என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி நான்கு
நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு சிந்திக்க ஆரம்பித்தோம். வெகு விரைவிலேயே டாம் இவ்வாறு கூறினான்:
“இங்கே பார், ஹக்! இது பற்றி முன்னமே சிந்திக்காத நாம் முட்டாள்கள்தான். ஜிம் எங்கே உள்ளான் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.”
“இல்லை. உனக்குத் தெரியுமா? எங்கே?”
“சாம்பலில் சோப்பு தயாரிக்கும் அந்த இயந்திரத்தின் அருகே கீழ்புறமாக உள்ள குடிசையில்தான் அவன் இருக்கிறான். நன்றாக யோசித்துப் பார்! நாம் உணவு உண்ணும்போது, அந்தக் குடிசையை நோக்கி ஒரு நீக்ரோ மனிதன் உணவு எடுத்துச் சென்றதை நீ காணவில்லையா?”
“ஆம்”
“நல்லது. அந்த உணவு யாருக்கென்று நீ நினைத்தாய்?”
“ஒரு நாய்க்கு என்று.”
“நானும் அப்படித்தான் நினைத்தேன். நல்லது. உண்மையில் அது ஒரு நாய்க்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.”
“ஏன்?”
“ஏனெனில், அந்த உணவில் கொஞ்சம் தர்பூசணிப் பழங்களும் இருந்தது.”
“ஆம். நீ சொல்வது சரிதான். நானும் அதைக் கவனித்தேன். நல்லது. நாய்கள் தர்பூசணிப்பழம் சாப்பிடாது என்று எனக்குத் தோன்றாமலே போனது வேடிக்கைதான். உன்னால் மட்டும் இவ்வாறு சில விஷயங்களை நன்கு காண முடிகிறது என்பதை இது காட்டுகிறது. ஆனால் எல்லா நேரமும் இப்படிக் காண முடியுமா என்று தெரியாது.”
“நல்லது. அந்த நீக்ரோ பூட்டியிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்று மீண்டும் திரும்ப வரும் போது கதவைப் பூட்டி வந்தான். நாம் சாப்பிட்டு எழும் நேரம் அவன் ஒரு சாவியை நமது சித்தப்பாவிடம் கொண்டு வந்து ஒப்படைத்தான். அந்தச் சாவிதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். தர்பூசணிப் பழங்கள் அங்கே உள்ளே இருப்பது ஒரு மனிதன் என்று கூறுகிறது. அந்த தாழ்ப்பாளுடன் கூடிய பூட்டு அவன் ஒரு கைதி என்று நமக்குக் கூறுகிறது.”
“இவ்வாறான அன்பும் கருணையும் நிறைந்த நல்ல மனிதர்கள் இருக்கும் ஒரு சிறிய பண்ணையில் இரண்டு கைதிகள் இருப்பது சாத்தியமல்ல. ஜிம் மட்டும்தான் இங்கே கைதியாக இருக்க வேண்டும். ரொம்பச் சரி! துப்பறிவாளர்களைப் போல நாம் இத்தனை விஷயங்கள் கண்டுபிடித்தது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. இந்த மாதிரி செய்வதுதான் மிகச் சிறந்த வழி. இப்போது, நீ சிறிது நேரம் யோசித்து ஜிம்மை விடுவிக்க நல்ல வழி கண்டுபிடி. பார்க்கலாம்! நானும் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன். இருவரின் திட்டத்தில் எது சிறந்ததோ, அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.”
