகளில் இருந்து உற்பத்தியாகி பின்னர் அந்தப் பூனைக்குட்டிகள் கவனிப்பற்று கட்டாக்காலியாக நகரத்தை அண்மித்த சிறிய இயற்கைக் காடுகளில் வளரும். இவை உணவுக்காக பறவைகள், சிறிய மிருகங்களை வேட்டையாடி உண்ணும். ஆதிகாலத்தில் இருந்தே அவுஸ்திரேலியாவில் வேட்டையாடும் மிருகங்கள் இல்லை என்பதால் அவுஸ்திரேலியாவுக்கே உரிய மிருகங்கள், பறவைகள் தப்பிவாழும் திறமை குறைந்தவை. பிரித்தானியர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நரிகளுடன் இந்தப் பூனைகளும் விரைவாகத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பல்கிப் பெருகி பறவைகள் மற்றும் சிறிய அவுஸ்திரேலியவுக்குரிய மாசூப்பியல்களை உணவுக்காக அழித்து விடுவதால் சூழலுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றன. இதையிட்டுதான் வீட்டுப் பூனைகளை கருக்கட்டாத ஆபரேசனை செய்வதும் மைக்கிரோசிப்பின் மூலம் அடையாளம் இடுவதன் மூலம் இப்படியாக உருவாகும் காட்டுப்பூனைகளின் தொகையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பொறி வைத்துப் பிடிக்கப்பட்ட காட்டுப்பூனைகள் மிருகவைத்தியர்களால் கருணைக்கொலை செய்யப்படும்.
இப்படி கருணைக்கொலை செய்யக் கொண்டு வந்த ஒரு காட்டுப் பூனையை கைகளால் எடுத்து கருணைக்கொலை செய்யமுடியாது. அவைகள் புலிகளைப் போன்று மூர்க்கமானவை சீறிக் கொண்டு கடிக்க வரும். விசேடமான கூட்டுக்குள் வைத்து அந்தக் கூட்டை சிறிதாக்கி அதற்குள் வைத்தே ஊசியை ஏற்றி கருணைக் கொலை செய்வதுதான் பாதுகாப்பான முறையாகும். அப்படி கருணைக் கொலை செய்வதற்காக வந்த ஒரு காட்டுப் பூனையை வெளியில் ஷரன் எடுத்து பரிசோதிக்க முற்பட்டபோது அந்தப் பூனை அவளது கையில் ஆழமாக கீறிவிட்டுத் தப்பிவிட்டது. இவ்வளவுக்கும் அந்த பரிசோதனை அறைக் கதவுகள் மூடித்தான் இருந்தது. ஆனாலும் அந்தக் காட்டுப் பூனை மாயமாகி மறைந்துவிட்டது. காட்டுப் பூனையால் காயப்பட்ட ஷரனின் மேல் எவரும் அனுதாபப் படவில்லை. ஏற்கனவே இருந்த வழக்கத்தை மீறியதற்கான கடுப்பில் பலர் ஷரனைக் குறை கூறி, ஷரனுக்கு செல்லப் பெயராக டிராமாக் குயின் என்ற பட்டப் பெயர் இந்தச் சம்பவத்தின் பின்பாகச் சூட்டப்பட்டது.
தப்பிய காட்டுப் பூனையை ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கு உரிமையாளர் இல்லாததால் அதைத் தேடவேண்டிய பொறுப்பு அந்த வைத்தியசாலையில் வேலை செய்பவர்களுக்கு இருக்கவில்லை. எல்லாம் டிராமாக் குயினின் பொறுப்பு எனச் சகலரும் அந்தச் சம்பவத்தை கடலில் எறிந்த கல்லாக மறந்து போய்விட்டார்கள்.
இந்த விடயத்தில் வைத்தியசாலையில் வேலை செய்யும் மனிதர்களின் ஞாபக மறதியை பிடிக்காத ஒரு சீவன் அந்த வைத்திய சாலையில் வாழ்கிறது. பத்து வருடத்துக்கு மேல் தனிக் காட்டு ராஜாவாக அந்த வைத்திய சாலையில் தன்னை விட இரண்டாவதாக ஒரு பூனை இருப்பது ஹொலிங்வூட்டுக்கு பிடிக்கவில்லை. “வேதியரும் வேசிகளும் விதிநூல் வைத்தியரும் கோழிகளும் பூனைகளும் பகையாக இருப்பார்கள் ” என்ற பழைய சொல்லுக்கிணங்க ஒரு கிழமையாக விசர் நாய் கடித்த பூனை போல் அந்த வைத்தியசாலையின் மூலை முடுக்கெல்லாம் தேடியது.
