அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (3) 

மொன்யூமென்ட் வாலி (Monument Valley) எனப்படும் பகுதி உத்தா, அரிசோனா என்ற இரு மாகாணங்கள் இடையே உள்ள பிரதேசமாகும். தற்போது இந்தப் பிரதேசம் அமெரிக்க ஆதிகுடிகளின் வசம் உள்ளது. அவர்களில் முக்கியமாக நவகோ (Navajo Nation) என்ற ஆதிகுடிகளின் ஆட்சியிலும் தன்னாட்சியிலும் உள்ளது. தற்போது இவர்களே இப்பேகுதியில் வாழும்  பெரிய இனக்கூட்டமாகியுள்ளனர். அவர்களது அனுமதியுடனே மொன்யூமென்ட் வாலிக்கு நாம் செல்ல முடியும்.

இந்த மொன்யூமென்ட் வாலி என்பது மிகவும் பெரிதான கற்கள்,  சிறிய குன்றுகள் போல் பல வடிவங்களில் அமைந்திருக்கும் இடமாகும். ஒவ்வொன்றின் வடிவத்திற்கும் பெயரிட்டு, அவற்றில் அவர்களது தெய்வங்கள் குடியிருப்பதாக நவகோ மக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்த இடங்கள் புனிதமானவை.

இந்த இடங்களே பல ஹாலிவுட் கவ்போய் படங்களில் வரும் இடங்களாகும். சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ள இந்த பாறைகளில் செப்பு, இரும்பு, யுரேனியம் போன்ற கனிப்பொருட்கள் உள்ளன. அமெரிக்காவில் யுரேனியம் இருந்தும்,  வருடாவரும் 800 மில்லியன் டாலருக்கு ரஸ்சியாவிலிருந்து யுரேனியம் வாங்குவதன் காரணம் என்ன தெரியுமா? இந்த இடம் புனித பிரதேசமாக இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

பல உருவங்களில் உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் ஒருவித உயிருள்ள உருவங்களைப் போன்றே தோன்றுகின்றன. இந்தப் பகுதியின் மேற்பார்வை நவகோ ஆதிவாசிகளிடம் இருப்பதால், அவர்கள் தங்கள் ஜீப்புகளில் எங்களை அழைத்துச் சென்றனர். பல இடங்களை அவர்கள் தங்கள் மூதாதையர்களின் தெய்வ வடிவங்களாகவும், வாழ்க்கையின்  வழிகாட்டிகளாகவும் கருதுகிறார்கள் என்றும் கூறினர். அவர்களின் நம்பிக்கைகள்,  இன்னும் நிறுவனப்படுத்தப்படாதது  வரவேற்கத்தக்கதாய் இருந்தது. நிறுவனமயப்பட்டால் அதை வைத்து ஒரு வர்க்கம்  உருவாகி இருக்கும். அதே வேளையில் இவர்களது இந்த நம்பிக்கையே,  அவர்களுக்கு அரசிடமிருந்து நில உரிமையைப் பெறவும் அதன் பொருளாதாரத்தில் பயன்பெறவும் உதவியுள்ளது. 

அவர்கள் தங்கள் நிலத்தின் மீது பெற்றுள்ள தற்காலத் தன்னாட்சி, அவர்களுக்கு இலகுவாக கிடைத்ததல்ல: வேர்வை, இரத்தம், மரணம் ஆகியவற்றின் பலனாக மலர்ந்த கனிகள். 1864ல் அமெரிக்க அரசுப் படையினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நவகோ ஆதிகுடிகளை இந்தப் பகுதியிலிருந்து வளைத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் 300 மைல்கள் தூரம் கால் நடையாக தற்போதைய நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் திறந்த சிறையில் வைக்கப்பட்டனர். அவர்களை பிற இனத்தாருடன் பலவந்தமாக கலப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது. அதேசமயம் பசி, படடினி , நோய்கள் ஆகியவற்றால் 3500 ஆதிவாசிகள் அக்காலத்தில் இறந்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், 1868ல், அமரிக்க அரசாங்கம் தங்கள் தவறை உணர்ந்து, அவர்களை மீண்டும் தங்களது சொந்த இடமான மொன்யூமென்ட் வாலிக்குத் திருப்பி அனுப்பி, நிலத்தின் மீது அவர்களின் பாரம்பரிய உரிமையை அங்கீகரித்தது.

