

கட்டுரையாசிரியர் - முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் - 636005, பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, சேலம், தமிழ்நாடு, இந்தியா. ( Orcid: https://orcid.org/0000-0002-9465-4421)
முகவுரை
தொழிலாளர்கள் என்போர் சமுதாயத்தில் சிக்கலுக்கு ஆளாக்கப்படக்கூடிய குழுவினர் ஆவர். இவர்களுடைய நிலை பல ஆண்டுகளாகப் பல விதங்களில் இன்பம், துன்பம், அவலம் போன்ற பல பிரச்சினைகளில் அமைந்துள்ளது. இவற்றைத் தட்டிக்கேட்பதற்காகவும் இவர்களுடைய உரிமைகளுக்குப் போராடவும் தொழில் சங்கங்கள், தொழிலாளர் நல வாரியம் போன்ற பல அமைப்புகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்குச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்கு அரசியல், தனி நபர் சூழ்ச்சி போன்ற பல தடைகள் இருக்கின்றன. இத்தடைகள் யாவும் தொழிலாளர்களைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க முடியாமல் போகின்றனர். இந்நிலை தற்கால இலக்கியங்கள் என்று கருதப்படுகின்ற நாவல் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கு.சின்னப்ப பாரதி எழுதியுள்ள சர்க்கரை எனும் புதினம் அமைந்துள்ளது. இவற்றிலுள்ள முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்க நிலையையும் பற்றிக் காண்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
தொழிலாளர் அறிமுகம்
தொழிலாளர்கள் என்போர் பொருளாதார தேவைக்காகப் பிறரிடம் வேலைப் பார்த்து அவ்வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்களே ஆவர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைத்து வாழக்கூடிய வர்க்கத்தினர் ஆவர். மேலும், “மக்களின் சமூக வாழ்க்கை, நிலத்தை அடிப்படையாக வைத்து அமைகிறது. நிலத்துடனான உடல் உழைப்பு என்பதோடு மட்டுமல்லாது சகமனிதர்கள் உடனான உறவு நிலையைப் பொறுத்தும் சமூக வாழ்க்கை பொருள் உடையதாகிறது. நிலங்கள் பகுக்கப்பட்டு நிலத்தினை அடிப்படை ஆதரமாக வைத்து அமைந்த தொழில் பிரிவுகளும் தோன்றக் காரணமாயிற்று”1 என்ற கூற்றைக் காணும் போது தொழிலாளர்கள் என்போர் உடல் உழைப்பு, குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிக்குப் பாடுபடக்கூடிய நிலையில் இருப்பவர்கள்; என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்குப் பொருளாதார தேவையானது மிக முக்கியமானதொன்றாகும். அவ்வகையில் “பொருளாதாரம் என்பது பொருளை அடிப்படையாகக் கொண்;ட வாழ்வு முறையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வாழ்வுக்குப் பொருளே ஆதாரம். பொருளின் உற்பத்தி அதன் செயற்பாடுகள், அதன் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்ற இயல் பொருளியல் எனலாம்.”2 மேலும், பொருளாதாரத்தைப் பற்றி மார்க்ஸ் தன் கருத்தைக் கூறுவதையும் காணலாம். அதாவது “முதன்முதலாகப் பொருளாதாரம் என்பது பொருட்கள் சம்பந்தப்பட்டது அல்ல. மனிதர்களுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. இன்னும் அடிப்படையாகச் சொன்னால் வர்க்கங்களுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது என்னும் இந்த உறவுகள் எப்போதும் பொருட்களோடு இணைக்கப்பட்டிருந்தன. பொருட்களாகவே தோற்றம் பெறுகின்றன என வரையறுக்கின்றார்.”3 மேலும், “பொருளின் அடிப்படையிலும், பொருளை உற்பத்தி செய்கின்ற உற்பத்திக் கருவிகளின் அடிப்படையிலும் உற்பத்தி உறவுகள் தீர்மானிக்கப்படுகின்ற உற்பத்திக் கருவிகள் யாரிடம் இருக்கின்றனவோ அவன் உயர்ந்தவனாகவும், வெறும் உடல் உழைப்பினை மட்டும் நம்பியிருப்பவன் தாழ்ந்தவனாகவும் மாறிவிடுகின்றான். பொருள் உற்பத்தியில் ஈடுபடும்போது மனிதர்களிடையே ஏற்படும் உறவுகள் உற்பத்தி உறவுகள் எனப்படும். உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தம் என்பதுதான் உற்பத்தி உறவுகளுக்கான அடிப்படையாகும்”4 என்கிறார் தியாகு.
