பறை என்பதை ஆதிகாலம் தொடக்கம் இற்றைவரை தென் இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், சிறி - இலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் தம் இசைக் கருவியாகப் பாவித்து வருகின்றனர். பறை என்பதற்கு முரசு, முரசொலி, தட்டு, கொட்டு, மிடா, முரசடிப்பவர் என்றும் அகராதிச் சொற்கள் உள. பறை என்றால் 'அறிவித்தல்' என்ற பொருளும் உண்டு. இது தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியுமாகும். இது எல்லாத் தோல் இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவியாகும். இதன் ஒலி அரைக் கி.மீ. தூரம் வரை சென்று அங்குள்ளோரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
ஆதிகாலத்தில் கூத்தாடல், பிண ஊர்வலம், கோயில் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள், அறுவடை காலத்தில் விழா நடத்துவதற்கும், பறவைகளைத் துரத்துவதற்கும், போர் காலத்தில் வெற்றி தோல்வி அறிவிக்கவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டளைகள், செய்திகள். உத்தரவுகள் ஆகியன அறிவிக்கவும், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்குப் பறையினைப் பெரும்பாலும் பாவித்தனர். மேலும், சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவதும் அன்றிலிருந்து இற்றைவரை காணக்கூடிய தெய்வ நம்பிக்கைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். இன்னும், ஒரு சிலர் கோயிற்; பூசை நிகழ்வின்போது தெய்வ உருவெடுத்துக் குறி கூறுவதையும் காண்கின்றோம். இதன்போது பறையை அடித்து அடித்து உருவேற்றுவர் பறையடிப்பவர்கள்.
பறை பசுவின் தோலால் ஆக்கப்பட்டது. அதை இரண்டு தடிகளால் அடித்து முழக்குவர். அதில் ஒரு தடி 28 செ.மீ. நீளமுடையது. மற்றத் தடி 18 செ.மீ. நீளமுடையது. இரு தடிகளும் மூங்கில் தடிகளாகும். பறையை நின்று கொண்டும், நடந்து கொண்டும், இருந்து கொண்டும் அடிப்பார்கள். பறையின் முரசறைவை 1. ஒத்தையடி என்றும், 2. தென்மாங்கு என்றும், 3. சாமியாட்டம் என்றும், 4. துள்ளல் என்றும், 5. உயிர்ப்பு என்றும் வுகுத்துக் கூறுவர்.
பறையில் பல்வேறுபட்ட பறைகள் உள்ளன. அவற்றில் 1. ஆரியப் பறை, 2. ஆறிருப் பறை, 3. உவகைப் பறை, 4. சாப் பறை, 5. வெற்றியின் பறை, 6. மீன்கோற் பறை, 7. மருதநிலப் பறை, 8. குறவைப் பறை, 9. தடாருப் பறை, 10. குறும் பறை, 11. கேற் பறை, 12. தடாரிப் பறை, 13. நிசாளம் பறை, 14. தலைப் பறை, 15. பண்டாரப் பறை, 16. பான்றிப் படை, 17. முருகியம் பறை, 18. வெறியாட்டுப் பறை, 19. வீரணம் பறை, 20. பஞ்சமாசதம் பறை என்பவை ஒரு சிலவாகும்.
பறை இசைக் குழுவினரும், கூத்தாடிக் குழுக்களும் தமக்கென மன்றங்களை இந்தியாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அமைத்து இசை நிகழ்ச்சிகளுடன் கூத்தும் ஆடி மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.
இந்தியாவில்:- 1. ஆதி தமிழர் கலைக் கூடம், 2. அம்பேக்கார் கலைக் கூடம், 3. அதிர்வுகள் கலைக் கூடம், 4. புத்தர் கலைக் கூடம், 5. கன்னியப்பன் கலைக் கூடம், 6. முரசு கலைக் கூடம், 7. நிமிர்வு கலைக் கூடம், 8. சக்தி கலைக் கூடம், 9. சமர் கலைக் கூடம், 10. தமிழ் நாடு பாரம்பரிய பறை இசைப்போர் சங்கம், 11. தலைப்பறைக் கலைக் கூடம், 12. உணர்வுகள் கலைக் கூடம், 13. வீரசோழன் தாப்பாற்ரக் குழு ஆகிய கூடங்கள் அமைந்துள்ளன.
