சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.
உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள்.
கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள் ஜில்லிட்டன. கைகளை ஜக்கற் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு நடக்கலாமென்றாலும் முடியவில்லை, குவிந்திருந்த பனிக்குள் புதைந்துகொண்டிருந்த காலடிகளை மேலெடுப்பதற்குப் பெரிதாகப் பிரயத்தனம் வேறு செய்யவேண்டியிருந்தது. விழுந்துபோய்விடுவேனோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது. ஜக்கற்றுக்குள் கைகளை வைப்பதும் எடுப்பதுமாக, பார்த்துப் பார்த்து அடி மேல் அடி வைத்து அவள் மெதுவாக நடந்தாள்.
எதிர்திசையில் வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, அவளின் முகத்திலும் பனியை வீசி அழகுபார்த்தது. பார்வைப்புலத்தை மங்கலாக்கிக் கொண்டிருந்த நீர்த்திவலைகளுடன் போராடிக்கொண்டிருந்தவளைக் கடந்துசென்ற பெரிய வான் ஒன்று குவிந்திருந்த பனியை அவளின்மீதும் வீசியிறைத்து அகன்றது.
வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஒஷாவோ ஆஸ்பத்திரியின் அந்தப் புற்றுநோய்ப் பிரிவை அடைவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. மூக்கால் தண்ணீர் ஓடியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
வாஞ்சையுடன் கைநீட்டி வாவென அழைப்பதுபோலத் தானாகத் திறந்து வழிவிட்ட இரட்டைக் கதவுகளின் ஊடாக ஆஸ்பத்திரியின் உள்ளே கால்வைத்தவளை அந்த இடத்தின் உஷ்ணம் ஆதரவுடன் வருடிக்கொடுத்தது. ஒரு நிமிடம் அங்கு நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், பனியில் தோய்ந்துபோயிருந்த பாதுகாப்புக் கவசங்களை, கையுறைகள், தொப்பி, ஸ்காவ் என ஒவ்வொன்றாகக் கழற்றி தனது கைப்பையினுள் அடக்கிக்கொண்டாள். பின்னர் கால்களை நிலத்தில் தட்டி பூட்ஸ்களில் ஒட்டியிருந்த பனியை அகற்றியபடி, பிந்திப்போகக்கூடாதே என்ற பதைபதைப்புடன் வரவேற்பாளரை நோக்கி அவசரமாக நடந்தாள்.
பெயரைப் பதிந்தபின்னர் அங்கிருந்த இருக்கையொன்றில் அவள் அமர்ந்துகொண்டாள். அந்தக் காத்திருப்பு அறை வேறுபட்ட வயதினர்களால் நிறைந்துவழிந்து கொண்டிருந்தது.
“வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே,”
அகநானுற்றில் தலைவி ஒருத்தி அப்படிக் கூறுவதாக எம்.ஏ தமிழ் படித்தபோது அவள் கற்றிருந்தாள். அவ்வாறே, சீலனின் முதுகை ஒரு கையால் இறுக அணைத்தபடி, அவளின் முலைகள் அமுங்கும்படி அவனின் பரந்த மார்பில் ஒடுங்கிக்கிடந்தபோது அவளுக்குக் கிடைத்திருந்த அந்த இன்பம்தான் எந்தநேரமும் அவளின் நினைவுகளை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
X X X X
“துளசி, நீ சாமத்தியப்பட்டிட்டாய் பிள்ளை, எழும்பு, எழும்பி உடுப்பைமாத்து!”
அன்று அம்மா அவளை அப்படித்தான் அவசரமாக எழுப்பினா. எப்படி அவ்வளவு இரத்தத்துடன் நித்திரை கொண்டேன் என அவள் வியந்துபோகுமளவுக்கு உள்ளாடை முழுவதும் ஒரே இரத்தமாக இருந்தது.
