அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
               
              
  
               அந்தக் 
              கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' 
              என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ 
              அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி 
              விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு செய்திருந்ததன்படி 
              தலைமைச் சமையற்காரன் நெப்போலியன் அவனை எதிர்பார்த்துக் 
              காத்திருந்தான். முதல் வேலையாக உணவகத்திற்குக் கூட்டிச் சென்றவன் 
              அங்கிருந்த உதவிச் சமையற்காரன் 'மார்க்'கை அறிமுகம் செய்து வைத்தான். 
              நெப்போலியன் உருவத்தில் உண்மையான நெப்போலியனுக்கு எதிர்மாறான 
              தோற்றத்திலிருந்தான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில், 
              அடர்த்தியான நரைத்த மீசையுடன் ஒரு காலத்தில் 'ஹாலிவூட்டி'னைக் 
              கலக்கிய 'சார்ஸ் புரோன்சன்' போன்ற தோற்றத்திலிருந்தான். அவனுக்கு 
              எதிர்மாறாக இளைஞனாக அகன்ற, சிரிப்புடன் கூடிய வட்ட முகத்துடன் 
              காணப்பட்டான் மார்க். பணிப்பெண்கள் சிலர் அங்குமிங்கும் 
              ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அந்தக் 
              கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' 
              என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ 
              அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி 
              விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு செய்திருந்ததன்படி 
              தலைமைச் சமையற்காரன் நெப்போலியன் அவனை எதிர்பார்த்துக் 
              காத்திருந்தான். முதல் வேலையாக உணவகத்திற்குக் கூட்டிச் சென்றவன் 
              அங்கிருந்த உதவிச் சமையற்காரன் 'மார்க்'கை அறிமுகம் செய்து வைத்தான். 
              நெப்போலியன் உருவத்தில் உண்மையான நெப்போலியனுக்கு எதிர்மாறான 
              தோற்றத்திலிருந்தான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில், 
              அடர்த்தியான நரைத்த மீசையுடன் ஒரு காலத்தில் 'ஹாலிவூட்டி'னைக் 
              கலக்கிய 'சார்ஸ் புரோன்சன்' போன்ற தோற்றத்திலிருந்தான். அவனுக்கு 
              எதிர்மாறாக இளைஞனாக அகன்ற, சிரிப்புடன் கூடிய வட்ட முகத்துடன் 
              காணப்பட்டான் மார்க். பணிப்பெண்கள் சிலர் அங்குமிங்கும் 
              ஓடிக்கொண்டிருந்தார்கள். 
              
              மார்க்கைப் பார்த்து நெப்போலியன் பின்வருமாறு இளங்கோவை அறிமுகம் 
              செய்து வைத்தான்: "மார்க். உன் தலையிடி இன்றுடன் தொலைந்தது. இனிமேல் 
              இவன்தான் உனக்கு உற்ற உதவியாளனாகவிருப்பான். இன்றைக்கே வேலையினை 
              ஆரம்பிக்கின்றான். இவனுக்குரிய அன்றாட வேலைபற்றிய அனைத்துத் 
              தகவல்களையும் தெளிவாக விளக்கி விடு. இவனுடைய பெயர் என் வாயில் 
              நுழைவதற்குக் கஷ்ட்டமானது. உன் பெயர் என்ன என்பதை இவனுக்குக் கூறு?"
              
              "இளங்கோ" என்றான் இளங்கோ.
              
              "இலங்கா.." என்று இழுத்து ஒருமுறை உச்சரித்துப் பார்த்தான் மார்க்.
              
              "இலங்கா இல்லை. இளங்கோ" என்றான் இளங்கோ.
              
              மீண்டும் மார்க்கும், நெப்போலியனும் ஒருமுறை "இலங்கா" 
              என்றிழுத்தார்கள
              
              "அதுவும் ஒருவிதத்தில் சரிதான். ஏனென்றால் நான் இலங்கையைச் 
              சேர்ந்தவன். இலங்காவென்பதும் ஒருவிதத்தில் பொருத்தமாயிருக்கிறது" 
              என்று இலேசாகச் சிரித்தான் இளங்கோ.
              
              அச்சமயம் அவ்விடத்துக்குப் பணிப்பெண்ணொருத்தி ஓடி வந்தாள். "எமிலி" 
              என்று அவளை அழைத்த நெப்போலியன் இளங்கோவிடம் "இலங்கா, இவள்தான் 
              பணிப்பெண் எமிலி. மிகவும் நல்லவள். கலகலப்பானவள். இவளுக்கும் உன் 
              உதவி மிகவும் தேவைப்படும். இவளைப் போல் இன்னும் சிலர் வேலை 
              செய்கின்றார்கள். மேலும் சிலர் மாலையில் தான் வருவார்கள்" என்றான்.
              
