அத்தியாயம் இருபத்தி ஒன்று
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.
பின்னர் புகை பிடிக்கும் குழாயில் புகையிலை அடக்கிப் பற்றவைத்து புகை இழுத்துக் கொண்டே ரோமியோ ஜூலியட் நாடகத்தின் வரிகளை மனப்பாடம் செய்தார். அவர் அவ்வாறு செய்து முடித்தவுடன் ராஜாவும், பிரபுவும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்சிகளைப் பயிற்சி செய்து பார்த்தனர். பிரபுவானவர் ஒவ்வொரு வரியையும் எவ்வாறு பேசவேண்டும் என்று ராஜாவுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தனது கரத்தை தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிரபு சிறிது நேரம் கழித்து ராஜா நன்கு நடிக்கிறார் என்றார்.
"இருந்தாலும்" அவர் கூறினார் "எருமை மாடு அல்லது அதைப் போன்றதொரு மிருகம் கத்துவது மாதிரி “ரோமியோ” என்று கத்திக் கூப்பிடக்கூடாது. மிக மென்மையாக, இனிமையாக நீங்கள் மயங்கி விழும்போது சக்தியில்லாது மெதுவாகச் சத்தமிடுவதைப் போன்று ரோ ..மி ....யோ.... என்று அழைக்க வேண்டும். இப்படி, இப்படித்தான் கூப்பிடவேண்டும். ஜூலியட் என்பவள் ஒரு அழகான மருளும் மான்குட்டியாக இருக்கவேண்டும். கழுதை மாதிரி அவள் கனைக்கக் கூடாது."
அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். அவர்கள் இருவரும் தோணியின் இந்தப் புறம், அந்தப் புறம் என மாறி மாறி குதித்து தங்களின் வாள்களைச் சுழற்றியது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, ராஜா கால்தடுக்கி நதியினுள் விழுந்து விட்டார். எனவே, அதன் பிறகு அவர்கள் அதை நிறுத்திவிட்டு, ஓய்வாக அமர்ந்து தங்கள் வாழ்வில் நதியின் மேல்புறப் பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் தாங்கள் வாழும்போது எதிர்கொண்ட விதவிதமான சாகசங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பாடு ஆனதும், பிரபு கூறினார் "நல்லது ராஜாவே! இதை மிகச் சிறந்த காட்சியாக்குவது நம் கையில்தான் உள்ளது. சரியா? எனவே அதனுடன் நாம் இன்னும் சிறிது கொசுறு சேர்க்க வேண்டியிருக்கிறது. நிகழ்ச்சியின் கடைசியாக எப்படியிருந்தாலும் ஒரு அதிகப்படியான விஷயம், சின்னதாக இருந்தாலும் ஒரு விஷயம் சேர்க்கத்தான் வேண்டும்.”
"கொசுறு விஷயம் என்றால் என்ன, பில்ஜ்வாட்டர்?"
பிரபு அதைப் பற்றிக் கூறினார்.
“ஸ்காட்லாந்தின் கடினமான நடனத்தை அல்லது மாலுமிகளின் ஹாரன்பைப் எனப்படும் ஆட்டத்தை நான் கடைசியில் ஒரு கொசுறாக ஆடுகிறேன். நீங்க என்ன செய்யலாம்?..... நல்லது. நான் யோசிக்கிறேன். ஆஹ்! யோசனை கிடைத்துவிட்டது. நீங்கள் ஹேம்லட் தனக்குத் தானே புலம்பும் வசனத்தைப் பேசிக் காட்டலாம்."
"ஹேம்லட் .... என்னது?"
"ஹேம்லெட்டின் தனித்துப் புலம்பும் வசனம். தெரியுமா? ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மொத்தத்துக்கும் சிகரமான பிரபலமான வரிகள். ஆஹ்! ரொம்ப அருமை. ரொம்ப அருமை. பார்வையாளர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள். அந்த புத்தகம் என்னிடம் இல்லை. ஷேக்ஸ்பியர் நாடகங்களின் ஒரு தொகுப்பு என்னிடம் இருந்தது. ஆனால் என் நினைவிலிருந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சேர்த்துக் கொடுக்க முடியும். ஒரு நிமிடம் நான் நடந்து கொண்டே யோசித்து அவற்றை நினைவு கூற முயற்சிக்கிறேன்."
எனவே அவர் அங்குமிங்குமாக நடந்து கொண்டே முகத்தை பலவகையில் கோணங்கித்தனமாக வைத்து யோசிக்க முயன்றார். பின்னர் அவரின் புருவத்தை உயர்த்தியபடியே கைகளினால் நெற்றியை பலமாக அழுத்திக் கொண்டு, தடுமாறியபடியே முனகல் ஒலி எழுப்பினார். அதன்பின் பெருமூச்சு விட்டபடி அழுவது போல நடித்தார். அவ்வாறு அவர் செய்வதைக் காணும்போது மிகவும் மலைப்பாக இருந்தது. ஒரு நிமிடத்திற்குப் பின் அவருக்கு நினைவு வந்துவிட்டது. எங்கள் அனைவரையும் அவர் கூர்ந்து கவனிக்கச் சொன்னார். முகத்தை மிகவும் உன்னதமான முறையில் வைத்துக் கொண்டு, ஒரு காலை எடுத்து முன் வைத்து, மேலே வானை நோக்கி அவரின் ஒரு கரத்தைக் காற்றில் வீசி, தலையைப் பின்புறமாகச் சாய்த்து அண்ணாந்து வானத்தை நோக்கினார். பற்களை கடகடவென நெறித்து வாயினுள் முனகியபடியே இருந்த அவர், இறுதியாக அந்த உரையை ஆரம்பித்தார்.
