"தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
இந்த பாரதியின் வரிகள் எத்தனை கம்பீரமானவை. வாழ்வின் அத்தனை நம்பிக்கையையும் ஊட்டும் அருங்கவிதை.
2020 ஆம் வருடத்தை இப்படி ஒரு புத்தகத்துடன் துவங்குவது மனதிற்கு ஒரு தெம்பையும் நம்பிக்கையும் ஊட்டியது என்று சொல்லலாம். அந்தப் புத்தகம் ஈழத்து புலம்பெயர் மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் படைப்பான "இலங்கையில் பாரதி" என்பதாகும்.
சமூகத்தின் பொதுவுடமைக்காக எழுதிய மகாகவி பாரதி, நாட்டு சுதந்திரத்திற்காகவும், நலிவுற்றோர் சுதந்திரத்திற்காகவும் பாடிய பாடல்களும் கவிதைகளும் ஏ. வி. மெய்யப்ப செட்டியாரின் ( ஏவிஎம்) கையில் காப்புரிமை எனும் பெயரில் சிறைப்பட்டுக் கிடந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர்தான் அவற்றுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல!
மகாகவி பாரதியை ஈழத்து மக்கள் எப்படி எல்லாம் வாசித்து நேசித்து வாழ்ந்து வந்தனர், வருகின்றனர் என்பதையும் அந்தத் தேசியக் கவியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டத்தை ஈழப் பத்திரிகைகளும், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளும் எப்படி எல்லாம் பெருவிழாவாக கொண்டாடினார்கள் என்பதையும் நல்முத்துக்கள் கோர்த்து எடுத்தார் போல் மிக அழகாக முருகபூபதி பதிவு செய்துள்ளார்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுத்த பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ. மு. சிதம்பர ரகுநாதன், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் ஆகியோர் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். பாரதியை ஆய்வுசெய்த ஈழத்து மற்றும் தமிழக அறிஞர்கள், பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், பாரதியைப் பற்றிய முரண்பட்டஎதிர்வினை விமர்சனங்கள் மற்றும் பாரதி குறித்த எண்ணிலா புத்தகங்கள் என்று அத்தனையையும் முருகபூபதி நேர்த்தியாக பட்டியலிட்டுள்ளார்.
எனவே இந்தப் புத்தகம் பாரதி பற்றிய ஆய்வுக்கானசிறந்தகையேடு என்று சொன்னால் மிகையாகாது. இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு, கடந்த நூறு ஆண்டுகளில் இலங்கையின் தமிழ் இலக்கிய உலகு, அதன் சிறந்த படைப்பாளிகள் மற்றும் அது பாரதிக்கு கொடுத்த சிறப்பு என்று பல செய்திகளை விவரிக்கிறது. மற்றும் பாரதியை ஆய்வுசெய்து பத்திரிகைகளில் பிரகடனப்படுத்திய அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நினைவு கூர்கிறது.
போரின் தாக்கத்தினால் புலம்பெயர்ந்த பின்னரும், இணையத்தளமோ கணினியோஇல்லாத காலத்திலும் தன் ஆய்வைத் தொடர்ந்துள்ளார் முருகபூதி. எளிய மொழி நடையுடன், சிறப்பான கட்டுரைகளாக, வெகு பாங்காக தொகுத்துவெளியிட்டுள்ள முருகபூபதி அவர்களின் ஈடுபாடும் மனவலிமையும் என்னை வியப்படைய வைக்கிறது.
இலங்கையில், பாரதி எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தான் என்பது இந்த தொகுப்பின் வாயிலாக தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. பாரதியின் தாக்கம் பாடசாலைகள், நாடகமேடை, தெருக்கூத்து மற்றும் இலக்கிய மலர்கள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிற்பது புலனாகிறது.
அவனது கட்டுரைகளும், கவிதைகளும்சீரிய கருத்துகளாலும் ஊற்றெடுக்கும் சிந்தனைகளாலும் மக்களை செம்மைப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது என்பதும் புரிகிறது.
பாரதியின் ஞானகுரு எமது இலங்கையர் என்று பெருமைமிக இந்தக் கட்டுரையில் எழுதுகிறார். அவர் யாழ்ப்பாணத்து அருளம்பலம் சாமி என்று ஆணித்தரமாக தரவுகளோடு விளக்குகிறார். அன்னாரது கல்லறை பருத்தித்துறை வியாபாரி மூலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறார்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றையும் அங்காங்கு மிக அழகாக தேவையான அளவு விவரிக்கிறார். பாரதி மீது திராவிட கழகத்தினர் வைத்திருந்த எதிர்மறை கருத்துக்களையும், மற்றும் சில அவதூறுகளையும், முரண்பாடான கருத்தியலையும் கூட தெளிவாக சொல்லியிருக்கிறார்.
அப்படியான பொய்களை அம்பலப்படுத்தி தெளிவை ஏற்படுத்த வேண்டியது பாரதியியல் ஆய்வாளர்களின் கடமை என்று நம்பி, தரவுகளோடும், சான்றாதாரங்களோடும் நிறைய உண்மைகளை புடம் போட்டு காட்டுகிறார். ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதைகளையும் பாரதியின் கவிதைகளையும் ஒப்பிட்டிருப்பது சிறப்பு.
ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விவரிக்கும் கோலாகல பாரதி நூற்றாண்டு விழாவை கற்பனை செய்து களிப்புறுகிறேன். தமிழகத்தில் கூட அந்தத் தீர்க்கதரிசியை இப்படி கொண்டாடி இருப்பார்களா..? என்பது சந்தேகமே.
இந்தப் புத்தகத்தின் மூலம் சுமார் ஒரு மாத காலம் நான் பாரதியோடு வாழ்ந்தேன். இந்த அனுபவத்தை தந்த எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
முருகபூபதி ஐயாவின் சுமார் நாற்பது ஆண்டுகால உழைப்பின் வெற்றியாக இதைப் பார்க்கின்றேன்.
பாரதியை நினைத்தால் அவனது எத்தனையோ பாடல்கள் மனதில் மின்னல் போல் வந்து போனாலும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கவிஞனின் செருக்கும் மிடுக்கும் இதில் உள்ளது.
"புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத்
தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லை யென்னும் வசையென்னாற் கழிந்ததன்றே
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது சோதி மிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை"
ஆம், என்னாளும் அழியாத மகா கவிஞன். மகா கவிதை.