மேற்கத்திய நாடுகளில்:- 1. அமெரிக்கன் பறைக் குழு, 2. மானுடம் பறை அணி (அமெரிக்கா), 3. புறை – சுதந்திர இலண்டன் குரல், 4. ஸ்ரார்- கலைக் குழு (அமெரிக்கா), 5. தேவதூதர் பறைக் குழு (அமெரிக்கா) ஆகிய குழுக்களும் அமெரிக்காவிலும், இலண்டனிலும் அமைந்துள்ளன. இனி, பறைகள் பற்றித் தமிழ் இலக்கியங்களில் என்னென்ன கூறப்பட்டுள்ளன என்பதையும் ஆராய்வாம்.
தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் (கி.மு. 711) யாத்துத் தந்துள்ளார். தொல்காப்பியர் ஐவகை நிலங்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஒவ்வொன்றிற்கும் 14 வகையான கருப்பொருள்களைக் கூறியுள்ளார். அவற்றில் பறை என்னும் முழக்குக் கருவியும் ஒன்றாகும். இனி, இப் பறையானது ஐந்து நிலங்களுக்கும் என்னென்ன பெயரான பறைகள் அமைந்துள்ளன என்பதையும் காண்போம்.
முல்லைக்கு – ஏறுகோட் பறை.
குறிஞ்சிக்கு – வெறியாட்டுப் பறையும், தொண்டகப் பறையும்.
பாலைக்கு - ஆறலைப் பறையும், சூறைகோட் பறையும்.
மருதத்திற்கு – நெல்லரிப் பறை.
நெய்தலுக்கு - நாவாய்ப் பறை.
'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப.' – (பொருள். 20)
அகநானூறு
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில், தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்று விட்டான். கார்காலத் தொடக்கத்தில் வருவேன் என்று சென்றவன் வரவில்லை. கார்காலத்தில் இயற்கையில் எழும் பல நிகழ்ச்சிகளைக் காணத் தலைவியின் உள்ளத்தில் வேதனை மிகப் பெருகிற்று. அதைக் காட்டித் தன் தோழியிடம் கூறிப் புலம்புகிறாள் தலைவி. பறையொலிபோல இடிமுழக்கத்தினை உடைய மேகங்கள் குளிர்ந்த மழையைப் பெய்தன. அதனால் நிலத்தின் கோடை வருத்தம் அகன்றது. முல்லை அரும்புகள் தோன்றி மலர்ந்தன. அதனால் காடும் நறுமணம் பெற்றது. ஆனால் தன் நிலை மாறவில்லையே என்று வருந்தினாள்.
'மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக்குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்,
காடே கம்மென் றன்றே; .. ' - (ஒரோடோகத்துக் கந்தரத்தனார்- பாடல். 23)
தலைவன் பொருளீட்டச் சென்று விட்டான். தலைவி துயருற்றுத் தன் தோழிக்குக் கூறியது. வயலிலே வெண்நெல்லை அரிவோரது பின்பக்கமாக நின்று ஒலிக்கப்படும் பறை ஒலியினைக் கேட்டு, நெடுங்கால்களை உடைய நாரையானது அஞ்சிச் சென்று பனைமரத்தின் அகமடலிலே தங்கும். அத்தகைய துறையினை உடையவன் நம் தலைவன். அவனை நாடி என் நெஞ்சம் சென்று விட்டது. அது அவனுடன் தங்கியிருப்பதாக!
'..வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வரியின் பிளிற்றிப் பெண்ணை
அகமடல் சேக்கும் துறைவன்
இன்துயில் மார்பில் சென்றஎன் நெஞ்சே!' (குன்றியனார்- பாடல். 40-13-17)
தன் காதலனுடன் உடன் போக்கில் சென்று விட்டாள் தலைமகள். அதனால் உள்ளங் கலங்கினாள் செவிலித்தாய். தன் மகளிடம் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள் 'அவன் தன் தோளே துணையாக அணைத்தாலும் துயில மாட்டாளே!. வேட்டம் புரியும் கள்வரது, ஏறுகளைக் கவர்ந்து கொள்ள அறையப்படும் பறையின் ஒலியினைக் கேட்டும் அஞ்சாதிருப்பாளோ!' என்று கலங்குகின்றாள்.
