- வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் மூன்று: சூறாவளி!...
               [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் அமெரிக்கா 
-II அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின்  இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும்.- வ.ந.கி 
  ]
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் அமெரிக்கா 
-II அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின்  இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும்.- வ.ந.கி 
  ]
 
              ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் 
              பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது 
              படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது 
              வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே 
              ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது...' அன்று நண்பகல் 
              அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த 
              விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது 
              தூக்கமின்மைக்குக் காரணம்? இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே 
              அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. 
              மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் 
              நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் 
              பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது. சிறைப் பாதுகாவலர்களும் தூங்கி 
              வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது 
              விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து 
              விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் 
              தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் 
              எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ? இருப்பை 
              எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள 
              உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட 
              மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் 
              எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் 
              எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் 
              பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு 
              எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது? அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி 
              வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் 
              கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர 
              நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின. அவனும், அவனது நண்பனும் அன்று 
              தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. 
              
              அவனும் நண்பனும் அன்று நீர்கொழும்பு நகருக்கு வேலைநிமித்தம் செல்ல 
              வேண்டியிருந்தது. அவனிருந்தது கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில். 
              அவனது நண்பனிருந்தது கல்கிசைப் பகுதியில். அதிகாலையெழுந்து ஆர்மர் 
              வீதிக்குச் சென்று பஸ் எடுத்துச் சென்றபொழுதுகூட அவனுக்கு ஏற்கனவே 
              கலவரம் ஆரம்பித்திருந்த விடயம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும் 
              வழியில் குறிப்பாக மருதானைப் பகுதியில் கடைகள் சில 
              எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்தான். அப்பொழுதும் அவனுக்குச் சூழலின் 
              யதார்த்தம் உறைக்கவில்லை. அருகிலிருந்த சிங்கள இனததுப் பெண்ணொருத்தி 
              எரிந்திருந்த கடைகளைக் காட்டி ஏதோ சொல்லியபோதும் கூட , அவனுக்குத் 
              தெரிந்திருந்த சிங்கள அறிவின் காரணமாக, அவனுக்கு அதனர்த்தம் 
              புரிந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாலும் பார்வைக்குச் சிங்கள 
              இளைஞனொருவனைப் போல்தானிருந்தான். மீசையில்லாமல் தாடி மட்டும் 
              வைத்திருப்பது சிங்கள இளைஞர்கள் மத்தியில் சாதாரண்தொரு விடயம். 
              அத்தகையதொரு தோற்றத்திலிருந்த அவனை அப்பெண்ணும் சிங்கள் ஆடவனென்று 
              நினைத்து ஏதோ கூறியிருக்க வேண்டும். அதன்பின் அவன் கல்கிசை சென்று 
              நண்பனின் இருப்பிடம் நோக்கிச் சென்றபொழுது செல்லும் வழியில் நின்ற 
              சில சிங்களவர்களின் கூட்டமொன்று அவனை நோக்கி ஒருவிதமாகப் 
              பார்த்தபொழுதும் கூட அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை. பின் நண்பனும், 
              அவனுமாக மீண்டும் பஸ்ஸேறி புறக்கோட்டை பஸ் நிலையம் சென்று நீர்கொழும் 
              பஸ்ஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நண்பனின் 
              கவனத்தை அருகிலிருந்த சிங்களவர்களுக்கிடையிலான உரையாடல் ஈர்த்தது. 
              அவனுக்குச் சிங்களம் நன்கு தெரியும். அப்பொழுதுதான் சூழலின் இறுக்கமே 
              முதன் முறையாக விளங்கியது. நண்பன் கூறினான்: "பிரச்சினை பெரிதுபோல் 
              தெரிகிறது".
              