உரையாற்றிக் கொண்டிருந்த முழு நேரமும், அவர் ஊளையிட்டவாறே கைகளை சுற்றிலும் வீசிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி வைத்துக் கொண்டார். இதுவரை நான் பார்த்த நடிகர்களை எல்லாம் ஊதித் தள்ளிவிடும் வகையில் அவரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. ராஜாவுக்கு அவர் அதைச் சொல்லிக் கொடுக்கும் வேளையில் நானும் அதைக் கொஞ்சம் கற்றுக் கொண்டேன். இதுதான் அந்த உரை:
"இருப்பதா, இல்லாமலிருப்பதா? அதுதான் வெறுமையான ஊசி. அதுவே நீண்ட வாழ்வுக்கு பேரிடர் செய்கிறது. பிர்னாம் காடுகள் டன்சியன் வரும்வரை யார் அந்த இடர்களைத் தாங்குவாரோ, ஆனால் சாவுக்குப் பிறகு ஏதோ ஒன்றுக்கான பயம் , அந்த களங்கமில்லாத தூக்கத்தை, மாபெரும் இயற்கையின் இரண்டாம் சாபத்தைத் தடை செய்கிறது. கையிலிருக்கும் நமது அதிர்ஷடத்தை நம்மை அறியவிடாமல். மட்டுமீறிய சந்தர்ப்பத்தை நோக்கி அம்பு வீசச் செய்கிறது. சந்தர்ப்பம் நம்மை தாமதம் செய்திருக்க வேண்டும். கதவைத் தட்டி டன்கனை எழுப்பு. உன்னால் முடியும் என்று நான் நினைக்கிறேன்.”
“காலத்தின் சவுக்கடிகளையும், ஏளனத்தையும் சந்தித்தவருக்கு, அடக்கியாளுபவன் செய்வது தவறு, அகம்பாவம் அவமானப் படுத்தும் மொழி அனைத்தும் புரியும். தாமதிக்கும் சட்டத்தால், சாவு ஒன்றே அனைத்து வேதனைகளின் விடுதலை. சாவைப் போல வீணாகிப் போன இந்த நள்ளிரவு, தேவாலயங்கள் கருநிற உடையில் கொட்டாவி விடும் வேளையிது. ஆனால் யாருமே கண்டுபிடிக்க முடியாத நாட்டுக்குச் சென்ற யாத்ரீகர்கள் திரும்பியே வரமுடியாத ஒன்று சாவு.”
“அது சுவாசித்தாலே பரவும் ஒரு தொற்றுநோய் போன்று உலகில் பரவுகிறது. அதனால் பழமொழியில் உள்ள பாவப்பட்ட பூனையை போல சாவின் நிறம் நோய் நொடிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து மேகங்களும் எங்களின் வீட்டுக் கூரையின் மேலே கவிகிறது. இதையொட்டி அவைகளின் திசை மாறுகிறது. அவைகள் செயலிழக்கின்றன. அவற்றின் சேர்க்கை தீவிரமாக விரும்பப்படுகிறது. ஆனால் உன்னைத் தேற்றிக் கொள், அழகிய ஒப்பிலியா! வழுவழுத்து தடித்த உனது தாடைகளை திறக்காதே! ஆனால் விலைமாதர் இல்லத்திற்குத் தொலைந்து போ. போய் தொலை!"
நல்லது. அந்த முதிய ராஜாவுக்கு இந்த உரை மிகவும் பிடித்திருந்தது. சிறிது நேரத்தில் அதை அவர் மனப்பாடம் செய்த விதத்தைப் பார்க்கும் போது அவர் அதைப் பேசுவதற்கென்றே பிறந்தமாதிரி தோன்றியது. மிகுந்த உற்சாகம் அடைந்து அவர் திரும்பத் திரும்ப அதைப் பேசிப்பார்த்தார். அவ்வாறு பயிற்சி செய்ய அவர் எடுக்கும் முயற்சி பாராட்டும் விதமாக இருந்தது. .
எங்களுக்கு முதலில் கிடைத்த சந்தர்ப்பத்தில் அந்தப் பிரபு சில கையேடுகளை அச்சடித்தார். அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நாங்கள் மிதந்து கொண்டிருக்கும்போதே நாங்கள் அனைவரும் வாள் சண்டையில் (அப்படித்தான் அந்தப் பிரபு அதை அழைத்தார்) பங்கெடுத்து பயிற்சி செய்து கொண்டு உற்சாகமாக இருப்பதால் எங்களின் தோணி மிகுந்த கலகலப்பாகக் காணப்பட்டது. ஒரு நாள் நதியின் கீழ்ப்பகுதியில் வெகுதூரத்தில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் நாங்கள் இருந்தபோது, நதியின் பெரிய வளைவுக்குப் பின்னே ஒரு சிறு நகரத்தைக் கண்டோம்.
நதியின் மேல்திசையில் முக்கால் மைல தொலைவில் உள்ள கரையில் சைப்ரஸ் மரங்களால் சூழப்பட்டு சற்று உள்வாங்கியிருந்த கழிமுகத்தின் நுழைவுப் பகுதியின் உட்புறமாகத் தோணியை பிரபு கட்டி வைத்தார். அங்கிருந்து சிறு படகில் ஜிம்மைத் தவிர நாங்கள் அனைவரும் எங்களின் வித்தைக்கு அந்த ஊர் தோதுப்படுமா என்று பார்க்கச் சென்றோம்.
அதிர்ஷ்ட தேவதை எங்களுடன் இருந்தாள் என்றுதான் கூறவேண்டும். அன்று மதியம் அந்த நகரின் மத்தியில் ஒரு சர்க்கஸ் நடைபெற இருப்பதால் அதைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்து கொண்டிருந்தார்கள். குதிரைகள் மீதும், பழைய நான்குசக்கர பாரவண்டிகளிலும் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். சர்க்கஸ் இரவு தொடங்குவதற்குள் கிளம்பிவிடும் என்பதால் எங்களுக்கு அங்கே வெற்றியடைய நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்றே தோன்றியது. அங்கிருந்த ஒரு சிறு வழக்காடு மன்றத்தை பிரபு வாடகைக்கு எடுத்தார். நாங்கள் எங்கள் கையிலிருந்த அச்சடித்த நோட்டீசுகளை அனைவருக்கும் காண்பித்துக் கொண்டிருந்தோம். அந்த நோட்டீஸில் பின்வருமாறு இருந்தது.
