ஒப்பிட்டுப் பார்த்து உளமுடைந்து போகாதீர்
கிட்டிய வாழ்வினைத் கிழித்துவிட எண்ணாதீர்
பேராசை அலையில் சிக்குண்டு மாளாதீர்
பெற்றதை மனமிருத்தி பெருமகிழ்வு எய்திடுவீர் !
மாடிமனை மிக்காரும் மனவமைதி கொள்வதில்லை
மண்குடிசை இருப்பாரும் மனவமைதி கொள்வதில்லை
வாடிவிடும் மனநிலையால் வருவதுவோ எதுவுமில்லை
வாய்த்துவிட்ட வாழ்வுவதை மகிழ்வுடனே வாழ்ந்திடுவீர் !
ஓடியோடி உழைத்தாலும் ஒருபொருளும் கூடவரா
கோடிகோடி நிறைந்தாலும் குறையென்றே எண்ணுகிறார்
தேடியோடி தினமலைந்தும் திருப்திமட்டும் வருவதுண்டோ
நாடிவந்த வாழ்வுதனை நாம்விரும்பி வாழ்ந்திடுவோம் !
மலையிருக்கும் மடுவிருக்கும் இருண்டுமே வேறுநிலை
ஒப்பிட்டுப் பார்ப்பதிலே ஒருபயனு மங்கில்லை
கூழ்குடித்தும் பசியடங்கும் குடிசையிலும் மகிழ்வுவரும்
மனமதனைச் சீராக்கின் வாழ்வங்கே மலர்ச்சியுறும் !
உறங்குவது ஓர்சாவு விழிப்பதுவே மறுபிறப்பு
அதற்கிடையில் ஒப்பீடு அவசிமா சிந்திப்போம்
மூச்சிருக்கும் வரையெமக்குப் பேச்சிருக்கும் எனநினைத்தால்
ஒப்பிட்டுப் பாராமால் உளமகிழ்ந்து வாழ்ந்திடுவோம் !