சாமத்தியம் என்றால் என்னவென்றும் அந்தப் பதினொரு வயதில் அவளுக்கு விளங்கவில்லை. ஆனால், கழி, பால்பிட்டு, குண்டுத் தோசை, முட்டைக் கோப்பி என அவளுக்குப் பிடித்த சாப்பாடுகள் சாப்பிடக் கிடைத்ததில் சந்தோஷமாக இருந்தது. ஒரு வேலையும் செய்யாமல் கதைப்புத்தகங்கள் வாசித்துக்கொண்டு சும்மா படுத்துக்கிடந்ததும் அவளுக்குப் பிடித்திருந்தது.
பதினொரு நாள் முடிய பள்ளிக்கூடம் போகவென வெளிக்கிட்டபோது ஒரு மார்ப்புக் கச்சையை அவளிடம் கொடுத்த அம்மா, “நீ பெரிசாகப் போறாய் எண்டு தெரிஞ்சு வாங்கிவைச்சனான்,” என்றா. அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனபோது அவளுக்குள் உள்ளூர வெட்கமாக இருந்தது. ஏதோ ஒரு மாறுதலை அவள் தனக்குள் உணர்ந்தாள்.
பின்னர் தாங்கமுடியாத வயிற்றுவலியுடனான மாதவிடாய்க் காலங்கள் அவளை இம்சித்தபோது ஏனடா பெண்ணாகப் பிறந்தேன் என அவள் அழுதாள். இருப்பினும் பருவமடைந்தபின் தான் மேலும் அழகாக இருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. வகுப்பில் சகமாணவர்கள் தன்னை ஆசையாகப் பார்ப்பது போன்றதொரு பிரமை அவளுக்குக் கிளர்ச்சியையும் கொஞ்சம் பெருமிதத்தையும் கொடுத்தது.
“கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்,” என ரட்ணம் மாஸ்ரர் பத்தாம் வகுப்பில் திருவெம்பாவை படிப்பித்தபோது, “கொங்கைகள் எண்டால் என்னெண்டு தெரியுமே?” மாலதி அவளிடம் குசுகுசுத்தாள். பிறகு லஞ்சுக்குக்கு ஒன்றாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, “ரட்ணம் மாஸ்ரர் ஒரு சைவப் பழம், அவர் அப்படியெல்லாம் படிப்பிப்பாரே, அதோடை சமயப் புத்தகத்தில் இப்பிடியெல்லாம் இருக்காது என ரதி அதை நம்பவே இல்லை.
“ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாட்டிலை வாற பூரண கும்பம் தாங்கிவந்தால் நூலிடை நோகாதோ என்ற பாட்டு உமக்குத் தெரியாதே, பூரண கும்பம் எண்டாலும் அதுதான்,” சிரித்தாள் பாமதி. பிறகு பொங்கும்பூம்புனலில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட அந்தப் பாட்டைக் கேட்கும்போது அவளுக்குள்ளும் ஒரு புன்னகை மலரும்.
ஒரு நாள் இரவு படம் பார்த்துவிட்டு அம்மாவுடனும் தங்கைச்சியுடனும் 768 கடைசி பஸ்சில் நெரிசலுக்குள் நிற்கமுடியாமல் திண்டாடிய நேரத்தில், ஆஜானுபாகுவாகத் தோன்றிய ஒருத்தன் அவளின் மார்பகங்களைப் பிசைய முயன்றபோது அவளுக்கு அது அருவருப்பாக இருந்தது. இருந்தாலும், அப்போதுதான் அவற்றுக்குள் ஏதோ ஒன்றிருக்கிறது என்பது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது.
திருமணமாகியதும் அந்த ரகசியம் அவளுக்கு மேலும் தெளிவாக விளங்கியது. அப்பாடா, இப்படி ஒரு சுகம் இதற்குள் இருக்கிறதா என அவள் கிறங்கிப்போனாள்
ஒரு வருடத்தில் கர்ப்பமானாள். பிள்ளைக்குத் தாய்ப்பாலூட்ட வசதியாக, கர்ப்பகாலத்தின்போது முலைக்காம்புகளைத் தினமும் உருவி நிமிர்த்திவிட வேண்டுமென்று தாதி ஒருவர் கூறியபோது ஏற்கனவே நிமிர்ந்திருந்த அவளின் காம்புகளை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது. சிசேரியன் செய்துதான் தீபாவை வெளியெடுக்கவேண்டியிருந்தது. ஆஸ்பத்திரி முறைப்படி மூன்று நாட்களுக்கு தீபாவைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்றனர். அவள் ஒரு அறையிலும் தீபா இன்னொரு அறையிலுமாக இணுவில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோது பால் நிறைந்திருந்த மார்பகங்கள் மெதுமெதுவாக இறுகிப்போயின. அந்தப் பயங்கரமாக வலியை அவளால் தாங்கமுடியவில்லை. கண்களில் நீர் அரும்பியது.