எங்களது ஜீப் சாரதி இந்தக் கதையை சொல்லும்போது, ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் கதைகள் எனது மனதில் நிழலாடின. எந்த காலத்திலும், உலகின் எந்தப் பகுதியில் மனிதர்கள் சகமனிதர்களை கொன்று துன்புறுத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன. பேசும் மொழி, மதம், நிறம் ஆகிய வேறுபாடுகளே இங்கு பெரிதாகும் காரணங்களாகின்றன.

மொன்யூமென்ட் வாலி கடல் மட்டத்திலிருந்து 5000–6000 அடி உயரத்தில் உள்ளது. குளிர்காலத்தில் பனி படரும்; ஆனால் நாங்கள் சென்றது கோடை என்பதால் அதிக வெப்பம் இருந்தது. இந்தப் பகுதி திரைப்படப் படப்பிடிப்பாளர்கள், புகைப்படக்காரர்கள் மிகவும் விரும்பும் இடம்.

அன்டிலோப் கேன்யன் (Antelope Canyon)
அடுத்த நாள் சென்ற இடம் அரிசோனா மாநிலத்தில் உள்ள அன்டிலோப் கேன்யன். இங்கு பாறைகள் குகை வடிவில் கோர்வையாக உள்ளன. வெளியிலிருந்து வரும் சூரிய ஒளி இந்தப் பாறைகளின் அழகை பல மடங்கு அதிகரிப்பதால், புகைப்படக்காரர்களின் சொர்க்கம் எனப்படும் இடமிது. பாறைகளின் மீது நடப்பது வழுக்கலாக இருக்கும் என்பதால் சியாமளாவை விட்டுவிட்டு நான் மட்டும் சென்றேன்.
நாங்கள் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல குகைகளில் மண் மேடாக மணல்  படிந்திருந்தது. வழிகாட்டியாக வந்த ஆதிவாசி பெண் — “சில நாட்களுக்கு முன்பு வெள்ளம் பாய்ந்ததால் எவரும் வர முடியவில்லை; இப்போது தண்ணீர் வடிந்துவிட்டது, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தரையில் இருந்த மணலைக் கைத்தடியால் காட்டினார்.
அவர் படங்கள் எடுக்கவும் உதவினார். ஒருவர் வீடியோ எடுப்பதைத் தடுத்து, “இது எங்களது தெய்வங்கள் இருப்பிடம்; அதனால் வீடியோ எடுக்க அனுமதி இல்லை” என்றார்.

“சமீபத்தில் இந்த குகைகளில் எடுத்த ஒரு படத்தை ஒருவர் ஐந்து லட்சம் டாலருக்கு விற்றார். அதைத் தெரிந்த நாங்கள் நெகட்டிவ் தராவிட்டால் எங்கள் பாரம்பரிய நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கடிதம் எழுதியோம். அவர் நெகட்டிவ் கொடுத்தார்.”

“பணம் கேட்டீர்களா?” என்றேன்.

“அவர் பெற்ற பணத்தைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை,” என்றார்.

அது ஆதிவாசிகளின் பணத்திற்கு மதிபற்ற நாகரிகப் பார்வையை எனக்கு தெளிவாக்கியது. நான் ஆரம்பத்தில பணிபுரிந்த ஆஸ்திரேலிய புறநகரில், அபோரிஜினல் மக்கள் வியாழக்கிழமை சம்பளம் பெற்றதும் பெரும்பகுதியை அன்றே செலவழித்து விடுவார்கள் என்பதை நேரடியாகப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

எனக்கும் அந்த ஆதிவாசிப் பெணுக்கும் நடந்த உரையாடல் முக்கியமானது.