பகலில் நாய்கள், மனிதர்கள் அங்கும் இங்கும் செல்வதால் ஹொலிங்வூட்டுக்;கு சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும். வைத்தியசாலையின் இரவுகள்தான் ஹொலிங்வூட்டுக்கு சொந்தமானவை. கருமையான இருளை தனது உடலில் பூசியபடி காட்டில் கரந்துறையும் கெரில்லா போராளி போல் ஒளி பாச்சும் தனது கண்களுடன் மூலை முடுக்கெல்லாம் வலம் வரும். இரவில் நடுநிசியின் பின்பு வைத்தியசாலையின் ஓர் இரு லைட்டுகளைத் தவிர மற்றவை அணைக்கப்படுவதால் இருளுக்கும் ஹொலிங்வுட்டுக்குமே அந்த இடம் சொந்தமாகிறது. இடங்களை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு இடமாக துப்பறியும் பொலிசாராக காட்டுப்பூனையின் தடயங்களைத் தேடியது. நேரடியாக ஒளிந்திருக்கும் பூனையைத் தேடாமல் பூனைகள் வெளியேற்றும் குண்டிச்சுரப்பியின் வாசனையைத் தேடியது. பூனைகள் மட்டுமல்ல எந்த ஊன் உண்ணும் மிருகங்களும் தங்களது வாழும் இடத்தை அந்த சுரப்பின் மூலம் அடையாளப்படுத்தும் என்பது ஹொலிங்வுட்டுக்கு தெரிந்திருந்தது.
ஏழு நாட்களாக மோப்பம் பிடித்து கூரைப் பகுதி அலுமாரியின் இடுக்குகள், சவஅறை என எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் சென்று துப்புத் துலக்கியது. கபடமான நட்புடன் பூனையை அழைப்பது போலவும் பெண் பூனை யை ஆண் பூனை புணர்வுக்கு குரல் கொடுப்பது அழைப்பது போலவும் பின்னிரவில் குரல் கொடுத்து அழைத்தது. ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. ஹொலிங்வுட்டின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகின. அந்தப் பூனை இங்குதான் எங்கோ ஒளிந்து இருக்கிறது என உள்மனம் சொன்னாலும் காட்டுப் பூனையை பற்றி எந்த தடயமும்; ஹொலிங்வுட்டுக்கு கிடைக்கவில்லை.
இப்படியாக ஒரு கிழமை கஷ்டப்பட்டு ஒழுங்காக சாப்பிடாமல் தூக்கமில்லாமல் அலைந்து திரிந்து தேடியதால் கொலிங்வூட்டின் வயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த கொழுப்பு மறைந்து விட்டது. ஆனால் வயிற்றில் தொங்கிய கொழுப்புக் குறைந்தாலும் பொறாமை தீயாக வயிற்றின் உள்ளே தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. வெளிக்கொழுப்பு பொறாமைத் தீயால் எரிந்ததா இல்லை காட்டுப் பூனையை தேடித் திரிந்ததால் குறைந்ததா என்பது விவாதத்துக்கு உரியது. இந்த வைத்தியசாலையில் தனது செல்வாக்கான சுதந்திரமான வாழ்வுக்கு மறைந்து வாழும் அந்த காட்டுப் பூனையால் இடர் ஏற்படலாம் என்றோ அல்லது தான்மட்டும்தான் இங்கு வாழும் உரிமையை பெற்றிருப்பதாக நினைத்தோ மனம் புகைந்தபடி அலைந்து திரிந்தது.
எல்லோரும் கொலிங்வூட் சிலிம்மாக வந்தது பற்றி வியப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் வைத்தியத்துக்கு வந்த பூனைகளில் இருந்து வியாதி ஏதாவது தொற்றி விட்டதோ சாடை மாடையாக என கூறியது கொலிங்வூட் காதில் விழுந்தது.
