
முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.
எங்களுடைய மகன் பிறந்தபோது, எங்களின் கனேடிய நண்பர்களைப்போல தள்ளுவண்டியைப் பயன்படுத்தாமல், எல்லாவிடங்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்லும் அதே தமிழ் மாதிரியையே நானும் என் கணவரும் பின்பற்றத் தொடங்கினோம். ஆனால், அவனை வெறுமனே கைகளில் காவுவதற்குப் பதிலாக, cloth baby carrier ஒன்றில் அவனை நாங்கள் சுமந்தோம். எங்கள் இருவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அது சுலபமானதாவும், வசதியாகவும், இயல்பானதாகவும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். சுமந்துசெல்லும் அல்லது இறுகப்பிணைந்திருக்கும் பாலூட்டிகளாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, எல்லாநேரங்களிலும் எங்களின் உடலுக்கு அருகில் இருக்கவேண்டும் என்ற உள்ளார்ந்த தேவை எங்களின் குழந்தைகளுக்கு இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூக்கி வைத்திருப்பதைக் குழந்தைகள் விரும்புவது இயல்பானதே — அத்துடன், அவர்களைத் தூக்கிவைத்திருப்பதற்கு நாங்கள் விரும்புவதும் விளங்கிக்கொள்ளக்கூடியதே.
குழந்தைகளை நீண்ட நேரம் தூக்கி வைத்துக்கொண்டிருப்பதும், சுமப்பதும் பெற்றோர்-குழந்தை இடையேயான பிணைப்பை மேம்படுத்துகிறது; அது குழந்தைகளின் அமைதியின்மையையும், அழுகையையும் குறைக்கிறது அல்லது நிறுத்துகிறது; மேலும், தாய்மாரின் மன அழுத்தம், பிரசவத்திற்குப் பின்பான மனச்சோர்வு, பதற்றம் என்பவற்றையும் அது குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எங்களுக்கு இப்போது இரண்டாவது மகன் பிறந்துள்ளார். தினமும் நடக்கும்போது அவனைத் தூக்கிக்கொண்டு செல்வது என்பது, எங்களின் சுற்றுப்புறத்தை எங்களின் உடற்பயிற்சிக்கூடமாக மாற்றியிருப்பதுடன், அது எங்களின் மகன் எங்களின் kettle bell (உடல் வலுவூட்டும் பயிற்சி சாதனம்) ஆக இருப்பதற்கும் வழிசெய்கிறது. அவன் வளர வளர, எனது பிரசவத்திற்குப் பிந்திய bone mineral densityஐ அதிகரிப்பதற்கு அவசியமான உடற்பயிற்சியான, படிப்படியாக அதிக பாரத்தைத் தூக்கும் resistance exercise ஆக, அது மாறுவதால், எனக்கு osteoporosis ஏற்படும் அபாயத்தையும் நான் குறைக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களின் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு செல்வது, எங்களின் பெற்றோரியத்தை நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியானதாக மாற்றியுள்ளது! நானும் என் கணவரும் எங்களின் parental leavesஇல், எங்களின் மகன்களை தூக்கியணைத்தபடி, நகரெங்கும் மட்டுமன்றி, ஏனைய மாகாணங்களுக்கும், ஏன் பிற நாடுகளுக்கும்கூட படிக்கட்டுகள், குறுகிய பாதைகள் அல்லது கூழாங்கற்கள் நிறைந்த தெருக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சுலபமாகச் சென்றிருக்கிறோம்; சின்னச் சிறிய கோப்பிக் கடைகளில் நண்பர்களை சந்தித்திருக்கிறோம், கூட்டமாகவிருக்கும் அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறோம், மலையின் உச்சிகளுக்கு cable carகளில் பயணித்திருக்கிறோம், அத்துடன், இலங்கையில் உள்ள என் சித்தியின் தோழியைப் போலவே சாய்தளங்களிலும் குன்றுகளிலும் தயக்கமின்றி ஏறிச்சென்று நீர்வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் எங்கிருந்தாலும், அது சுரங்கரயிலாக இருந்தாலென்ன, பரபரப்பான உணவகமாக இருந்தாலென்ன, அல்லது forested trail ஆக இருந்தாலென்ன, எங்களின் பிள்ளைகள் இப்போதும் carrierஇல் அல்லது எங்களின் கைகளில் இலகுவில் அமைதியடைந்து விடுவதுடன், சுலபமாக உறங்கியும் விடுகிறார்கள்.
