- கவிஞர்  'நாங்குநேரி திரு எம். சுப்பையா' -

கவிஞர் அறிமுகம்: அதிகம் அறியப்படாத தமிழ் ஆளுமை: கவிஞர்  'நாங்குநேரி திரு எம். சுப்பையா' அவர்களின் கவிதைகள் !  - நாங்குநேரி வாசஸ்ரீ் -
                      
- கவிஞர் எம். சுப்பையா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூத்த தமிழறிஞர். அவர் நாங்குநேரி அருகேயுள்ள புதுக்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி 1993ல் ஓய்வு பெற்றவர். ‘இலக்கிய இன்பம்’ என்ற அமைப்பின் மூலம் அக்காலத்திய பல பட்டிமன்றங்களிலும், பொது மேடைகளிலும் தமது பேச்சாற்றலால் புகழ் பெற்றவர். பல தலைவர்களின் மேடைகளில் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தற்போது தொண்ணூறு வயதினைத் தாண்டிய பின்னும், தம் இல்லத்தின் வெளிச்சுவற்றில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுதி இளம் சிறார்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டி வருபவர். அவர் சமூகம், தத்துவம், காதல், புரட்சி, பக்தி சார்ந்த பல கவிதைகளைப் படைத்து அவற்றைப் பாடலாகவும் பாடி வந்துள்ளார். இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையிலுள்ள அவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு சில கவிதைகளை இங்கே காணலாம். - 


தத்துவப் பாடல்!

மனிதா! மனிதா! சிந்தித்து நடடா மனிதா
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்
முன்வரிதனை மனதில் வை
பின்வரிதனை செயலில் காட்டு
நேற்றைய வாழ்வு நாளைய பாடம்
புரிந்து நடடா மனிதா
பட்டறிவு வாழ்க்கைப் பாடமன்றோ மனிதா
பார்போற்றும் மாமனிதர் கற்றுத்தந்தார்
இதை மறவாதே மனிதா
எந்நாளும் இனிய நாளே மனிதா. 

எழுச்சிப் பாடல்! 

நண்பனே! நண்பனே! ஆருயிர் நண்பனே!
நாடு நாடு நல்லதை நாடு,
நாமும் உயர்வோம் நாடும் உயரும்.
(நண்பனே நண்பனே)

கொடுமை தனைக் களைய புறப்படு நண்பா புறப்படு!
நீதிதனை நிலைநாட்டப் புறப்படு! நண்பா புறப்படு!
நாம் வாழ நாடும் வாழ
நல்லது செய்யப் புறப்படு! நண்பா புறப்படு!
(நண்பனே நண்பனே)

இப்படை தோற்பின் எப்படை வெல்லும்.
மனதிற்கொள் நண்பா நண்பா!
நன்றே செய்!, இன்றே செய்!
புறப்படு நண்பா புறப்படு!
(நண்பனே நண்பனே)

தடைகள்!

தடைகள் எல்லாம் தடைகள் அல்ல தம்பி
தடங்கல்தனைக் கண்டு கலங்காதே தம்பி
தடைகளே வெற்றியின் முதற்படி தம்பி
தடங்கலோ வெற்றியின் தடங்களாம் தம்பி
(தடைகள் எல்லாம் தடைகள்.)

தத்தித் தத்தி நடக்கும் மழலையைப் பார்!
மீண்டும் மீண்டும் வீழும், தடைகளைப் பார்!
முடிவில் நடப்பதைப் பார்
வாழ்க்கைப் பாதை என்னும் பள்ளியிலே
மனிதன் பயில வேண்டிய பாடமிது தம்பி!
(தடைகள் எல்லாம் தடைகள்...)

கிராமியப் பாடல் (திருநெல்வேலி வட்டார வழக்கில்)

பெண்: 
போடா, போடா போக்கத்த பயலே!
யாரைப் பார்த்து என்னடா, கேட்ட?

ஆண்: 
அடி போடி போடி பொசகெட்ட செருக்கி!
போக்குமாறி போனவளே போடி!

பெண்: 
தெரிந்தும் ஏன் வந்தாய்?
எங்க ஊர்ப் பக்கம் பொசகெட்ட பயலே1

ஆண்: 
உன் கழுத்தில் மாலைபோட நான் வந்தேன்.
பொச கெட்டவளே!

பெண்: 
உற்றாரும் இல்லை பெற்றோரும் இல்லை.
ஊர் சுற்றும் உனக்கு பெண் ஒரு கேடா!
(போடா, போடா....)

ஆண்: 
ஊர் சுற்றுவதை நிறுத்திக்கிட்டேன்
உன்னைச் சுற்ற வந்திட்டேன் பிள்ளே இனி...

*டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்