ஒரு சிறுவனாக இருந்து கொண்டு இத்தனை சாதுர்யமாக யோசிக்க டாமினால் மட்டும்தான் முடியும். எனக்கு மட்டும் டாம் சாயர் அளவு மூளை இருந்திருந்தால், ஒரு பிரபு போன்றோ, ஒரு நீராவிப்படகில் துணை போகும் மனிதனாகவோ, ஒரு சர்க்கஸ் கோமாளியாகவோ இல்லை நான் நினைத்துப் பார்க்கும் அது போன்ற எந்த விஷயங்களையும் முயற்சித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. டாம் கேட்டதிற்கிணங்க, நானும் ஏதோ மூளையைக் கசக்கி யோசிப்பது போல நடித்து நேரத்தைக் கடத்தினேன். எப்படி இருந்தாலும், டாம் ஒரு நல்ல திட்டம் தயாரித்து விடுவான் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. வெகு விரைவிலேயே அவன் இவ்வாறு கூறினான்:
“ஓகே! நீ தயாரா?”
“ஆம்” நான் சொன்னேன்.
“சரி, எங்கே கேட்கலாம்.”
“இது என்னுடைய திட்டம்,” நான் கூறினேன், “ஜிம் மட்டும் அங்கே இருந்தால் நாம் சுலபமாக அவனைக் கண்டுபிடித்து விடலாம். பிறகு, என்னுடைய சிறு படகை நாளை இரவு கொண்டு வந்து அதன் மூலம் தூரத்தில் தீவில் நிற்கும் தோணியை எடுத்துக் கொண்டு வந்து விடலாம். ஏதேனும் இருள் சூழ்ந்த ஒரு இரவில் அந்த முதியவரின் கால்சராயில் உள்ள சாவியை, அவர் தூங்கச் சென்றதும் திருடி விடலாம். கதவைத் திறந்து ஜிம்மை விடுவித்து, தோணியில் ஏற்றி அவனுடன் சென்று விடலாம். ஜிம்மும், நானும் முன்பே பயணித்தது போல முழு இரவும் மிதந்து சென்று, பகலில் மறைந்து கொண்டு என பயணத்தைத் தொடரலாம் இது சரியாக நடக்குமா?”
“நடக்குமா? கண்டிப்பாக நடக்கும். எலிகள் சண்டை எத்தனை சுலபமோ அப்படித்தான் இதுவும் நடக்கும். மிகவும் உப்புசப்பில்லாமல் இது இருக்கிறது. எந்த விறுவிறுப்பும் இல்லை. இப்படி ஒரு ஒன்றுமில்லாத திட்டத்தில் என்ன நல்லது இருக்கிறது? மட வாத்தினுடைய பால் போலச் சப்பென்றிருக்கிறது. ஏன், ஹக்! ஒரு வீணாய் போன சலவைச்சோப்பு கம்பெனியைப் போய் உடைத்து திருடிப்போவதை யாரும் கண்டு கொள்ளாது போவது போல, இதுவும் யாருடைய கவனத்தையும் கவராது.”
நான் ஏதும் பதில் கூறவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே அவன் பதிலும் இருந்தது. ஆயினும், அவனின் திட்டத்திற்கு மட்டும் யாரும் இந்த மாதிரி எந்த மறுப்பும் தெரிவிக்க இயலாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அப்படி யாரும் மறுப்பும் சொல்லமுடியாதவாறுதான் அவனின் திட்டங்களும் இருக்கும். அவனின் திட்டத்தை எனக்கு விவரித்தான். என்னுடைய பதினைந்து திட்டங்களுக்கு நிகராக, மிகவும் தனித்துவம் மிக்க பாணியில் அவனின் திட்டம் இருப்பதை ஒரு நிமிடத்திலேயே நான் தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்லாது என்னுடைய திட்டத்தை விட, இந்தத் திட்டம் ஜிம்மை அதிக அளவில் சுதந்திர மனிதனாக மாற்றும் தன்மை கொண்டிருந்தது. அத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் வேளையில் நாங்கள் கொல்லப்படும் அபாயமும் இருந்தது. எனினும், நான் மிகவும் திருப்தியடைந்து, இதைச்செய்யலாம் என்று அவனுக்கு ஊக்கம் கொடுத்தேன். அந்தத் திட்டத்தை இங்கே விவரிக்கும் வேலையை நான் செய்யப் போவதில்லை. ஏனெனில், அவன் தனது திட்டத்தைச் செயல்படுத்தும் வழியில், தேவைப்படும்போதெல்லாம் புதுப் புதுத் தந்திரங்களை உள்ளிழுத்து, ஒவ்வொரு நிமிடமும் மாற்றிக் கொண்டே இருப்பான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உண்மையில், அப்படித்தான் அவன் செய்யவும் செய்தான்.
