'கட்டோடு குழலாட ஆட' என்ற இந்தப்பாடல் 'பெரிய இடத்துப்பெண்' என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. ஆனால் தற்போது இந்தப்பாடல் இன்னுமொரு காரணத்துக்காகவும் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் அண்மையில் மறைந்த அமரர் வெங்கட் சாமிநாதன். இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.
திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களையும் , அந்தப்பாடலையும் மீண்டுமொருமுறை 'பதிவுகள்' வாசகர்களுடன் அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.
Venkat Swaminathan இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.
January 25, 2013 at 11:50pm ·
Giritharan Navaratnam வணக்கம் திரு வெ.சா. அவர்களே, உங்களது வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. பொதுவாக அறுபதுகளில் வெளியான எம்ஜிஆரின் படப்பாடல்கள் எனக்குப் பிடித்தவை. அத்துடன் எம்ஜீஆரின் ஆளுமையும், முக வசீகரமும் என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணம்: தமிழ் சினிமாவின் அறிமுகமே எம்ஜிஆர்/ஜெயலலிதா/சரோஜாதேவி திரைப்படங்கள் மூலம்தாம் கிடைத்தது. பால்ய காலத்து நிகழ்வுகள், விருப்பங்கள் எல்லாமே ஒவ்வொருவரது மனதிலும் , குறிப்பாக ஆழ் மனதில் ஆழமாகப் பதிந்து விடுவது வழக்கம். அந்த வகையில் எனக்கும் அன்றைய காலகட்டத்து எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள் பிடித்தவை. எம்ஜிஆரின் இறுதிக்காலகட்டத்துப் படப்பாடல்களை விட, அவரது கறுப்பு வெள்ளைப் படப்பாடல்களே பொதுவாக என்னைக் கவர்ந்தவை. முக்கிய காரணங்கள்: இளமையான , அழகான, வசீகரம் மிக்க எம்ஜீஆர், அவருக்குப் பொருத்தமான டி.எம்.செளந்தரராஜனின் / பி.சுசீலாவின் அற்புதமான இளங்குரல் இனிமை, பாடலின் கருத்தாழமிக்க வரிகள். இவையெல்லாம் எனக்குத் தனிப்பட்டரீதியில் பிடிக்கும். முகநூலை நான் அதிகமாகப் பாவிப்பது எனக்குப் பிடித்த பதிவுகளை, பாடல்களை ஓரிடத்தில் சேர்த்து வைக்கும் சேமிப்புத் தளமாகவே. தேவையானபோது தேடி அலையத் தேவையில்லையே. அதனால்தான் அவ்வப்போது கேட்பதை, வாசிப்பதை இங்கு பதிவு செய்கின்றேன். இன்னுமொரு எனக்குப் பிடித்த பாடல் 'மானல்லவோ கண்கள் தந்தது'.
January 26, 2013 at 12:30am ·
Venkat Swaminathan ஆச்சரியம். இந்நேரம் நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வேளை நீங்கள் இரவிலும் உறங்காது உழைப்பவரோ. இப்போதுதான் 'பதிவுகளு'க்கு செல்லப்பா பற்றிய நீண்ட கட்டுரையின் முதல் பகுதியை அனுப்பி அது "sending" என்றே சொல்லிக்கொண்டிருக்க, அனுப்பியாகட்டும் என்று காத்திருந்தேன். உடனுக்குடன் உங்கள் பதில். பழைய பாடல்கள் தான் எனக்கும் பிடிக்கும். ஐம்பதுகள் வரைய பாடல்கள். அதன் பின் வெகு வெகு சிலதான். இன்னும் சிலவற்றை நான் தவற விட்டிருக்கக் கூடும். இப்படி உங்கள் பதிவு சிக்கியது போல, நான் அதன் பாதையில் தடுக்கி விழுந்தால் தான். தேடிச் செல்வது என்பது வருடத்துக்கு 200-300 படங்கள் எடுத்துத் தள்ளும் தமிழ் சினிமா காட்டுக்குள் நான் இந்த வயதில் புகுந்து தேடி எடுத்து வெளி வருதல் சாத்தியமில்லை. இப்படி எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். தங்களூக்கு என் நன்றி. இப்படி எங்கோ மூலையில் இருக்கும் உங்களூடன் பேச, உறவாட வழிசெய்துகொடுத்திருக்கும் கம்ப்யூட்டருக்கும் யூ ட்யூபுக்கும் நன்றி.
January 26, 2013 at 12:44am ·
Giritharan Navaratnam வெ.சா. அவர்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு மீண்டுமொருமுறை நன்றி. உங்கள் கட்டுரை கிடைத்தது. 'பதிவுகளு'க்கு நீங்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் பங்களிப்பினைப் 'பதிவுகள்' எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.