              "என்ன? கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லேன்" என்றான் இளங்கோ. அதற்கு 
              நண்பன் இவ்விதம் பதிலிறுத்தான்:
              
              "இவர்களின் கதையின்படி கலவரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. 
              நிமிடத்துக்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது சூறாவளியைப் 
              போல. நாங்கள் இன்றைக்கு நீர்கொழும்பு போக முடியாது. உடனடியாக 
              'ஆபிசுக்கு'ப் போவம். அதுதான் நல்லது. இப்பொழுதுதான் எல்லாமே 
              விளங்குகிறது. நீ மருதானையில் பார்த்த எரிந்த கடைகள், எங்களது 
              வீட்டுக்கண்மையிலிருந்த சிங்களவர்களின் பார்வை,.. இவை 
              எல்லாவற்றுக்கும் காரணம் இப்பத்தான் விளங்குது... எவ்வளவு கெதியாக 
              ''ஆபிசுக்கு' போக முடியுமோ அவ்வளவு நல்லது. இப்ப இங்கிருக்கிறவர்கள் 
              கதைக்கிறதைப் பார்த்தால் இங்கை கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் 
              போலத்தானிருக்கு".
              
              இளங்கோவுக்கும் நண்பன் கூறியது சரியாகவே பட்டது. உடனடியாகவே பஸ்ஸேறி 
              அவர்கள் பணிபுரிந்த காரியாலயம் சென்றார்கள். அங்கு சென்றதும் 
              எல்லோரும் அவர்களிருவரையும் புதினமாகப் பார்த்தார்கள். அங்கு 
              பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்லீம் பணியாள் இவர்களிடம் வந்து நாட்டில் 
              இனக்கலவரம் ஆங்காங்கே ஆரம்பமாகி விட்டதாகவும், அவர்களையும் 
              எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறினான. அவன் கொழும்பிலேயே 
              கிராண்ட்பாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம். சிங்களமும், 
              தமிழும் நன்கு சரளமாகப் பேசும் ஆற்றல் வாய்த்தவன். அங்கு நடக்கும் 
              நடப்புகளை அவ்வப்போது அவர்களுடன் பகிர்ந்து கொள்பவன். அவர்களிருவரும் 
              அவ்வரசத் திணைக்களத்தில் பொறியியலாளர்களாக உயர்பதவியில் இருந்தபோதும் 
              அவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவார்கள். அவனும் அவர்களுடன் அன்புடன் 
              பழகுவான். அதன் காரணமாகத்தான் அப்பொழுது வந்து எச்சரித்திருந்தான். 
              அவர்களும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு என்ன செய்யலாமென்று சிறிதுநேரம் 
              சிந்தனையிலாழ்ந்தார்கள்.
              
              "இந்தச் சமயத்தில் மீண்டும் எங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்வது 
              நல்லதாகப் படவில்லை. எங்கு போகலாம்..?" என்றான் நண்பன். இளங்கோ 
              அதற்கு இவ்விதம் கூறினான்: "சென்றமுறைக் கலவரத்திலெல்லாம் 
              இராமகிருஷ்ண மிசன் நன்கு உதவியதாகப் பத்திரிகைகளில் செய்தி 
              வந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கு செல்வதுதான் நல்லதுபோல் 
              படுகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?"
              
              "நீ சொல்வதும்சரி. ஆனால் அங்கை எப்படிப் போவது..?" என்றான்: நண்பன்.
              
              இளங்கோ: " 'பார்க்கிங் லொட்டைப்' பார். எத்தனை 'கம்பனி' வாகனங்கள். 
              வேண்டுமானால் இயக்குநரிடம் சென்று கேட்டுப் பார்க்கலாமா.."
              
              நண்பன்: "இந்தச சமயத்தில் இயக்குநர் என்ன செய்வானோ.. ஏற்கனவே கடந்த 
              மூன்று வருடங்களாக உத்தியோகத்தை நிரந்தரமாக்குவதற்காக அவனுடன் 
              எவ்வளவு மோத வேண்டியிருந்தது. அதனாலேற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் 
              இப்பொழுது தூக்கிப் பார்த்து உதவாமல் விட்டால்..."
              
              இளங்கோ: "எதற்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே... சரி 
              வந்தால் சரி. இல்லாவிட்டால் பிறகு யோசிப்போம்..."
              
