ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.
இவர்கள் தமிழ்த்தேசியத்துக்காகப் போராட வேண்டியது இலங்கைப் பாராளுமன்றத்தில் அல்ல. அதற்கு வெளியே. உண்மையில் நீங்கள் தமிழ்த்தேசியவாதிகளாக இருந்தால் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வையுங்கள். அதுவே சரியான தமிழ்த்தேசியக் கோரிக்கைக்கான போராட்டமாகும். அவர்கள் பின்னால் தமிழ்த்தேசியம் என்று அலைபவர்கள் எவரும் அக்கோரிக்கைக்காகப் போராடுங்கள். முடிந்தால் மக்களை அணி திரட்டுங்கள். அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தற்போதுள்ள சூழலில் மக்களில் பெரும்பாலானவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
அவ்விதம் செய்ய உங்களால் முடியவில்லையென்றால் தமிழ்த்தேசியம் , தமிழ்த்தேசியம் என்று மக்களை ஏமாற்றாதீர்கள். நாங்கள் தமிழ்த்தேசியத்துக்காகப்போராடவில்லையென்றால் அவர்களிடம் 'நாங்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றவர்கள். இலங்கையின் தேசிய மொழிகளாகச் சிங்கள, தமிழ் மொழிகள் உள்ளன. பிரச்சினை இவை சமமாகச் சிறுபான்மையினர் விடயத்தில் செயற்படவில்லை. பெளத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அது நீக்கப்பட வேண்டும். அரசியமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டுமென்றே இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை. ஆக, தமிழ்மக்களின், முஸ்லிம் மக்களும் இந்த ஒற்றை ஆட்சிச் சட்ட முறைக்குள் சமமாக நடத்தப்பட வேண்டும், அதற்காகப் போராடுவதே எமது கடமை. எம் மக்களின் உரிமைகள் விடயத்தில் கனடா போன்ற நாடொன்றில் உள்ளதுபோன்ற மாநில சுயாட்சி முறைக்காகப் பாடுபடுவதே சரியான வழி. அதற்காகப் போராடுவோம்' என்று எடுத்துரையுங்கள்.
ஒன்றை நினைவில் வையுங்கள்., இவ்விதம் நீங்கள் போராடுவது தமிழ்த்தேசியப் போராட்டம் அல்ல. இலங்கைத் தேசியத்துக்குள் நின்றவாறு, ஏனென்றால் நீங்கள் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பை ஏற்றுக்கொள்வதாகச் சத்தியம் எடுத்தவர்கள், தமிழர்களின் உரிமைக்கான போராட்டம். இவ்வாறுதான் இதனை அழைக்க முடியும். தமிழ்த்தேசியத்துக்கான போராட்டம் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் பாராளுமன்றத்துக்கு வெளியே நின்று போராடுங்கள்., மக்களை முடிந்தால் அவ்விடயத்தில் அணி திரட்டிப்போராடுங்கள். அதற்கு உங்களுக்கு ஒற்றையாட்சிமுறையிலுள்ள பாராளுமன்றம் தேவையில்லை. அது தரும் பயன்கள் தேவையில்லை.
அநுராவின் உரையில் இனவாதம் பற்றித் தெரிவித்த கருத்துகள் கீழே:
"எமது நாட்டில் இனவாதமும் மதவாதமும் மக்களிடமிருந்து தோன்றுகின்ற ஒன்றல்ல, அரசியலாகும். 1972 இல் தாபித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டைக் கோருபவர்கள் சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கூறியே 1977 தேர்தலில் போட்டியிட்டது. அந்த மேடையில் இருந்த காசி ஆனந்தன் போன்ற கவிஞர்கள் சிங்களவர்களின் குருதியால் சிவப்பு ரோஜாவொன்றை சூடிக்கொள்வதாகக் கூறினார். தமது அதிகாரம் கைநழுவிச் செல்கையில் மரபுரீதியான தமிழ்த் தலைவர்கள் இனவாதத்தை விதைத்தார்கள். அதற்கு இரண்டாம்பட்சமாக அமையாமல் தெற்கின் தலைவர்கள் சிங்கள இனவாதத்தை விதைத்தார்கள். 1981 இல் அபிவிருத்திச்சபை தேர்தலைக் கொள்ளையிட்டு, தீமூட்டி, யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கி, பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தினார்கள். ஜே.ஆர். ஜயவர்தன அதிகார மோகம் காரணமாக தனது கட்டளைக்கு அடிபணியாத அபிவிருத்திச் சபைகூட இருத்தலாகாது எனச் செயற்பட்டார். எஸ். டீ. பண்டாரநாயக்க இத்தருணத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கிணங்க யாழ் நூலகத்தை தீக்கிரையாக்க சென்றவர்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்ததாக ஹன்சாட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாறு இதுதான்.
