சபிப்பு
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
சமரின் ஆயுதங்கள்
நித்தம்
எழுப்பும் ஒலி
ஒரு புறமாய்
இதயத்துள் வலிக்கிறது...
ரகசியமாக
அன்பை எடுக்கவும்
கொடுக்கவும்
உரிமை பறிபோகாமல்
உலகம்
காதலும் புரிகிறது...
புன்னகை மலர்ந்து
கவிதை படைக்க
மனது துணியும்போது...
இரு குருவிகளின் காட்சி
கனத்து
களைக்கிறது நரம்பு
வார்த்தைகளை மீறுகின்றது
துயரம்..
காதோர அந்தரங்கம்
சுமையாகி உறைகிறது...
கிளையில் ஊசலாடும்
குருவிகள் இரண்டை
ஊரெல்லாம் திரண்டு
குறுனிகளாய் நின்று
வியக்கின்ற காட்சி
மன விருட்சத்தை
சரித்து உறுமுகின்றது...
நுண்ணறிவின் வேகம்
உயரும் வயது...
உடலும் உளமும்
உடற்சுரப்பியும்
பாற்சுரப்பியும்
குருதியில் கலக்கின்ற பருவக் குருவிகள்
கற்பனையை வளர்த்து
கவர்ச்சியால் அலங்கரிக்கும்
அழகான குருவிகளை
கன்னம் வருடி
கசக்கிக் குதறி
கழுத்தை நெரித்து
தலித்தென்று
தொங்கவிட்டுச் சிரிப்பவர்களை
இந்நிலத்தின்
கொடுங்கோலரென
சித்தரிக்கின்றது..... இல்லை
சபிக்கின்றது மனம்....
22.6.2014
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பருவத்தின் வாசலிலே
- மெய்யன் நடராஜ் -
குழந்தை பருவம் குடிகொண்ட இன்பம்
தொழுதால் வருமோ தொடர்ந்து?
வறுமை இருந்தும் வசதி குறைந்தும்
பெருமை படைத்து மகிழ்ந்த சிறுவர்
வயது சிரிக்கும் மலர்ந்து.
வண்ணத்துப் பூச்சி வருணங்கள் தொட்டெடுத்து
எண்ணமென்னும் ஏட்டில் எழுதிட்ட வண்ணக்
கவிதையாய் வாழ்வின் வசந்தமாய் வாலிபச்
சிவிகை அமர்ந்த சிறப்பு.
குடும்பஸ்தன் என்னும் குணக்கொள்கை கொண்டு
இடும்பஸ்தன் என்றாகி வாழ்வில் படுங்கஸ்ட
நஷ்டங்கள் வயதின் நடுத்தரத்தில் கட்டாய
இஷ்டமாதல் வாழ்வின் இயல்.
கைநழுவிப் போகும் கடைசி பருவத்து
மெய்தளர்ந்த வாழ்வில் மரணத்தின் கைகோர்க்க
காலன் அரவணைப்பை கண்மங்கி வாய்க்குழறி
கால்களும் தள்ளாட காது செயலிழந்து
மூச்சிரைக்க வைக்கும் முதுமை எவரையும்
ஏய்ச்சதில்லை எண்ணித்தான் பார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்!
1. எண்ணங்கள்!
அட்சயக் கிண்ண இதயத்தில்
உச்சமாய் எழும் எண்ணம்
எச்சம்! தூய்மை இன்றேல்.
அச்சமற்று மொழி முதுகேறினால்
நிச்சயம் வார்த்தைப் பல்லக்கில்,
பாச்சரமாகலாம் பாவலர் அருகில்.
நீச்சலடிக்கலாம் பழமை புதுமையில்.
பேச்சில் சேர்க்கலாம் எண்ணங்களை.
மேதாவித்தன எண்ணம், பிரசங்கங்களை
ஏதாவது புத்தக அடுக்கிலிடுங்கள்.
யுதார்த்த நல்ல எண்ணங்களை
சாதாரணமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
பொறாமை எண்ணத்தால் ஒதுக்கம்
கூறடையும் மனதின் வீக்கம்.
தூறாத புரிந்துணர்வினால் தாக்கம்
ஆறாகும் அன்பு எண்ணத்தைச் சிதைக்கும்.
நன்செய் பயிராம் எண்ணங்கள்
புன்செய் மரங்களாய் ஓருவகை.
போன்சாய் எண்ணங்கள் மறுவகை.
