
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் குழுக்களின் வன்முறை பற்றிய செய்திகள் அதிகமாக ஊடகங்களில் வெளியாகின்றன. இதை ஒரு சமூக விரோதப்பிரச்னையாகக் கருதாமல் , சமூகப் பிரச்சனையாகக் கருத வேண்டும். இளைஞர் குழுக்களின் அட்டகாசம் என்பது மேற்கு நாடுகளின் பெரு நகரங்களில் காணப்படும் ஒன்று. இலங்கையில் முன்பும் சண்டியர்கள் இருந்தார்கள். ஆனால் அப்போது சண்டியர்கள் பொதுவாக ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து உருவானார்கள், சில சமயங்களில் ஆதிக்க சமூகங்களிலிருந்தும் உருவானார்கள். ஒடுக்கும் சமுதாயத்தினரின் கையாட்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஒடுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில் இக்கையாட்களைத் தம் சார்பில் பயன்படுத்திக்கொள்வார்கள்.
தற்போது இளைஞர்கள் குழுக்கள் அக்காலச் சண்டியர்களின் இடத்தைப் பிடித்துள்ளன. இவர்ககள் ப்லவேறு சமூகப் பிரிவுகளிலிலிருந்தும் குழுக்களாக ஒன்றிணைபவர்கள். இவர்களை அரசியல்வாதிகள் , மேல் தட்டு வர்க்கத்தினர், புகலிடப் புதுப் பணக்காரர் எனப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.
இந்நிலை பற்றி அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டிய காலகட்டம். இளைஞர்கள் நாளைய உலகின் நாயகர்கள். இளைஞர்கள் இவ்விதம் தம் வாழ்வைச் சீரழித்தால், காலப்போக்கில் நிலைமை பெரிதும் சீரழிவை நோக்கிச் செல்லும். பல தென்னமெரிக்க நாடுகளில் இன்று காணப்படும் போதைப்பொருட் குழுக்களின் ஆதிக்கத்தைக் கவனியுங்கள். அவ்விதமானதொரு நிலை , தமிழர்களைப் பொறுத்தவரையில் வடக்கில் உருவாகலாம். நான் வடக்கு என்று கூறுவதற்குக் காரணம் இப்பிரச்னை கிழக்கிலோ , வன்னியிலோ அளவுக்கு மீறி இல்லை. சிறு நிலப்பரப்பான யாழ் குடாநாட்டிலேயே அதிகமாகக் காணப்படும் ஒன்று. இந்த என் அவதானம் தவறாகவிருப்பின் அதனை ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டுங்கள்.
இளைஞர்களைச் சட்ட விரோதச் செயல்களைச் செய்வதிலிருந்து காப்பது அவசியமானதொன்று. தொண்ணூறுகளில் டொரோண்டோவில் இளைஞர் மத்திலியில் குழு மோதல்கள் தலை விரித்தாடியபோது தமிழ் இளைஞர்கள் சிலர் இவ்விதம் வழி மாறிச் செல்லும் இளைஞர்களைச் சரியான பாதையில் நடத்திச் செல்வதற்காக அமைப்பொன்றினை உருவாக்கினார்கள். அது போன்றதோர் அமைப்பு உருவாகவேண்டிய தேவை தற்போதுள்ளது. இளைஞர்கள் கல்வியைத் தொடர், வேலை வாய்ப்பினைப் பெற, சுய தொழில்களை செய்து முன்னேற அறிவுரை கூறி, பயிற்சிப் பட்டறைகள் நடத்தி நெறிப்படுத்த அமைப்புகள் யாழ் குடா நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.
பொதுவாகப் பொருளியல் காரணங்கள், வேலை வாய்ப்பின்மை, கல்வி . சமுதாயப் பிளவுகளின் தாக்கங்கள் போன்ற பல்வகைக் காரணங்களே இளைஞர்களைக் குழுக்களில் சேரத் தூண்டுகின்றன. மேலும் குழுக்கள் அவர்களுக்குத் தனித்தியங்கும் போது இல்லாத பாதுப்பை,பலத்தை, அரவணைப்பை வழங்குகின்றன. இக்குழுக்களில் இருப்பவர்களால் தனித்து அச்சமின்றி நடமாட முடியாது. எப்பொழுதும் பிற குழுக்களால் ஆபத்து வந்து விடுமோ என்னும் அச்சம் இருந்து கொண்டேயிருக்கும்.
எதிர்காலத்துக்கு அத்திவாரமாக இருக்கக்கூடிய இளம் பருவத்தை இக்குழுக்களில் தொலைத்து விடும் இளைஞர்கள் , இக்குழுக் கலாச்சாரத்திலிருந்து விரைவாக மீண்டு வராவிட்டால் , அவர்கள் எதிர்காலமே சூன்யமாகிவிடும். இதனை உணர வேண்டும்.
எனவே அங்குள்ள சமூக அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கல்விக்கூடங்கள் (பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள் உட்பட) , மானுடர்கள் அனைவரும் இளைஞர்களைக் குழுக்கலாச்சாரத்திலிருந்து மீட்டு , நெறிப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். காலத்தின் கட்டாயங்களில் இதுவுமொன்று.
கனடாவில் தொண்ணூறுகளில் நிலவிய குழுக் கலாச்சாரம் இளைஞர்கள் பலரின் வாழ்வைச் சீரழித்தது. கனடிய அரசின் மாறிய சட்டங்கள் குழுக்களின் நடவடிக்கைகளைப் பயங்கரவாதச் செயற்பாடுகளாகக் கருதின. விளைவு? குற்றம் புரிந்தவர்கள் பலரின் கனடியப் பிரசாவுரிமை இரத்துச் செய்யப்பட்டு, அவர்கள்தம் தண்டனைக் காலம் முடிந்ததும் நாடு கடத்தப்பட்டார்கள். இதிலிருந்து இளைஞர்கள் பாடங்களைப் படிக்க வேண்டும். இவ்விதம் வழி மாறிச் செல்லும் இளைஞர்கள் வேறு யாருமல்லர். உங்கள் குழந்தைகள்,. உங்கள் சகோதரர்கள். உங்கள் நண்பர்கள். அவர்கள்தம் நல் வாழ்க்கையில் கவனம் கொள்ளவேண்டியது நம் அனைவர்தம் கடமை.
** டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