தொழிலாளர்களைக் கூலிகள் என்று அழைப்பதும் உண்டு. ஏனெனில் தினக்கூலிகளாகவும் வாரக் கூலிகளாகவும் வேலைப்பார்ப்பதால் தொழிலாளர்களைக் கூலிகள் எனவும் அழைப்பர். குறிப்பாக, “கூலி உழைப்பு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் முக்கிய ஆதாரமாகும். உழுதல், நிலம் சீரமைத்தல், விதைத்தல், நடுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், அறுவடை செய்தல், போக்குவரத்து அனைத்திலும் வேலை செய்வதற்குத் தினசரிக் கூலி அல்லது ஒப்பந்தக் கூலி முறையில் உழைப்பு செலுத்தப்படுகிறது”5 என்று அ.சீனிவாசன் குறிப்பிடுவதன் மூலம் தொழிலாளர்களின் நிலையினை அறிந்து கொள்ள முடிகிறது.
தொழிலாளர்களைப் பற்றி இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. பிற்காலத்தில் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர்கள் குறித்த நிலையைப் பேசியுள்ளனர். இலங்கை மற்றும் பிஜித்தீவுகளில் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்த தமிழர்களின் அவலநிலை குறித்துப் பாரதியார் முதலில் பாடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து பாரதிதாசன் தொழிலாளர்களைப் பற்றிப் பாடியுள்ளார். பட்டுக்கோட்டையார் தம் திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துக்களையும் தொழிலாளர் பிரச்சினைகளையும் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
வட்டாரப் புதினங்கள் பல தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டாங்களைப் பதிவு செய்தன. இவற்றுள் முருகன் ஓர் உழவன் (கே.எஸ்.வேங்கடரமணி), தேனி (டி.செல்வராஜ்), கரிப்பு மணிகள் (இராஜம்கிருக்ஷ்ணன்), பாலைப் புறா (சு.சமுத்திரம்), பால் மரக் காட்டினிலே (அகிலன்), பஞ்சும் பசியும் (தொ.மு.சி) போன்றவை தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன. பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றவர்கள் தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.
புதுக்கவிதை வரலாற்றில் ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்றோரின் கவிதைகளில் தொழிலாளர் பிரச்சினைகள் புனையப்பட்டுள்ளன.
தொழிலாளர் வர்க்கம்
தொழிலாளர்கள் ஏழ்மைநிலையில் இருப்பவர்கள் ஆவர். தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் எதிரியாக இருப்பது பொருளாதாரமே ஆகும். இதனைப் பற்றி “பொதுவாகவே ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் உள்ள முரண்பாடு பொருளாதார நலன்களைப் பொறுத்துத்தான் பகை வடிவம் எடுக்கும். அத்தகைய நேரங்களில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது தன் நலன்களை வலுவில் திணிக்கும். வலிய முறையில் அழிக்க நினைக்கும்.”6 என்னும் கோ.கேசவன் அவர்களின் கூற்றையும் நாம் இங்கு நோக்கலாம். தொழிலாளர்கள் வர்க்கதினருக்குப் பல சிக்கல்கள் உண்டு அவற்றில்
1. வேலையின்மை
2. நிலமின்மை
3. கூலிப் பிரச்சினைகள்
4. குத்தகைப் பிரச்சினைகள்
5. வறுமை
6. அடிமைத்தனம்
7. அமைப்பின்மை
8. தொழிற்சங்கப் பிரச்சினைகள்
9. சுரண்டல்
ஆகியவை உண்டு என்பதை நாவலின் வழி உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறாகத் தொழிலாளர் வர்க்கத்தினர் பல சிக்கல்களை அனுபவிப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

- எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி -
முதலாளித்துவம்