பயணத்தில் வந்தவர்கள் என்னைத் தவிர எல்லோரும் வெள்ளை  ஐரோப்பியர்கள். இறுதியில் அந்த ஆதிவாசிப் பெண் என்னிடம்,

“நீ லத்தினோ?” என்று கேட்டார்.

நான் “ஸ்ரீலங்கன்” என்றேன்.

அவரது முகத்தில் மாற்றமில்லை.

பின்பு சிரித்துக்கொண்டே “இந்தியன்” என்றேன்.

“எங்களுக்கும் இந்துக்களுக்கும் ஒற்றுமை உண்டு. இயற்கையை தெய்வமாகக் காண்கிறோம். வேறுபாடு — நீங்கள் அதற்கு உருவம் கொடுக்கிறீர்கள்; நாங்கள் அதை சக்தியாக நினைக்கிறோம்,” என்றார்.
இந்த அளவு தெளிவான மதப் பார்வையை ஒரு ஆதிவாசிப் பெண்ணிடமிருந்து கேட்ட அதிர்வை மறைத்தபடி, “உண்மை” என்றேன்.

அதை கேட்ட அவர் மகிழ்ச்சியுடன் எனது தோளில் கை வைத்தார். என்னருகில் நின்ற ஐரிஷ் பெண் உடனே, “இவர் திருமணமானவர்!” என்று சொல்லி அந்தப் பெண்ணின் முகத்தை சிவக்க வைத்தார்.
இந்த இடமும் அமெரிக்க ஆதிவாசிகளின் ஆட்சியிலேயே உள்ளது. “இது எங்களது நிலம்” என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.

சியோன் தேசிய பூங்கா (Zion National Park)
லாஸ் வேகாஸ் செல்லும் வழியில் மிகவும் விசித்திரமான பாறை அமைப்புகளைக் கொண்ட பகுதி இது. தண்ணீர் பனியாகுவதால் பாறைகள் புதுவடிவம் பெறுகின்றன. சூரிய ஒளியில் பல வண்ணங்களில் மாறுகின்றன. மழை குறைந்த இடமாக இருந்தாலும், வேர்ஜின் ஆற்றோரத்தில் நிற்கும்போது ஏராளமான உயிரினங்கள் வாழும் நிலம் இதுவென்று உணரலாம். இங்கு கூகர் (Cougar) புலிகள் வாழ்கின்றன. மண்ணில் அதிக அளவு நச்சுத் தன்மை கொண்ட செலேனியம் உள்ளதால் சில குறிப்பிட்ட தாவரங்களே வளருகின்றன. ஆதிகாலத்தில் ஒட்டகம், மம்மோத் போன்ற மிருகங்கள் வாழ்ந்ததாகவும்,  8000 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையால் அழிந்ததாகவும் கருதப்படுகிறது. அருகில் சியோன் என்ற சிறிய நகரமும் உள்ளது.

பிரைஸ் கேன்யன் தேசிய பூங்கா (Bryce Canyon National Park)
இந்தப் பகுதியில் பெரிய தூண்கள் போல் பாறைகள் அமைந்துள்ளன. காரணம் — இரவில் பனி உறைந்து காலை உருகும்போது பாறைகளில் ஏற்படும் வெடிப்புகள். சுண்ணாம்பு பாறைகளில் நிகழும் இந்த இயற்கை மாற்றங்கள் புவியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை ஒரு புத்தகமாக இங்கு பதித்து வைத்துள்ளன.

நான் எழுதிய இந்த மூன்று பூங்காக்களும் பல காலமாக பார்ப்பதற்காக விரும்பிய இடங்கள். அதிர்ஷ்டவசமாக மூன்று நாட்களில் அனைத்தையும் பார்த்து முடித்தேன்.


அமெரிக்கப் பயணத்தொடர்: மேற்கு அமரிக்கா (4) 

நம்மைப்போல் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மூவர், தங்களின் நண்பரான ஒரு மில்லியனரின் திருமண அழைப்பை ஏற்று அமெரிக்காவின் கிழக்கு நகரங்களிலிருந்து லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கிறார்கள். அந்த நண்பர் தன்னைவிட முப்பது வயது குறைவான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார்.