நல்லது. ஒன்றுமட்டும் நிச்சயம். ஒரு நீக்ரோவை அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற, அவனை அங்கிருந்து திருட மிகுந்த தீவிரத்துடன் டாம் சாயர் எனக்கு உதவ முன்வந்திருக்கிறான். அந்த வேலைதான் இருப்பதிலேயே எனக்கு மிகவும் கடினமான வேலை. இதோ, மதிப்புமிக்க, நல்ல நடத்தை கொண்ட ஒரு சிறுவன் அதை எனக்குச் செய்து கொடுக்க இருக்கிறான். அவனுக்கு மட்டுமல்லாமல், அவனுடைய குடும்பத்தாரின் கௌரவமும் சேர்ந்து கெட்டுவிடக்கூட இதில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அவன் மிகுந்த அறிவுக்கூர்மை மிக்கவன். ஒன்றும் அறியாத மந்தபுத்தி உள்ளவன் அல்ல. அவன் அறிவாளி, உலக நடப்புகள் அறியாதவனல்ல. அத்தோடு அவன் அன்பானவன். கீழ்த்தரமான புத்தி கொண்டவன் அல்ல. இத்தனை நற்குணங்கள் கொண்ட அவன், எவ்விதக் கர்வமும் இன்றி இந்த அளவு இறங்கி வந்து, இவ்வாறான வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். அவனுக்கோ ,அவனது குடும்பத்திற்கோ இதை அவமானம் என்று அவன் கருதவில்லை. இவனின் இந்தக் குணத்தை, என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவ்வாறு அவன் செய்வது மட்டமான செயல் என்று அவனுடைய உண்மையான நண்பனான எனக்குத் தெரிந்திருந்தும், அதிலிருந்து விலகி அவனைக் காப்பாற்றிக் கொள்ளச் சொல்லும்படி நான் அவனுக்கு அறிவுறுத்தவில்லை என்று என் மனம் என்னை இடித்தது. எனவே, அவனுக்கு அறிவுரை சொல்ல நான் முயற்சி செய்யத் தொடங்கியபோது, வாயை மூடும் படி என்னைப்பணித்துவிட்டு அவன் இவ்வாறு கூறினான்:
"நான் செய்வது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நீ எண்ணிவிட்டாயா? பொதுவாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாதா?"
"ஆம்."
"நீ ஒரு நீக்ரோவைத் திருட நான் உதவி செய்கிறேன் என்று உனக்குக் கூறவில்லையா?"
"ஆம்."
"அப்புறம் என்ன? அத்தோடு நிறுத்து."
அவன் சொன்னதும் அது மட்டும்தான். நான் சொன்னதும் அது மட்டும்தான். அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசி எந்தப் பயனும் இல்லை. தான் ஏதேனும் செய்யப் போகிறேன் என்று அவன் வாக்குக் கொடுத்தால், அதை அவன் செய்தே தீருவான். ஆனாலும், இந்த விஷயத்தில் அவன் எனக்கு ஏன் உதவி செய்ய விரும்புகிறான் என்ற காரணம் எனக்குப் புரிபடவேயில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு, மேற்கொண்டு இது பற்றி சிந்தித்து என்னைக் குழப்பிக் கொள்ள நான் விரும்பவில்லை. அவனின் விருப்பம் அவ்வாறாக இருப்பின், அதை மாற்றியமைக்க என்னால் இயலாது.