அவர்கள் மேல் கொலிவூட்டுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
‘கையாலாகதவர்கள். சோம்பேறிகள்’ என திட்டியது
‘இவன்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் இவன்களின் கொழுப்பும் கரைந்திருக்கும். என்னுடைய கொழுப்பு தன்பாட்டில இருந்த இடத்தில் இருந்திருக்கும்.’ எனச் சொல்லி அவர்கள் முன் தனது வாலை உயரத்தி பிஷ்டத்தைக் காட்டித் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு. வெளியே மழை தொடர்சியாக தூறலாக பெய்து கொண்டிருந்தது. செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்தவர்கள் தொகை குறைவாக இருந்ததால் விரைவாகி வீட்டுக்கு போய் விடலாம் என்ற எண்ணத்துடன் இரவு வேலையை முடித்து விட்டு தண்ணீர் குளாயில் ஷரன் கையை கழுவிக் கொண்டிருக்கும் போது அந்த அறையின் பின்புறமாக பார்மசி கதவு வழியாக ஹொலிங்வுட் மெதுவாக உள்ளே வந்தது.
திரும்பிப் பார்த்த ஷரன் ‘என்ன கொலிங்வூட் வர வர மெலிந்து கொண்டு வருகிறாய். ஏதாவது தொற்று நோய் பிடித்து விட்டதா? இல்லை சாப்பிடுவதற்கு கஸ்டமாக இருக்கிறதா?“ நகைச்சுவை மட்டுமல்ல அத்துடன் நக்கலும் கலந்திருந்தது.
வழக்கமான உதாசீனத்துடன் ‘இந்த டிராமா குயினால் தான் வந்தது’ என கூறிவிட்டு மீண்டும் திரும்பி செல்ல நினைத்த போது திடீரென வெளிச்சமும் மறைந்து. வைத்தியசாலையின் சகல லைட்டுகளும் அணைந்து போய்விட்டது. எங்கும் இருள் பரவி ழுழு வைத்தியசாலையையும் முற்றாக மூடிக்கொண்டது. அந்த நேரத்தில் கதவை நோக்கி நடந்த ஷரனது கால் கொலிங்வூட்டின் மேல் பட்டதும் பலத்த சத்தத்துடன் கொலிங்வூட் சீறியது.
‘என்னை மன்னிக்க வேண்டும்’ என குனிந்த ஷரன் கொலிங்வூட்டை தூக்க முற்பட்டபோது வேறு ஒரு பூனை சீறும் சந்தம் கேட்டது. திடுக்கிட்டு ஷரன் நிமிர்ந்தாள். அந்த நேரத்தில் மீண்டும் லைட் வந்து அந்த இடம் ஒளி வெள்ளமாகியது.
மூலையில் சீறிய படி நின்ற கொலின்வூட்டின் கழுத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. எதிரில் ஒரு கரிய நிறத்தில் மெலிந்த பூனை வாலை உயர்த்தி பதிலுக்கு சீறிக் கொண்டு சிங்கம் போல நின்றது. கரிய உரேமங்கள் முள்ளம்பன்றியின் முட்கள் போல் குத்திட்டுக் கொண்டன. ஏற்கனவே ஒரு தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால் மறு தாக்குதலுக்கு இடது முன்னங்காலை உயர்த்தியபடி பின்னங்கால்களை சிறிது பிரித்து வைத்து கழுத்தை உள்நோக்கி இழுத்தபடி கோரைப்பற்களைக் காட்டியபடி புதிய தாக்குதலுக்கு தயாராகியது.
ஷரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் பூனைதான் சில நாட்களுக்கு முன்னால் தன்னிடம் இருந்து தப்பியது. மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராக காற்றில் ஹோலிங்வுட்டை நோக்கி பாய்ந்த அந்தப் பூனையை காலால் எத்திவிட்ட போது மூடப்பட்ட கதவில் பட்டு நிலத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் பாய்ந்து கொலிங்வூட்டை அள்ளி தூக்கிக் கொண்டு பின் கதவால் பார்மசி பகுதிக்கு சென்று அந்தக் கதவை அடைத்ததும் அந்தக் காட்டுப்பூனை அந்த அறையில் சிறைப் பிடிக்கப்பட்டது.
இரத்தம் வடிந்தபடி இருந்த கொலிங்வூட்டை பாதுகாப்பாக பூனைப்பகுதியில் ஒரு கூட்டில் அடைத்துவிட்டு திரும்பி வந்த போது ஷரனது நேர்சான நோறேலும் சேர்ந்து கொண்டு இப்பொழுது அந்தக் காட்டுப்பூனையை அந்த அறையில் தேடினர்.