ஷேக்ஸ்பியர் நாடகங்களின் புத்தாக்கம்
விந்தையான காட்சிகள்
ஒரு நாள் மட்டுமே
உலகப் புகழ் பெற்ற துன்பியல் காவிய நாயகர்கள் - லண்டன் ட்ருயரி தெருவைச் சார்ந்த இளம் டேவிட் கேரிக் மற்றும் லண்டன் பிக்காடிலி, புட்டிங் தெரு, வெள்ளை தேவாலயம் வழி ராயல் ஹேமார்க்கட் தியேட்டரைச் சார்ந்த முதிய எட்மண்ட் கீன் இவர்களுடன் ராயல் காண்டினென்டல் தியேட்டர்ஸ் உன்னதமாக இணைந்து வெளியிடும்
ஷேக்ஸ்பியரின் கீழ்காணும் தலைப்பிட்ட நாடகக் காட்சிகள்
ரோமியோ ஜூலியட்டின் பால்கனி காட்சிகள்
ரோமியோ - மிஸ்டர் கேரிக்
ஜூலியட் - மிஸ்டர் கீன்
துணை நிற்பது கம்பெனியின் குழு முழுதும்
புத்தம்புது ஆடை அலங்காரம், புதிய காட்சியமைப்பு, புது ஒப்பந்தங்கள்
அதனுடன்
பரபரப்பூட்டுகின்ற சாதனை படைத்த, ரத்தத்தை உறையவைக்கும் காட்சிகள் நிறைந்த
மூன்றாம் ரிச்சர்டின் வாள் சண்டைக் காட்சி
மூன்றாம் ரிச்சர்ட் - மிஸ்டர் கேரிக்
ரிச்மண்ட் - மிஸ்டர் கீன்
அத்துடன் கூட (விசேஷமாக கேட்டுக் கொண்டதற்கிணங்க)
ஹேம்லெட்டின் காலத்தால் அழியாத தனித்துப் புலம்பும் உரை
உரையாற்றுபவர் மிஸ்டர். கீன்
(தொடர்ந்து 300 இரவுகள் இதை பாரிசில் அவர் அரங்கேற்றியிருக்கிறார்)
ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து காட்சி நிகழ்த்த ஒப்பந்தம் செய்திருப்பதால்
ஒரு இரவு மட்டும் இங்கே
அனுமதி : 25 செண்டுகள்.
குழந்தைகளுக்கும், பணியாளர்களுக்கும் தலா 10 செண்டுகள்
அதன் பின் நாங்கள் ஊருக்குள் சுற்றிப் பார்க்க சென்றுவிட்டோம். அங்கிருந்த கடைகளும் வீடுகளும் நீண்ட நாட்களாகப் பழுது பார்க்கப்படாமலும், வண்ணப் பூச்சுகள் இல்லாமலும் களை இழந்து பழையது போலக் காணப்பட்டன. நதியில் வெள்ளம் பெருகி வரும் வேளை வீடுகள் சேதமாகாமல் இருப்பதற்காக, தரையிலிருந்து மூன்று அல்லது நான்கடி உயரத்திற்கு கம்பங்கள் போன்ற அமைப்பு போடப்பட்டு அதன் மேல் அந்த வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வீடுகளைச் சுற்றி சிறு தோட்டங்கள் இருந்தன. ஆனால் அங்கே ஜிம்ப்ஸன் களைச்செடிகளும், சூரிய காந்தி மலர்களும், எரிந்து முடிந்த விறகுகளின் சாம்பலும், உபயோகத்தில் இல்லாத கிழிந்து போன பழைய கால் பூட்ஸ் மற்றும் ஷூக்கள், கண்ணாடிக் குப்பிகள், கந்தல்கள், குவித்துவைக்கப்பட்ட தகர டின்கள் மற்றும் வாணலிகள் போன்றவையே அதிகம் காணப்பட்டது.
பல்வேறு வகையான பலகைகள் பல இடங்களில் ஆணி அடிக்கப்பட்டு மதிலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல திசைகளிலும் சாய்ந்தவாறு அவை நின்றிருந்தன. வாசற்கதவுகளில் தோலால் ஆன தாழ்ப்பாள்களே இருந்தன. சில கதவுகள் சமீபத்தில் வெள்ளையடிக்கப்பட்டது போல் தெரிந்தாலும், அவைகள் கொலம்பஸ் காலத்தில்தான் வெள்ளைப்பூச்சு பார்த்திருக்கவேண்டும் என்று பிரபு கூறினார் தோட்டத்தில் நிறைய பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மக்கள் வெளியே துரத்திக் கொண்டிருந்தார்கள்.