நாங்கள் வீடு திரும்பியபோது, மொத்த வீடும் இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்தது. எனவே, வீட்டின் கீழே இறங்கிப் போய், சாம்பல் சோப்பு தயாரிக்கும் இயந்திரம் அருகே சென்று பரிசோதிக்கச் சென்றோம். நாய்கள் எந்த முறையில் எங்களைப் பார்த்து நடந்து கொள்கின்றன என்பதைச் சோதிக்க, முன்னறையின் நீண்ட வாயில் வழியாக நடந்து சென்றோம். பொதுவாக நாட்டு நாய்கள் இரவு வேளைகளில், ஏதேனும் அவற்றைக் கடந்து போனால் போடும் எச்சரிக்கைக் குரைப்பைத் தவிர அவைகளுக்கு நாங்கள் முன்பே பழக்கமானவர்களாக இருந்ததால், வேறு பெரிதாக ஏதும் சத்தம் போட்டுக் குரைத்துப் பயமுறுத்தவில்லை.
நாங்கள் அந்த குடிசையின் அருகே சென்றவுடன், மிகுந்த எச்சரிக்கையாக சுற்றிலும் ஒருமுறைப் பார்த்துக் கொண்டோம். அதன் வடக்குப் பகுதி எனக்கு அதிகம் பரிச்சயமில்லாத இடம். அங்கே ஒரு சதுர வடிவத் துவாரம் போன்ற ஒன்று சன்னலின் வேலையைச் செய்து கொண்டிருந்தது. அது மிகுந்த உயரத்தில் இருந்தது. அதன் மேல் ஒரு கெட்டிப்பலகை குறுக்கே வைத்து ஆணியால் அடிக்கப்பட்டிருந்தது.
நான் கூறினேன் "இப்படித்தான் நாம் செய்ய வேண்டும். அந்தப் பலகையை மட்டும் நாம் கஷ்டப்பட்டு எடுத்து விட்டால், ஜிம் அந்த ஓட்டையினுள் புகுந்து வெளியே வர ஏதுவாயிருக்கும்."
"மூன்று பேர் வரிசையில் நின்று டிக் டாக் டோ விளையாட்டு விளையாடுவது போல அது ஒரு சின்ன வேலை. பள்ளிக்குச் செல்லாமல் கட் அடிப்பது போலச் சாதாரண விஷயம். இதை விடக் கொஞ்சம் கடினமான வழியில் எதையேனும் உடைத்து அவனை மீட்பது பற்றிய வழி ஒன்று கண்டுபிடிக்க வேண்டும், ஹக் ஃபின்!" இவ்வாறு டாம் கூறினான்.
"அப்படியானால் நல்லது," நான் கூறினேன், "நான் கொலையாகும் முன்பு செய்த மாதிரி அவனை வெளியே எடுத்து அதே போல் செய்து விட்டால் என்ன?"
"அது கொஞ்சம் விரும்பக்கூடியதுதான்." அவன் கூறினான் "அப்படி ஒரு செயல் இந்த விஷயத்தை மர்மமாகவும், தொல்லைக்குரியதாகவும் மாற்றும் அளவு நல்லதுதான்."
"ஆனால் உன்னுடைய செயலை விட மிகவும் சிக்கலாக இந்தச் செயலை மாற்றிவிட நாம் இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். மிகுந்த அவசரத்தில் ஒன்றும் நாம் இல்லை. இன்னும் கொஞ்சம் சுற்றிப் பார்த்து முடிவுக்கு வருவோம்." டாம் மேலும் கூறினான்.