              இவ்விதம் முடிவெடுத்தவர்களாக இருவரும் இயக்குநரின் அறைக்குச் 
              சென்றார்கள். இயக்குநர் சைமன் முகத்தில் அப்பொழுது கூடப் 
              புன்னகையினைக் காணவில்லை.
              
              இயக்குநர் சைமன் (ஆங்கிலத்தில்): "காலை வந்தனங்கள். வாருங்கள். என்ன 
              விடயம்.." 
              
              இளங்கோ: "காலை வந்தனங்கள். உங்களுக்குத் தற்போது எழுந்துள்ள சூழல் 
              தெரிந்திருக்குமென்று நினைக்கின்றோம்..."
              
              இயக்குநர் சைமன்: "ஆம். மிகவும் துரதிருஷ்ட்டமானது. உங்களுக்கு 
              என்னால் ஏதாவது உதவிகள் செய்ய முடியுமாவென்று பார்க்கின்றேன்."
              
              இளங்கோவும், நண்பனும்" "மிகவும் நன்றி". 
              
              இளங்கோ தொடர்ந்தான்: "உங்களது வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. இந்தச் 
              சமயத்தில் வெள்ளவதையிலுள்ள இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்வது 
              நல்லதுபோல் எனக்குப் படுகிறது. நீங்கள் மட்டும் கொஞ்சம் இந்த 
              விடயத்தில் உதவினால்.."
              
              இயக்குநர் சைமன்: "சொல்லுங்கள். இந்த விடயத்தில் நானெப்படி உதவிட 
              முடியுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"
              
              இளங்கோ" "சேர். நீங்கள் மனது வைத்தால்.. அங்கிருக்கும் வாகனமொன்றினை 
              எங்களுக்குக் கொடுத்துதவலாம்.."
              
              இயக்குநர் சைமன் சிறிது நேரம் சிந்தித்தான்; பின் இவ்விதம் கூறினான்: 
              " மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னால் எதுவும் 
              செய்வதற்கில்லை. நகரில் கலவரம் வெடித்திருக்கிற சூழலில் எந்த வாகனச் 
              சாரதியும் இதற்குச் சம்மதிக்க மாட்டான். இந்தச் சமயத்தில் நீங்கள் 
              இங்கிருப்பதுதான் நல்லது"
              
              இருவரும் இயக்குநருக்கு நன்றி கூறிவிட்டுத் தம்மிருப்பிடம் 
              திரும்பினார்கள். அதே சமயம் தமக்குள் பின்வருமாறும் உரையாடிக் 
              கொண்டார்கள்.
              
              இளங்கோ: "இயக்குநர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக உதவியிருக்க 
              முடியும். சிங்கள வாகனச் சாரதியோட்டும் அரச திணைக்கள வாகனத்திற்கு 
              ஆபத்தெதுவும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.."
              
              நண்பன்: "அவனும் பழைய கறளை நினைவில் வைத்துத்தான் இவ்விதம் 
              நடக்கின்றான் போலும்."
              
              இளங்கோ: "அவன் இவ்விதம்தான் செயற்படுவான் என்று எதிர்பார்த்தேன். 
              அதன்படியே நடக்கின்றான். இந்தக் கணத்தில் நானொரு முடிவு 
              எடுத்திருக்கிறேன்."
              
              நண்பன்: "என்ன..."
              
              இளங்கோ: "ஒருவேளை இந்தக் கலவரத்தில் தப்பிப் பிழைத்தால் இந்தக் 
              காரியாலயத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க மாட்டேன். இங்கு நாம் பட்ட 
              அவமானமாக, இறுதி அனுபவமாக இச்சம்பவமிருக்கட்டும்."
              
              நண்பன்: "உன்னுடைய பலவீனமே இதுதான். எதற்கும் வளைந்து கொடுக்காமல் 
              உடனடியாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்துவது.. சில சமயங்களில் 
              வளைந்தும் கொடுக்கத்தான் வேண்டும். காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் 
              பிடிக்கத்தான் வேண்டும்.."
              
