- கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன்,உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
1. சிம்மவிஷ்ணு 25 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி. 579) கண்டுபிடிப்பு & சோழர்கால (கி.பி.12-13) கல்வெட்டு கண்டுபிடிப்பு
மாவட்டம் – தர்மபுரி
வட்டம் - அரூர்
ஊர் - மல்லூத்து
எழுத்து - வட்டெழுத்து
கல்வெட்டு கண்டறிந்த நாள் - 29.12. 2025
கல்வெட்டு அளவு - இரண்டு அடி ஒன்பது அங்குலம் இரண்டு அடி மூன்று அங்குலம்
29.12.2025 தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மல்லூத்து என்ற கிராமத்தில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு (கி.பி. 579) 25 ஆட்சியாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ் அய்வில் புதிய வரவு. வட்டெழுத்தில் உள்ள இந்தக் கல்வெட்டு மல்லுத்து கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கண்டறியபட்ட இந்நடுகல் கல்வெட்டு வேடியப்பன் தெய்வமாக அவ்வூர் மக்களால் வழிபட்டுவரப்படுகிறது.
கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் தற்கால தமிழ் எழுத்து வடிவம்
1.கோ விசைய (சிங்க) வி
2. ண்ணபருமற்க்கு யிருப
3. த்தைந் (தா) வது கோ
4. வூர் நாட்டு டெரும்
5. மைத் தொறுக்
6. கொள்ள எ
7. றிந்து பட்டா
8. ன் கங்கிளவரை(சர்)
9. மக்கள் சிங்கவிண்ணன்
10. இளமகன் கீரந்தை
11. மயான் கல்
கல்வெட்டு விளக்கம்
வீரன் இடது பக்கம் பார்த்து இடது காலை முன் வைத்தும் இடது கையில் முக்கோண வடிவிலான கேடயத்தைப் பற்றியும் வலது கையில் வளைந்த வாளினை ஏந்தி உள்ளான். இடையில் அரை ஆடையுடன் காணப்படுகிறான். தலைக்கேசங்களும், காதுகளில் குண்டலங்களும், கழுத்திலும் புஜங்களிலும் ஆபரணங்களும் அணி செய்கின்றன. இடையில் குறுங்கத்தி ஒன்றும் காணப்படுகின்றது. வீரனின் இடது பக்கம் 11 வரிகள் வட்டெழுத்து கல்வெட்டு பாடம் காணப்படுகின்றது. பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணுவின் (பொ. ஆ 557 முதல் 590) வரை 25 ஆவது (பொ. ஆ 579) ஆண்டு நடப்பட்ட நடுகல் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்தியால் அறிந்து கொள்ளக்கூடிய வரலாறு
கோவூர் நாட்டில் (இன்றைய தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டற்குட்பட்ட நடாகும்.) எருமைத் தொறு கவர்ந்த போது கங்க இளவரசனான சிங்க விண்ணனின் வீரரான முக்கல் கிரந்தை இமயான் என்பான் வீர மரணம் அடைந்தான் என இந்நடுகல் கல்வெட்டு கூறுகின்றது.
இந்நடுகள் வெட்சித் திணைக்குரிய மறவனுக்கு எடுக்கப்பட்டதாகும். கி.பி.579 ஆண்டு நடைபெற்ற ஆநிரை கவர்தலில் இறந்துபட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.
இந்நடுகல் கல்வெட்டு கல்வெட்டறிசர் விழுப்புரம் சி.வீரராகவன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி மற்றும் வேடியப்பன் கோயில் பூசாரி பெருமாள் மற்றும் மாணிக்கம் செல்வராஜ் ஆகியார் மேற்பார்வையில் ஆவணப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு 29.12.2025 ஆம் ஆண்டு மாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
2. சோழர்கால (கி.பி.12-13) கல்வெட்டு கண்டுபிடிப்பு
மாவட்டம் – கிருஷ்ணகிரி
வட்டம் - ஊத்தங்கரை
ஊர் - இளவம்பாடி
எழுத்து - சோழர் காலத் தமிழ் எழுத்து
கல்வெட்டு கண்டறிந்த நாள் - 29.12. 2025
கல்வெட்டு ஆளவு - மூன்று அடி ஒன்பது அங்குலம் இரண்டு அடி மூன்று அங்குலம்
29.12.2025 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் இளவம்பாடி காட்டுப்பகுதியில் சோழர் காலத் தமிழ் எழுத்து (இடைக்கால காலம்) 12 - 13 ஆம் நூற்றாண்டு புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் அய்வில் புதிய வரவு. இளவம்பாடி என்ற ஊரின் தெற்கே உள்ள காட்டுப் பகுதியில் இந்தக் நடுகல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இளவம்பாடி கிராமத்தில் உள்ள மக்களால் இந்த நடுகல் கல்வெட்டு வேடியப்பன் தெய்வமாக வழிபட்டு வரப்படுகிறது.