அந்த மக்களின் சனநாயகத்தை பறித்தெடுத்தமையால் சிறியதாக இருந்த ஆயுதமேந்திய இளைஞர்களின் அமைப்புகள் தற்கொலை குண்டுதாரிகளின் இயக்கம்வரை வளர அபிவிருத்திச் சபை தேர்தலை சீர்குலைத்தமையும் 1983 கறுப்பு யூலையும் வழி சமைத்தது. வடக்கின் இனவாதத்தையும் தெற்கின் இனவாதத்தையும் வளர்த்தெடுத்த மரபுரீதியான அரசியல்வாதிகளால் வடக்கின் தமிழ்த் தலைவர்களுக்கு எதிராக எழுந்துவந்த ஆயுதமேந்திய இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. மறுபுறத்தில் புவிஅரசியலின் தவறுகள் காரணமாக ஜே.ஆர். ஜயவர்தன அமெரிக்க நாட்டமுடைய அரசாட்சிக்குச் சென்றார். அத்தருணமாகும்வேளையில் சோவியத் தேசத்துடனான நட்புறவு அமைப்பே இந்தியாவில் நிலவியது. ஐக்கிய அமெரிக்கா இந்தியாவை இருகூறாகப் பிரிக்கின்ற பிரக்மபுத்ர திட்டமொன்றை வகுத்திருந்தது. அதேவேளையில் இலங்கையை ஐக்கிய அமெரிக்காவின் கொலனியாக மாற்றுவதற்கு எதிராக வடக்கில் நிலவிய சிறிய ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா பாரிய ஒத்தாசைகளை வழங்கியது. இங்கு இன்று ஊனமுற்ற எவருமே இந்த அனர்த்தத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அல்ல. வடக்கிலும் தெற்கிலும் உள்ள நாமனைவரும் இந்த அனர்த்தத்திற்கு பலியானவர்களே. அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பெற்றுக்கொள்வதற்காகவும் மதவாதம், இனவாதத்தை பயன்படுத்தியமையால் ஏராளமான இரத்தமும் கண்ணீரும் வடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான அனுபவம் கொண்டுள்ள ஒரு நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகுமென்பது பொதுமக்களின் ஏற்றுக்கொள்ளலாகும். மீண்டும் இனவாதத்தின் மதவாதத்தின் குப்பல்கள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. சஹரானின் இஸ்லாம் தீவிரவாதத்திற்கும் சிங்களத் தீவிரவாதத்திற்கும் பாதுகாப்பு அமைச்சின் ஒரே கணக்கிலிருந்து எவ்வாறு பணம் போனது? இரண்டு தீவிரவாதக் குழுக்களை அதிகார மோகத்திற்காக கட்டியெழுப்பினார்கள். அந்த கும்பல்கள் இன்றும் படிப்படியாக களமிறங்கத் தொடங்கியுள்ளன. நீண்டகாலமாக கூறிக்கொண்டிருந்த பாஸ்டரின் கூற்று ஒரு தற்செயலான நிகழ்வன்று. 2019 சனாதிபதி தேர்தலின்பொது களணி கங்கையிலிருந்து நாகம் வெளிப்பட்டதாகக்கூறிய அலைவரிசைகளில் அதற்கான செய்திகளுக்காக நீண்டநேரம் ஒதுக்கப்பட்டது. எந்தவோர் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் நாங்கள் இடமளித்தலாகாது. நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
எமது பிள்ளைகளின் தலைமுறையினர் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற ஒரு தேசத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். இனவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்தமையே உலகில் விருத்தியடைந்த ஒவ்வொரு நாட்டினதும் அத்திவாரமாகும். வடக்கின் ஒருசில சம்பவங்கள் அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்படுகிறதா எனும் சந்தேகம் எழுகின்றது. ஆட்சியாளனுக்கு இனவாதம் இன்றியமையாததாகும். ஜே.ஆர். ஜயவர்தனாக்கள் இனவாதத்தால் துள்ளிக்குதிக்கும்போது நாங்கள் ஓர் இயக்கம் என்றவகையில் சிறியவர்களே. அவரது மருமகன் இனவாதத்தினால் குட்டிக்கரணம் அடிக்கையில் நாங்கள் இலங்கையில் மிகவும் பலம்பொருந்திய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பி இனவாதக் குட்டிக்கரணங்களுக்கு இடமளிக்காத கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். இந்தியாவில் பாக்கிஸ்தானில் இருந்த அரசியல் தலைவர்கள் திருடியதால் சிறைக்குச் சென்றுள்ளார்கள். இலங்கையில் ஒரு பிரதேசசபை உறுப்பினர்கூட திருடியதால் சிறைக்குச் செல்லவில்லை. பணமும் பலமும் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும் வறியவர்களுக்கு ஒரு சட்டமும் அமுலாகி வருகின்றது. அதனால் அனைவருக்கும் நியாயமானவகையில் சட்டம் அமுலாகின்ற ஒரு நாட்டை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். தொலைதூர கிராமிய பிரதேசங்களுக்கு போதைத்தூள் எப்படி விரிவாகியது? இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் தேர்தல் இயக்கங்களுக்கு பணத்தை வாரிக்கொட்டுகிறார்கள்.
