
வேப்ப மரம் பெரும்பாலும் பங்குனி தொடங்கி வைகாசி மாதங்களில் பூக்கும்.நன்றாக வைகாசியில் வேப்பம்பூ பூத்துக்குலுங்க எங்கள் வீட்டு வேப்பம்பூவில் வடகத்தைத்தட்டிப் பாயில் போட்டுக் காயவைக்க அப்பாவும், அம்மாவும் தங்களைத் தயார்படுத்துவார்கள். அதுவே அன்று எமக்கு பெரும் செயல்முறையாக இருந்தது.முற்றத்தில் பாய்விரித்து வடகத்தைத் தட்டி பாயில் காயவைக்கும்போது,காற்று புழுதியையும் மண்ணையும் சேர்த்து அள்ளிக்கொண்டு வந்து ஈரப் பதத்திலிருக்கும் வடகத்தில் விழுந்துவிட்டால்போதும்,அந்த வடகங்களை உண்ணவே முடியாது. கர கரவென்று வாய்க்குள் மண்தான் கடிபடும்.ஓரிரு நாட்களின் உழைப்பு முழுவதும் வீணாய்ப்போய்விடும். மனமும் கலங்கும்.காயப்போட்ட இடத்திற்கு நாயோ, பூனையோ,அணிலோ, காகமோ எதுவுமே வந்து கொத்தியோ, மிதித்தோவிடக்கூடாது என்பதற்காகவே பாய்களுக்குப் பக்கத்திலேயே கிளுவம் தடியுடன் அன்று அரைக்காற்சட்டை போட்ட இளசுகள் நாம் காவலிருந்தோம்.
ஒன்று தட்டை வடகம், அடுத்தது காம்பு வடகம் என இரண்டு வகையாக எம் வீட்டு வடகங்கள் இருந்தன. காம்பு வடகமானது காலப்போக்கில் காணாமல் போனது.காம்புடன் இருக்கும் பூக்களை, அரைத்துப் பினைந்து குளைத்த உழுந்துக்குள் அப்படியே முழுமையாக தோய்த்து எடுத்துக் காயவைப்போம். காய்ந்ததும் பாக்கு வெட்டியால் துண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்தால் அதுவே காம்பு வடகம்.அது கூடச் சுவைதான். "அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டால், 'காம்பு வடகம் தட்டை வடகம்போல மென்மையாய் இருக்காது'. காம்பிலிருந்து முழுமையாகப் பூக்களை உருவி எடுத்துச் செய்வது தட்டை வடகம்.விரத நாட்களுக்கு மரக்கறிகளுடன் வடகமும் சேர்ப்பதுகூட நம் பாரம்பரியம்தான்!
இது மட்டுமல்ல,இந்த திட்டம் முடிய அடுத்ததாய், கூட்டி அள்ளி குப்பைகளை அகற்றியபின் சாணி தெளித்த முற்றத்தில் பாய்விரித்து அடுக்கி மோர் மிளகாய்த் திட்டமும் வெந்து தணியும்.குசினிக்குள்ளே உறிகள் தொங்க, அங்கே பானைகளுக்குள் வெண்ணெயும், தயிரும்,மோரும், பானைக்குள் அடைத்த புளியும் கூடியிருந்து எம்மோடு ஒன்றாய்க் கலந்து பண்பாட்டைக் கட்டிக்காத்த பொற்காலச் சுவடது. இப்படித்தான் எம் வாழ்விருந்தது. வாழ்விற்குள் எப்போதும் ஓர் நேசமிருந்தது.
என் ஞாபகங்களில் ஒன்றாய், வாசமாய், கவளமாய், வாய்க்கு ருசியாய் உங்களுடன் பகிர்ந்திட இன்று நான் கொண்டு வருவது குழையல் சோறு.குழையல் என்றால் அத்தனை ருசி.அந்தக் குழையலை எங்கட பெரியம்மா தன் கையால் குழைச்சு எமக்கு ஊட்டினால் "ப்பா"அது அமிர்தம்.