முதலாளி வர்க்கம் என்பது அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் கிடைத்த பதவி என்று பல முதலாளிகள் நம்புகின்றனர். இதனைக் கருவியாகக் கொண்டு பல முதலாளிகள் தொழிலாளர்களை அடக்கி ஆள்வதை இன்று அதிகம் காணலாம். அதே நிலைதான் படைப்பிலக்கியங்களானப் புதினங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். அவ்வகையில் கு.சின்னப்பபாரதி எழுதியுள்ள சர்க்கரை என்னும் நாவலிலும் முதலாளி வர்க்கப்போக்கு காணப்படுகிறது. இத்தகைய முதலாளிகள் சுரண்டல், அடிமைத்தனம், பணிநேரம், கூலித்தருவது, பாலியல் கொடுமைகள் செய்வது போன்ற எண்ணற்ற தீய வழிகளில் செயல்படுவதை இப்புதினவாயிலாக ஆய்வில் அறியலாம். அதாவது சுரண்டல் என்பது “உழைப்பவனுக்குத் தெரியாமலேயே அவனது உழைப்பைக் கவர்தல் சுரண்டல் எனப்படும். ஒரு உழைப்பாளி செய்யும் வேலைக்கு உரிய கூலியைக் கொடுக்க மறுப்பதும் அல்லது குறைந்த கூலியைக் கொடுப்பதும் சுரண்டல் முறை எனலாம். குறிப்பிட்;ட வேலைக்கு அமர்த்துவதும் அதோடு அல்லாமல் வேறுபல வேலைகளை வாங்குவதும் சுரண்டல் முறையின் ஒரு பகுதியாகும்.”7 என்ற கூற்றை இங்கு வைத்து நோக்கும்போது முதலாளிகள் தொழிலாளர்கள் செய்கின்ற வேலைக்கு குறித்த ஊதியத்தைத் தரமால் கூடுதல் நேரத்தைத் தந்து அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவது மிகக் கொடுமையாகும். இத்தகைய கொடுமையைப் பல தொழிலாளர்கள் பல விதங்களில் அனுபவிக்கின்ற நிலை இன்றும் காணலாம். அடுத்ததாக முதலாளி வர்க்கத்தினர் அடிமைத்தனத்தைக் கையாளுவதைக் காணலாம். முதலாளிகள் உழைப்பளிகளை அடிமையாக்குவதும் அவர்களைத் தரக்குறைவாக எண்ணுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய நிலையில் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் இருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நா.கருணாமூர்த்தி அவர்கள் “இந்திய விடுதலைக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நிலத்தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. இதைப் பல்வேறு சமூகவியல் அறிஞர்களும் வரலாற்றாய்வாளர்களும் பல்வேறு கட்டுரைகளின்வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளனர். விவசாயத் தொழிலாளர்களுக்குச் சாணிப்பால் கொடுத்தால், சாட்டையடி கொடுத்தல், உழவில் ஒரு மாட்டை நீக்கிவிட்டு அதற்குப் பதில் அடிமையை ஏர்க்காலில் பூட்டி உழச் செய்தல் போன்ற கடுமையான தண்டனைகளால் அவர்களைக் கொடுமைப்படுத்தினர். ஆண்கள் மட்டுமல்லாமல் விவசாயக் கூலிப் பெண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாயினர். இந்த இழிநிலையைச் சில நாவல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.”8 என்று கூறுவதைக்காணும் போது சர்க்கரை நாவலும் இவற்றுள் அடங்குவதை இவ்வியலின் மூலம் அறிந்துகொள்ளலாம். எனவே முதலாளி வர்க்கத்தினர் சுரண்டல் செய்வதும், அடிமைத்தனம் மேற்கொள்வதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, “முதலாளிகளின் மனோபாவம் இவர்களை மேலும் சங்கடப்படுத்துகிறது. ஆனாலும் உழைப்பவனுக்கு உழைப்பைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அவன் உடைமையாளனைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது.”9 என்ற கூற்றைக் காணும்போது முதலாளிகள் பணத்தையுடையவர்களாகவும், தொழிலாளர்கள் உழைப்பை உடையவர்களாகவும் உள்ளனர்.
