பழைய புத்தக விற்பனையில்.....
எனக்கொரு பழக்கமுள்ளது. அது எங்காவது பாவித்த பழைய புத்தகங்கள் விற்பனைக்குப் போட்டிருந்தால் , அவற்றில் பிடித்த புத்தகங்களை வாங்குவதுதான். இங்குள்ள கிளை நூலகங்களுக்கு ஒரு பழக்கமுள்ளது. நல்ல தரமான புத்தகங்களைக்கூட, அவை அதிகம் பாவிக்கப்படாமலிருந்தால் விற்பனைக்குப்போட்டு விடுவார்கள். ஏன் அவற்றைப் பிற கிளைகளுக்கு அனுப்பக்கூடாது? எனென்றால் நல்ல நிலையிலுள்ள பல புத்தகங்களை இவ்விதம் விற்பனைக்குப்போட்டிருப்பதைப்பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.
நேற்றும் ஸ்கார்பரோவிலுள்ள ஏஜின்கோர்ட் கிளைக்குச் சென்றிருந்தபொழுது அங்கும் புத்தகங்கள் பலவற்றை விற்பனைக்குப் போட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியான உலகச்சிறுகதைத்தொகுப்பொன்றையும், க.நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான Animal Farm நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் வாங்கினேன். ஒவ்வொன்றும் விலை ஒரு டாலர்தான். அம்ருத பதிப்பக வெளியீடாக வெளிவந்த நூல் 'மிருகங்களின் பண்ணை'. நூலின் அட்டையில் 'மிருகங்களின் பண்ணை' என்று தலைப்பினையிட்டிருந்தவர்கள், நூலின் உள்ளே 'மிருகங்கள் பண்ணை' என்று குறிப்பிடிருக்கின்றார்கள்.
அங்கிருந்த மேலுமொரு தமிழ்ப்புத்தகமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது அமெரிக்காவில் வாழும் பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு. ஏற்கனவே அவரது படைப்புகளை வாசித்திருக்கின்றேன். அந்தத்தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். நூலின் உள்ளே, முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அந்த நூலின் ஆசிரியரே அதிலிருந்த குறிப்பினை எழுதியிருந்தார். அந்தக் குறிப்பிலிருந்து ஒரு விடயத்தை அறிய முடிந்தது. அந்த நூலினை அவர் இங்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவருக்கு அன்பளிப்பாகப் பரிசளித்திருக்கின்றாரென்பதை அக்குறிப்பு வெளிப்படுத்தியது. அந்தக் கனடா எழுத்தாளர் இங்கிருந்து வெளியாகும் சஞ்சிகையொன்றின் ஆசிரியரென்பதும் தெரிந்திருந்தது. அத்துடன் அவரது சஞ்சிகையில் அமெரிக்காவில் வசிக்கும் அந்தப்பெண் எழுத்தாளர் எழுதியிருக்கின்றார் என்பதையும், அதற்காக அவர் கனடா எழுத்தாளருக்கு நன்றி கூறுவதையும் அந்தக் குறிப்பு வெளிப்படுத்தியது.
அந்த நூல் என்னிடமில்லாததால் அதனை வாங்குவதற்காகத்தான் முதலில் எடுத்தேன். ஆனால் அந்தக் குறிப்பினை வாசித்ததும் அதனை வாங்கு எண்ணத்தைக்கை விட்டேன். அந்த நூலானது எழுத்தாளர் ஒருவரால் , இன்னுமோர் எழுத்தாளருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல். அது இருக்க வேண்டிய இடம் அவ்விதம் அன்பளிப்பாகத்தனக்குக் கிடைத்த அந்த நூலினை நூலகத்து வழங்கிய கனடா எழுத்தாளரிடம்தான். அதனாலேயே அதனை வாங்க மனம் வரவில்லை.
அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூலினை இவ்விதம் நூலகத்துக்கு வழங்கியதால், இன்று அதனை விற்பனைக்கு நூலகம் விட்டிருக்கின்றது.
உண்மையில் என்னைப்பொறுத்தவரையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூலொன்றினை இவ்விதம் இலவசமாகக்கொடுப்பது அவ்வளவு சரியாகப்படவில்லை. அந்தச் சஞ்சிகை ஆசிரியர் தன் சஞ்சிகையில் எழுதிய படைப்பாளி ஒருவரால், அதற்காக நினைவு கூரப்பட்டு வழங்கிய நூலினை அதற்கு மதிப்பு கொடுத்துத் தன்னிடமே வைத்திருந்தால் எவ்வளவு நன்றாகவிருக்கும்.. என்றொரு எண்ணமும் எழுவதைத்தடுக்க முடியவில்லை.
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்!"
