முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

முல்லை நிலம்

            முல்லை நிலமானது, 1.புறவு, 2.கானம், 3.கான், 4.மென்புலம், 5.முறம்புகண், 6.வறந்த ஞாலம், 7.செந்நிலம், 8.வன்புலம், 9.புன்புலம், 10.இருநிலம் என்னும் பத்துச் சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு பேயனரால் வருணிக்கப்பெற்றுள்ளன என்பதை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.

            முல்லை நிலமாகிய ‘புறவு’ என்பது ‘புறவு’ என்னும் பெயரில் ஐங்.முல்.404:3-4; 405:2-4; 406:3-4; 411:1-2; 412:1-3;  413:1-4;  414:1-4;  415:1-4; 416:1-5;    417:1-3;    418:1-2;    419:1-4;    420:1-3;    421:1-2;    424:1;    462:5;    485:4;    494:1-2;    495:1-2 ஆகிய பத்தொன்பது (19) பாடல்களில் ‘நறும்பூந்தண்’புறவு, ‘பூஅணி கொண்டன்றால்’ புறவு, ‘நறுந்தண்’புறவு, ‘மணம்கமழ்’புறவு, ‘கவினிப்’புறவு, ‘கார்கலந்தன்றால்’புறவு, ‘அழிதுளி தலைஇய’ புறவு, ‘நன்னலம் எய்தினை’ புறவு, ‘நறும்பூம்’ புறவு, ‘முகைஅவிழ்’புறவு, ‘மலர்அணிப்’புறவு, ‘தண்கமழ்’புறவு என்னும் அடைகளுடன் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது.

புறவு

                புறவாகிய முல்லை நிலமானது நறுமணம் மிக்கப் பல மலர்கள் மலர்ந்து, பல வண்ண நிறங்களையுடைய மலர்கள் சூழ்ந்த புலமாக அழகுபெற்று விளங்குகின்றது. இதனை,

“காயா கொன்றை நெய்தல் முல்லை
போதுஅவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்
பூஅணி கொண்டன்றால் புறவே.”1              

என்னும் பாடலும்,

“பொன்என மலர்ந்த கொன்றை மணிஎனத்
 தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே.”                    

என்னும் பாடலும் எடுத்துரைக்கின்றது. மேற்காணும் பாடல்களில், இடம்பெற்றுள்ள காயா மலர் நீல நிறத்தையும், கொன்றை மலர் பொன் நிறத்தையும், நெய்தல் மலர் கருநிறத்தையும், முல்லை மலர் வெள்ளை நிறத்தையும், தளவம் (செம்முல்லை) காம்பில் சிவப்பு நிறத்தையும் மலரில் வெள்ளை நிறத்தையும் கொண்டு, பிடவம், தோன்றி (செங்காந்தள்) மலரும் மலர்ந்து பல வண்ணங்களுடன் புறவு அழகுறக் காட்சியளிக்கின்றதைக் காணமுடிகின்றது.

            நெய்தல் நிலத்திற்குரிய நெய்தல் மலர் முல்லை நிலத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு, ஒருதிணைக்குரிய மலர் இன்னொரு திணையில் இடம்பெற்றால் இவற்றை அந்நிலத்திற்குரிய மலராகவே கொள்ளவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இதனை,

“எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தில் பயத்த வாகும்.”                

என்னும் நூற்பா எடுத்துரைக்கின்றது.

                முல்லை நிலமாகிய புறவானது மலர்களை மட்டுமல்லாமல் மழை வளத்தினையும் கொண்டு செழிப்படைந்த புலமாகக் காட்சியளிக்கின்றது. இதனை,

“வானம் பாடி வறம்களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவு.”4                                  

என்னும் பாடலும்,

“ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார் தொடங் கின்றால் காமர் புறவே.”5                

என்னும் பாடலும் விளக்குகின்றது. மழையானது வானம்பாடிப் பறவையின் நீர் வேட்கையை நீக்கும் பொருட்டு மிகுந்த மழைபெய்தமை மட்டுமல்லாமல், இடிமுழக்கத்துடன் மிகுந்த மழைபெய்தமையையும் இப்பாடல்களில் காணமுடிகின்றன. இதன்மூலம், வானம்பாடிப்பறவை பாடினால் மழைபொழியும் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்திருப்பதையும் அறியமுடிகின்றது.