அனைத்துக் கடைகளும் ஒரே தெருவில் இருந்தன. அந்தக் கடைகளின் முன்புறம் வெள்ளை நிறத்தில் வீடுகளில் கட்டப்படும் படுதா போன்ற ஒரு மறைப்பு காணப்பட்டது. கிராமப்புற மக்கள் அவர்களின் குதிரைகளை நகர்த்திச் சென்று அந்தப் படுதாவின் கீழ் உள்ள கம்பங்களில் கட்டி வைத்திருந்தார்கள். அந்த படுதாக்களின் கீழ் காலியாக இருக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வேலை வெட்டி இல்லாத சிலர் அதன்மேல் எப்போதுமே உல்லாசமாகச் சாய்ந்திருப்பார்கள் போலும். முழுநாளும் அவர்கள் அங்கே சிறு பேனாக்கத்திகள் வைத்து தங்கள் உடம்பில் விளையாட்டாகக் கோடு கீறிக் கொண்டும், புகையிலை மென்றுகொண்டும், கொட்டாவி விட்டுக்கொண்டும் வெட்டியாக சோம்பல் முறித்துக் கொண்டும், அங்கு நடப்போரை வெறித்துப் பார்த்துக்கொண்டும் வீணர்களாக அமர்ந்திருப்பார்கள். அவர்கள் பொதுவாக மஞ்சள் நிற வைக்கோல்புற்களால் ஆன பெரிய குடை போன்ற தொப்பி அணிந்திருந்தார்கள். ஆனால் மேலே போடும் கோட்டு அல்லது உள் சராய் ஆகியவை அவர்கள் அணியாமல் இருந்தார்கள். கண்டிப்பாக அங்குள்ள ஒவ்வொரு படுதாக் கம்பங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மனிதனாவது கால்சராய் பைக்குள் தனது கைகளைத் திணித்தவாறு திரிந்து கொண்டு இருப்பான். அப்படி அவன் தனது கைகளை வெளியில் எடுத்தானேயானால், அதில் வாயில் போட்டு மெல்ல வேண்டிய புகையிலை இருக்கும் அல்லது தன்னைச் சொரிந்து கொள்ளவாகத்தான் இருக்கும். அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் பில், பக், ஹாங்க், ஜோ மற்றும் அண்டி என்ற பெயர் சொல்லி அழைத்துக் கொண்டார்கள். அவர்களின் குரல்களும் உள்வாங்கியவாறு சோம்பல் நிறைந்ததாக இருந்தது. அவர்களின் பேச்சில் ஆபாசம் நிறைந்த வசைமொழிகள் அதிகம் வெளிப்பட்டது. அவர்கள் கீழ்வருமாறு பேசிக்கொண்டதை நீங்கள் கேட்க முடியும்.
"எனக்கு மெல்ல கொஞ்சம் புகையிலை கொடு, ஹாங்க்!"
"முடியாது. எனக்குத் தேவையானது மட்டுமே என்னிடம் உள்ளது. பில்லைக் கேள்."
பில் ஒருவேளை அவனுக்கு கொஞ்சம் புகையிலை கொடுக்கலாம். தன்னிடம் இல்லை என்று பொய் கூடக் கூறலாம். அவர்களைப் போன்ற சில வீணர்கள் தன்னிடம் ஒரு சென்ட் காசு அல்லது வாயில் போட்டு மெல்லச் சிறிது புகையிலை கூட என்றுமே வைத்திருக்க மாட்டார்கள். அடுத்தவர் தலையில் கைவைத்து அவர்களிடம் கடன் வாங்கியே பிழைப்பு நடத்துவார்கள்.
"ஜாக், நீ எனக்கு கொஞ்சம் புகையிலை கொடுத்திருக்கலாம்,
" "கடைசியாய் இருந்த புகையிலைத் துண்டை இதோ இப்போதுதான் ஒரு நிமிடம் முன்புதான் பென் தாம்ப்ஸன்னுக்கு நான் கொடுத்து விட்டேன்." என இவ்வாறு அவர்களுக்குள் பேசிக் கொள்வதை அடிக்கடி நாம் கேட்க முடியும். கண்டிப்பாக ஒவ்வொருமுறையும் அவர்களை ஏமாற்றும் ஒரு பொய்யாகத்தான் இருக்கும் என்று வெளி மனிதர்களைத் தவிர்த்து அவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் ஜாக் ஒன்றும் வெளி மனிதன் அல்லவே.
எனவே அவன் சொல்லுவான் "அவனுக்கு நீ புகையிலைத் துண்டைக் கொடுத்தாயா, ஹும்? நல்லது. உங்க அப்பன் மவனே! என்னிடம் கடன் வாங்கிய புகையிலையை நீ முதலில் திருப்பிக் கொடு, ஃலேப் பக்னர். பிறகு நான் உனக்கு ஒன்று அல்லது இரண்டு டன்கள் கடன் கொடுக்கிறேன். அதற்கு எந்த வட்டியும் வாங்கமாட்டேன். சரியா?”
“நல்லது. நான் உனக்கு கொஞ்சம் திருப்பிக் கொடுத்து விட்டேன்."
"ஆம் . என்னிடம் கடைப்புகையிலை ஒரு மூட்டையை வாங்கினாய். திருப்பிக் கொடுத்ததோ ஒரு சிறிதளவு பட்டைகள் கூட இருக்காது. அதுவும் கறுத்து வாடிப்போன ஒன்று."
கடைப்புகையிலை என்பது பதப்படுத்தப் பட்ட தட்டையான கருப்புத் துண்டுகள். ஆனால் பொதுவாக வளைந்திருக்கும் ஒருவகையான இயற்கையான புகையிலைத் தழைகளை இந்த வீணர்கள் வாயில் போட்டு மெல்லுவது வழக்கம். கத்தி கொண்டு அதை அவர்கள் வெட்டமாட்டார்கள். அதற்குப் பதிலாக அந்தக் கட்டையை அப்படியே தங்களின் பற்களுக்கிடையில் திணித்து மென்று அதை இரண்டாகக் கடிப்பார்கள். பின்னர் கடன் கொடுத்த மனிதனுக்கு அது திருப்பித் தரப்படும் அவ்வாறு தரப்படும் வேளையில் மிகவும் எரிச்சலுற்று சில சமயங்களில் கடன் கொடுத்தவன் கூறுவான் "எனக்கு புகையிலையைக் கொடு. துண்டத்தை நீ எடுத்துக்கொள்" என்று.