அவர்கள் அங்கே செய்யும் அட்டகாசங்களை நகைச்சுவையாக எடுத்த படமே “லாஸ்ட் வேகாஸ்” திரைப்படம்.

இந்தப் படத்தில் மில்லியனராக வரும் பாத்திரத்தில் மைக்கேல் டக்ளஸ் நடித்துள்ளார். அவருக்குப் மிகவும் பொருத்தமான பாத்திரம். அவரது நண்பர்களில் ஒருவர் மோர்கன் ஃப்ரீமன். அவர் ஏற்கனவே பாரிசவாதநோயிலிருந்து(Stroke) தப்பி, மருந்துகளிலும் மகனின் கவனிப்பிலும் இருப்பவர்.தன் மகனுக்குத் தெரியாமல் பல பொய்களைச் சொல்லி நண்பரின் திருமணத்திற்காக லாஸ் வேகாஸ் செல்வது அட்டகாசமாக உள்ளது. மற்றொரு நண்பரான ராபர்ட் டி நீரோவை விமான நிலையத்தில் வழியனுப்பும் போது, அவரது மனைவி ஒரு வயாக்ரா மாத்திரையும் ஒரு கொண்டமும் கொடுத்து அனுப்பும் காட்சி என் மனதில் நீங்காத ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தின் கதையில் வயதான நான்கு நண்பர்கள் லாஸ் வேகாஸில் சூதாடுவதும், அதில் கிடைக்கும் பணத்தில் சில நாட்கள் அட்டகாசமாக வாழ்வதும், இறுதியில் அது முடிவுக்கு வருவதும் காட்டப்படுகிறது. கதைக்கப்பால், லாஸ் வேகாஸ் நகரமே இப்படியான சம்பவங்களின் மூலம் மறக்க முடியாத இடமாகச் சித்தரிக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரை படத்தில் பார்த்த பின், நேரடியாகப் பார்த்தபோது அதே நினைவே எனக்குள் எழுந்தது.

லாஸ் ஏஞ்சலிலிருந்து புறப்பட்ட எங்களது பஸ்சின் இறுதி இடம் லாஸ் வேகாஸ். அங்குள்ள மிகப் பெரிய காசினோ அமைந்த ஹோட்டலில் நாங்கள் தங்கினோம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொலராடோ நதிக்கரையில் ஐந்தாயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த சிறிய நகரம். இன்று 175 சிறியதும் பெரியதுமான காசினோக்கள் உள்ள நகரமாக ஒளிர்கிறது.

ஆறு லட்சம் மக்கள் வாழும் நகரமென்றாலும், கடந்த ஆண்டு மட்டும் நாற்பது மில்லியன் மக்கள் வந்துபோனதாக ஒரு கணக்கீடு கூறுகிறது.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள காசினோவை கடந்து எங்கள் அறைக்குச் செல்லவே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. பலமுறை காசினோ இயந்திரங்களைப் பார்த்தபோது அவை வெறுமனே அழுது வழிந்தன. அதிகமான மக்களை காணவில்லை. இருந்தவர்களும் மில்லியன் டாலர்களைத் தூக்கி வந்து சூதாடும் செல்வந்தர்களாகத் தெரியவில்லை. கசங்கிய சட்டைகள், காய்ந்த முகங்கள், கலைந்த தலைமுடிகள்—அப்படியே தோன்றினார்கள்.

இதற்கு காரணம் என்ன என்று வழிகாட்டியிடம் கேட்டபோது, தற்போது சூதாட வருபவர்களின் வருகை குறைந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதேபோல் விமான நிலையங்களிலும் பயணிகளின் வருகை முப்பது விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார்கள். வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகச் சொன்னார்.

அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு அரசின் செயல்பாடுகளே காரணம் என்று பலர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள்.

