தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:

மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் குங்குமத்தையும், 
அழுத்தமாய் இட்டு, பள பளக்க செய்து
கன்றி சிவந்த இதழ்களும்
அழகுடன் இளக,
தூய்மையில் விட்டிருப்பார்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பார்…

ii

நாட்டு கூத்தும்
நட்டுவாங்கமும்
கோலாட்டமும் கும்மியும்
ஒயிலாட்டமும் சேர்ந்தொலித்து,
இவர்
மகிழ்வை
எடுத்துரைக்க
உருமி, தம்புரா, சங்கு
மேளம் என குமுறி, குமுறி
முழங்குமே…

நோயுற்ற ஓர்
ஆன்மாவை
புதுபிக்கும் -இந்
நிகழ்வுகள்
இப்படியாய் நடந்தேற
மனம்
சற்றே இளைப்பாறும்…

மன்மதன் கதையை
மீண்டும் ஒரு முறை
எடுத்துரைப்பார்…

உணர்ச்சிகள் கொப்புளிக்க
இணையற்ற அக்காதலை,
கர்வத்தை, நெஞ்சுரத்தை
இவர் எடுத்துரைக்கும் விந்தையிலே
மீண்டும் ஒருமுறை
மன்மதன் எழுவான்…

நிலவு எரிகையில்,
விடியும் வரையிலும்
மனமும் அசையும்-அம்
முரணற்ற
காலங்களும்
அசையும்…

குளிரை தடுக்க
சிறு தீ மூட்டி
பின்
அச் சிறு தீயில்
மனித முகங்களையும்
காட்டி
அங்கே…
ஆண்கள், பெண்கள், 
பிள்ளைகள் என
தோட்டமே
செவிமடுக்கும்
அத்,
தலைமுறை கீதங்கள்
ஒரு  சமூகத்தின்
பண்பட்ட நாகரீகத்தை
பறைசாற்ற…
ரதி எனும் நல்லாளின்
வசீகரத்து தங்க குணங்களை
எடுத்தியம்பி…
ஆம்
இவையெல்லாம் - அந்த
பிரட்டின் அதிர்வுக்கே…

சாந்தியும் அமைதியும்
நிறைந்தது
இந்நாட்கள்…

புத்தாண்டும், பொங்கலும், 
தீபாவளியும்
ரதி-மன்மதன் கதை என்றும்
அவ்வப்போது
அரங்கேற்றுவது
இவ்வாழ்க்கை…

ஒன்றன் பின் ஒன்றாய்
தொடரும் இவை -இவ்
வாழ்வியலின் ஒரு கூறு,
ஆனந்த காட்சியிது
நாடக வடிவிலும்
அரங்கேறும் -ஆனால்
வாழ்வோ
சிதிலமடைந்து வீழ்வதாய்
இருக்கும் - இங்கு.
இவ்வாழ்வை,
துரைமார் வாழ்வுடன்
ஒப்பிட கூடுமா?
துரைமார் வாழ்வுடன் -இவை
நெருங்கவும் கூடுமா?
எம்மை ஆள்பவர்களுக்கானது
வாழும் இவ் உலகு…
அவர்களுக்கானது
அசையும் இவ் உலகு…
ஆம்…
அவர்களதே உலகு…
அவர்களுக்கே உலகு…

iii

இம் மனிதர்
எங்கிருப்பினும் - அங்கே
ஓர் ஆங்கில சீமையை
தோற்றிடவே செய்வர்…
ஆங்கில சீமையின்
செல்வ திரட்சி-அத்தனையும்
எம்
வெங்கல தோல் மனிதரின்
கரங்களால்
உருவானதே…

ஆங்கிலேயர்
இருப்பிடத்தில்
விரியும்-ஒரு
பசும் புற்றரை - சூழ்ந்திருக்கும் ஒரு
அழகிய பூங்கா –தோட்டங்கள்
பின் - அவற்றிடை
எழும்
செங்கல் மாளிகை…
உண்மையில் - இவை
ஒரு கம்பீர எழுச்சிதான்…