பின்பக்கமாக, குடிசைக்கும் வேலிக்கும் இடையே மரக்கட்டைகளால் ஆன வளைந்திருக்கும் அமைப்பிலுள்ள கூரையின் கீழ்ப்பகுதி நீண்டு, நிழல் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பலகணி போல நீண்டு, குடியிசையின் நீளம் முழுதும் அவை இருந்தாலும், குறுகியதாக, சுமாராக ஆறடி அகலம் மட்டுமே உள்ளதாக அவை இருந்தன. அதன் கதவுகள் தெற்கு மூலையில் தாழ்பாளிட்டு பூட்டப்பட்டிருந்தது. அந்த சோப்பு அடுபிடிக்கலன் அருகே டாம் சென்று தேடி, கலனின் மூடியைத் திறக்க உதவும் ஒரு இரும்புக்கம்பியை எடுத்து வந்தான். அதை பயன்படுத்திக் குடிசையின் அருகிலிருந்த கொட்டகையின் குறுக்குச் சட்டத்தின் ஒரு பக்கத்தை நெம்பிப் பார்த்தான். அதிலிருந்த சங்கிலி கழன்று விழுந்து, கதவு திறந்து கொள்ள, நாங்கள் உள்ளே சென்றோம். உள்ளே சென்றதும், கதவை உள்பக்கமாகத் தாழிட்டுவிட்டு ஒரு தீக்குச்சியை உரைத்தோம்.
அறையின் மிக அருகே அந்தக் கொட்டகை கட்டப்பட்டிருந்தும், அவை இரண்டும் ஒன்றாக இணைக்கப் படவில்லை என்பதை நாங்கள் கண்டோம். துரு ஏறிய கோடாரிகள், மண்வெட்டிகள், கதிர் அரிவாள்கள் மற்றும் ஏர் கலப்பைகள் மட்டுமே இறைந்து கிடந்த அந்தக் கொட்டகையில் சரியான தளமும் அமைக்கப்படாதிருந்தது. தீக்குச்சி அணைந்ததும் அங்கிருந்து நாங்கள் வெளியே வந்தோம். மீண்டும் கதவை முன்பு போலவே மூடி வைத்து அதன் மீது குறுக்குக் கம்பியைப் பொருத்தி, யாருக்கும் சந்தேகம் வராதவாறு வைத்தோம்.
பின்னர் மிகுந்த மகிழ்ச்சியுடன் டாம் கூறினான், "இப்போது எல்லாம் தயாராகி விட்டது. நிலத்தைத் தோண்டி ஜிம்மை நாம் வெளியே எடுக்கப் போகிறோம். அதற்கு ஒரு வாரம் பிடிக்கும்."
வீட்டுக்குத் திரும்பி வந்தோம். பின்பக்கக் கதவு நோக்கி நான் சென்றேன். விலங்குத்தோலால் ஆன தாழ்ப்பாள்கள் கொண்ட அந்தக் கதவை அவர்கள் இறுகச் சாத்தி வைப்பது வழக்கமில்லையாதலால், சும்மா ஒரு தள்ளுத் தள்ளினால் சுலபமாக நீங்கள் திறந்துவிடலாம். டாம் சாயருக்கு சாகசம் நிறைந்த காட்சியாக அது தோன்றவில்லை போலும்! திரும்பவும் இடிதாங்கியைப் பிடித்து மேலே ஏறிப் போவதுதான் அவனுக்கு திருப்தி. வேறு எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை.
மூன்று முறை அதைப் பிடித்து ஏற முயற்சி செய்து, பாதியிலேயே பொத்தென்று விழுந்தான். கடைசி முறை தலைகுப்புற விழுந்த அவனுக்கு மூளை சிதறும் வாய்ப்புகள் கூட அதிகம் இருந்தது. இவ்வாறு, தனது முயற்சிகளில் படு தோல்வி அடைந்தபின், அந்தக் காரியத்தைக் கைவிட ஆயத்தமானான். எனினும், சிறிது ஓய்வெடுத்த பின், கடைசியாக ஒரு முறை முயற்சிக்கிறேன் என்று கூறித் திரும்பவும் ஏறினான். இந்த முறை அவனின் முயற்சியில் வெற்றி பெற்று, ஒரு வழியாக மேலே ஏறி விட்டான்.