‘என்னால் நம்ப முடியவில்லை எப்படி இந்தப் பூனை பத்து நாட்கள் உயிர்வாழ்ந்தது?
‘இது வேறு பூனையாக இருக்கலாம்’ எனறாள் நோறேல்
‘இல்லை இது அந்தப் பூனைதான். பூனைகள் பலநாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் சீவிக்கும். ஆனால் இது ஒரு உலக சாதனை.’
இருவரும் பேசிக்கொண்டு தேடினாலும் அந்த காட்டுப்பூனையைக் காணவில்லை.
பூனை நின்ற இடத்தில் கொலிங்வுட்டின் இரண்டு இரத்த துளிகள் கரும் பச்சை நிலத்தில் உறைந்து இருந்தன.
ஷரனுக்கு நம்ப முடியவில்லை. வெறுமையான அறை. அங்கு பரிசோதனை மேசை மற்றும் ஒரு சிறிய வாஷ் பேசின் பொருத்திய அலுமாரி மட்டும்தான் அந்த அறையில் உள்ள பொருட்கள். சுவர்கள் ஆள் உயரத்திற்கு நாலுபக்கமும் வழுவழுப்பான ரைல்கள் பதித்தவையானதால் சுவரால் ஏறி கூரைக்கு செல்ல முடியாது.
எப்படி ஒளித்திருக்க முடியும்?
வாஷ் பேசினின் கீழுள்ள அலுமாரியை ஷரன் திறந்த போது வால் ஆடியது போன்று நிழல் ஆடியது. மிருகங்களின் கண்களைப் பரிசோதிக்கும் சிறிய லைட்டின் வெளிச்சத்தை அலுமாரியுள்ளே செலுத்தி குனிந்து பார்த்த போது அந்த பூனை வாஷ் பேசினுக்கும் சுவருக்கும் இடையில் தண்ணீர் குளாயின் வளைவில் மறைந்திருந்தது.
பத்து நாட்களுக்கு மேல் அந்த இடத்தில் உணவு தண்ணிர் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது. பாதுகாப்பு படையினது உயிர் குடிப்பதற்காக மரத்தின் கிளையில் பல நாட்கள் மறைந்திருக்கும் கெரில்லா போராளி போல் அந்தத் தண்ணீர்க் குளாயின் வளைவில் வாழ்ந்திருக்கிறது.அப்படியாக திடசங்கற்பம் கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்காக உறுதியுடன் இருந்த அந்த காட்டுப்பூனையை தேடியலைந்து கண்டு பிடித்தது கொலிங்வுட்டின் சாதனைதான்.
‘எனது கால்பட்டு கொலிங்வுட் சீறியதால் அந்த காட்டுப்பூனை வெளிவந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் எத்தனை நாட்கள் இங்கிருக்குமோ? அல்லது கொலிங்வுட் அதைக்கண்டுதான் சீறியதா ’
‘இந்த பூனையை நாங்கள் வெளியில் எடுப்பது கஸ்டம்’ என்றாள் நோரேல்
ஷரன் வழக்கமாக இதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். காட்டுப் பூனையை பிடித்துக் கருணைக் கொலை செய்யவேண்டும் எனத்தான் சொல்லி இருப்பாள். தனது கடந்த காலத் தவறால் கொலிங்வுட் காயமடைந்தது அத்துடன் நடு இரவைத் தாண்டி விட்டது.
ஷரனின் மனத்தில் கொலிங்வுட்டுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற என்ற சிந்தனையுடன் இருந்தால் நோரேலுடைய ஆலோசனைக்கு ஏற்ப மயக்க மருந்து கொண்ட ஊசியால் அந்தக் குளாயில் இருந்தபடி நீண்ட ஊசியைப் பாவித்து கருணைக்கொலை செய்தாள்.
சில நிமிட நேரத்தில் வெளியே விழுந்த அந்த காட்டுப்பூனை ஒரு எலியளவில் இருந்தது. உயிரோடு பார்த்த போது சிலிர்த்த மயிர்கள் பெரிதாக காட்டி இருந்தன.