புதினத்தில் தொழிலாளர்களின் நிலை
சர்க்கரை எனும் புதினத்தில் தொழிலாளர்களின் நிலையானது மிக அவலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரிய பணக்கார மனிதர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு கரும்பாலையைக் கட்டுகின்றனர். இதற்கு ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணியில் சேர்க்கின்றனர். பிறகு விவசாய மக்களிடமிருந்து கரும்பைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு ஏமாற்றுகின்றனர். ஏழைத் தொழிலாளிகளும் மிகுந்த வேதனையை அடைகின்றனர். இதனைக் கருவாகக் கொண்டு நாவலாசிரியர் சித்தரித்துள்ளார். இச்சித்தரிப்பில் வறுமை நிலை, வேலையில்லாச் சிரமம், வேலைக்கு ஆட்களைத் தேர்தெடுக்கும் முறையில் ஏற்றத்தாழ்வு பார்த்தல், அடிமை நிலை, வேலை சமயத்தில் விபத்து ஏற்படுதல், வேலையில் வேதனை ஏற்படுதல் முதலான அவலநிலைகள் இப்புதினத்தில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
வறுமையும் வேலைச் சிரமமும்
“தொழிலுக்குச் செல்லும் மக்களுடைய வாழ்க்கை நிலை மிகவும் வறுமையை நோக்கியே செல்கிறது. வறுமைக் காரணமாக உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியாத பொழுது மனிதனின் பிற தேவைகள் பின்னக்குத் தள்ளப்படுகின்றன. கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளும் கூட நிறைவேற்றப்படாமலேயே இருந்துவிடுகின்றன. இதனால் உழைக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகின்றனர். இதுவும் சமூக அவலத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகிறது.”10 என்ற கருத்து மனிதனுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை சமாளிப்பதற்காகக் கிடைத்த வேலையைச் செய்து பிழைக்ககூடிய மக்கள் கூட்டம் இன்றும் சமுதாயத்தில் உண்டு என்னும் கூற்றைக் காணும்போது நாவலிலும் இந்நிலையைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனை, “கிடாய் அடித்துப்போட்ட வீடடாருக்கு கோழிச்சாறாவது காய்ச்சி ஊற்ற வேண்டாமா? அந்தக் குடும்பத்திற்கு அதொரு தாங்கமுடியாத சுமைதான். சுமையைப் பார்த்தால் கடன்பட்டதைத் திருப்ப வேண்டாமா? விருந்துக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்பதில்லை, இருந்தாலும் ஒருநாளைக்குச் சொல்லாக நிலைத்துவிடுமே. விருந்துண்ட கடனுக்காக வருஞ்சந்திக்கு அவச்சொல்லா? பிச்சையெடுத்தாவது உண்ட சோற்றுக்கடனைத் தீர்த்து விடவேண்டும்.”11 என்ற செய்தியைக் காணும் போது வறுமை நிலை புலப்படுகின்றது. அதாவது, வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் தவிக்கின்ற நிலையினைக் கதையில் காணமுடிகிறது.
வேலையில்லாமல் மக்கள் சிரமப்படுவதையும் புதினத்தில் காணமுடிகிறது. வீரன் என்பவன் தன் தாய் தந்தை, உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் இழந்துநிற்கும் சமயத்தில் வேலையில்லாமல் மிகுந்த வேதனைக்கு ஆளாவதையும் நாவலில் காணலாம். இதனை, “வீரனை ஒருவாரம் கழித்து வேலைக்கு வந்து பார்க்குமாறு மேஸ்திரி மாரிமுத்து கூறிவிட்டான். அவன் பேசியதிலிருந்தும், நடந்துகொண்ட முறையிலிருந்தும் வேலை கிடைப்பதென்பது உறுதியாகிவட்டது போல் வீரனுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. கையிலிருப்பதோ ஐந்து ரூபாய்தான், இதை வைத்துக்கொண்டு ஒருவாரத்தை எப்படிக் கழிப்பது? எங்கு தங்கிக்கொள்வது அப்படியே ஒரு வாரம் கழித்து வேலை கிடைத்தாலும் சம்பளம் பட்டுவாடா செய்கிற வரையிலும் சாப்பிட்டுக்கு என்ன செய்வது? என்றெல்லாம் சிந்தனை வயப்பட்டுக் குழம்பினான்”12 இக்கூற்றின் மூலம் வேலையில்லாத் தி;;ண்டாட்டம் புலப்படுவதைக் காண்கிறோம்.