அடுத்த நாள் அதிகாலை நாங்கள் கண்விழித்து எழுந்து, நாய்களை எங்களுக்குப் பழக்கப்படுத்தவும், ஜிம் இருக்கும் குடிசைக்கு உணவு கொண்டு செல்லும் நீக்ரோவிடம், உண்மையிலேயே ஜிம்முக்குத்தான் உணவு செல்கிறதா என்று தெரிந்து கொள்ளவும் கீழ் அறைகளுக்குச் சென்றோம். தங்களின் காலை உணவை முடித்துக் கொண்டு அனைத்து நீக்ரோக்களும் பண்ணைக்கு வேலை செய்யச் சென்று கொண்டிருந்தார்கள். வழக்கமாக ஜிம்முக்கு உணவளிக்கச் செல்லும் நீக்ரோ ஒரு தகரத் தட்டில் ரொட்டி, இறைச்சி மற்றும் சில உணவுப் பண்டங்களை அடுக்கிக் கொண்டிருந்தான். மற்ற எல்லாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதால், வீட்டின் சாவி அங்கே வந்து சேர்ந்தது.
அந்த நீக்ரோ சிரித்த முகத்துடன், இனிமையான குணத்துடன் இருந்தான். அவனின் தலைமுடிகள் கொத்துக் கொத்தாகப் பிரிக்கப்பட்டு உல்லன் நூலால் முடிச்சுகள் போடப்பட்டு இருந்தது. அப்படி முடிச்சுகள் போடப்பட்டால் சூனியக்காரிகள் அவர்களை அண்டமாட்டார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. கடந்த சில இரவுகளாகவே, சூனியக்காரிகள் வந்து அவனை கடுமையாகத் தொந்தரவு செய்து, விசித்திரமான பல விஷயங்களை அவனைப் பார்க்கவும், கேட்கவும் தூண்டுகிறார்கள் என்று அவன் கூறினான். இந்த முறை இவ்வாறு சூன்யத்திற்கு ஆட்பட்டதைப் போல அவன் வாழ்விலே வேறு எப்போதும் நடந்ததில்லை என்றான். அவன் தான் செய்யவிருக்கும் வேலையைக் கூட சுத்தமாக மறந்து விட்டு, எங்களிடம் அவன் வாழ்வின் துன்பங்களைப் பற்றி கூறுவதில் முழுதாக மூழ்கிவிட்டான். எனவே டாம் இவ்வாறு கூறினான்:
"எதற்கு இந்த உணவு? நாய்களுக்கு உணவளிக்க எடுத்துச் செல்கிறாயா?"
ஒரு செங்கல்லை நீரில் எறிந்தால், எவ்வாறு பல அதிர்வலைகளை அது ஏற்படுத்துமோ, அதே போன்று ஒரு மெல்லிய சோகப் புன்னகை அந்த நீக்ரோவிடம் மலர்ந்து அவன் முகமெங்கும் பரவியது.
"ஆம், மாஸ்டர் சிட்! - ஒரு நாய் --- மிகவும் சுவாரஸ்யமான நாயும் கூட. நீங்கள் சென்று அதைப் பார்க்க விரும்புகிறீர்களா?" அவன் சொன்னான்.
"ஆம்."
டாமை என் பக்கமாக இழுத்து அவன் காதில் கிசுகிசுத்தேன்.
"இந்தப் பட்டப்பகல் வெளிச்சத்தில் நீ அங்கே நேராகப் போகப் போகிறாயா? அது நம்முடைய திட்டத்தில் இல்லையே."
"இல்லை. நம் திட்டத்தில் இல்லை. ஆனால் இப்போது அதுதான் நம் திட்டம்."
வீணாய் போனவனே! இப்படி குறுக்கே உழவு ஓட்டுபவன் டாம் மட்டும்தான்.
நாங்கள் அங்கே சென்றோம். ஆனால் அதை நான் விரும்பவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்த போது கும்மிருட்டாக இருந்ததால், அங்குள்ள எதையும் எங்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஜிம் உள்ளே இருந்தான். அவனால் எங்களை நன்றாகப் பார்க்கவும் முடிந்தது.