கல்வெட்டின் வடிவம் மற்றும் அதில் உள்ள எழுத்து வருமாறு உள்ளது.
கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் தற்கால தமிழ் எழுத்து வடிவம்
ஸ்வஸ்தி இரண்டா
வது அண்ணயன்
ஆளா நில (ற்)க கோவூர் நாட்டு
சிறுபுலூர் தாழ்புனாகர் ம
கன்மொடையனூரன் முங்கல் ப
ட்டான்
நடுகல் வீரனின் தலைக்கு மேல் ஆறு வரிகள் கல்வெட்டு பாடம் ஆய்வு செய்யப்பட்டது.புடைப்பாகச் செதுக்கப்பட்ட வீரன் இடது பக்கம் பார்த்தவாறு நிற்கிறான். அவனது இடது கையில் வில்லேந்தியவாறும் வலது கரத்தில் அம்பினைக் கொண்டு போரிடுவது போன்றும் காட்சி உள்ளது. இடையில் அரையாடை அணிந்துள்ளான். வீரனின் உடலில் இரு அம்புகள் தைத்துள்ளன. மேலும், வீரனின் முன்னர் தரையில் வாள்கள் இரண்டு நிற்க வைத்தவாறு உள்ளன. அவை அரை அடி மற்றும் முக்கால் அடி அளவில் உள்ளன. வீரன் உருவமும் கல்வெட்டும் மூன்று அடி ஒன்பது அங்குலம் உயரமும் 2 அடி 3 அங்குலம் அகலமும் கொண்ட பலகையில் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டில் உள்ள எழுத்து அமைதியை கொண்டு இதன் காலம் பொது ஆண்டு 12 - 13 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்கின்றனர் ஆய்வாளர்கள். மங்களச் சொல்லுடன் கல்வெட்டு பாடம் ஆரம்பமாகிறது.
கல்வெட்டுச் செய்தியால் அறிந்து கொள்ளக்கூடிய வரலாறு
கோவூர் நாட்டு பிரிவை அப்போது ஆண்ட தலைவன் அண்ணயன் என்பான் இரண்டு ஆண்டுகளே ஆட்சி கண்டு ஏதோ ஒரு சண்டை காரணத்தினால் ஆளா நிற்க தலைவனுக்காக அந்நாட்டுக்குட்பட்ட சிறுபுல் ஊரைச் சார்ந்த ‘தாழிப்பூனாகனின் மகன் முங்கல்’ என்பான் தன் தலைவனுக்காக அச்சண்டையில் மார்பில் அம்புகள் இரண்டு தைத்து வீர மரணம் அடைந்ததை இந்நடுகள் கல்வெட்டு பாடம் கூறுகின்றது.
அண்ணயன் ஆளா நிற்க என்பதில், ‘நிற்க’ என்ற சொல் ‘நில்க’ என்றும் சிறுபுல்லூர் என்ற சொல் சிறுபுலூர் என்றும் கல்வெட்டு வாசகத்தில் காணப்படுகிறது.
மேலும், கல்வெட்டில் உள்ள செய்தியால் கோவூர் நாடு என்பது தரும்புரி மாவட்டம் அரூர் வட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஆகிய பகுதிகள் வரை இருந்த நாடு என்ற செய்தியும் அறிந்துகொள்ள முடிகின்றது.
பொ. ஆ 12-13 நாம் நூற்றாண்டைச் சார்ந்த இலவம்பாடி நடுகல் கல்வெட்டு கல்வெட்டறிஞர் விழுப்புரம் சி.வீரராகவன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி மற்றும் இளவம்பாடி ஊர் மக்கள் மேற்பார்வையில் ஆவணம் செய்யப்பட்டது. இந்த ஆய்வு 29.12.2025 ஆம் ஆண்டு காலை 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