தொழிலில் சேர்ந்தவர்கள் அடிமையாகக் கையாளப்படுவதையும் புதினத்தில் காணமுடிகிறது. அதாவது, “யாரும் கூட்டம் போடாதீங்க அவுங்கவுங்க வேலையைப் போயி பாருங்க. பொசுக்குன்னு மொதாலாளி பார்த்துட்டார்னா எல்லோர்க்கும் இன்னைய கூலியும் போயி எங்களுக்கும் வசவு வேறெ கெடைக்கும். நான் இந்த விசயத்தை தலைமை இஞ்சினியர்கிட்டெ ரிப்போர்ட் பண்றே. அவரு அதுக்கான நடவடிக்கை எடுப்பாரு”13 என்ற கூற்றினை வைத்துநோக்கும் போது தொழிலாளர்களை அடிமையாகப் பயண்படுத்திக்கொள்ளவதைக் காண்கிறோம். மேலும், வீரன் என்பவனுக்குத் தன் காலில் காயம் ஏற்பட்டு வேதனையில் துடிக்கிறான. அப்போதுகூட முதலாளிவர்க்கம் அவனிடம் வேலைச் சுமையைக் குறைக்காமல் கருணை காட்டாமல் பணியை பிடுங்குவதைக் கதையின் மூலம் அறிகிறோம். இதனை, “விபரமில்லாத பயல். இல்லாட்டி இத்தனை கஷ்டத்தோட தொடர்ந்தாப்பலெ பதினாறுமணி நேரம் வேலை செஞ்சு மயக்கம் போட்டு உழுவுமா? பொளைக்கறதுக்கு எத்தனையோ வழியிருக்குது. உன் வேலையும் வாண்டா ஒண்ணும் வாண்டான்னு முறிச்சிக்கிட்டு வந்திருக்கலாமல்ல”14 என்று உறவினங்கள் ஆதங்கப்படுவதையும் காணலாம்.
இப்படிப்பட்ட கொடுமையான வேலைக்குக்கு ஆள் எடுக்கும் முறையிலும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. படிப்புக்கு ஏற்றவாறும், பணத்திற்கு ஏற்றவாறும் ஆட்களை நியமனம் செய்வதையும் கதையில் காணமுடிகிறது. இதனை, “சரிங்க பையனுக்கு வேலை கேட்டுத்தானே வந்திருக்கறீங்க? என்று அவரே கேள்வி போட்டுவிட்டுப் பதிலாக இந்தப் படிப்புக்கான வேலைக்கு பதினைஞ்சாயிரம் அஞ்சு வருசம் கடனா வட்டியில்லாமெ ஆலைக்குக் கொடுக்கணும். அந்தப் பணம் அஞ்சு வருசம் கழிச்சுத் திரும்பி வந்துவிடும். என்ன சம்மதமா?”15 என்ற மேற்கோளின் வாயிலாகக் காண்பது படிப்பும், மதிப்பெண்ணும் இருந்தால் மட்டும் போதாது பணமும், படை பலமும் தேவை என்பதைக் கதை உணர்த்திச் செல்கிறது.
இத்தகைய தன்மையைக் காணும் போது சர்க்கரை நாவலில் இடம்பெறுகின்ற ஏழைப் பாத்திரங்கள் வேலைக்கிடைக்காமல் வறுமையில் வாடுவதையும், வேலைக்காக ஏங்குவதையும், வேலைக்கிடைத்தால்கூட அவ்வேலையில் அடிமைத்தனம் ஓங்குவதையும் தெளிவாக அறிய முடிகின்றது.