அங்கிருந்த தெருக்கள் மற்றும் சாலைகள் எல்லாமுமே மண் புழுதியால் நிறைந்திருந்தது. மண்ணைத் தவிர அங்கே வேறு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கடி இன்ச், சில இடங்களில் ஒரு அடி ஆழத்துக்கும் கூட கருப்பு நிற தார் போன்ற மண் நிறைந்திருந்தது. பன்றிகள் சத்தம் எழுப்பிக் கொண்டே அங்குமிங்குமாக திரிந்தவாறு இருந்தன. மண்ணில் புரண்டு எழுந்த பெண் பன்றியும் அதன் குட்டிகளும் நடு ரோட்டில் மண் மூட்டைகள் போல் படுத்துக் கிடப்பதால் தெருவில் நடமாடும் மனிதர்கள் அவைகளைச் சுற்றி நடந்து போகவேண்டியிருந்தது. ஏதோ சம்பளம் வாங்கி கொண்டு சந்தோசமாக இருப்பது போன்றதொரு உணர்வில் அந்தப் பெண்பன்றி உடலை நீட்டி, கண்களை மூடி, காதுகளை பக்கவாட்டில் அசைத்தவாறே மகிழ்ச்சியுடன் தனது குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தது. கூடிய விரைவிலேயே அந்த வெட்டி ஆட்களில் ஒருவன் "ஹேய்! பையா! அவனைப் பிடி டைகர்!" என்று கூவுவான். உடனே அதனின் காதுகளை ஒன்று அல்லது இரண்டு நாய்கள் கவ்விக் பிடித்து இழுக்கும் வேளையில் அந்தப் பன்றி எழுந்து உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே தள்ளி ஓட ஆரம்பிக்கும்.. இன்னும் நான்கு டஜன் நாய்கள் அதன் பின்னாலிருந்து அதைத் துரத்த ஆரம்பிக்கும்.
பின்னர் அந்த ஓட்டப் பந்தயத்தை அவை கண்ணுக்கெட்டும்தூரம் செல்லும்வரை அனைத்து வீணர்களும் எழுந்து நின்று பார்த்து கைகொட்டிச் சிரித்து தங்களின் வெட்டிப்பொழுதை கழிக்கக்கிடைத்த சுலப வழி என எண்ணி சந்தோஷமடைவார்கள். அந்தக்காட்சி முடிந்தவுடன் மீண்டும் அவ்வாறான நாய்ச்சண்டை திரும்ப நடக்கும்வரை தங்களின் பழைய வெட்டி நிலைக்கு சென்று விடுவார்கள். நாய்களுக்கும் பன்றிகளுக்கு இடையேயான இது போன்ற சண்டை அவர்களைப் திருப்திப்படுத்தியது போல வேறொன்றுமில்லை என்று கூறலாம். அத்துடன் சாலையில் திரியும் நாய்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ பற்றவைப்பது அல்லது நாய்களின் வாலில் ஒரு தகர டின்னைக்கட்டி அது சாகும்வரை அதைக் கழட்ட முயற்சி செய்வதைப் பார்த்து ரசிப்பது எனத் தேவையற்ற வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள். அவ்வாறான தண்டமான வேலைகள் செய்யாமல் இருக்கும்போது நாய்ச்சண்டையை ரசித்துக் கவனிப்பார்கள்.
கீழ்புறமாக நதியின் கரைக்கருகே சில வீடுகள் நதியை தொட்டுவிடும் தூரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தன. அவை எப்போது வேண்டுமானாலும் நதிக்குள் விழுந்துவிடும் போன்று நதியை நோக்கி வளைந்து குனிந்து காணப்பட்டன. அந்த வீட்டில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வேறு பக்கம் சென்று விட்டனர். அவ்வாறு வளைந்திருக்கும் சில வீடுகளின் கீழே, நதிநீர் ஒரு பெரிய குகை அளவுக்குப் பள்ளம் செய்திருந்தது. சில வீடுகளில் இன்னமும் மக்கள் வசித்து வந்தனர். எந்த நேரம் வேண்டுமானாலும் பள்ளம் இன்னும் பெரிய குகையாக மாறி அந்த நிலம் நீருக்குள் மூழ்கிவிடும் அபாயம் இருந்தது. சில சமயங்களில் கால் மைல் தூரத்துக்கு நீண்டு போன பள்ளமான நிலம் காலம் செல்லச் செல்ல கொஞ்ச கொஞ்சமாக ஆழமாக மாறிக் கொண்டே இருக்கும். திடீரென ஒரு கோடை காலத்தில் கீழே விழுந்து மூழ்குவது நடந்து விடும். நதிநீர் எப்போதுமே கரைப் பகுதியை மெதுவாக அரித்து வரும் என்பதால், இது போன்ற ஒரு ஊரானது நதியின் கரையை விட்டு உள்ளே தொலைவில் நகர்ந்திருப்பதே நலம் பயக்கும்.
மதியவேளை நெருங்க நெருங்க வண்டிகளும், குதிரைகளும் என அந்தத் தெரு நிரம்பி வழிந்தது. மக்கள் அதிக அளவில் வந்துகொண்டே இருந்தார்கள். அருகிலிருக்கும் கிராமங்களில் உள்ளவர்கள் கட்டுச் சாப்பாடு எடுத்து வந்து அவர்களின் வண்டிகளில் அமர்ந்து உண்டார்கள். அத்துடன் நிறைய விஸ்கி அருந்துவதும் நடந்தது. அதன் காரணமாக பல சண்டைகளும் அவர்களுக்குள் எழுந்தது.
சீக்கிரமாகவே யாரோ கத்தும் ஒலி கேட்டது.
`"இதோ குறைந்த அளவு மதுவுக்காக அவரின் மாதாந்திரத் தவணையாகப் பெற கிராமத்திலிருந்து முதியவர் பாக்க்ஸ் வருகிறார். இதோ இங்கே வருகிறார், பசங்களா!"
அனைத்து வீணர்களும் நொடிப்பொழுதில் மகிழ்ச்சியடைந்தனர். பாக்க்ஸ் என்பாரை வைத்து கலாட்டா செய்வது அவர்களின் வழக்கம் போலும் என்று நான் எண்ணினேன்.
அவர்களில் ஒருவன் சொன்னான் "இன்று அவர் எதைக் கொல்லப் போகிறார் என்று நான் வியந்துகொண்டிருக்கிறேன். அனைத்து மனிதர்களையும் கொல்லப் போவதாக கடந்த இருபது வருடங்களாக சொல்லிக் கொண்டு திரிகிறார். அப்படிக் கொன்றிருந்தால் அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு மரியாதை இந்நேரம் கிடைத்திருக்கும்."