              எமிலியும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிநேகிதமான பார்வையொன்றினை வீசி 
              'ஹாய்' என்று கூறி விட்டுத் தன் பணியில் மூழ்கி விட்டாள். 
              
              நெப்போலியன் மார்க்கிடம் "மார்க். இலங்காவுக்கு வேலை பற்றிய எல்லா 
              விடயங்களையும் விளக்கி விடு. வேலையை அவன் இப்பொழுதே ஆரம்பிக்கலாம்" 
              இவ்விதம் கூறியவன் இளங்கோவிடம் 'இலங்கா, என் அறைக்கு வா. உன்னிடம் 
              இன்னும் சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டும்" என்றான்.
              
              அவனைத் தொடர்ந்து இளங்கோவும் அவனது காரியாலய அறைக்குச் சென்றான்.
              
              
               அருகிலிருந்த இருக்கையினைக் காட்டியவன் 'இருக்கலாம்' என்பதற்குரிய 
              சைகையினைக் காட்டினான். இளங்கோ அமர்ந்ததும் இவ்விதம் கூறினான்: 
              "இங்கு எல்லோரும் உனக்கு ஒத்துழைப்பார்கள். நீ மட்டும் உன் வேலையினை 
              ஒழுங்காகச் செய்தால் போதுமானது. மூன்று நேரமும் இங்கு உன் 
              சாப்பாட்டினை முடித்துக் கொள்ளலாம். இன்றிரவு வேலை முடிந்ததும் உன்னை 
              உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவேன். நாளை முதல் அங்கிருந்து 
              நீ வேலைக்கு வரவேண்டும் நடந்தே வந்து விடலாம். அவ்வளவு தொலைவில்லை. 
              எனக்குத் தெரிந்த வயது முதிர்ந்த தம்பதியின் வீடுதான். மாடியில் 
              அறைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். உன்னைப் போல் வேறு சிலரும் 
              அங்கு தங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள்"
அருகிலிருந்த இருக்கையினைக் காட்டியவன் 'இருக்கலாம்' என்பதற்குரிய 
              சைகையினைக் காட்டினான். இளங்கோ அமர்ந்ததும் இவ்விதம் கூறினான்: 
              "இங்கு எல்லோரும் உனக்கு ஒத்துழைப்பார்கள். நீ மட்டும் உன் வேலையினை 
              ஒழுங்காகச் செய்தால் போதுமானது. மூன்று நேரமும் இங்கு உன் 
              சாப்பாட்டினை முடித்துக் கொள்ளலாம். இன்றிரவு வேலை முடிந்ததும் உன்னை 
              உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவேன். நாளை முதல் அங்கிருந்து 
              நீ வேலைக்கு வரவேண்டும் நடந்தே வந்து விடலாம். அவ்வளவு தொலைவில்லை. 
              எனக்குத் தெரிந்த வயது முதிர்ந்த தம்பதியின் வீடுதான். மாடியில் 
              அறைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். உன்னைப் போல் வேறு சிலரும் 
              அங்கு தங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள்" 
              
              இளங்கோ மெளனமாகவிருந்ததைப் பார்த்து நெப்போலியன் "இலங்கா! உனக்கு 
              ஏதாவது கேள்விகள் இவ்விடயத்திலிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு" 
              என்றான்.
              
              அதற்கு இளங்கோ "வேலை நேரம், மற்றும் அதற்குரிய ஊதியம் பற்றியெதுவும் 
              கூறவில்லையே.. " என்றிழுத்தான்.
              
              அதற்குரிய நெப்போலியனின் பதில் இவ்விதமாக அமைந்திருந்தது: "காலை 10 
              மணியிலிருந்து மாலை 10 மணிவரைதான் உனது வேலைநேரம். அதற்குள் 
              உனக்குரிய வேலைகளையெல்லாம் முடித்து விட வேண்டும். அவ்விதம் 
              முடிக்காவிட்டால் எவ்வளவு நேரம் சென்றாலும் முடித்து விட்டுத்தான் 
              செல்ல வேண்டும். ஆனால் மேலிடத்தால் எனக்கிடப்பட்ட கட்டளையின்படி 
              உனக்கு காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில்தான் ஊதியம் 
              வழங்குவார்கள். ஊதியமாக மணித்தியாலத்திற்கு முன்று டாலர்கள் 
              வழங்கப்படும். அதே சமயம் உனக்கு உணவு மற்றும் இருப்பிடம் எல்லாம் 
              இலவசமாகக் கிடைப்பதையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். உனக்கு 
              இவ்விடயத்தில் மேலதிகமாக ஏதாவது கேள்விகளிருந்தால் என்னிடம் 
              அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொழுது நான் உன்னை மார்க்கிடம் 
              ஒப்படைக்கப் போகின்றேன். அவன் உனக்கு உனது வேலை சம்பந்தமான எல்லா 
              விடயங்களையும் விளக்குவான்."
              