காடு

முல்லை நிலமான, ‘காடானது’, ‘காடு’ என்னும் பெயரிலேயே ஐங்.முல்.484:1-2 என்னும் இவ்வொரு (1) பாடலிலும்,  ‘கானம்’, என்னும் சொல்லாட்சியில் ஐங்.முல்.425:1-4; 433:1-3; 465:1-2; 499:1-2; ஆகிய நான்கு (4) பாடல்களிலும் , ‘கான்’ என்னும் பெயரில், ஐங்.முல்.430:1-3; 461:1-2 என்னும் இவ்விரண்டு (2)  பாடல்களிலும், ‘வேனில் நீங்கக் கார்மழை தலைஇ’ காடு, ‘இரங்கும்’ கானம், ‘கார்செய்’கானம், ‘கார்கவின் கொண்ட’ கானம், ‘குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்’ கான், ‘பிடவுமுகை தகைய’ கான் என்னும் அடைகளுடன் வருணிக்கப்பெற்றுள்ளன.

காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடைய முல்லை நிலம் மலர்களைப்பெற்று வளமுடன் காட்சியளிக்கின்றது. இதனை,

“பிடவம் மலர தளவம் நனைய
கார்கவின் கொண்ட கானம்”6                     

என்னும் பாடலும்,

“நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்
கான்கெழு நாடன்”7                                    

என்னும் பாடலும் எடுத்துரைக்கின்றன. இப்பாடல்களின் வாயிலாகப் பிடவம், தளவம் (செம்முல்லை),கொன்றை ஆகியவற்றின் மலர்கள் மலர்ந்து காடானது செழுமையுடன் திகழ்கின்றதைக் காணமுடிகின்றது.

            காடாகிய முல்லைநிலமானது வேனில் காலத்தில் வெப்பமுடைய பகுதியாக இருந்திருக்கின்றது. பின்பு, கார்காலத்தில் மழைபொய்தமையால் அழகுபெற்றுத் திகழ்ந்திருக்கின்றது. இதனை,

“வேனில் நீங்கக் கார்மழை தலைஇ
காடுகவின் கொண்டன்று பொழுது.”8          

என்னும் பாடல் விளக்குகின்றது. இப்பாடலின் மூலம், முல்லைநிலம் வேனில்காலத்தில் வளமிழந்து பாலைப் பகுதியாகக் காட்சியளித்திருக்கின்றது என்பதனை அறியமுடிகின்றது.

மென்புலம்

            ‘மென்புலம்’ (மருதநிலம்) என்னும் பெயரில் முல்லை நிலமானது, ‘மென்’ என்ற அடையுடன் ஐங்.முல்.407:1-4; 489:1-5 என்னும் இவ்விரண்டு (2) பாடல்களில் வருணனைக்காட்சிகள் அமைந்துள்ளன.

முரம்பு

            முல்லைநிலமானது, ‘முரம்பு’ (பருக்கைக்கற்களையுடைய மேட்டுநிலம்) என்னும் பெயரில் ஐங்.முல்.449:1-4 இவ்வொரு பாடலில் வருணனையாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வறந்த ஞாலம்

‘வறந்த ஞாலம்’ (வறட்சிப்பட்டுக்கிடந்த முல்லைநிலம்) என்னும் சொல்லாட்சியில் ‘வறந்த’ என்ற அடையுடன் ஐங்.முல்.452:1-2, இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி இடம்பெற்றுள்ளது சுட்டத்தக்கதாகும்.