காலை ஒளியை –ஏந்தி
பருகி
மாலை கருக்கலையும்
முகரும் - அவை.
சோலை பூங்கா,
சுற்றிலும் மலர்கள்… ஓர்
கனவுலக சொர்கத்தை
இப்படியாய் கட்டி எழுப்பி…
வாழ்வின் மேன்மைகள்
இப்படியாய் செழித்துயர
துரைமார் களஞ்சியமும்
நிரம்பி வழியுமே…

iv

கோப்பி காலம் முதல்
தேயிலையின் காலம் வரை…
கோப்பி பறிப்போர் சென்று, மடிய…
கொழுந்து பறிக்கவென, புதியவர் தோன்ற…
பெருமூச்சும் புன்னகையும்…
வியர்வையும் கண்ணீரும் - இடையிடையே
வந்தும் போகும் -
இதுவே இவரது வாழ்க்கை.
மாறுவதுதான் இயற்கை – என்றாலும்
இம்
மாற்றங்கள் தானாய்
வந்ததில்லை காண்…
மனிதனை
வேறாக்கி
நிறுத்தலும் - அவன்
உரிமையை
மற்றவன் தட்டி பறித்தலும்…
பின்,
மனிதன் மேல் மனிதன்
அல்லது அவன் மேல் அரசு பாய்தலும்…
ஒருவன் மறுக்க
மற்றவன் தடுக்க
தேயிலையின் காலம் தொடங்க
கோப்பி பிடுங்கியோர் செத்து மறைய …
இப்படியாய், இப்படியாய் இங்கே
மாற்றங்கள்
தொடர்ந்தன… ஒரு பிரட்டின் அதிர்வுக்காய்…

சாட்டைகள்
அல்லது
சுருக்கு கயிறு
தயார் நிலையில் இருக்கும்.
சட்டத்தின்,
சட்டமற்ற கரங்களும், மு~;டிகளும்
நாடற்றவர்
எமது தசையினை
வாட்டி வதைக்கும்…
ஆனால்,
இவை அணைத்திடுமோ,
எமது
சுதந்திர அன்னையின்
பெருந்தீ சுடரை -இது
அழித்திடுமோ
எம் விடுதலை தாகம் உருவாக்கும்
எம் பெரு நெருப்பை…

உணர்வுகளின்
எழுச்சிகளை
சம்மட்டி அடிகள்
தகர்த்ததுண்டோ?

புனித நெருப்பிடை
சுமை நிறைந்த
சிலுவையின் மத்தியில் - 
அறைப்படும் ஆணிகளிடையே
மனிதன்
தனது
பெயரையும் அழகுற
பொறிக்கத்தான் செய்வான்.
அவை
தூண்டி, ஊக்குவிக்கும்
எம் பெருந்தீ பற்றி எரியவே.

என்
வெண்கல தோல் மனிதர்கள்
மலை உச்சிகளில் இருந்தும்
பள்ளத்தாக்குகள் நெடிதுமாய்
எதிரொலி செய்ய – மலைகளில் ஏறி
குரல் தருவர்…
தெளிவுடனும்
உறுதியாகவும்
ஓர் நூற்றாண்டு காலமாய்-இவர்
குரல் தந்தது போல் - இவர் மீளவும் இங்கே குரல்
தருவர்,
ஒரு  - பிரட்டின் அதிர்வுக்காய்…

வாழ்வு:
வாக்குகள் அற்றதோர் காலம்
இருண்ட அந்த அந்தகாரம்…
நாடற்றவர்
என்ற ஒரு
ஊழ்விதி தீர்ப்பு…
உலர்ந்தோர் உரிமையின்
வற்றிய நிலைபேறு…
அனைத்துமே இங்கோர்
புதியதோர் விடியலை
தோற்றவும்
செய்யும்…

அழிவும் ஆக்கமும்
இணையும் இத்தருணத்தில்தான்
வாழும் மனிதரின்
மூச்சு காற்றில்
பெரு நெருப்பு உருவாகி,
ஓர் நூற்றாண்டு காலத்து
கண்ணீரையும் வியர்வையையும்
சுமந்து வருவன…
ஓராயிரம் யானையின் பலம் கொண்டு
எழுச்சி கொண்டதோர் புதிய சக்தியாய்
இவர் புதிய சூரியனை படைக்க வெளிப்படுவர்.
லட்சோப லட்ச மனிதர்களின் - இந் நூறாண்டு வரலாறு,
புதிய விடியல்களை நோக்கி -இம் மனிதர்களை
உந்தி தள்ளும் -அசைத்து நகர்த்தும்…
ஆம். அவர்
அணி நடை நடப்பர் - இங்கே
அணி நடை நடப்பர்- இப்
பிரட்டின் அதிர்வுகள் சேர்ந்து முழங்கவே
பிரட்டின் அதிர்வுகள் அதிர்ந்து ஓங்கவே…
அணி நடை…

முற்றும்.

முடிவுரை:

வேலுப்பிள்ளையின், இந் நெடுங்கவிதை அழகுற மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை எனலாம். மூலத்தின் சிறப்பு அதிகமான சந்தர்ப்பங்களில் மூலத்துடனேயே அடங்கி விடும். வேதனையே மிஞ்சும்.

