அண்மித்த நிகழ்வுகள்:
பகுதி 1
அண்மையில், இலங்கையில் காணப்பட்ட நகர்வுகள் முழு தமிழ் உலகத்தையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்த கூடியவைதான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஒன்று, வடக்கே, 13வது திருத்தம் வேண்டாம் என கோரி, போராடிய நிகழ்வு. மற்றது இலங்கையானது இந்தியாவுடன் நெருக்கம் பூணும் நோக்குடன் தனது நகர்வுகளை ஆரம்பித்த நிகழ்வு. இவ்வகையில், இதனுடன் தொடர்புபட்ட, பேராசிரியர் கணேசலிங்கனின், மிக அண்மித்த கட்டுரை ஒன்றின் தலைப்பானது, இவ்வாறு அமைந்திருந்தது:
“இந்தியாவுடன், இலங்கையின் நெருக்கமான உறவுக்கான அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான உத்திகளா?” (தினக்குரல்--06.02.2022).
மேற்படி தலையங்கம் எழுப்பக்கூடிய பிரதானமான கேள்விகள் இரண்டே இரண்டுத்தான்:
i. ஒன்று: மேற்படி ‘அணுகுமுறைகள்’ என்பன யாவை?
ii. இரண்டாவது: அவ்அணுகுமுறைகள், 13ஐ நீக்குவதற்கான, ‘உத்திகளாக’ செயற்படுகின்றனவா, என்பனவையே அவை.
மேற்படி இரண்டு கேள்விகளும், ஒன்றை ஒன்று சார்ந்தது அல்லது ஒன்றில் ஒன்று தங்கியிருப்பது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதாவது, கிழக்கு முனைய ஒப்பந்தம் போல், 13ஐயும் ஒருதலைபட்சமாக கிழித்தெறியப்பட முடியாது போனால், நிச்சயம் அது இந்திய ஒத்தாசையுடனேயே ஆற்றப்பட வேண்டிய கருமமாகும். எனவேத்தான் 13ஐ நீக்க வேண்டும் எனில் முதலில், இவ் ‘அணுகுமுறைகள்’ மேற்கொள்ளப்பட வேண்டியது என்பது தவிர்க்கமுடியாத நடைமுறை ஆகின்றது. இதனால்தான், ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியப்பட்டது போல கடனுதவியை நாட, உலக வங்கியை அணுகாமல், இலங்கையானது, ஏன் இந்தியாவை நாடுகின்றது என்ற கேள்வி, இன்று, என்றைக்கு விடவும் மிக முக்கியமானதாகின்றது. இதனையே வேறு வார்த்தைகளில் கூறிவதென்றால், கடனுதவியை இந்தியாவிடம் இருந்து கோருவதன் நோக்கம் இரண்டாகலாம்:
i. ஒன்று, பொருளியல் தேவையை அடிப்படையாக கொண்டது.
ii. மற்றது, அரசியல் தேவையை அடிப்படையாக கொண்டது.
ஆனால் விடயங்களை சீர்தூக்கி பாரக்கும் போது, பொருளியல் தேவையை விட அரசியல் தேவையே இங்கு மேலோங்கிப் போவதாக தோன்றுகின்றது. இதனாலேயே உலக வங்கியை (தற்சமயத்திலேனும்) புறந்தள்ளி இந்தியாவை நாடுதற்கான காரணமும் எழுகின்றது. ஆனால், இவை ஒருபுறமிருக்க, முக்கியமானது யாதெனில், இந்நகர்வுக்கான ஏற்பாடுகளை கட்டி எழுப்பிய இலங்கையின் படிமுறைகள், இந்திய ஊடக ஆய்வாளர்களால், மிக நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன என்பதுவேயாகும்.
இங்கேயே அவர்களின், பூகோள அரசியலுக்கான புரிதல் என்பது, மிக கூர்மையாக வெளிப்படுவதாகவும் உள்ளது எனலாம். அதாவது, இந்தியாவிடம் இருந்து கடனுதவி திட்டத்தை கோருவதற்கு முன்னால், சீனத்தை, சேது சமுத்திரத்திலும். கச்சை தீவிலும், கொண்டு போய் நிறுத்தி விட்டு, அதற்கு பின்னர், இந்தியாவை அவர்கள் அணுகிய செயன்முறையானது எவரது கண்ணிலும் மண்தூவி விடக் கூடிய ஒன்றுத்தான் என அவர்கள் குறிப்பிட்டுள்ளது சுவாரஸ்யமான ஒரு விடயம்தான்.
