இலங்கையின்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சுதந்திரதினச் செய்தியையொட்டித் தனது முகநூற் பக்கத்தில் மும்மொழிகளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

"'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (04) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பெருமைமிகு 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும்  செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாத்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்'  என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது என்றும், அதற்காக 'இலங்கையை கட்டியெழுப்புவோம்'  என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது என்றும், நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று குறிப்பிட்டு, அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்."

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகை இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சல். நாட்டை இதுவரை காலமும் பீடித்திருந்த இனவாத, மதவாத, மொழிவாத அரசியலிருந்து , புதிய பாதையில் நடத்திச் செல்வதற்குரிய வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் , அம்மக்களின் வர்க்கத்திலிருந்து ஒருவர் அதிபராகியிருக்கின்றார். இது மிகப்பெரிய மாற்றம். 

நாட்டின் பொருளாதார வெற்றியை இதுவரை தடுத்து நின்றவை இனவாத, மதவாத, மொழிவாத அரசியல். இவற்றைப் பாவித்து அரசியல் செய்த அரசியல்வாதிகள் எல்லாரும் , வர்க்கப்பின்னணியில் எவ்வித வேறுபாடுகளுமற்று இணைந்திருப்பார்கள். தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்தாளும் அரசியல் கோசங்கள் எழுப்புவார்கள். இன்று அந்நிலை ஓரளவு மாறியுள்ளது வரவேற்கத்தக்கது.

அருமையாகக் கிடைத்த ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, அநுர அரசு செய்ய வேண்டிய நல்ல வேலைகளையெல்லாம் தடுக்கும் வகையில் , ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சிகள் செய்து வருவதையும் கண்டு கொண்டுதானிருக்கின்றோம். இவற்றுக்குப் பணிந்து போகாமல், தம் வழியில் உறுதியுடன் செல்வதில்தான் அநுர அரசின் வெற்றி தங்கியுள்ளது. அவ்விதம் சென்றால், அதில் வெற்றியும் அடைந்தால், பெரும்பான்மையான மக்களின் மனங்களும் மாறும், மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாத வகையில் மாறும்.  எனவே இவ்விதமான சவால்களை அநுர அரசு வெற்றிகரமாக எதிர்கொள்ளட்டும். அதுவே அனைவருக்கும் நன்மை.

ஊழல் விடயத்தில், இனவாத விடயத்தில் மிகவும் உறுதியாகச் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதில்தான் நாட்டின் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது. அரசியல்வாதிகள், படையினர் அல்லது மதகுருக்கள் எவர் தவறிழைத்தாலும் பொது மக்கள் சட்டரீதியாக, எவ்வித அச்சமுமற்று  அணுகும் நிலையினை உறுதி செய்வதில்தான் நாட்டின் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது.

ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவது பற்றிக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. நம்பிக்கைக்கீற்றினைத் தருவது. ஆனால் இவ்விதமான நிகழ்வுகளில் நாட்டின் இதுவரை கால வரலாற்றில் நிகழ்ந்த இனரீதியிலான வன்முறைகள், படுகொலைகள் அனைத்துக்கும் காரணமானவர்களைக் குறிப்பிடுவதைத்  தவிர்ப்பது நல்லது. ஆனால் அதைத்தவிர்ப்பது ஜனாதிபதியைப் பொறுத்த வரையில்  கடினமானது என்பதையும் உணர முடிகின்றது. 

"தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும்  செலுத்தி" என்று கூறும்போது பெரும்பான்மையின மக்களுக்கு அது இன்பத்தையும், இதுவரை  காலமும் படையினரால் புரியப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவந்த ஏனைய சிறுபான்மையின மக்களுக்கு அதை சீரணிப்பதில் சிரமமும் ஏற்படும் என்பது யதார்த்தம்.  இன்று படையினர் முன்பு போலில்லை. ஆட்சியாளர் எவ்விதமோ அவ்விதமே படையினரும் நடந்து கொள்வார்கள். இந்நிலையில் பல்வேறு படையினர் மட்டுமல்ல இதுவரை காலமும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராகப்போராடி பதிலுக்கு வன்முறையினைப் பிரயோகித்த அரசியல் அமைப்புகளையும் , ஜேவிபி உட்பட, மறக்க முடியாது.  எனவே நாட்டின் பொருளாதார விடுதலைக்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைய ஜனாதிபது அறைகூவல் விடுக்கும்போது அவர் எதிர்கொள்ளும் சவால்கள் சில;