இன்னொருவன் கூறினான் "என்னை அந்த மனிதர் மிரட்டவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அப்போதுதான் நான் ஆயிரம் வருடம் சாகாமல் இருக்கமுடியும்.
குதிரையின் மீது சவாரி செய்தபடி ஊளையிட்டுக் கொண்டும் காட்டுமிராண்டியைப் போல் கத்திக்கொண்டும் பாக்க்ஸ் வந்தார்.
"சாலையை விட்டு விலகி நில்லுங்கள். நான் போருக்குச் செல்லும் அவசரத்தில் இருக்கிறேன். மக்களை நான் கொல்ல ஆரம்பித்ததும், சவப் பெட்டிகளின் விலை அதிகமாகப் போகப் போகிறது." என்று கத்தினார்.
நன்கு மது குடித்திருந்ததால் குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்திருக்கும்போதே இங்குமங்குமாகத் தள்ளாடினார். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக சிவந்த முகத்துடன் அவர் காணப் பட்டார். அனைவரும் அவரை நோக்கிக் கேலியாகச் சிரித்தபடி வசை பாடினார்கள். அவரும் ஆபாசமாக வசை பாடியவாறே அவர்களைப் பிடித்து விரைவில் கொல்லப்போவதாகச் சொன்னார். ஆனாலும் அந்த ஊரிலுள்ள முதியவர் கர்னல் ஷேர்பம் என்பாரை கொல்ல அன்று வந்திருப்பதால், மற்றவர்களைக் கொல்ல இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்றார்.
"முதலில் இறைச்சியின் முக்கிய பாகத்தை உண்டுவிட்டே, பின்னர் அதன் பக்கங்களை உண்ணவேண்டும்" என்பதே அவரின் கொள்கை என்று இரைந்து கூறினார்.
என்னைப் பார்த்ததும் குதிரையை என்னிடம் ஒட்டிக் கொண்டு அருகில் வந்தார்.
"எங்கிருந்து வந்திருக்கிறாய், சிறுவனே? சாகத் தயாராக உள்ளாயா?"
பிறகு என்னிடமிருந்து பதிலை எதிர்பாராமல், குதிரையை வேறுபுறமாக ஒட்டிச் சென்றார்.
நான் மிகவும் கலவரத்துடன் இருந்தேன். ஆனால் ஒரு மனிதன் கூறினார் "அவர் ஏதும் செய்துவிடமாட்டார். குடித்திருக்கும்போது இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே அனைவரையும் மிரட்டுவார். ஆர்கன்சாஸ் நகரிலேயே மிகவும் எளிதாக எதையும் எடுத்துக் கொள்ளக் கூடிய வயதான முட்டாள் அவர். குடிமயக்கமில்லாது நிதானத்தில் இருக்கும்போது அவர் யாரையும் புண்படுத்தியதில்லை."
அந்த நகரிலேயே மிகப் பெரிய கடை வரைக்கும் குதிரையில் சென்ற பாக்க்ஸ், அங்கே தலையைக் குனிந்து படுதாவினுள் ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தார். பிறகு கூச்சலிட்டார் "வெளியே வா ஷேர்பம்! நீ மோசடி செய்த மனிதனை வெளியே வந்து சந்திக்க வா. நான் வேட்டையாட வந்திருக்கும் இரை நீதான். உன்னை அடையாமல் நான் விடமாட்டேன்."
இவ்வாறு ஷேர்பம்முக்கு எத்தனை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய முடியுமோ அத்தனை வார்த்தைகளையும் பயன்படுத்தி கத்திக் கொண்டே இருந்தார். அந்தத் தெரு முழுதும் மக்கள் கூடி நின்று அவர் கத்துவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். வெகுவிரைவில் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இறுமாப்புடன் தென்பட்ட ஒரு மனிதர் அந்தக் கடையை விட்டு வெளியே வந்தார்.
அந்த ஊரிலேயே நேர்த்தியாக ஆடை உடுத்திய மனிதர் அவராகத்தான் இருக்கும். அவர் நடந்து வருவதற்காகக் கூட்டம் இருபுறமும் ஒதுங்கி வழிவிட்டது. . மிகவும் அமைதியாகவும், அவசரமின்றியும் வார்த்தைகளை பாக்க்ஸை நோக்கி அவர் உதிர்த்தார்:
"எனக்கு அலுத்துப் போய் விட்டது ஆனாலும் மதியம் ஒருமணி வரை நான் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு மணி வரை தான், நன்றாகக் கேட்டுக் கொள். அதற்குப் பிறகு இல்லை. புரிகிறதா? ஒரு மணிக்கு அப்புறம் ஏதேனும் நீ என்னைப் பற்றிப் பேசுவது காதில் கேட்டால் நீ எங்கிருந்தாலும் வேட்டையாடிவிடுவேன். ஜாக்கிரதை."
இவ்வாறு கூறிவிட்டு திரும்பி உள்ளே சென்றார். அந்தக் கூட்டம் மிகவும் கவனத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. யாரும் எங்கேயும் அசையவுமில்லை. வாய்விட்டுச் சிரிக்கவுமில்லை. பாக்கஸ் மீண்டும் கடுமையான வார்த்தைகளால் உரக்க ஷேர்பம்மை வைது கொண்டே குதிரையில் மேலும் கீழும் சவாரி செய்துவிட்டு இறுதியாக பின்னர் அதே கடையின் முன் வந்து சேர்த்தார்.
சில மனிதர்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவரின் வாயை அடக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர் அடங்கவில்லை. ஒரு மணி அடிக்க இன்னும் பதினைந்து நிமிடங்களே உள்ளது என்று அவர்கள் அந்த கிழவரிடம் கூறினார்கள். எனவே அந்தப் பேச்சுக்களை அவர் அத்தோடு நிறுத்திக் கொண்டு வீடு போய்ச் சேரவேண்டும் என்றார்கள். ஆனால் அந்த அறிவுரை எதுவும் அவர் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அவரின் பலம் கொண்ட மட்டும் ஷேர்பம்மை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டே தனது தொப்பியை மண்ணில் வீசி எறிந்து அதன் மேல் குதிரையை நடத்திச் சென்றார்.