அதாவது, இந்தியாவை நம்ப செய்ய, ஒரு தொகுதி சக்கரங்களின் சுழற்சி பாதை மாத்திரம் போதவே போதாது – சக்கரங்களுக்குள் சக்கரங்களாய் சுழலக் கூடிய, செயற்பாடுகளை, இலங்கை கொண்டிருந்தாக வேண்டும் என்பதே இவ் ஆய்வாளர்களின் முடிந்த முடிபாக இருக்கின்றது. இருந்தும், இப்படியான தொல்லைமிக்க கருமங்கள் ஏன் ஆற்றப்படுகின்றன என்பதே அடிப்படை வினாவாகின்றது.
பேராசிரியர் கணேசலிங்கன், தனது மேற்படி கட்டுரையில் மேலும் இரண்டு விடயங்களை மிக தீர்க்கமாக வாதிக்கின்றார்:
i. ஒன்று: “இந்தியாவை அணைத்துக் கொண்டே 13ஐ நீக்க வேண்டும் என்று தென்னிலங்கை கருதுகின்றது” என்பதும்,
ii. “13ஐ எதிர்ப்பதென்பது ஈழத்தமிழராலேயே அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பது தென்னிலங்கைக்கு அவசியமானது” என்ற விடயமுமாகும்.
இவ்விரண்டு விடயங்களும் கூட, ஒன்றுக்கொன்று தோதானவை தான் என்பதிலும் சந்தேகமில்லை.அதாவது, சுருக்கமாக சொன்னால், இலங்கையின் தெற்கும் 13ஐ அகற்றுமாறு கோருகையில் இலங்கையின் வடக்கும் 13ஐ அகற்றுவதற்கான கோரிக்கையை முன்வைப்பதானது, 13ஐ நீக்குதலுக்கான, உறுதியான அடித்தளத்தை மேலும் உறுதியாக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.
இவற்றில் முதலாவது–அதாவது–தெற்கு இக்கோரிக்கையை விடுக்கும் முன்னர், இந்தியாவுடன் தன் உறவுகளை நெருக்கமாக்கி கொள்ள வேண்டிய, தேவைப்பாடானது இலங்கைக்கு ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்து விடுகின்றது. அதாவது, குறைந்தபட்சம் 13க்கு எதிராக தன் செயல்பாடுகளை – அதாவது, 13ஐ நிர்மூலமாக்கும் தன் செயல்பாடுகளை - இந்தியா கண்டுக்கொள்ளாமல் இருக்க அல்லது குறைந்தபட்சம் எதிர்க்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம், என்ற கேள்வி வந்து சேர்ந்து விடுகின்றது. இச்சூழலில், இதற்கான தலையாய திட்டம் என்ன? இதனை எவ்வாறு நிகழ்த்துவது? என்பன தொடர்புபட்ட கேள்விகளாகின்றன. இங்கேயே, சீனத்தை சேது சமுத்திர கரைக்கு கொணர்ந்து தள்ளிவிடும் ஒரு நடைமுறை, அதாவது ஒரு சீன பூச்சாண்டியை முன்னகர்த்தி விட்டு, பின்னர் பின்கதவு வழியாக, இந்தியாவிடம் கடனுதவி அல்லது பொருளியல் உதவியை நாடும் ஒரு நடைமுறை முன்னகர்த்தப்படுகின்றது.
இந்கர்வுகளை முழுமையாக பார்க்க மாட்டாத, JVP உட்பட்ட, தென்னிலங்கையின் எதிர் அரசியல் கட்சிகள், தமது வாக்குறுதிகளுக்கு எதிராக, தற்போதைய அரசு, இந்தியா முன் மண்டியிட்டு விட்டது என்று சிலாகித்து பரப்புரை செய்வதில் ஆனந்தம் கண்டாலும், இவ்விமர்சனங்களை, ஓர் ‘கொசுறாக’ கைக்கொண்டு புறந்தள்ளும் திராணியையும், அதற்கான, தனித்துவமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும், ஆட்சியாளர்கள் கொண்டிருக்கவே செய்வர் என்பது வெளிப்படையான விடயமாகின்றது. இவற்றை, வரப்போகும் காலம் மேலும் தெளிவாக்கும் என நம்பலாம்.
