சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. அப் பதினெட்டு நூல்களையும்,
'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'
இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11) நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.
திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். 'கொல்லாமை', 'கள்ளுண்ணாமை' என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.
'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ
யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.'
இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.
நட்பியல்
நட்பியல் பகுதியில் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து ஆகிய பதினேழு (17) அதிகாரங்கள் அடங்கும். இதில் ஒருமித்து 170 குறள்கள் உள்ளன.
நட்பு:- அறிவுடையோர் நட்பு வளர் பிறை போன்று நாளுக்கு நாள் வளரும். அறிவற்றோர் நட்பு முழுமதி தேய்வது போன்ற தன்மையுடையது.
'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர போதையார் நட்பு.' – (குறள். 782)
ஒருவரோடொருவர் நட்புக் கொள்வது இன்பமாகப் பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல, ஒருவர் ஒரு குற்றம் செய்தால் மற்றவர் அதை எடுத்துக்காட்டி இடித்துரைப்பதற்காகும்.
'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.' – (குறள். 784)
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.' – (குறள். 786)
இடுப்பு ஆடை நழுவி விட்ட ஒருவன் கை அவனறியாமல் உடனே ஆடையை அணைத்து மானம் காப்பதைப் போல, நண்பனுக்குத் துன்பம் வந்தக்கால் உடன் சென்று அவன் துன்பத்தைக் களைவது நட்பாகும்.
'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.' – (குறள். 788)
'இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம;' என்று கூறிக் கொண்டாலும் அது நட்பின் பெருமையைக் குறைத்து விடும்.
'இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.' - (குறள். 790)
நட்பாராய்தல்:- ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.' - (குறள். 792)
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.' - (குறள். 793)
கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு. அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
'கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.' - (குறள். 796)
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும். அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
'உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.' - (குறள். 798)
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும். ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஏதேனும் ஒரு விலை கொடுத்தாவது கைவிட வேண்டும்.
'மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.' - (குறள். 800)
பழமை:- பழைய நண்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றால், நீண்ட நாள் நட்பினால் உண்டான உரிமைகளைக் கெடுத்துவிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.
'பழமை எனப்படுவது யாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.' - (குறள். 801)
உரிமையால் கேளாமல் நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
'விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.' - (குறள். 804)
உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.
'எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.' - (குறள். 806)
உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.' – (குறள். 809)
தீ நட்பு:- அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும், நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து போவது சிறந்ததாகும்.
'பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.' - (குறள். 811)
கிடைக்கும் இலாபத்தை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் வருகின்ற பொருளைக் கணக்கில் வைக்கும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
'உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.' - (குறள். 813)
மனத்தில் அன்பு இல்லாமல் புறத்தில் நகைக்குந் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.
'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.' - (குறள். 817)
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.
'கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.' - (குறள். 819)
கூடா நட்பு:- இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, மனைவியைப் போல நடிக்கும் பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
'இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.' - (குறள். 822)
மனத்திற்கு ஒவ்வாதவராகிய பகைவர் எவ்வளவு நல்ல வார்த்தைகளைப் பேசினாலும் அப் பேச்சைக் கேட்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பிவிடக்கூடாது.
'மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.' - (குறள். 825)
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறிக்கும். அதேபோல் பகைவரின் சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.
'சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.' - (குறள். 827)
தம்மைத் தாமே அதிகமாக இகழ்ந்து கொண்டு, நம்மைப் புகழ்ந்து பேசுகின்ற அவ்வஞ்சகரை அவர்களின் பேச்சில் மயங்கி மகிழ்ந்து நட்பாக நம்பிவிடுவது தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமாகும்.
'மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.' - (குறள். 829)
பேதைமை:- பேதைமை என்று சொல்லப்படும் முட்டாள்தனம் என்பது என்னவென்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு, ஊதியமான நன்மையைக் கைவிடுதலாகும்.
'பேதைமை என்பதொன்று யாதெனில் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.' - (குறள். 831)
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்களாம்.
'நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.' - (குறள். 833)
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, அவனோடு தொடர்பில்லாத அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
'ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.' - (குறள். 837)
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுவது, ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
'கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். - (குறள். 840)
புல்லறிவாண்மை:- அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாம். மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
'அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு.' - (குறள். 841)
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர்போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.
'கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.' - (குறள். 845)
புல்லறிவாளன் தெரிந்தவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டான், தானாகவும் அறிந்து கொள்ள மாட்டான். அவன் உயிர் போகும்வரை பிறருக்கும் தனக்கும் துன்பமுண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.
'ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.' - (குறள். 848)
இகல்:- (இகல் என்பது வெளியில் பகைமை காட்டாமல் மனத்தில் வைத்திருக்கும் மனத்தாபமாகிய பகமைக் குணமாகும்.) ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருக்கும் குணம் சிறந்தது.
'பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.' - (குறள். 852)
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவன் வாழ்க்கை விரைவில் துன்பமும், நாசமும், அழிவும் அடைந்து விடும்.
'இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணிந்து.' - (குறள். 856)
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும். அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியான பெருமிதங்கள் உண்டாகும்.
'இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.' - (குறள். 860)
பகை மாட்சி:- (தம்மிலும் வலிமை குறைந்தவர்களைத் துன்புறுத்துகிறவனுக்குப் பகைவர்கள் அதிகமாவார்கள்.) தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விடவேண்டும். தம்மைவிட மெலியவர்மேல் பகை கொள்வதை மேற்கொள்ளாதிருக்க வேண்டும்.
'வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.' - (குறள். 861)
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவனைத் தோற்கடிப்பதில் அவன் பகைவர்கள் மகிழ்ச்சி கொள்வர்.
'வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.' - (கறள். 865)
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவனாவான். அந்நிலை, அவன் பகைவர்க்கு நன்மையாகி விடும்.
'குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து.' - (குறள். 868)
பகைத்திறம் தெரிதல்:- பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும்கூட விரும்புதலாகாது.
'பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.' - (குறள். 871)
தனக்கு உதவியான துணையோ இல்லை. தனக்குப் பகையோ இரண்டு. தானோ ஒருவன். இந்நிலையில் அப் பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ளல் வேண்டும்.
'தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.' - (குறள். 875)
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும். காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தி விடும்.
'இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.' - (குறள். 879)
உட்பகை:- வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்சவேண்டியதில்லை. ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு என்றும் அச்சத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.' - (குறள். 882)
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை தோன்றினால், அந்த உட்பகையால் அவன் அழியாமல் இருத்தல் மிகவும் அரிதாகும்.
'ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.' - (குறள். 886)
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன் வாழ்வது போலாகும்.
'உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.' - (குறள். 890)
பெரியாரைப் பிழையாமை:- மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருக்க வேண்டும். இது, காப்பவர் செய்துகொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
'ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாம் தலை.' - (குறள். 891)
நெருப்பினால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும். ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியாருக்குத் தவறு செய்பவர் தப்பிப் பிழைக்கவே முடியாதாம்.
'எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.' - (குறள். 896)
உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே வலிமை முறிந்து அரசாட்சியையும் இழந்து விடுவான்.
'ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.' - (குறள். 899)
பெண்வழிச் சேறல்:- மனைவியை விரும்பி அவள் சொற்படி நடப்பவர், வாழ்க்கையில் சிறந்த பயனை அடையமாட்டார். கடமையைச் செய்தலை விரும்புகிறவர் வேண்டாத பொருளும் அதுவே.
'மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.' - (குறள். 901)
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்பவர், தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்புற்ற நிலையில் வாழ்ந்தபோதிலும் பெருமை இல்லாதவரே ஆவார்.
'இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.' - (குறள். 906)
அறச் செயலும், அதற்குக் காரணமாய் அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லையாம்.
'அறவினையும்; ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்க்கண் இல்.' - (குறள். 909)
வரைவின் மகளிர்:- அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தையே கொடுக்கும்.
'அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.' - (குறள். 911)
பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
'பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.' - (குறள். 913)
அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
'தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.' - (குறள். 916)
ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
'வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.' - (குறள். 919)
கள்ளுண்ணாமை:- கள்ளாசை கொண்டவர்கள் எக்காலத்திலும் பிறரால் மதிக்கப்பட மாட்டார்கள், உள்ள பெருமைகளையும் இழந்து விடுவார்கள்.
'உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.' - (குறள். 921)
விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத்தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
'கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.' - (குறள். 925)
கள்ளுண்பவன் 'யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்வதை விடவேண்டும். நெஞ்சில் ஒளித்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளியாகிவிடும்.
'களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஓளித்ததூஉம் ஆங்கே மிகும்.' - (குறள். 928)
சூது:- வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றதாகும்.
'வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.' - (குறள். 931)
சூதாடுவதை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் உதுங்கிக்கொள்ளும்.
'உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.' - (குறள். 939)
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
'இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.' - (குறள். 940)
மருந்து:- மருத்துவ நூலோர் வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும் என்பர்.
'மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.' - (குறள். 941)
மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.' - (குறள். 945)
நோய் இன்னதென்று ஆராய்ந்து,, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகத் தக்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.' - (குறள். 948)
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிருந்து கொடுப்பவன் என்ற நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் வைத்தியம் ஆகும்.
'உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.' - (குறள். 950)
நிறைவாக.
இதுகாறும் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதைமை, புல்லறிவாண்மை, இகல், பகை மாட்சி, பகைத்திறம் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது, மருந்து ஆகிய பதினேழு (17) அதிகாரங்களில் திருவள்ளுவர் நட்பியல் பற்றிக் கூறிய செய்திகளை மேற்கண்டோம். இதிற் கூறப்பட்டுள்ள நற்செய்திகளை மக்கள் சிந்தைக்கு எடுத்தால் அவர்கள் வாழ்முறை, ஒற்றுமை, பண்பாடு, சமாதானம், கலை, கலசாரம், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றில் சீர்பெற்று வாழலாமென்பது திண்ணம். திருக்குறளில் கூறப்பட்ட நீதி/நெறி முறைகள் அத்தனையும் மனித வாழ்வியலை மேம்படுத்துகின்றன என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.