அத்துடன் அதே வீதியில் மேலும் கீழுமாக தன்னுடைய நரைத்த முடி பின்புறமாகக் காற்றில் பறக்க குதிரையில் வேகமாகச் சவாரி செய்துகொண்டிருந்தார். அவரிடம் நெருங்கிச்சென்ற மனிதர்கள் அவரைக் குதிரையை விட்டு இறக்கி ஒரு அறையில் அடைத்து நிதானத்திற்கு கொண்டு வரப் பிரயத்தனம் செய்தார்கள். ஆனால் அது பலனளிக்கவில்லை. இன்னும் அதிகமாக ஷேர்பம்மை வைது கொண்டே அந்தத் தெருவில் சவாரி செய்துகொண்டிருந்தார்.
அச்சமயத்தில் யாரோ கூறினார்கள் "அவரின் மகளை அழைத்து வாருங்கள். சீக்கிரம். சென்று அவரின் மகளைக் கூட்டிவாருங்கள். அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் அவரின் மகள் மட்டுமே செய்யக்கூடும். அவள் சொல்வதை அவர் கேட்டாலும் கேட்கலாம். அவள் மட்டுமே தடுக்க முடியும்."
யாரோ ஒருவன் அந்தப் பெண்ணைக் கூட்டிவர ஓடினான். சிறிது தூரம் அந்தத் தெருவில் நடந்த நான் திடீரென்று நின்றேன். ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்குள்ளாகவே பாக்க்ஸ் மீண்டும் அங்கே திரும்பி வந்தார். இந்த முறை குதிரையில் அல்ல. தலையில் தொப்பி இல்லாது, அவர் கால்கள் தொய்ந்து தடுமாறிக் கொண்டு இரு நண்பர்கள் அவரை இருபுறத்திலும் தாங்கிப் பிடித்தவாறு, எனக்கு எதிர்ப்புறமாக வீதியின் குறுக்கே அவசரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். நிதானமிழந்த நிலையில் அவர் பேசாது இருந்தார். சண்டைக்கு யாரையும் அவர் அழைக்கவில்லை. ஆனால் அவசரமாகச் செல்வது போல் தோன்றியது. பிறகு யாரோ கூப்பிட்டார்கள்.
"பாக்க்ஸ்"
யார் அவர் பெயர் சொல்லி அழைத்தது என்று நான் நிமிர்ந்து பார்த்தேன். அங்கே நின்றுகொண்டிருந்தது கர்னல் ஷேர்பம். அந்தத் தெருவில் ஆடாது அசையாது, கையில் துப்பாக்கியுடன் அவர் நின்றிருந்தார். அவர் கைத்துப்பாக்கி யாரையும் குறிவைக்காமல் வானத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதே கணத்தில் ஒரு இளம் பெண் இரண்டு ஆண்களுடன் ஓடிவருவதையும் கண்டேன். பாக்க்ஸ் மற்றும் அவருடனிருந்த இரண்டு மனிதர்களும் யார் அவரைக் கூப்பிட்டது என்று திரும்பிப் பார்த்தார்கள். கர்னலின் கையில் இருந்த துப்பாக்கியைக் கண்டவுடன் அந்த இரண்டு நண்பர்களும் இரு புறங்களிலும் குதித்தோடி விட்டனர். கர்னல் ஷேர்பம் வானத்தை நோக்கி இருந்த துப்பாக்கியை மெதுவாக கீழிறக்கி, மார்புக்கு நேராக குறிவைத்து விசையைப் பொருத்தினார். துப்பாக்கி இப்போது தயார் நிலையிலிருந்தது. பாக்க்ஸ் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தினார். "ஓ! கடவுளே! சுட்டுவிடாதே!" பாங் முதல் குண்டு வெளிப்பட்டது.
பாக்க்ஸ் தள்ளாடியவண்ணம் காற்றில் கைகளால் ஏதோ கிழித்தார். பாங்! இரண்டாம் குண்டும் வெளிவந்தது. இந்தமுறை, அவர் நிலைதடுமாறி உருண்டு நிலத்தின் மீது "பொத்" இரு கரங்களையும் பரப்பிக்கொண்டு விழுந்தார். அந்த இளம்பெண் கதறியபடியே விரைந்தோடி வந்தாள். அழுதுகொண்டே தன் தந்தையின் அருகே வீழ்ந்த அவள் "ஓ! அவர் இவரைக் கொன்று விட்டார். அவர் கொன்று விட்டார்" என்று புலம்பினாள்.
அங்கே கூட்டம் அவர்களைச் சூழ்ந்தது. மக்கள் தங்கள் தலைகளை உயர்த்தி மற்றவர்கள் தோள்பட்டை வழியாக அங்கே நடப்பதைக் கவனிக்க முயன்றார்கள். உள்பக்கமாக இருந்த மக்கள் மற்றவர்களை ஒரு புறமாகத் தள்ளிக்கொண்டே "பின்னால் செல்லுங்கள். பின்னால் செல்லுங்கள். அவருக்கு சுவாசிக்கக் காற்று வரட்டும். காற்று வர வழிவிடுங்கள்." என்று கத்தினார்கள்.
கர்னல் ஷேர்பம் கையிலிருந்த துப்பாக்கியை தரையில் வீசி எறிந்துவிட்டு, குதிகால்களை அழுத்தித் திரும்பி அங்கிருந்து சென்றார்.
அங்கிருந்த மருந்துக் கடைக்கு அவர்கள் பாக்க்ஸை தூக்கிச் சென்றார்கள். மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் அவர்களைத் தொடர்ந்து பின் சென்றது. நான் ஓடிச் சென்று அதன் பக்கத்தில் ஓர் சன்னலருகே நல்ல இடத்தைப் பிடித்து நடப்பது எல்லாம் பார்க்கும் வகையில் நின்று கொண்டேன். அவரைத் தரையில் கிடத்தி தலையின் கீழே ஒரு பெரிய பைபிளை வைத்து, இன்னுமொரு சிறிய பைபிளை மார்பின் மீது வைத்துப் பின் அவரின் சட்டையை கிழித்தார்கள். அவரின் உடலினுள்ளே ஒரு தோட்டா பாய்ந்திருப்பதை நான் கண்டேன்.