இவை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையின் எதிர்கட்சிகள் மேற்படி ‘கடனுதவி நாடுதலை’ இப்படியாக ‘பயன்படுத்தி கொள்ளுகையில்’ அல்லது பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைமையோ பெரும் சங்கடத்துக்குள் வீழ்ந்து விடுகின்றது. அதாவது, உலக வங்கியை நாடாது, இந்தியாவை நாடுதல் என்ற இலங்கையின் நவ அணுகுமுறை போக, தொடர்ந்தாற்போல் எமது வெளிநாட்டு அமைச்சரின் எண்ணற்ற வாக்குறுதிகள் - அல்லது நேர்த்தியான வார்த்தையாடல்கள் அல்லது ஆசைக்காட்டும் முயற்சிகள் - இவை, நெருக்கம் சார்ந்த ஒரு தோற்றப்பாட்டை ஒருபுறம் ஏற்படுத்த இது இவர்களை, இந்தியா மீது நம்பிக்கை இழக்க செய்து, ஈற்றில், இந்தியாவில் இருந்து இவர்களையும் விடுபட செய்து விடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நகர்வுகளின் அடிநாதமாகின்றது. அதாவது, தமிழ் கேள்வியில் இருந்து 13ஐ அகற்றல் அல்லது 13ஐ மெது மெதுவாக நிர்மூலமாக்கி விடுதல் என்பது மொத்தத்தில் இந்தியாவை அகற்றல் என்பதாகி விடுகின்றது. அதாவது, ‘ஆடுகளத்தில்’ இருந்து, 13ஐ முற்றாக அகற்றி விடுதல் என்பது ஆழமான, நீண்ட அதிதூர எதிர்விளைவுகளை கொண்டிருக்கவே போகின்றது என்பது மேற்படி இந்திய அரசியல் விமர்சகர்களின் ஆழ்ந்த அவதானிப்பாகின்றது.
பகுதி - 2
இச்சூழ்நிலையிலேயே, மேற்படி நகர்வுகளுக்கு அச்சாணி வழங்குவது போல பேராசிரியர் கணேசலிங்கன் குறிப்பிடும் இரண்டாவது அம்சமும் வந்து சேர்ந்து இணைந்து விடுகின்றது. அவரது கூற்று, ஏற்கனவே கூறியபடி பின்வருமாறு அமைகின்றது:
“13ஐ எதிர்ப்பதென்பது, ஈழத்தமிழரால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும் என்பது(ம்) தென்னிலங்கைக்கு அவசியமானது(தான்)…” (மேற்படி கட்டுரை).
சுருக்கமாக கூறினால், இப்போது பேராசிரியர் கணேசலிங்கன் அவர்களினதும் இந்திய விமர்சகர்களினதும் கருத்துக்களை இணைத்து பார்க்கும் போது, பேராசிரியர் கணேசலிங்கன் குறிப்பிடும், இலங்கையின், இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கான ‘நகர்வுகள்’ என்பது மேற்படி விடயங்களை அல்லது சம்பந்தமுறும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்பது மிக, மிக தெளிவாகின்றது. இதனை அறிந்தோ அறியாமலோதான் 13இற்கு எதிரான வடக்கின் போராட்டம், இன்று தலைத்தூக்கி உள்ளது என்பதே பேராசிரியர் கணேசலிங்கன் அவர்களது கட்டுரையின் உட்கிடையாகின்றது. ஏனெனில், அவரே பின்வருமாறு கூறுகின்றார்:
“13ஐ எதிர்த்த வடக்கின் போராட்டம் தென்னிலங்கையில், உடனடி கவனிப்பை, (ஓரளவில் அங்கீகரிப்பை) பெற்று விட்டது…”
“கிட்டு-பூங்காவை நோக்கிய போராட்டம்… தென்னிலங்கையிலும், புலம் பெயர் நாடுகளிலும் பேசப்படுவதற்கான காரணம் ‘அதுவாகவே’ உள்ளது”
இங்கே, பேராசிரியர் குறிப்பிடும் ‘அதுவாகவே இருக்கின்றது’ என்ற சொற்றொடர், எமது ஆழ்ந்த அவதானத்தை கோருவதாகவே இருக்கின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால் 13ஐ அகற்றுதல் என்பது, ‘அது’ – புலம்பெயர் உலகத்தில் மாத்திரமல்லாமல் - மிக முக்கியமாக தென்னிலங்கையாலும் சிலாகிக்கப்படுகின்றது – ஆர்வத்துடன் விரும்பப்படுகின்றது என்பதே இந்த ‘அது’ குறிப்பதாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இன்று, இதனுடன் இணைந்தாற் போல் கடற்றொழில் போராட்டமும் எழுச்சி பெற தொடங்கியுள்ளது.
திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு “பேச்சுக்காக” இறக்கிவிடப்பட்டாலும், இந்திய மீனவர்களின் கைது என்பது, அடுத்தடுத்து, இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு, கடற்றொழில் போராட்டங்களுக்கு அல்லது மீனவப் பிரச்சினைகளுக்கு தூபம் போடுவதாகவே (படகு ஏலம் போடப்படுதல் உட்பட) – என்பதனை இந்திய விமர்சகர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டாமலும் இல்லை. அதாவது, மீனவப் பிரச்சினையை இன்னும் முடுக்கி விடுதல்தான் இது என்பது தெளிவு. அதாவது பாம்பையும் அடித்து, பாம்புக்கும் வலிக்காமல் தடியும் முறியாமல் பார்த்துக்கொள்ளும் நடைமுறை இது. ஆனால் கேள்வி இது ஏன் இப்படி என்பதே.
பகுதி 3
இப்பின்னணியிலேயே, அமைச்சர் பசிலின் இந்திய விஜயத்தை தொடர்ந்து அடுத்ததாக, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ்சின் இந்திய விஜயம், முடுக்கி விடப்படுகின்றது. அதாவது, பேராசிரியர் பீரிஸ்சின் இந்திய விஜயம் அடிப்படையில் அரசியல் நோக்கத்தை கொண்டிருந்தாலும், அது தோற்றப்பாட்டில், பொருளியல் தேவைப்பாடு சம்பந்தமானது என தோற்றம் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதென இந்திய ஊடக ஆய்வாளர்கள் கணித்துள்ளதை மேலே குறித்தோம். அவர்களின் பார்வையில், பேராசிரியர் பீரிசின் நிலைப்பாடுகள், பேச்சுவார்த்தையின் போதும், ஊடக பேட்டியின் போதும், ஒன்றிலிருந்து ஒன்று, வித்தியாசமுறுவதாகவே கணிக்கப்பட்டிருந்தது. ‘நிட்டின் கோகாலே’ மற்றும் ‘The Hindu’ பேட்டிகளின் போது, பேராசிரியர் பீரிஸ் அவர்கள், இந்தியாவுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும், இந்திய-இலங்கை ஒருமைப்பாட்டிற்கூடாக செயல்படுத்தவுள்ள எண்ணற்ற திட்டங்கள் குறித்தும் மிகுந்த தாராள மனப்பான்மையுடன் கூற முற்பட்டிருந்தார்.
500 பேரை ராணுவ-பொலிஸ் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது முதல், இரண்டு விமானங்களை கொள்வனவு செய்வது மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான ஒரு பயிற்சி நிலையத்தை ஸ்தாபிப்பது, மேற்கு முனைய துறைமுக வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பது, யாழ் கலாசார மண்டபத்தை விரைவாக முடித்து வைப்பது, மோடியை அழைப்பது என பல்வேறு விதமான வாக்குறுதிகள் இப்பேட்டிகளின் போது கொட்டப்பட்டன. ஆனால், திருகோணமலை எண்ணைக் குதங்கள் தொடர்பான கேள்விகள் எழுந்த போது இன்னும் குத்தகை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்றும் அது விரைவில் கைச்சாத்திடப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்ததும், சற்று வினோதமாகவே இந்திய ஊடகங்களால் பாரக்கப்பட்டது.
