ஒரு நல்ல கவிதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் அது தன்னைத்தானே துவக்கிக் கொள்ளுமா? இல்லை அங்கேதான் கவியின் பங்களிப்பு தேவையாயிருக்கிறது. கவிதையின் மேலான ஈடுபாடு என்பது வெறும் வாசக-படைப்பாளி உறவு மட்டுமல்ல. அது மனித நேயத்தோடு கவிஞர் சமூகத்துடன் நடத்தும் தீராத உரையாடல். சக மானுடத்தின் மீதான கரிசனத்தை மையமாகக் கொண்ட இந்த உரையாடல் காலகாலமாக நிகழ்வது. ஆதியில் இந்த உரையாடலைப் பதிவு செய்வதில் கவிதையே பெரும் பங்கு வகித்தது. (இப்பொழுதும் கூட அப்படித்தான். ஆனால் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.) அதனாலேயே கவிதையைக் கலையின் ஆதி வடிவம் என்கிறோம். அதனாலேயே கவிதை மீது படைப்பாளிகளுக்கு ஆகப் பெரிய ஈடுபாடும் அன்பும் இருக்கிறது. இவள் பாரதி தன்னைக் கவிதை மீது காதல் கொண்டவராகவே பிரகடனம் செய்கிறார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால் ஒவ்வொருவரின் கவிதை உலகமென்பதும் வெவ்வேறு மாதிரியானதாகவே இருக்கும்.
இவள் பாரதியின் கவிதை உலகம் எளிய நுண்ணிய சிறுசிறு வெடிப்புகள் உள்ளோடும் வாழ்க்கை குறித்த பிரமிப்பாக, எழுதப்பட்டிருந்தாலும் அது பிரபஞ்ச ஆச்சரியங்களை நோக்கியே தன் இலக்கைக் கொண்டிருக்கிறது. எந்த பிரபஞ்ச ஆச்சரியமும் நிகழ்வும் பூமிக்கு வரும்போதே, உயிரும் வாழ்வும் பெறுகிறது. ஒரு கவிதை, ஜெயமோகனுடனான உரையாடலின் நினைவிலிருந்து சொல்கிறேன்,
”மலை அசையாமல் இருக்கிறது
நீரில் தெரியும் அதன் பிம்பத்தை
ஆடும் அலை அசைத்து விடுகிறது.”
பல ஜென் கவிதைகளில் நிலவின் ஒளி பூமிக்கு வரும்போதுதான் பல அற்புதங்களை உண்டாக்கும்.
”திருடன் திருடாமல்
விட்டுப் போகிறான்
ஜன்னல் வழியே விழும் நிலவொளியை” என்று ஒரு ஹைகு
இந்த அனுபவத்திற்குச் சற்றும் குறையாத ’இவள்பாரதி’யின் பல நல்ல கவிதைகளில் ஒன்று,
“எந்த திசையிலிருந்தும்
உதிப்பதுமில்லை
மறைவதுமில்லை
சூரியன்
எந்த நாளிலும்
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை
நிலவு
எந்த சூழலிலும்
பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை
கவிதை
எங்கும் எதிலும்
எப்போதுமிருக்கிற கவிதை
தன்னை வெளிப் படுத்துகிறது
யாரேனும் அனுமதிக்கையில்”
நான் குறிப்பிட்ட ஜென் கவிதைகளை இவள்பாரதி கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம். அது விஷயமில்லை, ஆனால் அவரது “எந்தவொரு செயலும்/ எந்தவொரு உணவும்/ எந்தவொரு உறவும்/ எந்தவொரு வார்த்தையும் / எந்த ஊரும் / எந்தவொரு புத்தகமும்/ எந்த வொரு வீடும்/ எந்த வொரு செடியும்/ எந்தவொரு கோளும்/ ஏதேனுமொரு சாயலைக்/ கொண்டுதானிருக்கிறது/ இதோ இந்தக் கவிதையும் கூட” ’சாயல்’ என்கிற இவள் பாரதியின் கவிதை, கவிதை என்ற அளவிலும் உண்மை என்ற அளவிலும் சிறப்பாக வந்திருக்கிறது.
பொதுவாக இந்தக் கவிதையில் வரும் ‘அடுக்குதல்கள்’ இன்னும் சில கவிதைகளிலும் வருகிறது. உதாரணமாக “எறும்பு” கவிதை. அதிலும் எறும்புகள் இன்னின்ன செய்யுமா என்ற அடுக்குதல்கள் வருகின்றன. இவை வித்தியாசமானதாகவும் ஒரு கட்டுப்பாடான அளவோடும் இருப்பதுதான் இவள் பாரதியின் சிறப்பு. கொஞ்சம் கூடினாலும், அதிகப்படியான வார்த்தைகள் வாசிப்பவர்க்குச் சலிப்பை ஏற்படுத்தி விடும். இங்கேதான் மீண்டும் சொல்ல வேண்டியதிருக்கிறது, ஒரு நல்ல கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்ளும்.
‘சாப்பிட வாருங்கள்
நண்பர்களே
எனது செங்குருதியினை
கடுகு தாளித்துப் பொறியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது நினைவுகளையும்
மேசைமீது வைத்துள்ளேன்
உங்களில் யாராவது
சோறாகச் சமைய சம்மதமெனில்
அமரலாம்
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்”
கடைசி இரு வரிகள், ”குஞ்சுகளுக்கான உணவுடன், கூடு இருக்கும் கிளையில் வந்தமரும் தாய்ப் பறவை” போல கச்சிதமாக வந்தமர்ந்து, இதை நல்ல கவிதையாக்கி முடித்து வைக்கிறது. பறவை அமர்கையில் அசையும் அந்தக் கிளையின் அசைவு போல நாமும் மெலிதாக அதிர்கிறோம்.