இதற்கு ஏதுவான மறக்கமுடியா இன்னொரு கதையிருக்கு. அதுதான் பெரியம்மாவின் மூத்த மகளின் கல்யாணம். பெரியம்மாதான் அம்மாவின் குடும்பத்தில் எல்லோருக்கும் மூத்தவா என்றால் இன சனமென்று எல்லாம் திரண்டு வரும். ஒவ்வொரு குடும்பமாய் பஸ் ஏறி எல்லோரும் வந்திறங்க,பொழுதும் பட, பறவைகளும் கூடுகளுக்கு திரும்பிப்போகின்ற நேரமாகிவிடும்.வீட்டில சாமிக்கு விளக்குக் கொளுத்திக்கும்பிடும் நேரத்தில இன்னும் சொந்தங்கள் வாசலில் கட்டிய வாழைக்குலைகளையும் அண்ணாந்து பார்த்தபடி,முற்றத்தில் கல்யாணத்திற்காக கால்பதித்ததை,அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைப் பார்த்த கண்களல்லவா என் கண்கள்?
உறங்குவதற்காய் திண்ணை, விறாந்தையைத்தேடி ஒருசிலர். இன்னும் சிலர் மாட்டுக்கொட்டிலுக்கு முன்பாகநல்ல காத்தும் வீச, நட்சத்திரங்களும் மின்னிக்கொண்டிருக்க, மரச்சட்டத்தில் பின்னிக்கட்டிய கயிற்றுக்கட்டிலும் போட்டு,சுருட்டும் குடிச்சுக்கொண்டு அவரவர் கல்யாணக் கதைகளைப் பேசிச்சிரிச்சீனம்.மாறாக நாற்சார் வீட்டின் நடுவே பாய்கள் விரித்தும் சொந்தபந்தங்கள் இணைந்து தூக்கம் கலையாமல் விழித்திருந்து,மனசில நிறைஞ்சதையெல்லாம் கொட்டித்தீர்த்து அழுதும், சிரித்தும் பந்த பாசங்களைப் பரிமாறிய எம்மை அந்த இரவும் இணைந்து எம்மைத் தாலாட்டியதுகூட இறவா ஞாபகங்கள்தாம்.
விடிஞ்சதும் ஒரு போருமின்றி,பயமு மின்றி,உயிர்களைப் பறிகொடுத்துப் பிரிந்த மீளாப் பெருந்துயருமின்றி,எதுவித ஏக்கமுமின்றி;அப்படித்தான் அந்தக் கல்யாணம் தடல்புடலா நடந்து முடிந்தது.உறவுகளின் அந்த ஆரவாரமும்,சுறுசுறுப்பும்,குதூகலமும் பளிச்சென்ற நீல வானம்போல அவர்களின் மனங்களும் வெளிச்சிருந்த காலமது.மயில் தோகை விரித்தாடினாற்போல காற்றிலாடும் மணிச்சரங்கள் கட்டிய முத்து மணவறையும்,மண்ணுக்கேற்ற இயற்கை செறிந்த அழகாய் காட்டுத்தடிகளும்,கிடுகுகளும்,வெளுத்த வெள்ளை வேட்டிகளும்கொண்டு கட்டிய திருமணப்பந்தலிற்குள் வண்ண வண்ண ரிசூப்பேர்பர்களில் சுருட்டிச் சுருட்டி வளைத்து ஒட்டிய நிறைகுடம் குத்துவிளக்கு போன்ற வடிவான கலைவேலைப்பாடுகளையும் வாறபோற எல்லாரும் பார்த்து ரசித்ததையும் மறக்கேலாது!