மூன்றாம் நாள் முடிவில் தீபாவைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்த டொக்டர், “பிள்ளை போத்தல்பால் குடிச்சுப்பழகிட்டாள். அதாலை இனித் தாய்ப்பாலை உறிஞ்சிக்குடிப்பாளோ எண்டு தெரியேல்லை. எதற்கும் முயற்சித்துப்பாப்பம். குடிகேல்லையெண்டால் சுடுதண்ணி ஒத்தடம் குடுத்திட்டு கையாலைதான் பிதுக்கி எடுக்கோணும்,” என்றார்.
“சுரந்துயான் அரக்கவும் கைநில்லா வீங்கிச் சுரந்த என் மென்முலைப் பால் பழுதாக” என கலித்தொகைத் தலைவி ஒருத்தி அரற்றியது போலத் தன் நிலையுமாகிவிடுமோ என அவளுக்குக் கவலையாகவிருந்தது. முழுமையாகச் சரிந்துபடுக்கவோ, எழும்பியிருக்கவோ வயிற்றுப் புண் அவளை விடவில்லை. அரைகுறையாய்ச் சரிந்து படுத்தபடி தீபாவின் வாய்க்குள் ஒரு மார்பகத்தை வைத்தாள். அவள் வைத்தது வைத்ததுதான். என்ன அதிசயம் இதுவென அதிசயிக்கும் வண்ணம் தீபா அவளின் முலையை நன்கு உறிஞ்சிக்குடித்தாள். அப்போது அவள் உணர்ந்த அந்தச் சுகம் எதற்கும் ஈடாகாது என அவள் உருகிப்போனாள்.
பிறகு சுதன் ரொறன்ரோவில் பிறந்தான். தோலும் தோலும் தொடுவது நல்லதென அவளின் வெற்று மார்பில் அவனைக் கொண்டுவந்து படுத்தினார்கள். அவ்வளவுதான். அவன் வாயை ஆவென்றபடி உழன்று உழன்று அவளின் மார்பகத்தை இறுகக் கெளவிக்கொண்டான். ஒன்றரை வயது வரைக்கும், கடித்து விளையாடி அவளுக்கு அவன் சிரமம் கொடுக்கும்வரைக்கும் தாராளமாகவே அவள் அவனுக்குப் பால் கொடுத்தாள். இப்படிப் பால் கொடுக்கிறவைக்கு மார்பகப் புற்றுநோய் வராதாம் என மற்றவர்கள் சொன்னபோது அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.
“இலை படர்ந்த பொய்கையிடத் தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின் நிலைவிளம்பக்
கொங்கை சுரந்த அருட்கோ மகளோ சம்பந்தா
இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு,” என நான்மணிமாலை சொல்லும் அன்னையைப்போல தானும் ஒரு சிறந்த அன்னை என அவள் மிகுந்த பெருமிதமடைந்தாள்.
தேநீர் வேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு வந்த தன்னார்வத் தொண்டர் ஒருவர் அவளின் சிந்தனையைக் கலைத்தார். கிட்டத்தட்ட இருபது அடி நீளமும் பதினாறு அடி அகலமுமாக இருந்த அந்த இடத்தில் நிறைந்திருந்த அத்தனை பேருக்கும் குக்கியும் ரீயும் கொடுத்த அவரிடம், சும்மாவா தருகிறீர்களா என ஆங்கிலத்தில் கேட்டாள். ஆமாம் எனப் புன்சிரிப்புடன் அவர் பதில் சொன்னபோது அவளுக்கு அது அதிசயமாக இருந்தது. காலையில் சாப்பிடுவதற்கு மனமிருக்காததால் வெறும் வயிற்றுடன் வந்திருந்த அவளுக்கு அந்தத் தேனீர் தேவார்மிதமாக இனித்தது.
