16 - ம் நூற்றாண்டின், இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அவையின் கீர்த்திமிகு நடு நாயகமாய் விளங்கிய ஆங்கிலக்கவி எட்மண்ட் ஸ்பென்ஸர், பதினான்கு வரிகளில் இயற்றும் சானெட் (Sonnet) என்னும் பாட்டு வகையில் இயற்றிய காதல் பாடல்கள் (Amoretti) உலகப்புகழ் பெற்றவை. அது போன்றே, உயர்குலத்தை சார்ந்த லேடி எலிசபெத் மற்றும் லேடி காதரின் என்னும் இரு அழகிய இளம்பெண்களின் திருமண நிகழ்வுக்காக அவர் இயற்றிய இந்த வாழ்த்துப்பா மணமக்களை இரு அழகிய அன்னங்களாக்கி, திருமண நிகழ்வை வரவேற்கும் இனிய பாடலாக மட்டும் அல்லாது கண்ணுக்கினிய வர்ணங்களை கற்பனையில் குழைத்து, வர்ணத்தூரிகை கொண்டு வரைந்த சித்திரக்காட்சிகள் போல பலவித நிறங்களை இயற்கையோடு இணைத்து வழங்கியுள்ள பாணி இன்றளவும் யாரும் எட்டிப்பிடிக்க இயலா இனிமையாக மிளிர்கிறது என்றால் மிகையாகாது.
கவிதை: திருமண இன்னிசை வாழ்த்து - எட்மண்ட் ஸ்பென்ஸர் ( Prothalamion – Edmund Spenser ) | தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி
சலனமற்று "சிலிர்ப்பூட்டும் நாளொன்றின்
தென்றலின் சில்லிப்பினூடே வரும்
ஜெபெரஸ் களியாட்ட வேளையிது.
தகதக சூரியனின் கதகத ஒளிக்கற்றைகளை
இயற்கை தேவதை சோம்பலாக்க
அவளோடு இயைந்து உலவியபடியே
துயரார்ந்த சிந்தனையில் ஆழ்த்திருந்தேன்.
காலங்காலமாய் அரசவையில்
காலம் கனியா வெறுமையில்
காத்திருந்து பயனற்று சலித்துப்போன
என் மன நிறைவின்மையின் நடுவே
வெறுமை சூழ் நிழல் சிறகடிக்கிறது
நிஜம்விடுத்து விலகுவது போல்
வீண் நம்பிக்கைகளின் நிறைவுறா
எதிர்பார்ப்புகள் மாயையாய் மொய்க்கின்றன.
இவை என் சிந்தனையை வருத்துகையில்
மனத்துயர் நீக்கும் மருந்தைத்தேடி
மெல்ல என் கால்கள்
வெள்ளியொளி ஊடுருவிச் சுடரும்
தேம்ஸ் நதிக்கரையின் பக்கம் நகர்ந்த போது
நேர்த்தியான ஆடைகளின்
முனை மடிப்புகளைப் போன்ற
நதிக்கரையின் விளிம்புகள் கண்டேன்.
மலர்த் தூரிகைகளின் வண்ணத் தீற்றல்களாய்
நதிக்கரைப் புல்வெளி விரிந்திருக்க
அழகிய தோரணங்களால் ஆன
மலர்க் கன்னிகளின் வீடுகளை
பூங்கொடிகள் அலங்கரித்திருக்கின்றன.
அழகுப் பெண்களின் இதயத்திலிருக்கும்
ரகசியக் காதலர்களுக்கு முடிசூட்டும்
மயக்கம் மிகுந்த மணநாள்
வெகு தொலைவில் இல்லை.
அந்த நாளை நோக்கிச் செலுத்தும்
இனிய தேம்ஸ் நதியே!
என் பாடலை நான் பூரணமாக்கும் வரை
மெல்ல மெல்ல உன் காலடி நகர்த்துவாய்.
அதோ அங்கே!
நதிக்கரையின் நெருக்கத்தில்,
புல்வெளிப் பள்ளத்தாக்கில்
வன தேவதைகள் ஒரு குவியலாய்ச்
சூழ்ந்திருக்கும் பேரழகை தரிசித்தேன்.
அது நான் பெற்ற பரிசில்
அது என் கண் பெற்ற பெரும்பேறு.
நதிக்கரையில் எழிலுறத் தோன்றும்
இளம்பெண்டிர் யாவரும்
அழகிய பச்சைநிற கற்றைக் குழலை
முடிந்து கொள்ளாமல் காற்றில் அலைபாயவிட்டு
மணமக்களைப் போல் அவர்கள்
மனதை கொள்ளை கொள்கின்றனர்.
