முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)
கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள்
“கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”
என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் - சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.
இறைவனை வழிபாடு செய்
திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும் இதனை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று (கொ.வே.2)என்ற பாடலால் உணரமுடிகிறது
இறைவனை வணங்கு
தினத்தோறும் இறைவனை வணங்க வேண்டும் என்று 89 ஆம் பாடல் கூறுகிறது.இதனை,
‘வைகல் தோறும் தெய்வம் இல்லை’ என்று சுட்டுகிறது.இதன் மூலம் இறைப்பற்றை மக்களிடம் வளர்க்கிறது இந்நூல்.
பெற்றோரே தெய்வங்கள்
தாயும்,தந்தையும் கண்முன்னே காணப்படும் தெய்வங்கள் ஆவார்.இதனை
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் (கொ.வே.1)
என்ற பாடலால் அறியலாம்.மேலும் மற்றொரு பாடலில் தாய் தந்தையரின் குறிப்பை அறிந்து செயலாற்றும் பிள்ளையாக இருப்பதே சிறந்தது இதனை,
ஏவா மக்கள் மூவா மருந்து (கொ.வே.8) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.மற்றொரு 37,38 ஆகிய பாடல்கள் “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்றும் “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்றும் எடுத்துரைக்கின்றன”
இல்லறம் வாழ்வு வாழ்
இல்லறம் என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கணவன்,மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை LIFE OF A HOUSE HOLDER என்று பொருள் விளக்கம் தருகிறது.(ப.108)நல்ல குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளுவது நல்ல அறவாழ்க்கையை மேற்;கொள்ளுவதாக அமையும்.இதனை,
இல்லறம் அல்லது நல்லறம் அன்று (கொ.வே.2) என்ற பாடலால் அறியலாம்.
கருமிகளாக இருக்கக் கூடாது
தாமும் அனுபவிக்காமல் பிறருக்கும் உதவாமல் சேர்த்து வைப்பவரான கருமிகளின் பெரும் செல்வத்தைத் தீயவர்கள் அபகரித்துக் கொள்ளுவார்கள் இதனை,
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (கொ.வே.4) என்ற பாடல் சுட்டுகிறது.
பெண்கள் குறைவாக உண்ண வேண்டும்
அறுசுவை உணவை அருமையாகச் சமைக்க வல்ல பெண்கள்,மென்மையான உடல்வாகையும் ,அழகோடு விளங்கவும் இருக்க வேண்டுமானால் அளவுக்கு மிகாமல் உண்ண வேண்டும்.என்பதை,
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு (கொ.வே.5) என்ற பாடல் குறிப்பிடுகிறது.
ஊருடன் ஒத்து வாழவேண்டும்
ஓற்றுமையே பலம் என்பது பழமொழி இப்பழமொழிக்கு ஏற்ப ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.ஆகவே ஊர் மக்களோடு பகைத்துக் கொள்ளாமல் குடும்பத்தோடும் ஊர் மக்களோடும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று கொன்றைவேந்தன் எடுத்துரைக்கிறது,இதனை,
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் (கொ.வே.6) என்ற பாடல் இயம்புகிறது.
கல்வி
கொன்றைவேந்தனில் கல்வித் தொடர்பானக் கருத்துக்கள் ஏழு பாடல்கள் (7,22,27,50,53,75,91) அமைந்துள்ளன.கல்வி கற்றவர்களையே கண் உடையவர்களாக கருத வேண்டும் என்பதை வள்ளுவர்,
எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டு;ம்
கண்என்ப வாழும் உயிர்க்கு (392) என்ற குறளின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார்.இக்கருத்தையே கொன்றை வேந்தனும் எடுத்துரைக்கிறது.இதனை,
எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும் (கொ.வே.7) என்ற பாடல் மேற்கூறப்பட்ட கருத்திற்கு துணைநிற்கும் விதமாக அமைந்துள்ளச் செய்தியை அறியமுடிகிறது.கல்வியாகிய செல்வமே என்றும் நிலையானது,உண்மையானது என்பதை,
கைப் பொருளின் தன்னின் மெய்ப்பொருள் கல்வி (கொ.வே.22) என்ற பாடல் குறிப்பிடுகிறது.இக்கருத்தையே விவேகசிந்தாமணியும் கூறுகிறது.இதனை,
வெள்ளத்தே போகாது வெந்தனில் வேகாது
கொள்ளத்தான் போகாது,கொடுத்தாலும் குறையாது
கள்ளருக்கும் எட்டாது காவலுக்குள் அமையாது
உள்ளத்தே பொருள் இருக்க ஊரில் உழைத்து உழல்வானேன் (விவேக.பா.69)
என்ற பாடல் கல்விப் பற்றியச் சிந்தனையை எடுத்தோம்பியுள்ளது.