அவளுக்கருகில் வந்த முதிய மாது ஒருவர் பக்கத்திலிருந்த கதிரையில் அமரலாமா என ஆங்கிலத்தில் கேட்டார். அவள் ஆமெனத் தலையாட்டினாள்.
“இண்டைக்கு எனக்கு 80 வயசு, இது என்ரை 96வது கீமோ!” இருந்ததும் இராததுமாக அந்தப் பெண் சிறியதொரு புன்னகையுடன் அவளுக்குச் சொன்னாள்.
“ஓ, 96ஆ?” அவளால் நம்பமுடியவில்லை.
ஆம் எனத் தலையாட்டியபடி அந்தப் பெண் மீண்டும் புன்னகைத்தாள். இலேசான முக ஒப்பனை, இளம்சிவப்பு உதட்டுச் சாயம், அழகாக வாரப்பட்ட சுருட்டை முடி, உடல் முழுவதும் பூக்கள் போடப்பட்ட ஒரு சட்டையும் அதற்கேற்ற மேலங்கியுமென லீசா மிகவும் அழகாக இருந்தாள். ஏனோதானோ என வெளிக்கிட்டு வந்திருக்கும் அவளுடன், அவளையும் அறியாமல் அவளின் மனம் லீசாவை ஒப்பிட்டுப் பார்த்தது.
சில செக்கன்களில் லீசாவை வாழ்த்தவில்லையே என்பது அவளுக்கு உறைக்க, “ஓ, மன்னிக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என்றாள். பின்னர் எப்போது சொல்வேன் எனக் காத்திருந்தவள் மாதிரி, “நாலைஞ்சு வருஷமா கட்டி இருக்கெண்டு மெமோகிராம் செய்துகொண்டிருந்தனான், இப்ப உண்மையிலேயே கான்சர் வந்திட்டுதாம், சரியான பயமாயிருக்கு!” கண்கலங்க அவள் கூறினாள்.
“ஓ டியர்! வாறதை நாங்கள் ஏற்கத்தானே வேணும், பெரிசா யோசியாதை, முடிஞ்சவரைக்கும் இயற்கையிலை உன்னை மறக்கப்பார். அதைத்தான் நான் செய்யிறன். இந்தாபார், இதுதான் என்ரை சமர் தோட்டம், இனி அடுத்த சமர் வரும்வரைக்கும் ரொசிதான் என்ரை பொழுதுபோக்கு,” என்றபடி பூனை ஒன்றை அவள் கட்டியணைத்தபடியிருக்கும் படமொன்றை லீசா அவளுக்குக் காட்டினாள். லீசாவின் குரலில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவளின் கண்கள் ஒளிர்ந்தன. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா, கணவர் இருக்கிறாரா என்றெல்லாம் லீசாவிடம் கேட்கவேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. ஆனால், ஏனோ கேட்க முடியவில்லை. மனசுக்குள் மெளனமாகப் பெருமூச்சுவிட மட்டுமே அவளால் முடிந்தது.
X X X X
வருடாவருடம் மெமோகிராமுக்கு போனதே அவளுக்கு ஒரு சித்திரவதையாகத்தான் இருந்தது. மெசின் ஒன்றின் பக்கவாட்டாக இருக்கும் தகடு ஒன்றில் வெற்று மார்பகம் ஒன்றைத் தூக்கி வைப்பார்கள். பின்னர் அந்த மெசினின் இன்னொரு தகடு மேலிருந்து கீழாக வந்து அந்த மார்பகம் தட்டையாக வரும்வரைக்கும் அதை இறுக்கி அழுத்தும். அதற்குள் உயிர்போய்வருவதுபோல அவள் துடித்துப்போய்விடுவாள். அந்த வலி தெரியாமல் இருக்கட்டும் என முன்ஜாக்கிரதையாக எடுத்திருந்த இரண்டு ரைலனோலினதும் செயற்பாட்டை அது மேவிவிடும். பின்னர் மற்ற மார்பகத்திலும் அதேபோலச் செய்து கதிர்ப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள். அதன்பின்னர் அந்தக் கதிர்படங்கள் சரியாக இருக்கின்றன என்பதை உறுதிசெய்வதற்காக அந்த அறையில் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்வார்கள். திரும்பவும் எடுக்கவேண்டிய தேவை இருக்கக்கூடாதென உலகத்திலுள்ள தெய்வங்களை எல்லாம் அவள் அப்போது மனதார வேண்டிக்கொள்வாள்.