இறுதியில் கேள்வியானது, 13ம் திருத்தச் சட்டம் நோக்கி திரும்பிய போது, இந்தியாவுக்கு அதில் எந்தவொரு பாத்திரமும் கிடையாது – அது இலங்கையின் பெரும்பான்மை மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறினார். இவை அனைத்தும் மேற்படி ஊடக பேட்டிகளின் போது நடந்த விவகாரங்கள். ஆனால், இதற்கு பின்னதாக நடந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது விடயங்கள் சற்று வேறுபட்டதாகத்தான் இருந்தது என்பதனை இந்திய ஊடக ஆய்வாளர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர். உதாரணமாக, பேச்சுவார்த்தையை அடுத்து வெளியான ‘இந்திய’ வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் 13வது திருத்தம் பூரணமாக அமுல்படுத்தப்படுவதும் அதிகார பரவலாக்கம் முன்னெடுக்கப்படுவதும் தேவையானது மாத்திரமல்ல - இலங்கையின் நன்மைகளுக்கே இன்றியமையாததுதான் என வெளிநாட்டமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக அறிக்கை கூறி நின்றது.
இந்தியாவின் மேற்படி நிலைப்பாட்டின் போது (பேச்சுவார்த்தையில்) பேராசிரியர் பீரிஸ் அவர்கள் எத்தகைய எதிர்வினையை காட்டினார் என்பது தெரியவில்லை. ஏனெனில் பேச்சுவார்த்தையை அடுத்து ‘இலங்கை’ விடுத்த அறிக்கையில் மேற்படி 13வது திருத்தம் தொடர்பான பிரஸ்தாபிப்பு, எந்தவொரு இடத்திலும் காணப்படவில்லை. இது போலவே திருகோணமலை எண்ணைக் குதங்கள் தொடர்பிலும் பேச்சுக்கள் நடந்தனவா இல்லையா என்பதும் இரு அறிக்கைகளிலும் வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது, பேட்டியின் போது கூறப்பட்ட நிலைப்பாடுகளும், பேச்சுவார்த்தையின் போது இடம்பிடித்திருக்ககூடிய விவகாரங்களும் வேறுபட்டதாகவே இருந்தது.
இந்நிலையில், வெளிநாட்டமைச்சரின் இந்திய பயணம் வெற்றிகரமானது என கூறுவதில் சிக்கல் உண்டு என்பதே மேற்படி ஆய்வாளர்களின் இறுதி முடிவாகின்றது.
பகுதி –4
இருந்தும், இந்திய ஊடக ஆய்வாளர்கள் போலன்றி, வடக்கின் சில தமிழ் அரசியல் விமர்சகர்களோ, வழமை போல் விடயங்களை, வெகு மேலோட்டமாக அணுக முயற்சிப்பது வேதனையானது. (பேராசியரியர் கணேசலிங்கன் போன்றோரை தவிர்த்து). வேறுவார்த்தையில் கூறுவதானால், புவிசார் அல்லது பிரதேச அரசியல், இப்படியாக வேகம் கொண்டு நகர்கையில், பல தமிழ் ஊடகவியலாளர்களின் சிந்தனைகள் எதிர்மறையாகவே இருக்க முற்படுகின்றன. உதாரணமாக, கிட்டு ப10ங்கா பிரகடனம் பொறுத்து எழுதும் நிலாந்தன், முன்பொரு சமயத்தில், திரு.கஜேந்திரகுமாரிடம், தாம் பின்வரும் கேள்வியை கேட்டதை குறிப்பிடுவார்:
கேள்வி: “புவிசார் அரசியலை எப்படி கையாளப் போகின்றீர்கள்… … அதற்கான வழி வரைபடம் என்ன?
பதில்: “அதற்குரிய மக்கள் ஆணையை பெற்று வெளிநாடுகளை அணுக வேண்டும்.
மீண்டும், வருடங்கள் கடந்த பின், தற்போது, கிளப் ஹவுஸ்சில் தான் முன் நடாத்திய சம்பாஷனையின் போது கேட்கப்பட்ட ‘அதே’ கேள்வியையும் பதிலையும் பின்வருமாறு அவரிடமே முன்வைப்பார்:
கேள்வி: புவிசார் அரசியலை விடயத்தில் எதை சாதித்திருக்கின்றீர்கள்?