இருவரும் மீண்டும் கொலங்வுட்டைத தேடிச் சென்றனர்
‘ஆகா என்னருமை கொலிங்வுட்’என மார்போடு தூக்கி அணைத்தாள் நோரேல்
‘கோலிங்வுட்டுக்கு தேவை இல்லாதது இந்த துப்பறியும் வேலை. மனத்தில் துப்பறியும் பொலிஸ் என்ற நினைப்பு. வேண்டாத வேலையைச் செய்து காயப்பட்டிருக்கிறது. அந்தப்பூனை எலியளவில் இருக்கிறது. ஆனால் இந்தப் பெரிய உடம்புடன் நீ கடிவாங்கி இருக்கிறாய். எதுக்கும் லாயக்கு இல்லை’ என திட்டிக் கூறியபடி காயத்தை சுத்தம் செய்தாள்.
கோலிங்வுட் “இவளால்தான் எல்லாம் வந்தது. டிராமாகுயின் டிராமாக் குயின்“ என மனத்தில் பல முறை திட்டியது.
அப்பொழுது ஷரன் அன்ரிபயற்றிக்கை ஏத்தியபோது கொலிங்வுட் கத்தியது
‘கமோன் கொலங்வுட் மெதுவாக எடுத்துக் கொள். தேவையில்லாத வேலையில் ஏன் ஈடுபட்டாய்’ என சிரித்தபடி
நோரேல் மெதுவாக ஊசிபோட்ட அந்த இடத்தை விரல்களால் தடவி விட்டது இதமாக இருந்தது
கொலிங்வுட்டை பூனைக் கூட்டுக்குள் அன்றிரவு அடைத்தது விட்டார்கள்.
கொலிவுட் திட்டியபடியே இருந்தது. வைத்திய சாலையில் சுதந்திரமாக திரிந்த தன்னை கூட்டில் அடைத்து வைத்தது பாதிப்படைந்த தனக்கு தரப்பட்ட மேலதிக தண்டனையாகக் கருதியது.
அடுத்த நாள் சுந்தரம்பிள்ளைக்கு வழக்கம் போல காலை எட்டரை மணிக்கு வேலை. பூனை வாட்டில் வேலை தொடங்கியதும் சிவா, சிவா என உயிர் போகவிருக்கும் நிலையில் கடைசியாக வெளிவரும் வார்த்தை போன்ற ஒரு அனுங்கலான குரல் மெல்லியதாக கேட்டது. திரும்பிப் பார்த்தபோது எவரும் அருகில் இல்லை. தொடர்ந்து மற்றப் பூனைகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது நாய்வாட்டில் மருந்துகளைக் கொடுத்துத் தனது வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வந்த சாம், புதிய செய்தியைச் சொல்லும் பரபரப்புடன் ‘ ஒரு கிழமைக்கு முன்பு தப்பியோடிய காட்டுப்பூனை கொலிங்வுட்டை கடித்து விட்டது. இங்கு ஒரு கூட்டில்தான் இருப்பதாக சொன்னார்கள். நீ கண்டாயா சிவா?’ என்றான்.
அப்பொழுது மீண்டும் ‘சிவா’ என்று வலது பக்க மூலையில் அதே ஈனஸ்வரத்துடன் குரல் கேட்டு, சுந்தரம்பிள்ளை அங்கே சென்றபோது பரிதாபமாகக் கழுத்தைக் கீழே போட்டுக் கொண்டு மூலையில் கசக்கி எறியப்பட்ட சாம்பல் கம்பிளித் துணிபோல சீவனற்ற நிலையில் கொலிங்வுட் கிடந்தது. கழுத்தில் பெரிய வீக்கம் ஒரு திராட்சைப் பழம் அளவில் இருந்தது.
கொலிங்வுட என்ன நடந்து?
‘இரவு அந்த காட்டுப் பூனை கடித்துவிட்டது. அந்த டிராமாக்குயின் அவசரத்தில் எனது காயத்தை துப்பரவாகத் துடைக்கவில்லை. அதனால் மீண்டும் சீழ் பிடித்து இப்பொழுது எனக்கு காய்ச்சல் அடிக்கிறது.’
‘சரி நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். கவலையை விடு’
‘எனக்கு மயக்க மருந்து கொடுக்காமல் தோலை மட்டும் விறைக்கப் பண்ணிவிட்டு இந்த சீழை எடு.’