இங்கு , டொராண்டோ, கனடாவில் இனிய காலைப்பொழுது. இதுவரையில் குளிர்காலம் அதிகளவு பனிமழையின்றி சென்றிருக்கின்றது. இந்த அதிகாலைப்பொழுதினை, இந்த உலகினை வரவேற்றுப் பாடுவோம். நாம் பிறந்திருக்கும் இந்த உலகம் , எமக்காக இருக்கிறது என்றுணர்ந்து, இந்த மண்ணை, இங்கு வாழும் உயிரினங்களை, நிலவும் இயற்கை வனப்புகளை எல்லாம் சீரழிக்காமல், இயன்றவரையில் இந்த மண்ணைப்பாதுகாப்போம் என்று வேண்டிக்கொள்வோம்.
இதுவரையில் , நாம் அறிந்த வரையில் இந்தச்சிறு கோள் ஒன்றுதான் எம்மைப்போன்ற அனைத்து உயிரினங்களும், விருட்சங்களும், ஆறு, குளங்கள், ஆழி போன்றவையும் இருப்பதற்கேற்ற வகையில் அமைந்திருக்கின்றது. மேலும் பல இது போன்ற கோள்கள் இந்தப்பிரபஞ்சத்தில், இதற்குச் சமாந்தரமாகத்திகழும் பிரபஞ்சங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை அடையும் தொழில் நுட்பத்தை இதுவரையில் நாம் அடையவில்லை. இந்நிலையில் இருக்கும் இதனையும் இழந்து விட்டால், எம் இருப்பே கேள்விக்குறியாகி விடும்.
இது இவ்விதமிருக்க ஒவ்வொரு நாளும் இந்த மண்ணை அணுகுண்டுப்பரிசோதனைகளால் காயப்படுத்திக்கொண்டே வருகின்றோம். குண்டுகள் வீசி உயிரினங்களை அழித்துக்கொண்டே வருகின்றோம். தேசங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் இவ்விதம் ஏற்படுத்தும் அழிவுகளை, தேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மாபெரும் தேசமான இந்தப்பூவுலகின் பாதுகாப்பை எண்ணி நிறுத்த வேண்டிய நேரத்தில் மானுடர்களாகிய நாம் அனைவரும் இருக்கின்றோம்.
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்! " என்று கணியன் பூங்குன்றனார் என்னும் தமிழர் ஒருவர் அன்றே பாடி வைத்தாரே, சங்கத்தமிழரான, அவர் உலகை ஒரு நாடாக அன்றே பார்த்திருந்தார். அதனால்தான் அவ்விதம் பாட முடிந்தது.
நாமும் பாடுவோம்: "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!"
முகநூல் பதிவுகள் பற்றி....
சிலர் முகநூலில் போடும் பதிவுகளைப்பார்க்கும்போது எனக்கு தோன்றும் எண்ணங்களிலொன்று. ஏன் இவர்கள் எப்பொழுதுமே மிகவும் தீவிரமாக .மன இறுக்கத்துடன் இருக்கிறார்கள்? இவர்களால் ஒருபோதுமே மன இறுக்கம் தளர்ந்து, அமைதியாக , இயல்பாக, மகிழ்ச்சியாக இருக்க முடியாதா? இந்தச்சமயத்தில் ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பின்வரும் வரிகளே ஞாபகத்துக்கு வருகின்றன:
"சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது. பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?
எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?
சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்."
இரவும், பகலும் எந்நேரமும் மன இறுக்கத்துடன் இருக்கும் நண்பர்களே! ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டு பாடுங்கள்! அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுங்கள்! ஆனால் குளியல் அறையில் ஸ்வரங்களையும் இசைக்க மறந்து விடாதீர்கள்! அதன் மூலம் உங்கள் மன இறுக்கம் சிறிதளவாவது குறையலாம். முகநூலினைச் சிறிது மன இறுக்கத்தினைத்தளர்த்தவும் பாவியுங்கள்.
'பனியும், பனையும்' தொகுப்பு பற்றி...
