"தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து - அல்ல
மண்ணிலிருந்தே....
சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்
உயிர்ப்பு, இழப்பு
பெருத்தல், இளைத்தல்
வான் நிலவிற்கு
மட்டுமல்ல
தேயாத, தோயாத
முழு மதிகளே!
மாசறு வெண்மதிகளே!
உங்களுக்கும்
உட்பொருளே!
உங்களிடம்
மட்டும் தான்
முகத்திரைகள்
முகவரிகள்
ஆகின்றன!
செங்குருதிக்கும்
வெண்மையால்
அணைப்போட்டும்
நிறம் மாறாத
கருணையின்
நிறைகோல்களே!
ஆதவனே வலம்வரும் மண்ணின்
நிலைக்கோள்களே!
உயிரெனும்
உரிபொருளை
கூட்டிற்குள் வைக்க
உங்களுக்கு நீங்கள்
இட்டுக்கொண்ட
பூட்டுகளுக்கு
இட்டுக்கட்டுமா
எட்டுத்திக்குமே?
முற்றும் துறத்தல்
என்ன பெருமை ?
நோய் முற்றியதை
துறவாமைதானே
இறைமை ....
மெய்யுரைக்கிறது
உங்கள்
கையுறைகள்....
உயிர்க் கொல்லும்
கிருமிக்கும்
ஒதுங்காத
நலன் விரும்பிகளே !
அடங்கிய ஊரினை
மார்போடு அணைத்து
பேரச்சம் போக்கிய
பேரன்பின் உச்சங்களே!
சிறு நீருக்கும்
பெரு நீருக்கும்
வழியின்றி
உடலெல்லாம்
உறைசூழ
சற்றும்
புரைசூழா
உங்கள் மனதில்
கசிகிறது
மானுடத்தின்
உயிர் நீர்
எத்தனையோ
கிருமிகளுக்கு வெண்புன்னகையோடு
புண் நகைக்கும்
மானுட
வெள்ளை அணுக்களே!
உறங்காது சிவந்த
உங்கள்
அருள் விழிகளோ!
வாளேந்தி காக்கும் சிவப்பணுக்களாக.....
வெள்ளை தேவதைகளே!
பனிக்குடம் முதல்
சுடலையின்
நீர்க்குடம்வரை
உங்களிடமே
பெரும் வரமாய்...
துளியும்
தளும்பலில்லை
நீவீர் இன்றி அமையாது உலகு....."
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.