‘நீ சொல்லி நான் செய்யிறதான நிலை. என்ன செய்வது?
‘உன்னோடுதான் என்னால் பேசமுடியும். அந்தப் பூனையில் எந்த தொற்று நோய் இருந்ததோ?
‘மூன்று மாதத்தில் இரத்த பரிசோதனை செய்வோம். எயிட்சுக்கும் லுயிக்கீமியாவுக்கும் சோதனை செய்யவேண்டும்.’
‘அது வரையும் நான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இந்த வைத்தியசாலையில் உலாவ வேண்டும். இது கொடுமையானது . அந்த டிராமாக்குயினின் தவறு எனது உயிருக்கு உலைவைத்திருக்கிறது’ எனப் புலம்பியது.
‘மரணம் இந்த உலகத்தில் படும் கஸ்டங்களில் இருந்து விடுதலை செய்கிறது என சொல்வார்களே’
‘ மற்றவர்களுக்கு சொல்லும்போது இலகுவாக இருக்கிறது. உங்களுக்கு பரிகாசமாக இருக்கிறது எனது நிலை.’
‘சரி. சரி. ஹோலிங்வுட் புலம்பாதே. இது சாதாரணமானது. சாம் கொலிங்வுட்டின் உடல் வெப்பத்தை பார்’என்றதும் ஹொலிங்வுட்டின் வாலை உயர்த்திவிட்டு குதத்துக்குள் தேமாமீட்டர் சாமினால் செருகப்பட்டது. அதே நேரத்தில் ஊசி மருந்தை சுந்தரம்பிள்ளை முதுகில் ஏற்றிய போது ‘ஏன் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் செய்யிறீர்களே இது நல்லாவா இருக்கு? மீண்டும் ஈனஸ்வரத்தில்.
‘நாங்கள் மற்ற மிருகங்களையும் பார்த்து அவைகளுக்கும் மருத்துவம் செய்ய வேண்டும். சாம் என்ன வெப்பம்?
‘நாற்பது காட்டுகிறது’
‘புண்ணை சேலயினால் சீழ் சுத்தம் செய்து விட்டு மீண்டும் அதே கூட்டில் அடைத்து விடு.
‘கொலிங்வுட் இந்தக் கூட்டில் இளைப்பாறு’ எனச் சொல்லிவிட்டு சாமுடன் சுந்தரம்பிள்ளையும் பூனை வாட்டில் இருந்து வெளியேறினார்கள்.
கொலிங்வுட்டை பற்றி பலர் அன்று சுகம் விசாரிப்பதற்காக வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் வந்தனர். போலின் அன்று மாலை ஐந்து மணிக்கு இரவு வேலை தொடங்கிறது என்ற போதிலும் கருணை உள்ளத்துடன் மதியமே வந்து கொலங்வுட்டை மடியில் வைத்து கொஞ்சினாள். அன்று பலராலும் சுகம் விசாரிக்கப்பட்டு கவனிக்கப்பட்டது உள்ளுர சந்தோசத்தை அளித்தாலும் கழுத்து காயத்தால் ஏற்பட்ட வலியும், காச்சலால் ஏற்பட்ட உடல் வெப்பமும் சேர்ந்து யாரோ வாகனத்தால் அடித்துப் போட்டது போன்ற உணர்வை கொடுத்தது. இதை விட பூனைக்கடியில் தொற்றும் நோயான ஏயிட்ஸ் வந்தால் தன்னைக் கருணைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பயமும் மனத்தில் புகைந்து கொண்டிருந்தது.
‘ஹொலிங்வுட்டைப் பராமரிக்க வந்தாயா? அந்த வழியால் வந்த சுந்தரம்பிள்ளை
‘எனக்கு இரவே நோரேல் தொலைபேசியில் சொன்னாள்’
‘நீ இரவு வேலையில் இருப்பதால் பார்த்துக் கொள்வாய். சாப்பிட மறுத்தால் கரண்டியால் சயன்ஸ் திரவ டையற்றை கொடு. இன்று இரவும் கூட்டுக்குள் தான் இருக்கவேண்டும்’
கோலிங்வுட் போலின் மார்பில் படுத்தபடி ஷரனை சபித்துக் கொண்டிருந்தது. சுந்தரம்பிள்ளை அதை பொருட்படுதாமல் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.
[தொடரும் ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.