பதில்: “ப10கோள அரசியலை கையாள்வதற்கு இப்போதுள்ள இரண்டு நாடாளமன்ற ஆசனம் போதாது” (தமிழ்வின்:07.02.2022)
ஆனால், விடயங்களோ அன்றி புவிசார் அரசியலின் விதிமுறைகளோ முற்றாக அல்லது பெரும்பாலும் ஆசனத்தொகையில் தங்கியிருப்பவை அல்ல என்பது தெளிவு. ஈழத்தமிழரின் மொத்த ஆசனங்கள் போக, ஆயிரக்கணக்கான இளைஞர்-யுவதிகளை தன் படைகளாக கொண்டிருந்த ஓர் அரசியலின் நகர்வுகள், பிழைத்து போனதால் காலத்தால் அதற்குரிய விலைகளை கொடுக்க நேர்ந்தது என்பது எம் வரலாற்றில் ஏற்கனவே மிக நன்றாக பதிவு செய்யப்பட்டு கிடக்கின்றது. இத்தகைய சூழ்நிலையிலேயே, “இரண்டு ஆசனங்கள் போதாது–என்ன செய்ய” என்ற அரசியலும், நடராஜா ஜனகன் என்பார் அண்மையில் எழுதியதை போல “வட-கிழக்கு கடல்வளம் சூறையாடுதலை, யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்” (தினக்குரல்:06.02.2022) என்ற அரசியலும், காலங்காலமாய், வடக்கின் அரசியலில், தூசுத்தட்டி தூசுத்தட்டி, கட்டியெழுப்பபட்டு வந்திருக்கின்றது. அதாவது, வடக்கின் அரசியல் பரப்பில் மேற்படி அரசியலும் - இதற்கு முரணாக அமையக்கூடிய இன்னுமொரு அரசியலுமாய் - இரண்டு வேறுபட்ட அரசியல்கள் செயலாற்றி வருவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அதாவது, ஆய்வாளர்கள் நிக்சன் முதல் தமிழ்வின்னின் திபாகரன் வரை பல்வேறு ரூபங்களில் தமக்குரிய பாடலை வௌ;வேறு அலைவரிசைகளில் பாடினாலும் - பாடலின் சாரம்சம் என்னவோ மேலே குறிப்பிட்ட ஒன்றுதான் என்பது ஒரு அரசியலாகின்றது. ஆனால், இதற்கு நேரெதிராக, பேராசிரியர் கணேசலிங்கன் கூறுவது போல: “புவிசார் அரசியலை விளங்கி கொண்ட எந்த தரப்பும் இந்தியாவை நிராகரித்து விட்டு, எத்தகைய மாற்றத்தையும்… எட்ட முடியாது” என கூறும் அரசியலும் ஒலிக்கவே செய்கின்றது.
இவ்விரு அரசியல் முகங்களின், இரு வேறுபட்ட செயற்பாடுகளையும் வேறுபாடுகளையும் அவற்றில் உள்ளடங்கும் வித்தியாசங்களையும் மிக ஆழ்ந்து உணர தலைப்படல், இலங்கை சிறுபான்மைகளின், இன்றைய அதிமுக்கிய தேவைப்பாடுகள், என்பதனையே காலம் எமக்கு மீள சுட்டிக்காட்டுவதாய் உள்ளது. இதனை கறாராக உணராவிடின், மீளவும் பின்னடைவுக்கான சாத்தியப்பாடுகள் பெரிதாகவே இருக்கக்கூடும். முன்னெடுக்கப்பட்ட ஒரு நகர்வானது பிழைபட்டுப் போன நிலைமையில் சம்பந்தப்பட்ட சக்திகள் தமது அடுத்த நகர்வை நோக்கி நகர்வது இயல்பானது. ஆனால், இவ்விதிகளின் இயங்குகையை உள்வாங்க முடியாமல், தொடர்ந்தும் கனவுலகில் சஞ்சரிப்பது, எம் மக்களின் வேதனையை இன்னும் நீடிப்பதாகவே இருக்கும்.