அவர்கள் தன் மூங்கில் கூடைகளுக்குள்
எதிர்பார்ப்பை மறைத்து
எழிலுற எந்தி வருகின்றனர்.
அவ்விளம் மூங்கில் கூடைகளுக்குள்
அவர்கள் பார்த்துப் பார்த்துத் தங்கள்
தளிர்விரல்களால் கொய்த
மலர்வகைகள் நிரம்பித் ததும்பியிருந்தன.
இளம் ஊதா மலர்களும்
அந்திமாலையில் இதழ் மூடும்
இளம் டெய்சி மலர்களூம்
கன்னி கழியா லில்லி மலர்களும்
அவற்றுடன் உண்மை நிறைந்த
ப்ரிம்ரோஸ் மலர்களும்
வெள்ளி, தாமிர, வண்ணம் கொண்ட
ரோஜா மலர்களும் புன்னகைத்தன
இவை அந்தப் பள்ளத்தாக்கெங்கும்
பூத்துக்குலுங்கிய மலர்கள்.
இவை மணமகன்களின் கைகளில்
பூங்கொத்தாய்ச் சிரிக்க அணியமாகிவிட்டன.
நெருங்கிவிட்ட அவர்களின் மணநாளை நோக்கி
எம்மைச் செலுத்தும் இனிய தேம்ஸ் நதியே!
என் பாடலை நான் பூரணமாக்கும் வரை
மெல்ல மெல்ல உன் காலடியை நகர்த்துவாய்.
*
மிருதுவாய் சிறகசைக்கும்
அழகு மிகும் ஒருஜோடி
அன்னப் பறவைகளைப் பார்க்கிறேன்.
நதிக்கரையின் நிழலில் அவை மகிழ்வாய்
நீந்திவரும் பேரழகைக் காண்கிறேன்.
இதுநாள்வரை ஒருபோதும் நான் தரிசித்திராத
ஒயில்மிகும் அழகிய பறவைகள் அவை.
அவை இரண்டும்
பால் போன்ற வெள்ளுடையில் வருகின்றன
பிண்டஸ் மலை உச்சியில் சிதறிக்கிடக்கும்
பனிக்கட்டிகளுக்கும் கிடைக்காத பால்வண்ணம் அது.
கடவுள்களின் கடவுளாம் ஜூபிடர்,
எழில்மிகும் இளவரசி லெடா மீது காதலுற்று
அன்னப் பறவையாய் உருமாறிய போது
ஜூபிடருக்கும் லெடாவுக்கும் கிட்டாத
வெண்மை நிறப் பேரழகும் அரசத்தொனியும்
இந்த அன்னப் பறவைகளுக்கு இருந்தன.
இந்தக் காதல் அன்னங்களுக்கு
அருகில் வரும் தகுதி
இறை அன்னங்களுக்கும் உண்டோ?
அவற்றின் ஒளிநிற மகத்துவம் எவ்வாறெனில்
அவற்றின் ஒளியை பளீரென எதிரொளிக்கும்
நீரோடையே அவற்றின் பேரழகின் முன்
அழுக்காய் நிறம்மங்கித் தெரிகிறது.
அந்த பட்டுப்போன்ற காதல் அன்னங்களின்
மென்மையான வெண் இறகுகளை
ஈரப்பதம் தாக்காது காக்கும் வேலையை
பெரும் அலைகளுக்கு பணித்தான் நதியின் கடவுள
அங்ஙனம் செய்யாவிடின் காதல் அன்னங்களின்
இறகுகளில் ஈரக்கறை பட்டுவிட நேரலாம்.
மேலும் சொர்க்கத்தின் ஒளிக்கீற்றாய் மினுக்கும்
அவற்றின் ஒளிர்தன்மை குறையக்கூடும்
நெருங்கிவிட்ட அவர்களின் மணநாளை நோக்கி
எம்மைச் செலுத்தும் இனிய தேம்ஸ் நதியே!
என் பாடலை நான் பூரணமாக்கும் வரை
மெல்ல மெல்ல உன் காலடியை நகர்த்துவாய்.
மலர்கொய்த வன தேவதைகள்
விரைந்தோடி வந்து ரசித்தனர்
பளிங்குத் தடாகத்கத்தருகே சிலிர்பாய் நகரும்
பேரெழில் பெட்டகமான அந்த
இளம் இணைப் பறவைகளைப் பார்த்ததால்
அவற்றின் மேல் பதித்த விழிகளை நகர்த்த முடியாது
அசைவற்ற சிலையாய் பிரமித்து உறைந்தன.
