இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்மப்பல்லவன் -
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.