              இச்சமயத்தில் அந்த முஸ்லீம் பணியாள் வந்தான். அவனது முகத்தில் சிறிது 
              பரபரப்பு தென்பட்டது.
              
              இளங்கோ: "என்ன விசயம். என் பதட்டமாயிருக்கிறாய்?"
              
              அதற்கந்த பணியாள் கூறினான்: "எவ்வளவு விரைவாக நீங்கள் இங்கிருந்து 
              செல்ல முடியுமோ அவ்வளவுகு நல்லது.."
              
              நண்பன் சிறிது பயந்து போனான்: "என்ன சொல்லுறாய்.. ஏன?"
              
              அதற்கந்த பணியாள் இவ்விதம் கூறிச் சென்றான்: "இங்கு வேலை செய்கிற 
              தமிழர்களை அடிப்பதற்குத் திட்டம் போடுகிறார்கள்.அதற்கு முதல் நீங்கள் 
              போவது நல்லது."
              
              நண்பன்: "இவனென்ன இவ்விதம் குண்டைத் தூக்கிப் போட்டு ஓடுகிறான்.."
              
              இளங்கோ: "அவன் உண்மையைத்தானே கூறினான். நாங்கள் எவ்வளவு விரைவாக 
              இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது"
              
              இச்சமயத்தில் காரியாலயத்திற்கு வெளியில் சிறிது களேபரச் சூழல் 
              ஏற்படவே அனைவரும் வெளியில் சென்றார்கள். இளங்கோவும் அவர்களுடன் 
              கும்பலுடன் கோவிந்தாவாக வெளியில் சென்றான். மருதானை வீதியிலிருந்த 
              அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிந்தவர்களெல்லாரும் வீதிக்கு 
              வந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதனை அவ்விதம் 
              விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?
              
              கப்பித்தாவத்தைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த 
              பாதையில் லொறியொன்று ஆயுதம் தரித்த கூண்டர்களுடன் சென்று 
              கொண்டிருந்தது. 'லோங்சும்' 'சேர்ட்டும்' அணிந்திருந்த குண்டர்கள். 
              கைகளில் பொல்லுகளைப் பலர் வைத்திருந்தார்கள். அவர்கள் அப்பாதையால் 
              சென்ற சிறிது நேரத்தில் கப்பித்தாவைத்தைப் பிள்ளையார் ஆலயம் 
              பக்கமிருந்து புகை சிறிதாகக் கிளம்பியது. பிரதமர் பிரேமதாசாவின் 
              மதிப்புக்குரிய , பக்திக்குரிய கப்பித்தாவத்தப் பிள்ளையாருக்கே 
              இந்தக் கதியா? இச்சமயம் கப்பித்தாவத்த ஆலயமிருந்த பகுதியிலிருந்து 
              தடித்த தமிழனொருவன் காதில் சிறிது வெட்டுக் காயங்களுடன் விஜேவர்த்தனா 
              மாவத்தை வீதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் 
              சனத்திரளுடன் விரைந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறிப்பதற்கு 
              முயன்றான். ஒன்றுமே நிற்கவில்லை. அச்சமயத்தில் அவனைத் துரத்தியபடி 
              சிறு கும்பலொன்று கைகளில் பொல்லுகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தது. 
              அவ்விதம் துரத்தி வந்தவர்களிலொருவன் வீதியோரமாக விடுப்புப் 
              பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம் வந்தான். ஒவ்வொருவராக மேலும் 
              கீழும் பார்த்தபடி வந்தான். இளங்கோவின் பக்கம் வந்தவுடன் ஒருகணம் 
              நின்றான்: "தெமிளதா சிங்களதா' என்றான். அவ்விதம்தான் கேட்டதாக 
              அவனுக்குப் பட்டது. 'சிங்கள; என்று மட்டும் பட்டும் படாமல் 
              கூறிவிட்டுப் பேசாமல் நின்றான் இளங்கோ. இன்னுமொரு வார்த்தை அவன் 
              வாயிலிருந்து வந்து விட்டால்போதும் அவன் அசல் தமிழனென்பதை அந்தக் 
              காடையன் கண்டு பிடித்து விடுவான். நிலைமை எல்லை மீறுவதை அவன் 
              உணர்ந்தான். இதற்கிடையில் காயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த தமிழனைக் 
              காணவில்லை. பஸ்ஸொன்றில் ஏறி விட்டிருக்க வேண்டுமென்று பட்டது. இளங்கோ 
              மெதுவாக காரியாலயத்தினுள் நுழைந்தான்.
              