'எதுவரை'யில் வெளியான எழுத்தாளர் முருகபூபதியுடனான எழுத்தாளர் கோமகனின் நேர்காணலில் ஓரிடத்தில் முருகபூபதி புகலிடச்சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்த 'பனியும், பனையும்' பற்றிப்பினவருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
"அவ்வேளையில் அவருக்கு ஈழத்து இலக்கியவாதிகளை நான்கு தலைமுறைகளாக வகுத்து, அவர்களின் சிறுகதைகள் அடங்கிய பெரிய தொகுப்பை நான்கு பாகங்களில் வேரும் வாழ்வும் என்ற தலைப்பில் வெளியிடும் எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை ஈடேற்ற சிட்னியில் வசித்த மாத்தளை சோமுவுடனும் மெல்பனில் வசித்த என்னுடனும் தொடர்புகொண்டார். சிட்னியில் அவர்கள் இருவரும் தற்காலிக முகவரிகளில் இருந்தமையால், ” முருகு ( இப்படித்தான் என்னை அழைப்பார்) உமது மெல்பன் முகவரிக்கு கதைகளை அனுப்புமாறு கேட்டு இலங்கை, மற்றும் தமிழர் புகலிட நாடுகளில் வெளியான இதழ்களுக்கு செய்திகளை அனுப்பச்சொன்னார்.அவ்வாறே நானும் செய்தேன்.ஆனால், இலங்கையில் போர்க்காலம் என்பதனால் கதைகளைப்பெறுவதில் தாமதம் நீடித்தது. பின்னர் அவரே முடிவை மாற்றி, புகலிட நாடுகளில் வதியும் எம்மவர்களின் கதைகளை தொகுப்போம் என்றார். பின்னர் அந்த முயற்சியில் இறங்கினேன். இன்றுபோல் அன்று மின்னஞ்சல் வசதிகள் இல்லை. தொடர்ந்து கனடா, அய்ரோப்பிய நாடுகளுக்கெல்லாம் கடிதங்கள் எழுதி, கதைகளை சேகரித்தேன். இதுவிடயத்தில் லண்டனிலிருந்த நண்பர் மு. நித்தியானந்தனும் உதவினார். முதலில் குறிப்பிட்ட கதைகளை எழுதியவர்களின் படங்ளையும் பிரசுரிக்கத் தீர்மானித்தோம். அக்காலப்பகுதியில் எழுதத்தொடங்கியிருந்த ஷோபா சக்தி பெண்ணா, ஆணா என்ற மயக்கமும் எமக்கு வந்தது. அதனால் படங்களை பிரசுரிக்கும் எண்ணத்தையும் கைவிட்டோம்.
எஸ்.பொ. அதற்கு பனியும் பனையும் என்ற பெயரைச் சுட்டவிருப்பதாகச் சொன்னார். தமிழகம் சென்றார். அந்த நூல் வெளியானது.ஆனால், அதன் தொகுப்பாசிரியர்கள் எஸ்.பொ – இந்திராபார்த்தசாரதி என்று அச்சாகியிருந்தது.இது எனக்கும் மாத்தளை சோமுவுக்கும் ஏமாற்றம்தான். இந்திரா பார்த்தாரதியும் எனது இனிய நண்பர். எனக்கு எஸ்.பொ.வின் உள்மனம் புரிந்தது. அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. அதனை அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் புலப்படுத்தின."
மேலுள்ள கூற்றினை வாசிக்கும் ஒருவர் முருகபூபதி அவர்களே மேற்படி 'பனியும், பனையும்' தொகுப்புக்கான கதைகளைத்திரட்டியவர் என்னும் கருதிவிடுவார்கள். ஆனால் 1994இல் 'பனியும், பனையும்' தொகுப்பு வெளியானபோது, அதன் இறுதிப்பகுதியில் 'திருக்கடைக்காப்பு' என்னும் அத்தியாயத்தில் எஸ்.பொ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"நண்பர் லெ.முருகபூபதியுடன் முதலில் தொடர்பு கொண்டேன். அவர் திரட்டித்தம் வசம் வைத்திருந்த சுமார் பத்துக்கதைகளை உடனே அனுப்பி உதவினார். என் இலக்கிய நண்பர்களாக இனிமை பாராட்டும் மு.நித்தியானந்தன், கலாமோகன், 'காலம்' ஆசிரியர் செல்வம், 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ், 'நான்காவது பரிமாணம்' ஆசிரியர் நவம் ஆகியோருடன் தமிழ் நாட்டிலிருந்தே தொடர்பு கொண்டேன். ஐந்த ஐவரும் என் உதவிக்கி வந்தனர். அனைவருக்கும் என் நன்றிகள்"
அதே நேரத்தில் மேற்படி தொகுப்பில் எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை' என்னும் சிறுகதையும் வெளியாகியுள்ளது. இந்தச்சிறுகதை எனக்கு மிகவும் பாராட்டுதல்களைத்தந்த சிறுகதைகளிலொன்று. 'இந்து' ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான இந்நூல் பற்றிய விமர்சனத்தில் எழுத்தாளர் செ.கணெசலிங்கன் இச்சிறுகதையினை மிகவும் விதந்து எழுதியிருப்பார். வேடிக்கை என்னவென்றால்.. மேற்படி தொகுப்புக்காகக் கதைகளைச்சேகரித்த யாருமே என் கதைகள் எதனையும் சேகரித்து அனுப்பியிருக்கவில்லை. மேற்படி தொகுப்பு வெளியானபோது , இத்தொகுப்புக்காகக் கனடாவிலிருந்து கதைகளைச்சேகரித்தவர்களுக்கு பெரியதோர் ஆச்சரியம். யார் கிரிதரனின் கதையை அனுப்பியிருப்பார்கள் என்று மண்டையைச்சொரிந்து கொண்டார்கள். யார் அனுப்பினார் அந்தக் கதையை அந்தத்தொகுப்புக்கு? அது பரம இரகசியம் :-)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.