பாக்க்ஸ் ஒரு டஜன் அல்லது அதற்கும் மேலான பெருமூச்சுகள் எடுத்தார். அவ்வாறு செய்யும் வேளையில் மார்பிலிருந்து பைபிள் அவர் மூச்சை வெளியேற்றும் போது மேலேறி, மூச்சை இழுக்கும் போது கீழே வந்தது. அதன்பின் அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவர் இறந்து விட்டார்.
பின்னர், கதறி அழுதுகொண்டிருக்கும் அவரின் மகளை அவரிடமிருந்து இழுத்து வேறு பக்கம் அழைத்துச் சென்றார்கள். சுமாராக பதினாறு வயது இருக்கும் இளம்பெண் அவள். அழகான, மென்மையான தோற்றத்துடன் இருந்தாள். ஆனால் அந்த சமயம் மிகவும் பயந்து போய் நிறம் வெளுத்துக் காணப்பட்டாள்.
வெகுவிரைவில் மொத்த ஊர்மக்களுமே நெட்டித் தள்ளிக்கொண்டு, ஒருவரை இடித்துக் கொண்டு, அந்தக் காட்சியைக் காணும் ஆர்வத்துடன் கூடினார்கள். ஆனால் முதலிலேயே நல்ல இடம் பார்த்து நின்றுகொண்டிருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்துவிட்டனர். பின்னால் நின்றுகொண்டிருக்கும் மக்கள் "போதும் வாருங்கள். நீங்கள் எல்லாம் பார்த்தாயிற்று அல்லவா? பின் எதற்காக அங்கேயே மொத்த நேரமும் நின்று கொண்டு எங்களுக்கு அதை மறைக்கிறீர்கள்? மற்றவர்களும் பார்க்க வழிவிடுங்கள். உங்களுக்கு இருக்கும் உரிமை போலவே எங்களுக்கும் இருக்கிறதல்லவா." என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
முன்னும் பின்னுமாக நிறைய பேச்சுக்கள் பலவிதமாக அடிபட்டன. எனவே, அங்கே ஏதேனும் ரகளை ஆகலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து நான் நகர்ந்தேன். அந்தத் தெரு முழுதும் மக்கள் மிகுந்த பரபரப்புடன் கூடியிருந்தார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர்கள், அது எப்படி நடந்தது என்று மற்றவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்கள். நேரில் பார்த்த சாட்சிகளின் கதையைக் கேட்க ஒவ்வொருவரைச் சுற்றியும் பெரிய கூட்டம் கூடியிருந்தது. அதில் சிலர் தங்களின் கழுத்தை உயர்த்தி எட்டிப் பார்த்து அந்த வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
விலங்குத் தோலால் ஆன வெள்ளை நிறப் புகைபோக்கிக் கூண்டு போன்ற தொப்பியை தலையின் பின்புறமாகத் தொங்கவிட்டிருந்த, நீண்டு மெலிந்த ஒரு மனிதன் வளைந்திருக்கும் கைப்பிடி கொண்ட ஒரு கைத்தடி வைத்துக் கொண்டு பாக்க்ஸ் மற்றும் ஷேர்பம் முதலில் நின்றிருந்த இடங்களில் வட்டம் வரைந்தான். மக்கள் அவன் செய்வதையெல்லாம் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அவன் நகரும் இடமெல்லாம் அவர்களும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். தடியினால் தரையில் அவன் குறிகள் இடுவதை மக்கள் தங்கள் தொடையில் கைகளை ஊன்றி கொஞ்சமாகக் குனிந்து அந்த அடையாளங்களைப் பார்த்து அதைப் புரிந்து கொண்ட விதமாக தலையை அசைக்கவும் செய்தார்கள்.
ஷேர்பம் நின்ற இடத்தில் நேராக நிமிர்ந்து நின்று, கண்ணுக்கு கீழ் இருக்கும் தொப்பியின் விளிம்பில் முகத்தைச் சுளித்து "பாக்க்ஸ்" என்று கூவினான் பின்னர் தன் கையிலிருந்த தடியை துப்பாக்கி போலப் பாவித்து தலைக்கு மேலிருந்து இறக்கி, மார்புக்கு நேராகக் குறி வைத்தான். பின்னர் "பாங்" என்று கூவினான். பின்புறமாகத் தடுமாறிச் சாய்ந்தான். மறுபடியும் "பாங்" என்று சத்தமிட்டான். பின்னர் மல்லாந்து பின்புறமாக விழுந்தான். உண்மையான துப்பாக்கிச்சூடு சம்பவம் நேரில் கண்டவர்கள் இதே போன்றுதான் அப்போதும் நடந்தது, அவன் நடித்துக் காட்டியது அபாரம் என்று ஒத்துக் கொண்டார்கள், பின்னர் பெரும்பான்மையான மக்கள் நடித்துக் காட்டிய அந்த மனிதனுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாகத் தங்களின் மதுப்பாட்டில்களை அருந்தச் சொல்லிக் கொடுத்தார்கள்.
நல்லது. வெகு விரைவில் ஷேர்பம் தண்டிக்கப்படவேண்டியவன், தூக்கிலிடப்படவேண்டியவன் என்று யாரோ அங்கே கூறினார்கள். அடுத்த ஒரு வினாடியில் அனைவரும் அதை முழுமனதுடன் ஆமோதித்தார்கள். பிறகு மிகுந்த ஆக்ரோஷத்துடன் கூச்சலிட்டுக் கொண்டே வழியில் கண்ட துணிகளை அவனைத் தூக்கிலிடத் தேவைப்படும் என்று உருவிக்கொண்டு போனார்கள்.
[தொடரும்]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.