கல்யாண வீடு தொடங்கி வீட்டு ஒழுங்கைவரையும் வெள்ளை ரிசூப்பேப்பரில சோடிச்சு, அது காற்றில் சரசரவென்று பறக்கும் சத்தமே நெஞ்சுக்கு நெகிழ்வாயிருந்தது. கல்யாண வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருந்த ரியூப் லைற்றுக்களும் அந்த ஊருக்கு அன்று பெருமிதமாகத்தானிருந்தது. தவில்களும் நாதஸ்வரங்களும் இசைத்த மங்கல இசையும் எம்மையெல்லாம் பிரமிக்கவைத்துக் கட்டிப்போட்ட காலமல்லவா அது? கல்யாணவீடும் முடிந்து, அடுத்தநாள் சமையலே இருக்கவில்லை. "கேட்டீரே,முதல்நாள் மிஞ்சிய கறிகளையும் போட்டு,சோற்றையும் வடித்து, ஒரு குழையல் போட்டா ருசியாயிருக்கும் என்ன?" என்று பெரியப்பா கேட்க,'சரிசரி அப்படியே செய்வம் அப்பா"என்றார் பெரியம்மா." நானும் எங்கட வீட்டு வடகமும்,மோர் மிளகாயும் கொண்டு வந்தனான். விரும்பினால் அப்பளமும் பொரிக்கலாம் என்றார் அம்மா".'ஓமடி உன்ர வடகமும்,மோர் மிளகாயும் என்றால் சொல்லவா வேணும்.அதையெல்லோ முதல்ல சொல்லவேணும் நீ !சரிசரி உடன பொரியடியம்மா'என்று தங்கச்சியில் அன்பைப்பிழிந்து ஊற்றினா பெரியம்மா. அந்த மத்தியான வெயிலின் வெக்கைக்கு வளர்த்த ஆடுமாடுகளுக்கும் பசி கிளம்பி விட்டது என்பதை அதுகள் "ம்பா"என்று கத்தியபடி ஆரம்பிக்க, ஊற வைத்த பிண்ணாக்குக்குள் தவிடும்போட்டு,வடித்த கஞ்சியும் ஊத்திக் குளைத்து அதுகளின் பசிதீர்த்தார் பெரியப்பா.அம்மாவும் அப்பளம்,மோர்மிளகாய், வடகமெனப்பொரிக்க எமக்கும் பசி கிளம்பிவிட்டது. பெரியம்மாவும் பெரிய பாத்திரத்திற்குள் ஆவிபறக்க சுடுசுடு சோற்றைப்போட்டு குழையலுக்கு ஆயத்தம்.
குழைக்கும் வாசமே மூக்கைத் துளைத்தது. இப்போதும்கூட குழையல் சோற்றின் வாசமென்றாலே எங்கு வாழ்ந்தாலும்,எண்ணக் கிடக்கைக்குள் எல்லோரும் இனி எங்கட மண்ணில்தான் குந்தி விடுவோம் இல்லையா?வளவுக்குள் நின்ற பூவரசின் இலையைப் பிடுங்கி,அதில் ஒரு கவளம் குழையல் சோறும் வைத்து,எல்லோருமாக அந்தக்கல்யாணப் பந்தலிற்குள் விரித்திருந்த கம்பளத்தில் சப்பாணி கட்டியபடி கூடியிருந்து, ரசித்து ருசித்துச் சாப்பிட்டோம். கத்தரிக்காய் பொரிச்ச குளம்பு,பருப்பு, பயற்றங்காய் கறி, உருளைக்கிழங்கு பிரட்டல், பூசணிக்காய்க்கறி, தக்காளி குழம்பு, இவற்றுடன் தயிரும், ஊறுகாயும் சேர்த்துக்குழைத்து ஒவ்வொருவர் கைகளிற்கும் பெரியம்மா பரிமாற,மொறு மொறவென்று அப்பளம், வடகம், மோர் மிளகாயும் மாறிமாறிக் கடிபட அந்த ருசியை உறவுகளே நீங்களும் அனுபவித்திருந்தால் இப்போது சொல்லுங்கள். அது அமிர்தம்தானே? ஏன் அமிர்தம் என்றால் அங்கே சுற்றிவர அமர்ந்திருந்த சொந்தங்கள் சுவைத்தது அறுசுவை உணவு மட்டுமல்ல, அந்தக் கொடுப்பனவும், நாமடைந்த ஆனந்தமும் என்றால் அது அமுதம்தான்!
அந்த வாழ்வு இனி வருமா? இன்றைய வாழ்வியலின் பரிணாமத்தில்,குழையலை குழைத்துக்கொடுத்துப்பரிமாறிச் சுவைத்து சொந்தம் கொண்டாடி மகிழ்ந்திட முடியாவாழ்வுதானே "புலம்பெயர்" எனும் இப்பேரண்டத்தில் நாம் படும்பாடு?
எம்மண்மீதும், மொழிமீதும் ,எம்முன்னோர்மீதும் அன்புடையீர், நீங்கள்தான் புதிய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும், ''குழையல் சோறு" என்பதும்கூட எமக்கான விருந்தோ, சுவைவோ மட்டுமல்ல, உறவுகளின் பந்தம் விட்டுப்போகாமலிருக்க சுற்றம் சூழ ஒன்றிணைந்து கொண்டாட கடவுள் படைத்த படையலில் இதுவும் ஒன்று என்று! அப்படித்தான் இப்பொழுதும் என் உள்ளமும் கொண்டாடுது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









