நேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா!
தமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா சிமி கரேவலின் Rendezvous with Simi Garewal என்னும் நிகழ்ச்சியில் மனந்திறந்து சிமி கரேவலுடன் உரையாடிய நேர்காணல் ஜெயலலிதா அவர்கள் பங்குபற்றிய நேர்காணல்களில் நானறிந்தவரையில் சிறப்பானது; முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இரும்புப்பெண்மணியாக அறியப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மிகவும் இளகி, மனந்திறந்து பதில்களை அளித்திருக்கின்றார். தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், தனக்குப் பிடித்த நடிகர் என்றெல்லாம் மனந்திறந்து பதில்களை அளித்துள்ள ஜெயலலிதா எம்கிஆர் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார். எம்ஜிஆரைக் காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்'அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்' என்று பதிலளித்திருக்கின்றார். 'உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?' என்ற கேள்விக்கு அவர் 'இருந்திருக்கலாம்' என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது 'மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.' என்றும், 'எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா?' என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.' என்றும் கூறியிருக்கின்றார். மேலும் 'அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது' என்றும் எம்ஜிஆரைப்பற்றியும் கூறியிருக்கின்றார் ஜெயலலிதா.
தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் யாருமே கேட்கத்துணியாத கேள்விகளை ஜெயலலிதாவிடம் சிமி கரேவல் கேட்டிருக்கின்றார் இந்த நேர்காணலில். அத்துடன் இந்த நேர் காணலில் தனக்குப் பிடித்த இந்திப்பாடலின் சில வரிகளையும் பாடிக்காட்டியிருக்கின்றார் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி.
இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல். இதனை TheTamilTimes இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஜெயலலிதா ஆங்கிலப்புலமை வாய்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களும், பாவித்த ஆங்கிலச்சொற்களும் அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்துவன. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைத்தமிழாக்கம் செய்த 'தி தமிழ் டைம்ஸ்' இது பற்றிக் குறிப்பிடுகையில் 'ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளது. அந்த 'தி தமிழ் டைம்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தமிழாக்கம் செய்யப்பட்ட நேர் காணல் முழுவதையும் இதோ உங்கள் முன்னால்...
உரையாடல்: “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி. பேட்டி கண்டவர் சிமி கரேவல் (Simi Garewal).
தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.