முதலாளித்துவ ஆதிக்கம்
புதினத்தில் வருகின்ற முதலாளி வர்க்கத்தினர் சுய நலத்தோடும், அடிமை எண்ணத்தோடும், பொய்யான வாக்குறுதிகளைத் தந்து தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். சுயநலத்தைப் பற்றி, “நம்ம பையே அக்ரிக்குப் படிச்சிட்டு வீட்டுலெ சும்மா இருக்கறான், மில்லுலெ ஒரு வேலை போட்டுத் தர ஏற்பாடு செஞ்சிங்கன்னா உதவியா இருக்கும்”16 என்பதைக் காணும் போது முதலாளியின் வர்க்க வாரிசுகளுக்கு எளிமையாக சிபாரிசு செய்யப்பட்டு பணியில் சேர்த்துக்கொள்கின்றனர். இதன்படி ஏழை மக்கள் இருக்க முடியவில்லை என்பதை நாவலில் காண்கிறோம். மேலும், தொழிலாளிகளிடம் முன்பணம் ஆசையைக்காட்டி வேலைக்குச் சேர்த்துக் கொள்;வதையும் பார்க்க முடிகிறது. இவற்றை, “நாச்சியப்ப கவுண்டர் மகனைப் பார்த்து நமது ஆலையில் நிரந்தர உத்தியோகத்தில் சேர்த்துக் கொள்பவர்களிடமிருந்து நாம் வெளியிட்ட அஞ்சு வருசக் கடன் பத்திரத்திட்டப்படி எவ்வள பணம் கெடைச்சிருக்கு? என்று கேட்டார். சுந்தரம் அது சம்பந்தப்பட்ட கணக்குப் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்துவிட்டு ஐம்பது லட்சம் கெடைச்சிருக்கு. இதிலெ டெபாசிட் மட்டும் நாற்பது லட்சம் தேறும் என்று காரியார்த்தமும், வெற்றிகரமாக முடித்துவிட்ட பெருமிதமும் தொனிக்கும் குரலில் கூறினான்”17 என்ற கூற்றின் மூலம் அறியலாம்.
பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளிடம் கூறியும் தொழிலாளர்களிடம் கூறியும் ஏமாற்று வேலையில் ஈடுபடுவர்பளாகப் புதினத்தில் வரும் முதலாளித்துவம் காணப்படுகிறது. இதனை, “நாச்சியப்பா சர்க்கரை ஆலையின் துவக்கம் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு ஒரு பொன்னான காலமாகும். விவசாயத்திலெ நிரந்தரமான ஒரு வெலையில்லாமெ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கற உங்களுக்கு இந்த ஆலையின் துவக்கத்தால் நல்ல வருமானம் கெடைக்க வழி ஏற்பட்டிருக்கு. அதுவுமில்லாமெ அடுத்த ஒவ்வொரு வருசத்துக்கான வேலையையும் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிச்சிடறோம். நீங்களும் நம்பிக்கையோட பயிரிட வாய்ப்பேற்படுது. கூட உங்களுக்குப் பயிர்க்கடன் கொடுக்க ஏற்பாடு செய்யறோம். அதாவது, இந்த வருடத்திலெ உரம் பூச்சி மருந்துக்கு மட்டும் கரும்பு வெட்டுப் பணம் உங்களுக்கு தீர்க்கும் பொழுது பிடிச்சிட்டுத் தீர்த்திடறோம். டன் ஒண்ணுக்கு பக்கத்து ஆலை கொடுக்கும் நூத்தி இருபதைவிட ரண்டு ரூபாய் சேர்த்துக் கொடுக்கறோம். எதிர்காலத்திலெ புதிய கிணறு வெட்ட, கிணறு ஆழ்ப்படுத்த, மோட்டார், ஆயில் இஞ்சின் வாங்க, வண்டிப்பாதை இல்லாத கரும்பு வெட்டுப் பகுதிகளுக்குப் பாதை போட, இப்படியான உதவிகளையும் செய்யப் போறோம். இதனாலே புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கப் போவுது. ஆகவே நீங்களெல்லாம் அமோகமாக கரும்பு பயிரிட்டு உங்களோட முன்னேற்றத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்தழக்கக் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் விளக்கம் கேட்கலாம்.”18 என்று ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றும் தன்மையினைக் காணலாம்.