              அதன்பிறகு நெப்போலியன் இளங்கோவை உதவிச் சமையற்காரன் மார்க்கிடம் 
              கொண்டு சென்று ஒப்படைத்தான். அத்துடன் " மார்க் இலங்காவை உன்னிடம் 
              ஒப்படைக்கின்றேன். நீ முன்பே கூறியதுபோல் எல்லாவற்றையும் 
              விளக்கிவிடு" என்று மேலும் கூறிவிட்டகன்றான்.
              
              மார்க் இளங்கோவிடம் "இலங்கா, ஏதாவது சாப்பிட விரும்பினால் 
              சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றவன் முட்டையும் வதக்கிய 
              உப்பிடப்பட்ட பன்றியிறைச்சியும் கூடிய வெண்ணெயிடப்பட்ட வாட்டிய பாண் 
              துண்டுகளைக் கொண்டு வந்து வைத்தான். அத்துடன் குடிப்பதற்கு ஆரஞ்சுப் 
              பழச்சாறும் கொண்டு வந்தான். அத்துடன் தனக்குக் குடிப்பதற்குத் தேநீர் 
              கொண்டு வந்தான். சிறிது நேரம் இளங்கோ உண்பதைப் பார்த்துக் 
              கொண்டிருந்தவன் இளங்கோவுக்குரிய நாளாந்தப் பணிகளை விபரிக்கத் 
              தொடங்கினான்:
              "இலங்கா, உன்னுடைய முக்கியமான 
              வேலைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது முக்கியமான 
              வேலை பணிப்பெண்கள் அவ்வப்போது கொண்டு வரும் கோப்பைகளை அதற்குரிய 
              கோப்பை கழுவும் இயந்திரத்தில் உடனடியாகக் கழுவி வைப்பது. அப்பொழுது 
              கோப்பைகளில் பாவிக்காமல் வரும் வெண்ணெய்க் கட்டிகள், பழக்கூழ் 
              ('ஜாம்') போன்றவற்றை எறியக் கூடாது. அவற்றை இன்னுமொரு கோப்பையில் 
              சேகரிக்க வேண்டும். அத்துடன் சில சமயங்களில் திரும்ப வரும் பெரு 
              இறால்களின் ('லாப்ஸ்டர்') கோதுகளையும் சேகரிக்க வேண்டும்.
              
              அது முதலாவது முக்கியமான பணி. அதில் நீ தாமதித்தால் பணிப்பெண்கள் 
              திணறிப் போவார்கள். எனவே ஒவ்வொரு முறை அவர்கள் கோப்பைகளைக் கொண்டு 
              வந்ததுமே இயலுமானவரையில் உடனடியாகக் கழுவி வைத்து விட வேண்டும். 
              இரண்டாவது முக்கியமான பணி எனக்கு நீ ஒத்துழைப்பதுதான். ஒவ்வொரு 
              முறையும் மீன்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றைப் பொறித்து விட்டுக் 
              கறிச்சட்டிகளை அதோ அந்தத் தொட்டிகளில் போட்டு விடுவேன். நீ கோப்பை 
              கழுவும் சமயங்களில் அவ்வப்போது அந்தத் தொட்டியையும் கவனித்துக் கொள்ள 
              வேண்டும். ஓரளவு நிறைந்ததுமே அவற்றைக் கழுவி வைத்தால் உனக்கும் வேலை 
              இலகுவாகிவிடும். எனக்கும் பெரிய உதவியாகவிருக்கும். அடுத்த 
              முக்கியமான பணியாக அவ்வப்போது அசுத்தமாகி விடும் சமையலறைத் தரையினைச் 
              சுத்தம் செய்வது. சமையலறை மட்டுமல்ல, உணவகத்தின் தரையையும் 
              கேட்கப்படும் பட்சத்தில் துப்புரவாக்கி விட வேண்டும். இறுதியாக இரவு 
              உணவகம் மூடியதும், உணவகம் முழுவதையும் கூட்டித் துப்புரவாக்கி விட 
              வேண்டும். குப்பைகளைக் கட்டி வெளியில் எடுத்துச் சென்று வைத்து விட 
              வேண்டும். இவ்வளவும்தான் உனது பிரதான நாளாந்தக் கடமைகள். வேலை சிறிது 
              சிரமமானதுதான். ஆனால் அதனை இலகுவாக்குவது உனது கைகளில்தானுள்ளது"
              