'.. தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்,
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள் கொள்? ஏனக் கலுழும்என் நெஞ்சே!'–(கண்ணம் புல்லனார்- 63-16-19)
(சேக்கோள் - ஏறுகோள், பறை)
குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது குறுந்தொகையாகும். தலைமகன் தலைமகளை உடன்கொண்டு சென்ற பொழுது, தோழி அதைச் செவிலிக்குக் கூறினாள். அதைச் செவிலி நற்றாய்க்கும் எடுத்துக் கூறினாள். 'பறைபடப் பணிலம் ஆர்ப்ப' என்றது, பறைகள் ஒலிக்கவும் சங்குகள் முழங்கவும், கடவுள் தன்மையோடு, இடைச்சுரத்து அவன் வரைந்து கொண்டான் என்பது தெளிவாகின்றது.
'பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நல்லூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.' – (ஒளவையார் - பாடல்- 15)
'கள்ளைப் பெய்த கலத்தைப் போன்ற, உவரினையுடைய சுனையிடத்தவான மூங்கிற்பிளவுகளால், பறைகள் இல்லத்தில் ஒலிக்கும் நாடனாகிய மன்னன், முன்னர் நிலவில் எம்தோளை மணந்தனன்;. இன்று முல்லை முகைகள் கமழ்கின்றன.' என்று கிழத்தி தோழிக்கு உரைக்க, தோழி 'நீ களவை நீளவிடாது வரைவுகடாவினதால் வந்த பேறு' என்று கிழத்திக்குக் கூறினாள்.
'மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
விட்டுவர்ச் சுனைய பகுவாய்த் தட்டைப்
பறையிற் கறங்கு நாதன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
மணந்தனன் மன்னன்எம் தோளே
இன்று முல்லை முகைநா றும்மே.' – (அரிசில்கிழார் - பாடல்- 193)
கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது கலித்தொகையாகும். ஆயமகள் ஒருத்தி ஆயமகன் ஒருவனைக் காதலித்தாள். களவில் அவனைக் கூடி இன்புற்றாள். அதனால் ஊரலர் எழுந்தது. அவன் ஏறு தழுவித் தன்னை அடைவானா? ஏன்று அங்கலாய்த்தாள். அந்த நாளும் வந்தது. வெற்றி அடைவோனுக்கு அவளை மணம் செய்து கொடுக்கவும் அவள் தமர் இசைந்தனர். ஒருநாள் ஆயர்கள் எல்லாரும் ஒன்று கூடி முறைப்படி அறிவித்து, மதிபோன்ற மகளிரையும், தோழிப் பெண்களையும் ஒப்பித்து நிறுத்தினர். அப்பொழுது பறைகள் மிகுந்த ஓசையுடன் முழங்கின. மக்கள் ஆரவாரம் செய்தனர். ஏறு தழுவுவோர் எதிராகக் காத்து நின்றனர். பறை முழக்கத்தால் வெருண்ட ஏறுகள் பொதுவர்கள் மேலே சீறிப்பாய்ந்தன.
' .. அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய்சூழ்ந்த மதிபோல, மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி,
அவ்வழிப், பறைஎழுந்து இசைப்பப், பல்லவர் ஆர்ப்பக்,
குறையா மைந்தர் கோள்எதிர் எடுத்த –
நறைவலம் செய்விடா இறுத்தன ஏறு,..' - (நல்லுருத்திரனார்- முல்லைக்கலி- 4-26-31)
அன்று அவள் முழுமதியாய்த் திகழ்ந்தாள். இன்று காதலன் பிரிவால் அவள் நெற்றித் திலகமிழந்து, பசலை மேனியாய், இனியவை மறந்து வாடுகின்றாள். யாழிசை கேட்டு மயங்கி வந்தாள். உடனே யாழிசையை நிறுத்தி, திடுமெனப் பறை அறைந்தது போல, ஒருவன் வந்தான், காதலித்தான், மயங்கினேன், கைவிட்டான், கலங்கினேன், நிலையிழந்தேன். அவனைக் கொண்டு வந்தால் பழைய நிறைவு பெறுவேன். அவன் மறைந்தால், என் நெஞ்சும் அவனுடன் சென்று விடுகின்றதே! யான் என் செய்வேன் என்று பதறுகின்றாள்.
