சிந்தனை என்பது பெருவானம்! - அதில்
சீறிப் பறப்பது அறிவாகும்!
விந்தைகள் புரிவது அறிவாலே! - இதை
விளங்குவர் இருப்பார் நிறைவாலே!
சிந்தனை வானில் பறப்பதற்கு - எண்ணச்
சிறகுகள் முளைப்பது அவசியமே!
வந்தனை செய்தே வரவேற்போம்! - நல்ல
வளமிக்க கருத்தினை சிரமேற்போம்!
சிந்தனை வேறு ; செயல் வேறு - வந்து
செறிந்திடும் கருத்துக்கள் பலநூறு!
வந்ததெல் லாமரங் கேறாது - அதில்
வடித்தெடுத் தவையே மாறாது!
இருபது முடிந்து நூற்றாண்டு - உலகு
எப்படியோ வெல்லாம் மாறியது!
ஒருபது நூறின் முன்னுள்ள - சில
உருப்படா கருத்திங்கு ஊறியது!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலே - அவர்
விண்ணுல கினிலே பறக்கின்றார்!
அஞ்ஞானத்தில் அழுந்தியதால் - இவர்
அசிங்கத்தினிலே மிதக்கின்றார்!
ஜாதிச்சண்டை மதச்சண்டை - அதில்
ஜாலப்பேச்சில் நிலச்சண்டை!
ஏதும் வேறு அறியாது - இதில்
ஏற்றம் என்பது கிடையாது!
கருத்துகள் விதைத்துக் காத்துவிட - பலர்
காலந் தோறும் அவதரித்தார்!
வருத்தங்கள் கொண்டே அவர்சென்றார் - அதை
வருந்திச் சொல்ல யார்வந்தார்!
கருத்துகள் வருவது போதாது - அதை
கவரும் சிந்தனை வரவேண்டும்!
அருத்தங்கள் வாழ்வில் அமைவதென்றால் - மனம்
அடுத்தாரைப் பேணும் திறன்வேண்டும்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.