              மார்க்கின் விபரிப்பு இளங்கோவுக்குப் பிரமிப்பினைத் தந்தது. அவனது 
              அதுவரையிலான வாழ்நாளில் அவன் உடல் உழைப்பினை வாழ்வுக்காகவென்று 
              மேற்கொண்டதில்லை. இதுதான் முதலாவது தடவை அவ்விதம் மேற்கொள்ளப் 
              போகின்றான். சிறு வயதிலிருந்தே அடிக்கடி வருத்தம் வந்து விடும் 
              மெலிந்த உடல்வாகு அவனுடையது. உடல் பலகீனமாகிவிடும் சமயங்களிலெல்லாம் 
              ஒருவிதமான மூட்டுவலியால் உபாதைப்படத் தொடங்கிவிடுவான். ஊரிலிருந்த 
              காலகட்டத்தில் அவனது அம்மா தேங்காய் உரிப்பதற்குக் கூட அவனை 
              அனுமதிக்க மாட்டாள். அவ்விதம் பொத்திப் பொத்தி அவனை 
              வளர்த்திருந்தாள்.
              
              அவனது மெளனத்தைக் கண்ட மார்க் கேட்டான்: "என்ன இலங்கா! பயந்து 
              விட்டாயா? இதற்கு முன்பே உனக்கு இது போன்ற ஏதாவது அனுபவமிருக்கிறதா?"
              
              இல்லையென்று கூறினால் ஒரேயடியாகக் அனுப்பி விட்டாலும் விடுவார்கள். 
              எத்தனையோ நாட்கள் காத்திருந்து , 'ஓடு மீன் ஓடி, உறு மீன் வருமளவும் 
              வாடிக் காத்து நின்ற கொக்காக' நின்று பெற்ற வேலையல்லவா. அவ்வளவு 
              இலகுவில் நழுவ விட்டு விடலாமா? எனவே இளங்கோ பின்வருமாறு 
              பதிலிறுத்தான்:
              
              "பயமா! எனக்கா! இந்த வேலைக்கா! எனக்குப் இந்த வேலை பழைய ஞாபகங்களை 
              நினைவூட்டி விட்டன" என்றான்.
              
              "பழைய ஞாபகங்களா..!" என்று வியந்தான் மார்க்.
              
              "முன்பு ஒருமுறை உன்னவர்களினொருவனின் கப்பலில் இது போன்ற வேலையினைச் 
              செய்திருக்கின்றேன். ஏன் இலங்கையில் இருந்த காலகட்டத்தில் கூட 
              என்னூர் சுபாஸ் கபேயில் இது போன்ற வேலைகளைச் செய்திருக்கின்றேன் 
              (வாழ்க சுபாஸ் கபே என்று மனது வாழ்த்தியது). அந்த நாள் ஞாபகங்கள் 
              வந்து விட்டன" என்றான்.
              
              மார்க் சிரித்தபடியே "நீ சொல்வது சரிதான். பழசு எப்பொழுதுமே 
              பொன்தான்" என்றவன் தனக்குள் 'ஆள் பார்வைக்குத்தான் மெலிந்து, 
              ஒல்லியாகவிருக்கின்றான். உண்மையில் இந்த விடயத்தில் பழமும் தின்று 
              கொட்டையையும் போட்டவனாகவிருக்க வேண்டும். முகவன் பீற்றர் 
              சரியானவனைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றான். இவ்வளவு 
              காலமும் கறிச்சட்டிக் கழுவ, கோப்பை கழுவவென்று இரண்டு பேரை வைத்துச் 
              சிரமப்பட்டது போதும். அபபடியிருந்தே அந்தக் கள்ளன்களிருவரும் 
              சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான்கள். நல்ல வேளை இவனுக்கு அந்த 
              விடயம் தெரியாது. தெரிந்திருந்தால் உண்மையில் பயந்திருப்பான். 
              இவனெப்படி இந்த இரண்டு வேலையையும் செய்கிறானென்று பார்ப்போம்' 
              என்றெண்ணிக் கொண்டான்.
              
              இவை எதுபற்றியும் தெரியாத 'இலங்கா'வென்கின்ற இளங்கோ பணிக்குரிய 
              மேலங்கிகளை அணிந்து கொண்டு தன் பணியினை ஆரம்பித்தான்.
 
தொடரும்]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