              நண்பன்: "என்ன? எப்படி வெளியிலை இருக்கு?"
              
              இளங்கோ: "நிலைமை எல்லை மீறும் போலைத்தான் தெரிகிறது. நான் தப்பியது 
              அருந்தப்பு."
              
              இச்சமயத்தில் அத்திணைக்களத்து நிதிநிர்வாக உயர் அதிகாரியான 
              கந்தரட்ணமும், தமிழக்த்திலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் 
              ஸ்தாபனச் சிவில் பொறியியல் ஆலோசகராக வந்து பணிபுரிந்து கொண்டிருந்த 
              பாலகிருஷ்ணனும் அவசர அவசரமாக வாசலை நோக்ககி விரைந்து 
              கொண்டிருந்தார்கள். அவர்களுடன் 'பேர்கர்' இனத்துப் பெண்ணான 
              கந்தரட்ணத்தின் காரியதரிசிப் பெண் இமெல்டாவும் விரைந்து 
              கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே அவ்விதம் விரைந்து கொண்டிருந்தார்கள்?
              
              இளங்கோ நண்னுக்கு: "நாங்களும் இவர்களுடன் வெளியில் போவோம். இவர்களும் 
              வெளியில் போய் விட்டால் நாங்கள் இங்கு தனியாக அகப்பட்டு விடுவோம்."
              
              இருவரும் கந்தரட்ணத்தப் பின் தொடர்ந்தார்கள். வெளியில் சென்ற அவர்கள் 
              தயாராக நின்று கொண்டிருந்த அரச வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். 
              அவர்களின் அனுமதி எதனையும் எதிர்பார்க்காமலே இளங்கோவும் நண்பனும் 
              விரைவாக அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்ட 
              அந்த வாகனத்தைச் சாரதி மருதானைப் பக்கமாகச் செலுத்தினான். 
              இதற்கிடையில் யாரோ தமிழர்கள் வாகனத்தில் தப்பியோடுவதை வீதியில் 
              அப்பொழுதும் நடமாடிக் கொண்டிருந்த குண்டர்கள் சிலருக்குக் 
              கூறியிருக்க வேண்டும்.
              அவர்களில் சிலர் வாகனத்தை நோக்கிக் கைகளில் பொல்லுகளுடன் விரைவாக ஓடி 
              வந்தார்கள். அவர்கள் கைகளில் மட்டும் சிக்கியிருந்தால் அன்று 
              அவர்களின் கதை முடிந்து விட்டிருக்கலாம். இதற்கிடையில் மருதானைச் 
              சந்தி காமினி திரையர்ங்உ வரையில்தான் வாகனத்தைச் சாரதியால் ஓட்ட 
              முடிந்தது. அதற்கப்பால் போக முடியாதபடி கலவரச் சூழல் நிலவியது. 
              வாகனத்தை விரைவாகத் திருப்பிய சாரதி மீண்டும் விஜயவர்த்தனா மாவத்தை 
              வழியாக லேக் ஹவுஸ் பக்கம் செலுத்தினான்.
              