பொறாமை கொள்ளாமை
பொறாமை என்பதற்கு அழுக்காறு என்பது பொருள்.ஒவ்வொரு மக்களும் பொறாமை இல்லாமல் வாழ்வதே சிறந்தது. மனத்தினால் பொறாமை கொள்ளக்கூடாது என்று வள்ளுவர்
அழுக்கொறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்காறி லாத இயல்பு (குறள்.161)
என்ற குறள் வழி குறிப்பிட்டுள்ளார்.கொன்றை வேந்தனும் பொறாமை கொள்ளாமை செய்தியை கூறுகிறது.இதனை,
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (கொ.வே.12) என்ற பாடல்
பிறரிடம் உள்ள அறிவு ஆற்றல் செல்வம் போன்ற எதைப் பற்றியாவது பொறாமையோடு பேசுபவன் தான் பெற்றுள்ள எத்தகைய செல்வத்துக்கும் அழிவைத் தேடிக் கொள்பவன் என்று எடுத்துரைக்கிறது.
சிக்கனமாக வாழ்
சிக்கனமாக வாழ்ந்து தானியத்தையும்,செல்வத்தையும் சம்பாதிக்க வேண்டும்.இதனை,
அஃகமும் காசும் ஆக்கத்திற்கு அழிவு (கொ.வே.13) என்ற பாடல் குறிப்பிடுகிறது.
கற்பு
கற்பின் இலக்கணத்தை தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார்.இதனை,
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.பொருள்.கற்பு.நூற்.1) என்ற நூற்பாவில் கற்பு என்று சொல்லுவது வதுவைச் சடங்களுடன் பொருந்திக் கொள்ளுவதற்குரிய மரபினையுடையோர் கொடுப்ப கொள்வது.இந்நூலும் கற்பு பற்றிய செய்தியை எடுத்துரைக்கிறது இதனை,
கற்பு எனப்படுவது சொல் திறம்பாவை (கொ.வே.14) என்ற பாடல் கணவனுடைய சொல்லுக்கு மாறுபாடமல் நடப்பதே மகளிர்க்கு நல்லது என்பதை புலப்படுத்துகிறது.
மேலும் ஒழுக்கத்தோடு தங்களைத் காத்துக் கொள்ளுவதே பெண்களுக்குரிய சிறப்பு ஆகும்.இதனை,
காவல் தானே பாவையர்க்கு அழகு (கொ.வே.15) என்ற பாடல் குறிப்பிடுகிறது.
பணிவுடைமை
நமக்குக் கீழான நிலையில் உள்ளவரிடத்திலும் பணிவாக பேச வேண்டும்.இதனை,
கீழோர் ஆயினும் தாழ வுரை (கொ.வே.17) என்ற பாடல் மூலம் அறியலாம்.
தீமை உண்டாக கூடிய செயலை செய்யக் கூடாது
நாம் செய்யும் செயலால் பிறருக்கு தீமை உண்டாகுமேயானால் அச்செயலைக் கைவிட வேண்டும்.இதனை,
கெடுவது செய்யின் விடுவது கருமம் (கொ.வே.20) என்ற பாடலால் உணரமுடிகிறது.
குற்றம் சொல்லக் கூடாது
மற்றவர்களிடம் குற்றம் சொல்லக் கூடாது.மீறி சொன்னால் பகைமை உண்டாகும்.இதனை,
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (கொ.வே.25)என்ற பாடல் புலப்படுத்துகிறது.
சூதாட்டம் ஆடக் கூடாது
சூதாட்டம் ஆடக் கூடாது என்பதை “ சூதும் வாதும் வேதனை செய்யும்” என்ற பாடலில் (31) புலப்படுத்தியுள்ளார்.
தூக்கம் கொள்
ஒருவன் காவல் புரிய சென்றாலும் நள்ளிரவில் சிறிது நேரம் தூக்கம் கொள்ள வேண்டும்.இதனை, “சேமம் புகினும் யாமத்து உறங்கு”(33) என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.மற்றொரு பாடலில் சமமான தரையில் படுத்து உறங்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை, ‘ஒத்த இடத்து நித்திரை செய்’ என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.மேலும் 76 ஆம் பாடல் பஞ்சு மெத்தையில் படுத்து தூங்க வேண்டும் என்று கூறுகிறது.இதனை, “மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு”என்று குறிப்பிடுகிறார்.
வேளாண்மை
வேளாண்மையால் வரும் செல்வம் ஒரு போதும் பழுது ஆகாது என்று குறிப்பிடுகிறார்.இதனை
“மேழிச் செல்வம் கோழை படாது”(கொ.வே.77)என்ற பாடல் கூறுவதன் மூலம் வேளாண்மை செய் என்ற கருத்து புலப்படுத்துகிறது.
பெரியோர் அறிவுரைக் கேள்
அறிவும் அநுபவமும் நிறைந்த பெரியோர் கூறக்கூடிய அறவுரைகள் அமிர்தம் போன்றவை ஆகும்.இதனை,
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம் (கொ.வே75) என்ற பாடல் மூலம் பெரியோர் சொல் கேட்க வேண்டும் என்ற கருத்து புலப்படுத்துகிறது.