ரணிலிடமிருந்து மகிந்தவிற்கு அதிகாரம் கைமாறுமாயின் தேர்தலை நடாத்துவார்கள். ரணிலிடமிருந்து சஜித்திற்கு கைமாறுமாயின் அப்போதும் தேர்தலை நடாத்துவார்கள். இதுவரை ஒவ்வொரு பக்கத்திற்கும் ஊசலாடிக்கொண்டிருந்த அரசியல் தொட்டில் இப்போது திடுக்கிட்டுப்போயுள்ளது. இலங்கையின் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இவ்விதமாக குருநாகலுக்கு வருகைதருவார்களென அவர்கள் ஒருபோதுமே நினைக்கவில்லை. எனினும் இத்தகைய சக்தி காரணமாகவே அவர்கள் திடுக்கிட்டுப் போயுள்ளார்கள். இந்த சக்திக்கு எதிராக பகைவன் புரியக்கூடிய எல்லாவிதமான சதிவேலைகளையும் செய்துகொண்டிருக்கிறான். இந்த நாட்டுக் குடிமக்கள் இதைவிட சிறந்த ஒரு நாட்டை எதிர்பார்க்கிறார்கள். அது உங்களுடையதும் எம்மனைவரதும் எதிர்பார்ப்பாகும். சுனாமி போன்ற பேரவலத்தைக்கூட மோசடி ஊழலுக்காக பாவித்தார்கள். யுத்ததத்தில் 'மிக்' தாக்குதல் வானூர்திகள் உள்ளிட்ட அனைத்துக் கொள்வனவுகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். கொவிட் பெருந்தொற்றினையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டினையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய சமுத்திர இரசாயன அழிவையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வோர் அழிவையும் தமக்கு தங்கச் சுரங்கமாக மாற்றிக்கொள்வதற்காக இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற சக்திக்கு அதிகாரம் கைமாறுவதைக்கண்டு ரணில் அஞ்சுகிறார். ராஜபக்ஷ குடும்பமும் அஞ்சுகிறது. பொதுச்சொத்துக்களை சட்டரீதியற்றமுறையில் சேகரித்துக் கொண்டிருக்கின்ற இடங்களிலிருந்து மீண்டும் கையகப்படுத்துகின்ற ஆட்சியொன்றை தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பும்.
குற்றச்செயல் புரிபவர்களின் வலையில் சமூகம் சிக்கவைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து விடுபட தனித்தனியாக பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கரைசேர இயலாது. இதிலிருந்து கரைசேர கூட்டுமுயற்சி அவசியமென நாங்கள் கூறுகிறோம். இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு என்பது அந்த முயற்சியின் பாரிய பங்காக பாரிய பிரவாகமாக மாறியுள்ளது. அந்த குற்றச்செயல் புரிபவர்களின் பிடியில் இருந்து இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்றிக்கொள்ள அவர்களின் அனுபவம், பொறுமை, பயிற்சியை பிரயோகிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களைப்போன்றே பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுகின்ற நாமனைவரும் பொதுவான குற்றச்செயல்புரிபவர்களின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறோம். குற்றச்செயல் புரிபவர்களின் வலைக்குள்ளே இருக்கின்ற எம்மை மோதவிட வேட்டைக்காரர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். எனவே இந்த குற்றச்செயல் புரிபவர்களிடமிருந்தும் கொள்ளையர்களிடமிருந்தும் எமது நாட்டை விடுவித்துக் கொள்கின்ற கூட்டு முயற்சியில் ஒன்றிணைந்து முன்நோக்கி நகர்வதையே நாங்கள் செய்யவேண்டும். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம்."
நன்றி: https://www.facebook.com/anurakumara/posts/pfbid02qJGEr6xYvKzHoFPNVdZ5R4jrS8g3Xmm4yNou8rCSexeLk8WU5j4HrxE7JpdEux8al