பாலையாகிய முல்லையும் முல்லையாகிய பாலையும்

                முல்லை நிலம் வறட்சியுடன் காட்சியளித்திருக்கின்றது என்பதனைக் கீழ்க்காணும் பாடலொன்று எடுத்துரைக்கின்றது.

“வறந்த ஞாலம் தெளிர்ப்ப வீசிக்
கறங்குகுரல் எழிலி கார்செய் தன்றே.”9                 

இப்பாடலில், முல்லைநிலம் கோடைகாலத்தில் நீர்வற்றிய பாலைப்பகுதியாகத் திகழ்ந்திருந்தமையும், வறட்சியுற்ற பாலைப்பகுதி கார்கால மழைபொலிவால் செழிப்படைந்ததையும் காணமுடிகின்றது.

செந்நிலம்

‘செந்நிலம்’ (செம்மண் பாங்கான முல்லைநிலம்) என்னும் பெயரில் ‘செம்மை’ (‘செந்’) என்ற அடையுடன் ஐங்.முல்.495:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்புலம்

‘வன்புலம்’ (முல்லை நிலத்துத் தோட்டக்கால்கள், புன்செய் நிலப்பகுதி) என்னும் சொல்லாட்சியில் ‘வன்மை’ (‘வன்’) என்ற அடையுடன் ஐங்.முல்.469:1-2 இவ்வொரு பாடலில் வருணிக்கப்பட்டுள்ளது எடுத்துரைக்கத்தக்கதாகும்.

இருநிலம்

‘இருநிலம்’ (பெரிய நிலம்) என்னும் பெயரில் ‘இரு’ என்ற அடையுடன் ஐங்.முல்.470:1-2 இவ்வொரு பாடலிலும் வருணிக்கப்பட்டுள்ளது. இவ்வருணனையில் வடிவம் என்னும் வருணனைக்கூறு அமைந்துள்ளது.

மலை

            முல்லை நிலத்தில் இடம்பெற்றுள்ள ‘மலை’யானது, ‘குறும்பல்’பொறை, ‘நெடும்’பொறை, ‘அணிநிற இரும்’பொறை, ‘மாம’லை என்னும் அடைகளுடன், ஐங்.முல்.404:3-4; 430:1-2; 431:2-3; 496: 2 ஆகிய இந்நான்கு பாடல்களில்  வருணனைக்காட்சியாக அமைந்துள்ளது.  மலை வருணனையில் மலையின் வடிவம், அகலம், நீளம், நிறம் ஆகிய வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளன.

                 நீளமான மலையின் மீது குட்டையாக வளர்ந்துள்ள மலர்களையுடைய கொன்றை மரமானது மலர்களைப் பரப்புவதால் மலையானது அழகுடன் காட்சியளிக்கின்றது. இதனை,

“நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை
 அடர்பொன் என்னச் சுடர்இதழ் பகரும்.”10           

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில், நீண்ட மலை, குட்டையான மரம், மலரின் நிறம், மலரின் நிறத்தினைச்சுட்டுவதற்குக் கூறப்பட்ட பொருத்தமான உவமைப் பொருள் ஆகியவற்றை நோக்கும்போது பேயனாரின் நுட்பமான, கூர்மையான புலமைத்திறனை அறியமுடிகின்றது.

புனம்

முல்லைத்திணையில் ‘புனம்’ என்னும் சொல்லாட்சியில் ஐங்.முல்.417:1-2 இப்பாடலில் ‘பலஉடன் ஏர்பரந் தனவால்’ புனம் என்னும் அடையுடன் வருணனை அமைந்துள்ளது. அதாவது, முல்லை நிலத்தில் தினைப்பயிர் செய்யப்பட்ட இடமானது பிற உணவுதானியங்களுடனும், மலர்களுடனும் அழகுபெற்று விளங்குகின்றது. இதனை,

“கார்கலந் தன்றால் புறவே பலஉடன்
ஏர்பரந்தனவால் புனமே”11                          

என்னும் பாடல் விளக்குகின்றது.  தினைப்பயிர் மட்டுமல்லாது வரகு, துவரை, மலர்கள் போன்றவைக் கலந்து அழகுபெற்று முல்லை நிலம் விளங்குவதாக இப்பாடலுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.