"ஹக்! என் தெய்வமே! இது என்னுடைய மாஸ்டர் ஹக்தானே?" என்று ஆவேசமாகக் கதறினான்.
இப்படி நடக்குமென்று எனக்கு முன்பே தெரியும். அதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். ஆயினும், அப்போது எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அப்படி ஏதேனும் செய்ய நினைத்திருந்தாலும், அதற்கு முன்பாகவே, எங்களுடன் வந்த நீக்ரோ துள்ளிக் குதித்தவாறு "அடங்கொப்புரானே! அவனுக்கு இந்தக் கனவான்களை முன்னமே பழக்கமுள்ளதா?" என்று அதிர்ச்சியுடன் வினவ ஆரம்பித்தான்.
இப்போது ஜிம்மை எங்களால் நன்றாகப் பார்க்க முடிந்தது. முகத்தில் குழப்பத்துடன் டாம் அந்த நீக்ரோவை நோக்கிக் கூறினான்:
"யாருக்கு எங்களைத் தெரியுமா என்று கேட்கிறாய்?"
"ஏன், இந்த தப்பி ஓடி வந்த நீக்ரோவுக்குத்தான்!"
"அவன் அப்படிச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. யார் இந்த மாதிரி கற்பனைகளை எல்லாம் உன் தலையில் ஏற்றியது?"
"எது என் தலையில் ஏற்றியதா? இப்போது ஒரு நிமிடம் முன்பு உங்களை முன்பே தெரிந்தமாதிரி அவன் கத்தவில்லையா?"
"நல்லது. இது கேட்க ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. யார் இங்கே கத்தினார்கள்? எப்போது கத்தினார்கள்? அதுவும் என்ன சொல்லிக் கத்தினார்கள்?" மிகவும் குழம்பிய பாணியில் டாம் கூறினான்.
"யாராவது கத்தியது நீ கேட்டாயா?" அதே தோரணையில் என்னிடம் திரும்பி டாம் மிக அமைதியாகக் கேட்டான்.
இந்த ஒரு பதிலைத் தவிர வேறு என்ன நான் சொல்ல இருக்கிறது. எனவே, "இல்லை, யாரும் எதையும் கூறிச் சத்தமிட்டதை நான் கேட்கவில்லை." என்று நான் கூறினேன்.
பின்னர் டாம் ஜிம்மை நோக்கித் திரும்பினான். முன்பின் அவனைப் பார்த்திராதது போலவே டாம் அவனை உற்று நோக்கினான்.
"நீ ஏதேனும் சொல்லிக் கத்தினாயா?" என்று ஜிம்மை வினவினான்.
"இல்லை சார்" ஜிம் கூறினான், "நான் எதுவும் சொல்லவில்லை, சார்!"
"ஒரு வார்த்தை கூடவா சொல்லவில்லை?"
"இல்லை சார். ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை."
"எங்களை இதற்கு முன் நீ பார்த்திருக்கிறாயா?"
"இல்லை சார். எனக்கு தெரிந்து உங்களை இதற்கு முன் நான் கண்டதில்லை."
எனவே, திருதிருவென பைத்தியம் போல விழித்துக் கொண்டு கவலையுடன் நின்ற அந்த நீக்ரோவின் பக்கம் திரும்பி டாம் கொஞ்சம் கடுமையான தொனியில் இவ்வாறு கேட்டான்: "உனக்கு என்ன நடந்தது? யாரோ கத்தினார்கள் என்று எது உன்னை யோசிக்க வைத்தது?"