போலிஸ் வேனில், அடைப்பட்ட மனிதர்கள், தொண்டமான் உட்பட கிட்டத்தட்ட பத்து பேர்களாவர். இவர்களில், வேலுப்பிள்ளை என்பவர் மாத்திரமே அப்போதைய உணர்வினை பதிவு செய்ய துணிந்தவர். இதுவே, அவரை வேறுபடுத்தி வரலாற்றின் முன் நிறுத்துகின்றது. தனது, ‘அப்போதைய உணர்வினை’ சிரு~;டித்து கொள்ள, அவர் தன் வாழ்வில் கடைப்பிடித்திருக்க கூடிய விரதங்கள் யாவை என்பதெல்லாம், வாழ்வை ஆழமாக பார்க்க தெரிந்த, எவருக்கும் புரிய கூடியதாகவே இருக்கும். இத்துடன் தான் படித்த அல்லது தான் நேசித்த செழுமைமிக்க ஆங்கில கவிதை வரிகளையும் போலிஸ் வேனின் யதார்த்தத்தையும் இணைத்து உள்வாங்கும் இம்மனிதன், தவிர்க்க முடியாமல் தன் இதயத்தை அழுத்திய எழுத்துக்களை வெளியே உருட்டி விட நிர்பந்திக்கப்படுகின்றான். 

இக்காரணத்தினாலேயே, இவன், மலையகத்தின் ஒரே ஒரு பழம் பெரு பாணனாகவும் திகழ்கின்றான். தனது மக்களுக்கான சுவாசத்தை, அவன், பத்தனை நிலங்களில் மண்வெட்டிகளுடன் வயலை கிளரும் இந்நாட்டின் தென்னிலங்கை விவசாயி முதல் மலைகளில் ஏறும் தொழிலாளி வரை இணைத்து பார்ப்பதில் புதிய கவிதையை படைக்கின்றான். இந்நெடுங்கவிதைக்காக, வேலுப்பிள்ளை எழுதியுள்ள மிக சுருக்கமான பூர்வாங்க வாசகம் இதனையே கூறுவதாய் இருக்கின்றது. சுருக்கமாக சொல்வோமெனில், கவிஞன் என்ற ரீதியிலும் சரி, தான் கொண்ட அரசியல் என்ற ரீதியிலும் சரி இவன் வேறுபட்ட ஒருவனாய் மலையக வரலாற்றில் தோற்றம் தரும் முன்னோடிகளில் ஒருவன் என்ற ஆதங்கத்தோடு இம் முடிவுரையை நாம் நிறைவு செய்யலாம்.

பாரம் மிகுந்த சிலுவைகளை சுமந்தவர்கள் பலர். ஆனால், தங்களின் பெயர் அச் சிலுவைகளில் அழகுற பொறிப்படும் என்ற எதிர்ப்பார்ப்போடு அவர்கள் அச்சிலுவைகளை சுமந்தார்கள் இல்லை எனலாம். அவர்கள் சுமந்ததும், வரலாற்றில் அவர்களின் பெயர்கள் அச்சிலுவைகளில் பொறிக்கப்பட்டதும் அவர் அறியா அல்லது அவர் எண்ணா வரலாற்று சமாச்சாரங்களாயின. இவற்றையும் பதிவு செய்யும் மலையகத்தின் இந்த பழம் பெரு பாணனுக்கு, இரு இலைகளினதும் ஒரு குருத்தினதும் வணக்கம் என்றும் உரித்ததாகும்.

நாழிக்கு நாழி
வீதியில் நின்று
என்
யாழினை எடுத்து
என் கீதத்தை
இசைப்பேன்…

என் பாடல்கள் யாவும்
ஈழத்தின் மானுடர்க்காய்…
வயல், புல்வெளிகளிலும்
ரப்பர், தேயிலை தோட்டங்களிலும்
பிறந்திட்ட மானுடர்க்காய்
ஆம் நான் காதலிக்கும்
அவர்களுக்காய்…!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

உசாத்துணை நூல்கள்

1. 'இலங்கை தேயிலைத் தோட்டத்திலே' - மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை (The Ceylon  Tea Garden ஆங்கில நெடுங்கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு - சக்தீ அ.பால - ஐயா , பாக்கியா  பதிப்பகம், 1956, 2007Beaches & Islands
2. தேயிலைத் தோட்டத்திலே - ஆங்கில மூலம்- ஸி.வி.வேலுப்பிள்ளை  / தமிழாக்கம் - சக்தீ அ.பாலையா , செய்தி பதிப்பகம், 1969

* டிஜிட்டல் ஓவியம் - கந்தையா இரமணிதரன் 


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்