உங்களின் குழந்தையைத் தூக்குவதற்கான சில குறிப்புகள் இதோ:
1. ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி, தங்களின் குழந்தைகளை இடுப்பில் சுமக்கும் மேற்கத்திய பெற்றோர்களைப்போல் அல்லாமல், நிமிர்ந்து நின்றபடி, உங்களின் முன்கையைப் பயன்படுத்தி உங்களின் குழந்தையை உயரமாகத் தூக்கிவைத்திருங்கள். நிமிர்ந்து நிற்பதற்கு, உடலின் நடுப்பகுதித் தசைகள் (core muscles) பயன்படுவதால், தூக்குவதால் உங்களின் முதுகிலும், தோள்களிலும் ஏற்படக்கூடிய வலிக்கான அபாயத்தை அது குறைக்கிறது.
2. இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை உங்களுக்கு இருந்தால், உங்களின் மார்போடு உங்களின் குழந்தையை அணைத்து வைத்திருப்பதற்கு, cloth baby carrier ஒன்றைப் பயன்படுத்துங்கள். அதுவும், நீங்கள் நிமிர்ந்து நிற்பதற்கும், உங்களின் core muscles பயன்பாட்டுக்கும் உதவுகிறது. உங்களின் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்குக் குழந்தையை எப்படி carrierஇல் இருத்துவது என்பது பற்றிய வழிமுறைகளை வாசித்திருப்பதை உறுதிப்படுத்துங்கள் – carrier பிள்ளைக்குப் பிடிக்கவில்லை என்பதுபோலத் தோன்றினால், பிள்ளையைச் சரியான முறையில் இருத்தவில்லை என்பது பொருளாகலாம்.
3. இலையுதிர் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் உதவுவதற்கு, babywearing coat ஒன்றையோ அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள coat உடன் coat extender to zip ஒன்றையோ நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இது, நீங்கள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், உங்களின் குழந்தைக்கு snowsuit அணிவிப்பதற்குப் பதிலாக, கால்களையும் கைகளையும் சுயமாக ஆட்டிக்கொண்டிருக்க விரும்பும் உங்களின் குழந்தையை உங்களின் coatக்குள் கதகதப்பாக வைத்திருப்பதற்கு உதவிசெய்யும்.
4. உங்களின் குழந்தையுடன் நீண்ட தூரம் நடபதற்கோ அல்லது hikes செய்வதற்கோ நீங்கள் முடிவுசெய்தால், walking shoes அல்லது hiking boots வாங்குவதைக் கருத்திலெடுங்கள். அவை உங்களின் பாதங்களுக்கு ஆதரவளிப்பதன்மூலம் உங்களின் முதுகுக்கும் ஆதரவளிக்கும்.
5. உங்களின் குழந்தையைத் தூக்கிச் செல்லும் முடிவில் நம்பிக்கையுடன் இருங்கள். தள்ளுவண்டிலைப் பயன்படுத்தும்படி தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால், எங்களின் முன்னோர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிய மதிநுட்பத்தை நீங்களும் பின்பற்றுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உசாத்துணை:
1. “Carrying human infants - An evolutionary heritage.” Infant behavior & development vol. 60 (2020)
2.. “Does infant carrying promote attachment? An experimental study of the effects of increased physical contact on the development of attachment Child development vol. 61,5 (1990)
3. “Infant carrying as a tool to promote secure attachments in young mothers: Comparing intervention and control infants during the still-face paradigm.” Infant behavior & development vol. 58 (2020)
4. A method to soothe and promote sleep in crying infants utilizing the transport response.” Current biology : CB vol. 32,20 (2022)
5. The calming effect of maternal carrying in different mammalian species.” Frontiers in psychology vol. 6 445. 16 Apr. 2015, https://doi.org/10.3389/fpsyg.2015.00445
6. Effects of kangaroo mother care on maternal and paternal health: systematic review and meta-analysis.” Bulletin of the World Health Organization vol. 101,6 (2023)
7. The Effect of an Exercise Intervention During Early Lactation on Bone Mineral Density During the First Year Postpartum.” Journal of physical activity & health vol. 16,3 (2019): 197-204. https://doi.org/10.1123/jpah.2018-0232
* தமிழர் தகவல் 35வது ஆண்டுமலரில் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த கட்டுரையின் தமிழ் வடிவம் இது. பதிவுகளுக்கு அனுப்பியவர் - ஶ்ரீரஞ்சனி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