தம் வாழ்வில் அதுவரை காணா
ரம்மிய காட்சியை அவை கண்டு களித்தன.
ஆண்டவனின் கூட்டில் ஜனித்து
பூமிக்குப் பறந்து வந்த
வீனஸ் தேவதையின் நகல்களாய்
காட்சிதரும் இணை பிரியா தாரகைகள் இவை.
பூலோகத்தில் பிறக்க சாத்தியமற்றவை
தேவைதைகளின் அவதாரமாகவோ
தேவதையின் வம்சமாகவோ
பிறந்துவந்த இவை
தேவ வசந்தங்கள்
எனினும்
அவை அந்த சாமர்செட்டிற்கே உறவென
அனைவரும் உறுதி மொழிகிறார்கள்.
மண்ணக மங்கை வசந்த ருதுக்காலங்களில்
மசக்கையுற்று மலர்ந்து
வரிசையாய் பூச்சொரிவது போலும்
கிளர்ச்சியூட்டும் நாளின் கணங்கள் போலும்
காட்சிதருகின்றன இந்த ஜோடிப் பறவைகள்.
நெருங்கிவிட்ட அவர்களின் மணநாளை நோக்கி
எம்மைச் செலுத்தும் இனிய தேம்ஸ் நதியே!
என் பாடலை நான் பூரணமாக்கும் வரை
மெல்ல மெல்ல உன் காலடியை நகர்த்துவாய்.
Prothalamion - by Edmund Spenser
CALM was the day, and through the trembling air
Sweet breathing Zephyrus did softly play,
A gentle spirit, that lightly did delay
Hot Titan's beams, which then did glister fair;
When I whose sullen care,
Through discontent of my long fruitless stay
In prince's court, and expectation vain
Of idle hopes, which still do fly away
Like empty shadows, did afflict my brain,
Walked forth to ease my pain
Along the shore of silver streaming Thames,
Whose rutty bank, the which his river hems,
Was painted all with variable flowers,
And all the meads adorned with dainty gems,
Fit to deck maidens' bowers,
And crown their paramours,
Against the bridal day, which is not long:
Sweet Thames, run softly, till I end my song.
There, in a meadow, by the river's side,
A flock of nymphs I chanced to espy,
All lovely daughters of the flood thereby,
With goodly greenish locks, all loose untied,
As each had been a bride;
And each one had a little wicker basket,
Made of fine twigs, entrailed curiously,
In which they gathered flowers to fill their flasket,
And with fine fingers cropt full featously
The tender stalks on high.
Of every sort, which in that meadow grew,
They gathered some; the violet pallid blue,
The little daisy, that at evening closes,
The virgin lily, and the primrose true,
With store of vermeil roses,
To deck their bridegrooms' posies
Against the bridal day, which was not long:
Sweet Thames, run softly, till I end my song.
With that, I saw two swans of goodly hue
Come softly swimming down along the Lee;
Two fairer birds I yet did never see.
The snow which doth the top of Pindus strew,
Did never whiter shew,
Nor Jove himself, when he a swan would be
For love of Leda, whiter did appear:
Yet Leda was they say as white as he,
Yet not so white as these, nor nothing near.
So purely white they were,
That even the gentle stream, the which them bare,
Seemed foul to them, and bade his billows spare
To wet their silken feathers, lest they might
Soil their fair plumes with water not so fair,
And mar their beauties bright,
That shone as heaven's light,
Against their bridal day, which was not long:
Sweet Thames, run softly, till I end my song.
Eftsoons the nymphs, which now had flowers their fill,
Ran all in haste, to see that silver brood,
As they came floating on the crystal flood.
Whom when they saw, they stood amazed still,
Their wondering eyes to fill.
Them seemed they never saw a sight so fair,
Of fowls so lovely, that they sure did deem
Them heavenly born, or to be that same pair
Which through the sky draw Venus' silver team;
For sure they did not seem
To be begot of any earthly seed,
But rather angels, or of angels' breed:
Yet were they bred of Somers-heat they say,
In sweetest season, when each flower and weed
The earth did fresh array,
So fresh they seemed as day,
Even as their bridal day, which was not long:
Sweet Thames, run softly, till I end my song.
தமிழ் மொழியாக்கம் : முனைவர் ஆர். தாரணி
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.