1.  தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அதே வீரர்கள்தாம் ஜேவிபி அமைப்பினருக்கு எதிராகவும், ஏனைய தமிழ் ம் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராகவும், சிறுபான்மை  மக்களுக்கெதிராகவும் வன்முறையினைப் பிரயோகித்தவர்கள். அதற்கு அவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் அரச இயந்திரத்தின் பணியாளர்கள். சொன்னதைச் செய்யவேண்டிய நிலையில் இருப்பவர்கள். முக்கிய குற்றவாளிகள் அவர்களைப் பின் நின்று வழி நடத்திய அரசியல்வாதிகள். உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவ்வரசியல்வாதிகளே. ஆனால் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவர்கள் தப்பிவிட பலிக்கடா ஆக்கப்படுபவர்கள் படையினரே. அதே சமயம் படையினரில் சிலரும் தேவைக்கு அதிகமாக வன்முறை பாவித்து மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் படையினரால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியான நிலையில், தன் அரசியல் நலன்களுக்காகப் படையினரின் அர்ப்பணிப்பைக் குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார என்பதையும் உணர முடிகின்றது. குறிப்பிடாவிட்டால் தோற்ற இனவாதிகள் அதை வைத்து மீண்டும் தம் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். குறிப்பிட்டாலோ ஏனைய சிறுபான்மை மக்கள் பக்கமிருந்து அதே வகையான சூழலைத் தம் அரசியல் நலன்களுக்காக அரசியல்வாதிகள் உருவாக்க முனைந்து விடுவார்கள். இந்நிலையில் இது ஜனாதிபதிக்கு இருதலைக் கொள்ளி எறும்பு நிலையை ஏற்படுத்தும்.

இந்நிலையில் நாட்டின் எதிர்காலத்துக்காக ஜனாதிபதி செய்ய வேண்டிய முக்கிய வேலையாகப் பின்வருவனவற்றைக்குறிப்பிடலாம்:

1. இனவாத, மதவாத, மொழிவாதங்களுக்கு எதிராகச் சட்டம் பாரபட்சமற்ற நிலையில்  இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
2. மதகுருக்கள் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுத்தும் வகையில் நடந்தால், உடனுக்குடன் சட்டம் தலையிட்டு அவற்றை இல்லாது செய்ய வேண்டும்.
3. சிறுபான்மையின மக்களின் அடிப்படைப்பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக அரசியல் கைதிகள் பிரச்சனை, காணாமற் போனோர் பிரச்சனை, எல்லைகளில் அத்துமீறல் பிரச்சனை, காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி மத அடையாளச் சின்னங்களை உருவாக்கும் நிகழ்வுகள் போன்ற விடயங்களில் இலங்கையின் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமின்றிச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்.
4. அதே சமயம் தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு ,இனவாதம் தலைதூக்கும் சமயங்களில் எல்லாம், அவறை வெளிப்படுத்தி முளையிலையே அவற்றைக் கிள்ளியெறிய வேண்டும்,. இவ்விடயத்தில் அநுர அரசு ஓரளவு செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

இவ்விதமானதொரு சூழலில் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி இரு வேறு கருத்துகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் அமைதியாக  ஆர்ப்பாட்டம் செய்யுமுரிமையினை வழங்குகின்றது. அவ்விதம் ஆர்ப்பாட்டம் செய்வோரை இனவாதிகள் என்று கூறுவது தவறு என்பதை அனைத்து மக்களுக்கும் அரசு தெளிவுபடுத்த  வேண்டும். தெளிவு படுத்தினால் பெரும்பான்மையின மக்கள் இவ்வித ஆர்ப்பாட்டங்கள் நியாயமானவை, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடப்பவை. எனவே இனவாதக் கண்ணோட்டத்தில் அவற்றைப்பார்க்க வேண்டியதில்லை என்பதை உணர்வார்கள். 

இவ்விதமாக நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என்னும் நிலை சாதாரணமாக இருக்கும் சூழலை ஏற்படுத்தினால், அதன் பின்னர் நாட்டின் அனைத்து மக்களுடைய ஒத்துழைப்புடனான பொருளாதார விடுதலைக்கான பயணம் விரைவாகும். அதனை அடைவதற்கு அரசு எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம், அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது. 

இன்றுள்ள அரசு வரலாற்றில் அருமையாக வந்திருக்கும் அரசு. நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமை மிக்கவர்களைக்கொண்டவர்கள் அதிகமுள்ள அரசு. இவர்களால் முடியாவிட்டால் நாட்டின் எதிர்காலம் மீண்டும் பழைய குருடி கதவைத் திறந்த நிலைக்குப்  போய்விடும். அதற்கு இந்த அரசு சுய அரசியல் நலன்களுக்காக இறுதியில் இன,மத, மொழிவாத அரசியலுக்குள் ஏனைய அரசுகளைப்போல் விழுந்து விடாமல் இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அரசுக்கெதிராக இனம் மத, மொழிவாதங்கள் பாவிக்கப்படும் போதெல்லாம் , நாட்டு மக்களுக்குத் தொடர்ச்சியாக அவற்றை விளங்கப்படுத்திக்கொண்டு வந்தால் இந்த அரசு இறுதியில் வெல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதே சமயம் பூகோள அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விரிக்கும் வலைகளிலும் அகப்படாமல் இருக்க வேண்டும். நடக்குமென்று நம்புவோம். நம்பிக்கையில்தான் நம் இருப்பே உள்ளது.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்