கடந்த மாதம் அப்படி ஒரு மெமோகிராமுக்காகப் போயிருந்தபோது, “டொக்டர் வந்து பாக்கவேணும், கொஞ்சநேரம் காத்திருங்கோ,” என அந்தப் பெண் தொழில்நுட்பவியலாளர் சொன்னபோது அவளுக்கு உடல் உறைந்துவிட்டது. தொழில்நுட்பவியலாளரிடம் விபரம் கேட்கமுடியாது என்பதை அங்கு போடப்பட்டிருந்த வாசகங்கள் நினைவூட்ட, தலையை மட்டும் அவள் ஆட்டினாள்.
ஒரு யுகமாகத் தெரிந்த அந்த ஒரு மணித்தியாலத்தியாலக் காத்திருப்புக்குப் பிறகு வந்த டொக்டர் இன்னொரு அரைமணித்தியாலத்தியாலத்துக்கும் மேலாக அல்ரா சவுண்ட் என்ற சோதினையைச் செய்தார். முடிவில், “உங்களின் இடது மார்பகத்தில் இருந்த சில கட்டிகள் கொஞ்சம் அதிகமாகப் பெருத்துள்ளன. கான்சரா எண்டு அறிவதற்கு பயொப்சி செய்து பாக்கவேணும். அதற்காகப் பரிந்துரைக்கப் போறன்,” என்றார்.
காருக்குள் ஏறியதும் அவள் தீபாவை அழைத்தாள். “அம்மா ஒண்டுக்கும் யோசியாதேயுங்கோ, வருஷாவருஷம் செக் பண்ணுறியள்தானே, கான்சர் இருக்கெண்டாலும் அது முதல் கட்டமாய்த்தானிருக்கும், மாத்தியிடலாம்,” என்றாள்.
“கொரோனாவால் போனமுறை செய்யேல்லையே.”
“ஆனா, முழுகேக்கே சோதிக்கிறனீங்கதானே.”
அப்படிச் செய்வதில்லையே என்று அவளுக்குக் கவலையாக இருந்தது. இருந்தாலும், மகளைப் பயப்படுத்தக்கூடாதென்பதற்காக, தான் அப்படிச் செய்வதில்லை என்பதை அவள் சொல்லவில்லை. முழுகும்போது மார்பகத்தை கைவிரல்களால் எப்படிச் சோதிப்பது எனக் குடும்ப வைத்தியர் விளங்கப்படுத்தி, படங்கள் உள்ள கையேடுகளும் கொடுத்திருந்தார். ஆனால், வருஷாவருஷம் மெமோகிராம் செய்கிறன்தானே என அவள் அதைப் பெரிசுபடுத்தவில்லை.
சீலன் உயிருடன் இல்லாதது இப்போது அவளுக்கு இன்னும் கவலையைக் கொடுத்தது. அவர் இருந்திருந்தால்,
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே என்றபடி மார்பகங்களை வருடி விளையாடும்போது கண்டுபிடிச்சிருப்பார் என்ற எண்ணம் அவள் கன்னத்தை நனைத்தது.
“பிள்ளையளுக்கு வேலையிலிருந்து நெடுக லீவெடுக்கேலாது, கீமோ செய்யவேண்டியிருந்தால் தனியத்தானே வரவேணும், ம்ம்” என அவள் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, கீமோவுக்குக் காத்திருந்த இளம் பெண் ஒருவரை அணைத்தபடி, “நெவர் சே டாம், லைவ் இஸ் ரு லிவ் அண்ட் என்ஜோய்!” என லீசா சொன்னது அவளின் காதிலும் விழுந்தது.