முதலாளித்துவமும் தொழிலாளர் வர்க்கமும் என்னும் இவ்வியலின் மூலமாகக் கரும்பு விவசாயிகளை ஆலை நிறுவனங்கள் ஏமாற்றுவதையும், நிறைய சலுகைகள் உண்டு என்று கூறி ஏழை மக்களை ஆலையில் தொழிலாளர்களாகச் சேர்த்துக்கொண்டு அடிமைகளாக நடத்தப்படுவதையும் இவ்வாய்வின் மூலம் அறிகின்றோம்.
நிறைவுரை
தொழிலாளர்கள் என்போர் பொருளாதார தேவைக்காகப் பிறரிடம் வேலைப் பார்த்து அவ்வேலைக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்களே ஆவர். இவர்கள் தங்களின் குடும்ப தேவைக்காகவும் எதிர்கால சேமிப்புக்காகவும் உழைத்து வாழக்கூடிய வர்க்கத்தினர் ஆவர். தொழிலாளர்கள் என்போர் உடல் உழைப்பு, குடும்ப பொருளாதாரம் ஆகியவற்றிக்குப் பாடுபடக்கூடிய நிலையில் இருப்பவர்கள்; என்பதை இதன் வழியாக அறிந்து கொள்ளலாம்.
தொழிலாளர்களைக் கூலிகள் என்று அழைப்பதும் உண்டு. ஏனெனில் தினக்கூலிகளாகவும் வாரக் கூலிகளாகவும் வேலைப்பார்ப்பதால் தொழிலாளர்களைக் கூலிகள் எனவும் அழைப்பர். தொழிலாளர்களைப் பற்றி இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. பிற்காலத்தில் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர்கள் குறித்த நிலையைப் பேசியுள்ளனர். தற்கால சமுதாயத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிக பெரிய கொடுமையாக இருப்பதை ஆய்வின் வழி நாம் கண்டுணரலாம்.
நாவலில் வருகின்ற பாத்திரப் படைப்புகள் அனைத்தும் தனக்கென்ற சொந்த நிலம் இல்லாமல் நாடோடித்தனமாக பிழைக்கின்ற பாத்திரங்களாக ஆசிரியர் படைத்துள்ளார். இதனால் வறுமை, துன்பம், பொருளாதார பின்னடைவு, குடும்பத்தில் முன்னேற்றமில்லாத நிலை, பண்டிகைக் காலங்களில் வறுமை புலப்பாடு ஆகியவைகள் வெளிப்படுகின்றன. ஏமாளிகளாகத் திகழும் கூலி விவசாயத் தொழிலாளர்களையும் வார்த்தை ஜாலத்தால் மயக்கி சர்க்கரை ஆலை வேலைக்கு அழைத்து செல்வதையும் புதினத்தின் மூலம் காணலாம். வறுமை என்பது விலைவாசி ஏற்றம் குறைவான ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால் உண்டாகிறது என்பதை இந்நாவல் சுட்டுவதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தொழிலாளர் வர்க்கம் என்பது வேலையின்மை, நிலமின்மை கூலிப் பிரச்சினைகள் குத்தகைப் பிரச்சினைகள், வறுமை அடிமைத்தனம் ஆகியவற்றால் நசுக்கப்படுகின்றனர். முதலாளி வர்க்த்தினர் சிறிது கவனம் கொண்டால் தொழிலாளர் வர்க்கமும் முதலாளி வர்க்கமும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இதனால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவை மலரும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலாளி வர்க்கம் என்பது அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் கிடைத்த பதவி என்று பல முதலாளிகள் நம்புகின்றனர். இதனைக் கருவியாகக் கொண்டு பல முதலாளிகள் தொழிலாளர்களை அடக்கி ஆள்வதை இன்று அதிகம் காணலாம். அதே நிலைதான் படைப்பிலக்கியங்களானப் புதினங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். இத்தகைய முதலாளிகள் சுரண்டல், அடிமைத்தனம், பணிநேரம், கூலித்தருவது போன்ற எண்ணற்ற தீய வழிகளில் செயல்படுவதை இப்புதினவாயிலாக ஆய்வில் அறியலாம்.