லாஸ் வேகாஸின் பிற காசினோக்கள், ஷாப்பிங் சென்டர்கள் ஆகியவற்றிற்குச் சென்றபோதும் அங்கும் பெரிதாக மக்களைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த இரண்டு நாட்களில் நான் கவனித்த முக்கியமான ஒன்று—அங்கங்கு வெள்ளை நிறத்தில், சிறியதும் பெரியதுமான பல தேவாலயங்கள் இருந்தன.

அதைப் பற்றி கேட்டபோது, திருமணத்திற்காக அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருவார்கள் என்றார்கள். வந்தவர்கள் சில நிமிடங்களில் திருமணம் செய்து கொண்டு வெளியேறுவார்கள் என்றும் சொன்னார்கள்.

அடுத்த நாள் எங்களுள் சிலரின் பயணம் 37 மைல் தொலைவில் உள்ள ஹூவர் அணை நோக்கி இருந்தது.

பல ஆண்டுகள் வரை இது உலகின் முக்கியமான அணையாகக் கருதப்பட்டது. நெவாடா – அரிசோனா மாநிலங்களின் எல்லையில் கொலராடோ நதியின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1922ஆம் ஆண்டில், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியான காலத்தில் கட்டப்பட்டது. அதனால் பலருக்கு வேலை கிடைத்தது.

அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த அணை கட்டுமானப் பணியில் உயிரிழந்தார்கள். அக்காலத்தில் 49 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவாகியதாகவும், இன்று இதே அணையை கட்ட வேண்டுமானால் பில்லியன் டாலர்கள் தேவைப்படுமெனவும் கூறினார்கள்.

பொறியியல் அறிவு அதிகம் இல்லாவிட்டாலும், அங்கு எழுதப்பட்டிருந்த தகவல்களைப் பார்த்தபோது அது பிரமாண்டமாகத் தோன்றியது.

இந்த அணையால் 1.5 மில்லியன் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம், 16 மில்லியன் மக்களுக்கு குடிநீர், அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. மொத்தத்தில், இந்த அணையின் பயன், ஏழு மாநிலங்களுக்கு சென்றடைகிறது. இங்கு மிகப் பெரிய நீர்த்தேக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. அணைக்குள் சென்று மின்சார ஜெனரேட்டர்களை மிக அருகிலிருந்து பார்க்க அனுமதி அளித்தார்கள். பாலம் போன்ற பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார்கள்.

அமெரிக்காவில் தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாயைக் கட்டினார். அதேபோல், ஹூவர் அமைச்சராக இருந்த காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த அணை, அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. நமக்குத் தெரிந்த ஏபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி போன்றவர்களுக்குப் பிறகு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் அழிவுத் தொழில்களில் ருத்துரமூர்த்திகளாக ஈடுபடுவதாகவே தோன்றுகிறது.

இந்த முறை அமெரிக்காவில் நான் கவனித்த முக்கியமான ஒன்று—பணம் கையிலிருந்து நீராக ஓடிவிடுகிறது. ஓடிய பின்னும் கணக்குப் போட முடியவில்லை.

சில நேரங்களில் நானும் சியாமளாவும் ஒரே காப்பியைப் பகிர்ந்து குடிப்பதும், ஒரே உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. உதாரணமாக, ஒரு சாதாரண காப்பி 6–9 அமெரிக்க டாலர்கள். ஆஸ்திரேலியாவில் அதே காப்பி 3 அமெரிக்க டாலர்கள் (4.5 ஆஸ்திரேலிய டாலர்கள்) மட்டுமே.  அமெரிக்காவில் சாதாரண மக்களின் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே தோன்றியது.

வறுமையான நாட்டில் வறுமையில் வாழ்வது பெரிய அதிர்ச்சியல்ல. ஆனால் அமெரிக்கா போன்ற நாட்டில் தெருக்களில் மனிதர்கள் பிச்சை எடுப்பதைப் பார்ப்பது, கண்களையே மட்டும் அல்ல—இதயத்தையும் உறுத்தியது.

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்