லீசாவின் மனப்பாங்கில் கொஞ்சமாவது என்னிடம் இல்லையே என அவளுக்கு அவளிலே பச்சாதாபமாக இருந்தது. கண்கலங்கியது எவருக்கும் தெரியாமலிருக்க அவசரமாக அதை அவள் துடைத்துக்கொண்டிருந்தபோது அவளின் பெயர் கூப்பிடப்பட்டது.
அழைத்த அந்தத் தாதியைப் பின்தொடர்ந்து பரிசோதிப்பு அறை ஒன்றுக்குள் சென்றவள் அங்கிருந்த கதிரையின் நுனியில் அமர்ந்துகொண்டாள்.
“கான்சர் வந்த குடும்ப சரித்திரமில்லை, மதுபானம் பாவிக்கிறதில்லை, ஓமோன் சிகிச்சை எண்டு ஒண்டும் எடுக்கேல்லை, முதல் பிள்ளை 25 வயதிலேயே பிறந்திட்டுது, மாதவிடாயும் வெள்ளனவே நிண்டிட்டுது, பருமனாயுமில்லை, எந்தவிதமான கதிரியக்கச் சோதனையும் மார்பிலை நடக்கவுமில்லை, பன்னிரண்டு வயதுக்கு முன் பருவமடைந்ததையும், 55 வயதை எட்டியதையும் தவிர மார்பகப் புற்றுநோய்க்கான எந்தவித அபாயமும் எனக்கில்லையே,” அவளின் மனம் மறுகியது.
பயோப்சி செய்யவேண்டுமென்று சொன்ன நாளிலிருந்து மார்பகப் புற்றுநோய் பற்றி அவள் கூகிளில் ஆராய்ந்திருந்தாள். சிகிச்சைத் தெரிவுகள் பற்றியும் அறிந்திருந்ததால், “கான்சர் எந்தக் கட்டத்திலை நிற்குதோ, எங்கெல்லாம் பரவியிருக்கோ, இடது மார்பகத்தை முழுசா வெட்டியெடுப்பினமோ, அல்லது அதிலை ஒரு பகுதியைத்தான் எடுப்பினமோ, எவ்வளவு காலம் வாழ்க்கை மிஞ்சியிருக்கோ, கர்ப்பமாயிருக்கிற தீபா பிரசவிக்கமுதலே போயிடுவனோ?” அவள் மனம் அங்கலாய்த்தது.
நிகழ்காலத்தில் அதாவது அந்தக் கணத்தில் எப்படி வாழ்வது என்பது பற்றிக் கூறும் விபரங்களை சுதன் அனுப்பியிருந்தது நினைவுக்கு வந்தது.
பின்னால் நன்குசாய்ந்து கதிரையில் அவள் செளகரியமாக அமர்ந்துகொண்டாள். சில தடவைகள் ஆழமாக மூச்செடுத்தாள். “நான் கதிரையில இருக்கிறன், என்ரை கால் நிலத்திலை பதிஞ்சிருக்கு. என்ரை உடல் நல்ல கதகதப்பாக இருக்கு. நான் இப்ப பாதுகாப்பாக இருக்கிறன். என்னைச் சுத்தி என்னிலை அன்பானவை இருக்கினம். வாழ்க்கை என்கிறது எவ்வளவு நாள் வாழுறம் எண்டதிலை இல்லை, நாங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறம் எண்டதிலைதான் இருக்கு. மிஞ்சியிருக்கிற வாழ்க்கையை இன்னும் நல்லா அனுபவிச்சு, சந்தோஷமாய் இருப்பன். கான்சர் தனக்கு விருப்பமான இடத்துக்கெல்லாம் பரவலாம், ஆனா அதாலை என்ரை நம்பிக்கையை அழிக்கேலாது. அதை எதிர்த்து முடிஞ்சவரைக்கும் நான் போராடுவன்!” தனக்குத் தானே மூன்று தடவைகள் சொல்லிக்கொண்டாள்.
லைவ் இஸ் ரு லிவ் அண்ட் என்ஜோய் என்ற லீசாவின் உத்வேகம் தரும் குரல் அவளின் காதுகளில் ஒலித்தது. முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். அவளின் மனம் இலேசானது.
டொக்டர் அவளின் அறையை நோக்கிவருவது தெரிந்தது. அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.