நல்வயல்

‘வயல்’ என்னும் பெயரில் ஐங்.முல்.459:3-5 என்னும் இவ்வொரு பாடலில் ‘நல்வயல்’ என்ற அடையுடன் வருணிக்கப்பட்டுள்ளது.

            முல்லைத்திணை வருணனையின் நோக்கம்

முல்லைநில வருணனையில் நிலம் எவ்வெப்பெயர்களில் காணப்படுகின்றது என்பதனை வெளிக்கொணர்தல். பல்வேறு பெயர்களில் வருணனையாக்கம் பெற்றுள்ள முல்லை நிலமானது, முல்லை திரிந்த பகுதி என்பதை எடுத்துரைத்தல். பாழ்பட்ட முல்லையில் பறவையின் நீர்வேட்கையை எடுத்துக்கூறுதல். நிலத்தினுடைய வறட்சியை எடுத்துரைப்பதற்கு நிலத்தில் நீரற்ற தன்மை, முல்லைநிலத்தில் மலர்கள், விலங்குகள் செழுப்புற்றிருந்தன என்று சுட்டுவதன் வாயிலாக நிலத்தினுடைய வளத்தினைக் கூறுதல். முல்லைநிலம் மலர்களால் சூழப்பட்ட மலர்கள் மலர்ந்த புலமாகவே வருணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஆசிரியர் பேயனார் வருணிருத்திருப்பதன் முக்கியநோக்கம் கார்கால வரவினை எடுத்துரைத்து முல்லையின் உரிப்பொருளான ‘இருத்தலை’ எடுத்துரைக்கவேண்டும் என்பதுதான்.

            முல்லைநில வருணனையில் நிலத்தின் குளிர்ச்சி, செந்நிறம், வடிவம், அழகு, காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தோன்றி, பிடவு, மலர்கள், மலரிதழ், நறுமணம், வண்டு, தேரை, வானம்பாடிப் பறவை, மயில், மயிலின் நிறம், புறா, முயல், தேர், குதிரை, கார்காலம், வளம், மென்புலம், வன்புலம், புன்புலம், மலை, மலையின் நிறம், காடு, புனம், வயல் ஆகியவை வருணனைக் கூறுகளாக அமைந்துள்ளன.

குறிப்புகள் :

1.    சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறுமூலமும்உரையும், ஐங்.முல்.412:1-3
2.     மேலது., ஐங்.முல்.420:1-3
3.    சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம், தொல்.அகம்.19.
4.     சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறுமூலமும்உரையும், ஐங்.முல்.418:1-2
5.    மேலது., ஐங்.முல்.411:1-2
6.    மேலது., ஐங்.முல்.499:1-2
7.    மேலது., ஐங்.முல்.430:1-3
8.    மேலது., ஐங்.முல்.484:1-2
9.    மேலது., ஐங்.முல்.452:1-2
10. மேலது., ஐங்.முல்.430:1-2
11. மேலது., ஐங்.முல்.417:1-2

துணைநூல் பட்டியல்:

1.    சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
2.    மாணிக்கணார், அ.   , ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை – 600 017, மறுபதிப்பு:2001.
3.    தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை – 600 113, முதற்பதிப்பு: 2004.
4.    சுப்பிரமணியன்.ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு. பாரி முனை, சென்னை 600 108, முதற் பதிப்பு: 1998.
5.    சுப்பிரமணியன்.ச.வே., கானல் வரி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.600 113. முதற்பதிப்பு:2002.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R