"ஓ! அந்தப் பாழாய் போன சூனியக்காரிகள்தான், சார்! நான் உயிரோடிருக்கவே விரும்பவில்லை. இறந்தால் நல்லது என்று உண்மையிலுமே நான் ஆசைப்படுகிறேன். அவர்கள் என் கழுத்தை அறுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் சார்! அது என்னை சாகடிக்கிறது. என்னை மிகவும் அதிகமாகப் பயமுறுத்துகிறார்கள். தயை கூர்ந்து இது பற்றி யாரிடமும் கூறிவிடாதீர்கள், சார்! முதிய சைலஸ் முதலாளி என்னை கடுமையாக திட்டிவிடுவார். சூனியக்காரிகள் என்பதெல்லாம் ஒன்றுமே கிடையாது என்று அவர் கூறிவருகிறார். இந்தக் கணத்தில் இங்கே அவர் இருந்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன். அப்படி இருந்திருந்தால், அவர் என்ன சொல்லியிருப்பார்? இந்த முறை அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தை ஒதுக்கித் தள்ளியிருக்க முடியாது. ஆனால் இந்த நம்பிக்கை எல்லாம் அப்படிதான். ஒருமுறை ஏற்படுத்திக் கொண்ட தன்னுடைய கருத்தில் அப்படியே மாறாது நிற்பார்கள். அதைப் பற்றி தாங்களே ஆராய்ச்சி நடத்தி எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள். அப்படி நீங்கள் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சொன்னாலும், அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள்."
அந்த நீக்ரோவுக்கு ஒரு டைம் (Dime) நாணயம் டாம் கொடுத்தான். இது பற்றி தாங்கள் யாரிடமும் சொல்லப் போவதில்லை என்றும் டாம் அவனுக்கு வாக்குக் கொடுத்தான். இன்னும் கொஞ்சம் உல்லன் நூல்களை வாங்கி அவனது தலையில் முடிச்சுப் போட்டு கட்டிக்கொள்ள டாம் கூறினான். பின்னர் அவன் ஜிம்மை நோக்கித் திரும்பி இவ்வாறு கூறினான்:
"இந்த நீக்ரோவை சித்தப்பா சைலஸ் தூக்கிலிடக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். இப்படி நன்றிகெட்டதனமாக துரோகம் செய்து விட்டு ஓடி போன நீக்ரோ மட்டும் என் கையில் கிடைத்திருந்தால், அவனை எதற்காகவும் விட்டு வைக்க மாட்டேன். கண்டிப்பாக தூக்கிலிட்டுவிடுவேன்."
கையிலிருந்த டைம் நாணயத்தை சூரிய ஒளியில் அது உண்மையான நாணயமா என்று நன்கு கடித்துப்பார்த்துச் சோதிக்க அந்த நீக்ரோ கதவைத் தாண்டிச் சென்றதும், ஜிம்மின் காதுகளில் டாம் கிசுகிசுத்தான்:
"யாரிடமும் எங்களை உனக்குத் தெரிந்ததாகக் கூறிக் கொள்ளாதே. அத்துடன் இரவில் ஏதேனும் குழி தோண்டுவது போன்றதொரு சத்தம் உனக்குக் கேட்டால், அது வேறு யாருமல்ல. நாங்கள்தான். உன்னை இங்கிருந்து விடுவித்து சுதந்திரமாக்கப் போகிறோம்."
அந்த நீக்ரோ திரும்பி வருவதற்குள் எங்கள் இருவரின் கையையும் பற்றி நன்றியோடு அழுத்த ஜிம்முக்கு நேரம் கிடைத்தது. அந்த நீக்ரோ விரும்பினால் அவனுடன் நாங்கள் அங்கே மீண்டும் வரத்தயார் என்று கூறினோம். பொதுவாகவே, இரவு வேளைகளில் சூனியக்காரிகள் அவனை மிகவும் துன்புறுத்துவதால், அந்தச் சமயங்களில் நாங்கள் அவனுடன் வந்தால் மிகவும் நல்லது என்று அவனும் கூறினான். அந்த மாதிரி சமயங்களில், இது போன்று கூடமாட இரண்டு ஆட்கள் இருப்பது பக்கபலந்தான் என்றும் அவன் கருதினான்.
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.