கவிதை ஆக்கத்தில் சமயத்தில் வார்த்தைகள் சங்கப்படுத்தவும் செய்யும்.
”ஓவியத்தையொத்தக் காட்சி”
ஓவியத்தையொத்த
நமது பயணத்தில்
கண்ணில் தென்பட்ட
அத்தனை வண்ணங்களையும்
குழைத்துப் பூசியிருந்தோம்
கடலும் வானும் தோற்றுப்போகும்
நீலத்தில் நெருக்கத்தையும்
தும்பையும் நிலவும் பின் வாங்கும்
வெள்ளையில் தூய்மையையும்
குருதியும் ரோஜாவும் வெட்கப்படும்
சிவப்பில் சிந்தனையையும்
கரு விழியும் இருளும் கண்டறியாத
கருப்பில் ரகசியங்களையும்
சூரியனும் சூரிய காந்தியும் பார்த்திராத
மஞ்சளில் தெளிவினையும்
புல்வெளியையும் அடர்காடுகளையும்
மிஞ்சும் பச்சையில்
விருப்பங்களையும்
சேர்த்து வரைந்த
ஓவியத்தையொத்தக் காட்சியை
இதுவரை பாதுகாத்து வருகிறோம்
யார் கண்ணும் பட்டு விடாமல்”
’ஓவியத்தை ஒத்த காட்சி’என்று இரண்டு இடத்தில் வருவதை தவிர்க்கலாம். குழைத்துப் பூசினால் ஒரு நாளும் ஓவியம் வராது. தூரிகையின் செல்ல வருடல் என்பதே ஓவியம். உக்கிரமான தீற்றலில் கூட ஒரு தேர்ந்த, திடமான வேகத்தோடு நளினமும் இருக்கும். கடைசி வரியில் கவிதை திசையறியாமல் தடுமாறுவது போலொரு தோற்றம், மீதமுள்ள அற்புதமான வரிகளை வீணடிக்கிறதோ என்று தோன்றுகிறது. கவிதை இன்னும் முடியவில்லை போலவுமிருக்கிறது. ஒரு வேளை, ”மூடிப் பாதுகாத்து வருகிறோம் யார் கண்ணும் பட்டு விடாமல் ”என்று இருந்தால் ஒரு முடிவு இருக்குமோ. இது எனது ஆதங்கம் மட்டுமே. இப்படிச் சில குறைகள்(?) சில கவிதைகளிலிருந்தாலும் பொதுவான கவிதையாக்கத்தில் இவள் பாரதியின் 90 சதவிகிதக் கவிதைகள் செறிவாகவே இருக்கின்றன. ’சாம்பல் துகள்’,’உதிர்ந்த இறகு’ ’பிம்பம்’ ‘வலியின் உச்சம்’, என மிக அற்புதமான கவிதைகள் உள்ளன.
” வெற்றிடத்தின் கடைசிப் புள்ளி” என்கிற கவிதை படிக்கும்போது என்னில் அலையடித்தவை இவை, பூமிக்கோ, அல்லது கோள்களுக்கோ மைய்யம் இருக்கிறது. விட்டம், சுற்றளவு எல்லாம் கணிக்க முடியும். ஆனால் இது பிரபஞ்சத்திற்குப் பொருந்தாது. இந்த பிரபஞ்சத்தின் எந்தப் புள்ளியும் அதன் மையம் என்பார்கள். வெளியின் பிரம்மாண்ட விரிவைப் பொறுத்து காலமும் உறைந்து விட்ட ஒன்றுதான். அதன் ஏதோ ஒரு புள்ளியில் புள்ளியாக இருக்கும் நாமதில் இருந்தும் இல்லாத மாதிரித்தான். பிரபஞ்சத்தை விட்டு பெண் உலகினிற்குள் வந்தால் அந்த உலகில் அவனின் அதிகாரம் அவளை அடக்கி வைக்கிறது.
உனது கேள்விகளை
உனது கோபங்களை
எவ்வித கவசமுமின்றி
எதிர்கொள்வதென
இப்போதைக்கு
உத்தேசித்துள்ளேன்.
வெற்றிடத்தின்
கடைசிப்புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைப் போல் நீயும்
ஒரு தோழியைப் போல் நானும்”
அவர் கவிதையில் வெளிப்படையாகச் சொல்லவில்லை ஆனால் எனக்குத் தோன்றுகிறது... அந்தக் கடைசிப் புள்ளி மறந்து விடுமா,பிரபஞ்சப் புள்ளி போல சமத்துவம் ஆகி விடுமா.
’பதற்றம்’ என்கிற கவிதையில் உள்ளீடாக நாய்க் குட்டி போல ஒரு படிமம் செயல்படுவது என்னைப் பொறுத்து தமிழில் புதிய முயற்சியென்று சொல்லுவேன்
”ஒரு தொகுப்பு வெளியிட கவிதை எழுத வேண்டும் என்று எழுதப்படுவதில்லை என் கவிதைகள் “ என்று இவள் பாரதி தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. வேம்பும், வாகையும் இலுப்பையும், இன்னும் இளவேனில் மரங்களும், பங்குனி சித்திரை வந்து விட்டதா என்று காலண்டர் பார்த்தா பூக்கின்றன... இவள் பாரதியின் கவிதைகளும் அதே போல் தன்னியல்பாக மணம் நிறைப்பவை.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.