புயலாய், பூவாய் விரிவகை.
புதையலில் மகிழும் எண்ணம்.
பிpரிந்திட்டால் துன்ப எண்ணம்.
புரட்டில், பொய்யில் திகைக்கும்
புனலில் நீராடிக் குளிர்ந்திடும்.
.
23-9-2006.
2. கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்.
செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப்பிராமணர்
பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.
வையகம் போற்றும் காவியக் கவியோகிக்கு
கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.
கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
வல்லமையோடு எட்டு வயதில் கவியடியடியெடுத்தார்.
கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
சொல் வளமுடை கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
காவியக் கம்பர், வியாசரிற்கடுத்து ஏராளமாகத்
தூவினாராம் அறுபது ஆண்டகளென்பது கணிப்பு.
பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்
வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியை
பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.
கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
நாட்டமுடன் இசையும் அமைத்தார், இசைமேதையுமானார்.
மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.
1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
உருவானது முழுமையான இலக்கியப் பணி.
சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாய பிரதிநிதியானார்.
1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.
19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி
ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.
பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
அரிதான ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
” அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது.
வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.
தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
இந்திரா காந்திக்கு ” பிரியதர்சினி ” யைச் சூட்டினார்.
தாகூரை காந்தி மாபெரும் காவலனென்றார் (Great sentinal).
அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.
1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!
ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
தமிழில் மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்
1915ல் பிரித்தானியா ” செவ்வீரர் ” (knight hood)பட்டமளித்தது.
1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.
(பிரியதர்சி – அமைதியான பார்வை.)
24-5-2014
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தேவதைகளின் தாய்மொழி
- முனைவென்றி நா. சுரேஷ்குமார், -
அன்றொருநாள்
அந்த புகைவண்டி நிலைய சந்திப்பில்
ஊதாநிறச் சுடிதார் அணிந்த பெண்ணாக
மனதில் மகிழ்ச்சி பொங்க
என் முகம் பார்த்து
என் பெயரை நீ
உச்சரித்தபோது தான்
தெரிந்துகொண்டேன்
தேவதைகளின் தாய்மொழி
தமிழென்றும்
தேவதைகளின் உடல்மொழி
அமைதியென்றும்...
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ( 25.6.2014): மனிதம் வாழ்விக்க வந்தவனே
- வே.ம.அருச்சுணன், மலேசியா -
இந்த யுகத்தில்
நீ வாழ்ந்ததில்
பெருமையும் பேறும் பெற்றது
உலகம்...........!
பிறவிக்கவிஞனே
உன் அருட்கொடையால்
உலகம் வாழ்ந்தது
மனிதம் உச்சத்தில் கோலாட்சி செய்தது.........!
உன் அமர காவியங்களால்
தமிழின் பெருமை
விண்ணை முத்தமிட்டது
உன் கவிதை வரிகள்
மனிதரின் வாழ்வை நீட்டியது
கயவனைப் புத்தனாக்கியது.........!
களவையும் கற்று மறந்தவன் நீ
கபோதிகளுக்கு
வலுக்கும் சேற்றில் ஊன்றுகோல்
தந்தவன் நீ
தாயை மறந்தாலும்
உன் தர்மத்தை இகழ்ந்திட
யாரும் முயன்றதில்லை
உடைந்துபோன மனங்களுக்கு
மருந்தானது உன் பேச்சு
வறியவர் வாழ்வை வசப்பட வைத்தாய்
வாழும் கலைகளை அள்ளித்தந்தாய்
குன்றி வாழ்ந்தோர்
செழித்தே வாழ்ந்தார்..........!
உன் சொல்லால்
வாழ்ந்தவர் பலகோடி
இது மிகையில்லை உண்மை
என்றும் மறைவதில்லை.........!
மனிதனாகப் பிறந்து
மக்கள் மனங்களில்
வணங்கும் தெய்வமானாய் அது
கண்ணன் காட்டிய வழி..........!
உலகம் அழியுமட்டும்
தமிழர்களின் மனங்களில் நீ
சிம்மாசனமிட்டே கர்சனை செய்வாய்
மக்கள் நலம் மீண்டிட
தமிழர் இனம் உயர்தல் வேண்டி நீ
மீண்டும் பிறக்க வேண்டும்
கண்ணதாசனே வாழ்க நீ
பல்லாண்டு..........!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.