'.. மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,
அறை கொன்று, மற்று அதன் ஆர்உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் - அவனை
அறை நவநாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற – மறையின் என்
மென்தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்
சென்று, சேட்பட்டது என் நெஞ்சு ..' – (நல்லந்துவனார்- நெய்தற்கலி- 26-10-16)
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில், தலைமகன் தலைமகளோடு வையையில் புதுப்புனலில் ஆடி மகிழ்ந்தான். ஆங்கே, உழவர்கள் களிப்பினாலே ஆடி மகிழவும், முழவுகளும,; பறைகளும் ஒலிக்கப் புதுப்புனல் விழாப் பொலிவோடு நடந்தது. ஆடற்கலை அறியா ஓர் அரிவை தாறுமாறாக ஆடிவருவதைப் போலவும், ஊடற் கலையை நன்கறியா ஓரு பெண், உவகைமிக்காளாய்ச்; செருக்கோடு செல்வதுபோலவும், புதுவெள்ளம் தன்போக்கிற் செருக்குடன் சென்றது என்று பாடல் தொடர்கின்றது.
'.. உழவர் களிதூங்க முழுவு பணைமுரல
ஆட லறியா அரிவை போலவும்
ஊட லறியா உவகைகள் போவும்
வேண்டுவழி நடந்து .. .. .. .. ' – (மையோடக் கோவனார்- வையை(7)-16-19)
இன்னொரு பாடலில், கார்காலத்துக்குமுன் வந்து விடுவேனென்று கூறிச் சென்ற தலைவன் வந்தானில்லை. அதனால் தலைவி துயருற்றாள். மலைப்பகுதியில் பெருமழை பெய்து, வையையில் புதுப்புனல் பெருக்கெடுத்தது. காவலர்கள் உடைகரைகளை அடைக்க வருமாறு ஊரவரை அழைக்கப் பறையறைதலின் முழுக்கமும் எழுந்தது.
' .. மாந்தீந் தளிரொடு வழையிலை மயக்கி
ஆய்ந்தளவா ஓசை அறையூஉப் பறையறையப்
போந்தது வையைப் புனல், .. .. ..' – (கரும்பிள்ளைப் பூதனார்-வையை(10)-6-8)
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில், 'அன்பர்களிடத்துப் பணிவும், ஆண்மையோடு போரிடும் இயல்பும், முன்னோர்கள் குலமுறை காக்கும் பண்பும், பல போர் வெற்றி பெற்ற மேலோனே! வுhன் தேவர்களும் கேட்க இடி ஓசையுடன் பறை ஒலி ஓசை போன்று பாய்ந்துவரும் அருவிகள், அயிரை என்னும் நீண்ட நெடுமலைத் தொடர் ஆகியன போல, நீ வாழும் நாள் குன்றாது நின்று நீளுவதாக!' ஏன்று புலவர் கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனை வாழ்த்துகின்றார்.
' .. வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை.
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி,
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்!
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல,
தொலையாதாக, நீ வாழும் நாளே!' – (பாடல். 70-20-27)
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில், தலைவன் பொருள் தேட வேற்று நாட்டுக்குப் போக எண்ணினான். அதைத் தலைவிக்குச் சொன்னால் அவள் வருத்தப்படுவாள் எனக் கருதி, தோழியிடத்தே சொன்னான். அதற்குத் தோழி அவன் செல்வதால் வரும் நிலைமையை எடுத்துக் கூறுகிறாள். வெங்காற்றால் அலைப்புண்டு மோதித் துன்புறும் கொன்றைக் கிளைகளைக் காணும் பாணர், அவைபடும் துயருக்கு நோவாது, தாம் பறையினை அடித்து முழக்குவதற்குப் பயன்படுத்தும் குறுந்தடிதானே என்று மயக்கம் கொள்வதுபோல, நும்பிரிவின் வெம்மையாலே சோரும் தலைவியின் நிலைக்கு நீர் இரங்கவில்லையே! இவளைப் பிரிதல் அறத்திற்கும் ஏற்காத ஒரு கொடுந்தன்மையது, என்றும் கூறினாள்.
'வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நீழலின் கழியும்இவ் வுலகத்துக்
காணீர் என்றலோ அரிதே; அதுநனி
பேணீர் ஆகுவிர் ஐய! ஏன் தோழி
பூண்அணி ஆகம் புலம்பப் பாணர்
ஆயிர்ப்புக்கொண் டன்ன கொன்றைஅம் தீங்கனி
புறைஅறை கடிப்பின் அறை அறையாத் துயில்வர
வௌ;வளி வழங்கும் வேய்பயில் அழுவத்து
எம்வம் மிகஉம் அருஞ்சுரம் இறந்து
நன்வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட்பிணிப் பிரிதும்யாம் எனவே.' – (பாடல். 46)
சிலப்பதிகாரம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், ஆறு எறி பறையும் (12-1-40), சிறுபறை (12-20-148), பறை (14-29), பறைக்கண் (14-208), பறைபட (15-46), சிறுபறை (24-1-16), பறையிசை (25-28), அறைபறை (25-177), அறைபறை (25-194), அறைபறை (26-1), கொடும்பறை (26-193), பறைக்கண் (26-208), படுபறை (28-68), பறையூர் (28-76), முழவம் (13-144, 22-140), முழவு (3-61, 141, 5-187, 10-139, 25-6, 28-55) என்று பல இடங்களில் பறை பற்றிப் பேசப்படுவதையும் காண்கின்றோம்.
நான்மணிக்கடிகை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில், பறையின் ஒலி செவியில் விழுந்தால் அசுணமாக்கள் உயிர் வாழா, அறிவுடையோர் ஊக்கத்துக்குப் பங்கம் ஏற்பட்டால் அவர் உயிர் வாழார், மரங்கள் நிறைந்த காட்டில் மூங்கில்களில் நெல் விளைந்த போதே அழிந்து விடும், நற்குணங்கள் நிறைந்தவன் தன் நிறைவுக்குத் தகாத சொல் உண்டாக உயிர் தரியான், என்று விளம்பி நாகனார் என்னும் புலவர் கூறியுள்ளார்.
'பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு.' - (பாடல். 04)
'பறைநன்று பண்ணமையா யாழின்.' – (பாடல். 15) என்ற பாடலில் 'பண் நன்கு அமையப் பெறாத யாழ் இசைக் கருவியினும், பறை என்ற பேரொவியைத் தரும் கருவி சிறந்தாகும்' என்று விளம்பி நாகனார் என்னும் புலவர் கூறுகின்றார்.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு என்ற நூலில், 'பூண்டாங் கிளமுலைப் பொற்றொடி! பூண்ட பறையறையார் போயினார் இல்.' – (பாடல். 84) என்ற பாடலில், 'அணியை அணிந்த கொங்கைகளையும் பொன்னால் ஆன தொடியையும் உடையவளே! தம்மிடம் உள்ள பறையை அடிக்காது சென்றவர் யாரும் இல்லை.' என்று முன்றுறையரையனார் என்னும் புலவர் கூறியுள்ளார்.
திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் 'அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அதனால் நொந்து வருந்தும் அவளது டைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.' என்று திருவள்ளுவர் குறள் பாடினார்.
'அனிச்ப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.' – (குறள். 1115)
முடிவுரை
இதுகாறும், தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திருக்குறள் ஆகிய தமிழ் இலக்கியங்களில் பல்வேறுபட்ட பறை முழக்கங்களின் பாங்கினைப் பார்த்து மகிழ்ந்தோம். இந்தியா, அமெரிக்கா, இலண்டன் ஆகிய நாடுகளிலும் பல பறை இசைக்குழுக்கள் அமைக்கப்பட்டுப் பல நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதையும் காண்கின்றோம். இப்பறையானது இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழருடன் ஒட்டி, உறவாடி, அவர்தம் கலை, கலாசாரம் ஆகியவற்றை மேன்நிலைப்படுத்தி, இசை பரப்பி, மக்களுக்கு உதவிக்கரம் கொடுத்து, தான் அடிபட்டாலும் மௌனம் காத்து, மக்கள் மத்தியில் உலாவுகின்றது. இவ்வருஞ் செயலை நாம் போற்றுவோமாக!.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.