உணவு கொடுத்து பின் உண்
உதவி செய்யச் செல்வம் இருக்குமானால் பிறருக்கு உணவு அளித்துவிட்டு உண்பாயாக என்று ஒளவையார் குறிப்பிடுகிறார்.இதனை, “சைஒத்து இருந்தால் ஐயம் இட்டுஉண்”(34)என்ற பாடல் மூலம் உணரமுடிகிறது.
முயற்சியுடன் இருக்க வேண்டும்
முயன்று உழைக்காத சோம்பேறி,வறுமையால் துன்புற்றுத் திண்டாடுவார் என்ற கருத்தைப் பதிவுசெய்துள்ளது.இதனைப் பின்வரும் பாடலில் கூறியுள்ளார் ஒளவையார்,
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் (கொ.வே.36) என்ற பாடல் மூலம் அறியலாம்.இதன் மூலம் சோம்பேறி தனம் கூடாது என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளார்.மேலும் மற்றொரு பாடலில் ஊக்கம் தளராமல் இருக்க வேண்டும் என்கிறார் இதனை,
‘ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு’என்ற பாடல் மூலம் அறியலாம்.
பெண்நெறி
ஒரு பெண் கணவன் துடித்துடிக்கும் போது அவளும் துடித்துடிக்க வேண்டும் என்றும்,தன் கணவனைக்கு அவதூறான வார்த்தைகளைப் பேசக் கூடாது என்றும் கூறுகிறது.இதனை,
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு (கொ.வே.41)
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் (கொ.வே.42) என்ற பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிறன்மனைபுகாமை
மற்றவர் மனைவி மீது ஆசை வைத்து அவர் வீட்டிற்கு செல்லக் கூடாது.இதனை 61 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.இதனை,
“பிறன்மனை புகாமை அறம்எனத் தகும்”; என்ற பாடல் குறிப்பிடுகிறது.
விலைமகளை நாடாமை
மைவிழி யார்தம் மனைஅகன்று ஒழுகு(கொ.வே.78) என்ற பாடல் விழியால் உருட்டி மயக்கும் விலைமகளின் வீட்டின் அருகில் போகாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.
புலால் உண்ணாமை
புலால் உணவு உண்ண கூடாது என்ற கருத்தை இந்நூல் எடுத்துரைக்கிறது.இதனை,
புலையும்…………….தவிர்.(63)என்ற பாடல் கூறுகிறது.
கொல்லாமை
எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற கருத்தை இயம்புகிறது.இதனை “………கொலையும்………….தவிர்”(63)என்ற பாடல் குறிப்பிடுகிறது.
களவாடாமை
பிறருக்கு உரிமை உடைய பொருளை கவரக் கூடாது.இதனை,
……………….களவும் தவிர் (63) என்ற பாடல் எடுத்துரைக்கிறது.
விருந்தோம்பல்
தமிழிரின் தலைச்சிறந்த பண்பாடு விருந்தோம்பல் முறையாகும்.கிடைத்தற்கு உரிய அமிழ்தமே கிடைப்பதாய் இருந்தாலும் விருந்தினருடன் உண்ண வேண்டும் என்கிறது இதனை,மருந்தே ஆயினும் விருந்தோடு உண் (கொ.வே.70) என்ற பாடல் குறிப்பிடுகிறது.மேலும் மற்றொரு பாடலில் “விருந்துஇலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்” என்பதில் விருந்தினரை உபசரிக்கும் பண்பு இல்லாதவர்களிடம் இல்லறத்தின் சிறந்த தருமம் நிறைவு பெறாது என்று கூறுவதன் மூலம் விருந்தினரை உபசரிக்க வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது.
முடிவுரை
அறம் என்பதன் பொருள், இறைவனை வழிபாடு செய், பெற்றோரே தெய்வங்கள், இல்லறம் வாழ்வு வாழ், கருமிகளாக இருக்கக் கூடாது, பணிவுடைமை, பெண்கள் குறைவாக உண்ண வேண்டும், விலைமகளை நாடாமை, புலால் உண்ணாமை, கொல்லாமை,களவாடமை, முயற்சியுடன் இருக்க வேண்டும்,தீமை உண்டாக கூடிய செயலை செய்யக் கூடாது, உணவு கொடுத்து பின் உண், முயற்சியுடன் இருக்க வேண்டும், போன்ற அறக்கருத்துக்களை எடுத்துரைக்கிறது.
துணைநூற்பட்டியல்
1 .பூவை அமுதன் நீதி நூற்களஞ்சியம் கவிதா பப்ளிகேஷன் சென்னை – 600017 முதற்பதிப்பு -1996 ,இரண்டாம்பதிப்பு - 2000
2 .மெய்யப்பன் .ச (ப.ஆ) நீதி நூல் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600108 முதற்பதிப்ப-2006
3. சுப்பிரமணியன் ச.வே தொல்காப்பியம் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600018 முதற்பதிப்பு - 1998
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5. பாலசுந்தரம் ,ச திருக்குறள் தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம் சென்னை -600017 பதிப்பு -2000
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.