முதலாளிகள் தொழிலாளர்கள் செய்கின்ற வேலைக்கு குறித்த ஊதியத்தைத் தராமல் கூடுதல் நேரத்தைத் தந்து அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவது மிகக் கொடுமையாகும். இத்தகைய கொடுமையைப் பல தொழிலாளர்கள் பல விதங்களில் அனுபவிக்கின்ற நிலை இன்றும் காணலாம். அடுத்ததாக முதலாளி வர்க்கத்தினர் அடிமைத்தனத்தை கையாளுவதைக் காணலாம். முதலாளிகள் உழைப்பளிகளை அடிமையாக்குவதும் அவர்களைத் தரக்குறைவாக எண்ணுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய நிலையில் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் இருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பெரிய பணக்கார மனிதர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு கரும்பாலையைக் கட்டுகின்றனர். இதற்கு ஏழை மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணியில் சேர்க்கின்றனர். பிறகு விவசாய மக்களிடமிருந்து கரும்பைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டு ஏமாற்றுகின்றனர். ஏழைத் தொழிலாளிகளும் மிகுந்த வேதனையை அடைகின்றனர். இதனைக் கருவாகக் கொண்டு நாவலாசிரியர் சித்தரித்துள்ளார். இச்சித்தரிப்பில் வறுமை நிலை, வேலையில்லாச் சிரமம், வேலைக்கு ஆட்களைத் தேர்தெடுக்கும் முறையில் ஏற்றத்தாழ்வு பார்த்தல், அடிமை நிலை, வேலை சமயத்தில் விபத்து ஏற்படுதல், வேலையில் வேதனை ஏற்படுதல் முதலான அவலநிலைகள் இப்புதினத்தில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
சர்க்கரை நாவலில் இடம்பெறுகின்ற ஏழைப் பாத்திரங்கள் வேலைக்கிடைக்காமல் வறுமையில் வாடுவதையும், வேலைக்காக ஏங்குவதையும், வேலைக்கிடைத்தால்கூட அவ்வேலையில் அடிமைத்தனம் ஓங்குவதையும் தெளிவாக அறிய முடிகின்றது. முதலாளியின் வர்க்க வாரிசுகளுக்கு எளிமையாக சிபாரிசு செய்யப்பட்டு பணியில் சேர்த்துக்கொள்கின்றனர். இதன்படி ஏழை மக்கள் இருக்க முடியவில்லை என்பதை நாவலில் காண்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளிடம் கூறியும் தொழிலாளர்களிடம் கூறியும் ஏமாற்று வேலையில் ஈடுபடுவர்களாகப் புதினத்தில் வரும் முதலாளித்துவம் காணப்படுகிறது.
சான்றெண் விளக்கம்
1. நா.கருணாமூர்த்தி, தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள், ப.35
2. மேலது,ப.127
3. இரா.ஜவஹர், கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை நக்கீரன்.(19-11-2002) , ப.25
4. தியாகு, மார்க்சியம் ஆனா ஆவன்னா, ப.28
5. அ.சீனிவாசன், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி, ப.76
6. கோ.கேசவன், மண்ணும் மனித உறவுகளும், ப.15
7. நா.கருணட மூர்த்தி, தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள், ப.150
8. மேலது, ப.86
9. பாலு மணிவண்ணன், மண்ணும் பொண்ணும், ப.145
10. நா.கருணாமூர்த்தி, தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள், ப.140
11. கு.சின்னப்பாரதி, சர்க்கரை, ப.64
12. மேலது,ப.87
13. மேலது,ப.167
14. மேலது,ப.148
15. மேலது,ப.106
16. மேலது,ப.72
17. மேலது,ப.120
18. மேலது,பக். 130-131
Mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