              கந்தரட்ணமும், பாலகிருஷ்ணனும் சிறிது கவலையுடன் காணப்பட்டார்கள். 
              இமெல்டாவோ அழுது விடுவாள் போல் காணப்பட்டாள். தமிழர்களுடன் சேர்த்து 
              அவளையும் சேர்த்து வாகனத்துடன் தாக்கி விட்டாலென்ற கவலையில் அவளுக்கு 
              அழுகைமேல் அழுகையாக வரவே இலேசாக அழவும் தொடங்கினாள். அவ்விதமாகக் 
              கொழும்பு வீதிகளினூடாகச் சென்று கொண்டிருக்கையில்தான் கலவரச் 
              சூறாவளியினை அதன் வேகத்தினை இளங்கோ முதன்முறையாக உணர்ந்தான். எவ்வளவு 
              வேகமாக வீசியடிக்கத் தொடங்கி விடுகிறது? வழியெங்கும் தமிழர்களுக்குச் 
              சொந்தமான வாகனங்கள் வீதிகளில் எரிந்து கொண்டிருந்தன. யாராவது உள்ளே 
              இருந்தார்களாவென்பது தெரியவில்லை? வீதிகள் பலவற்றில் கடைகள் பல 
              எரிந்து கொண்டிருந்தன. இளங்கோ கந்தரட்ணத்திடம் ஆங்கிலத்தில் 
              கேட்டான்: "நீங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்?"
              
              அதற்கவர் கூறினார்: " நாங்களிருவரும் ஓட்டல் ஒபராய் செல்லுகிறோம். 
              இமெல்டா தெகிவளையிலுள்ள தன் வீடு செல்கிறாள். நீங்கள் எங்கு 
              செல்வதாகத் திட்டம்?"
              
              இளங்கோ: "நல்லதாகப் போய் விட்டது. உங்களை ஓட்டல் ஒபராயில் இறக்கி 
              விட்டு எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விடலாம். இமெல்டா 
              செல்லும் வழிதானே.."
              
              இமெல்டா இன்னும் அழுது கொண்டிருந்தாள்.
              
              ஒரு வழியாக உயர் அதிகாரிகளிருவரையும் ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு 
              வாகனச் சாரதி வாகனத்தைக் காலி வீதி வழியாகச் செலுத்தினான். சிறிது 
              வயதான அந்தச் சிங்களச் சாரதி இவர்களிருவரையும் பார்த்துக் கேட்டான்: 
              "நீங்கள் எங்கு செல்ல் வேண்டும்"
              
              நண்பன்: "எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விட்டால் நல்லது.."
              
              அதற்கந்தச் சாரதி கூறினான்: "என்னால் இராமகிருஷ்ண மடம் மட்டும் வர 
              முடியாது. உங்களை இராமகிருஷ்ண வீதியும், காலி வீதியும் சந்திக்கும் 
              சந்திப்பில் இறக்கி விடுகிறேன். இறங்கிச் செல்லுங்கள்"
              
              இளங்கோ: "அது போதுமெங்களுக்கு. மிக்க நன்றி" 
              
              வழியெங்கும் காடையர் கூட்டம் ஆர்ப்பரித்தபடி, கடைகள் எரிந்தபடி, 
              வாகனங்கள் தலை குப்புற வீழ்ந்து எரிந்தபடி, ஆண்களும், பெண்களுமாகத் 
              தமிழர்கள் அவசர அவசரமாக விரைந்தபடி, ஓடியபடி,... சூழலின் அகோரம் 
              நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருந்தது. இதுபற்றிய எந்தவிதக் 
              கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைகள் சிலவற்றை 
              ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு 
              சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன. 
              
              வாகனச் சாரதி காலி வீதியும், இராமகிருஷ்ண வீதியும் 
              சந்திக்குமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்படி கூறினான். 
              உயர் அதிகாரிகள் இருந்தபோது அவன் காட்டிய பணிவு, மரியாதையெல்லாம் 
              இப்பொழுது அடியோடு அகன்று விட்டன. இளங்கோ நண்பனை நோக்கினான்.
              
              "என்ன இறங்கி நடப்போமா?"
              
              நண்பன் பதிலுக்குத் தலையசைக்கவே இருவரும் அவசரமாக இறங்கினார்கள். 
              அப்பொழுதுதான் தெகிவளைக் காலவாயை அண்டியிருந்த சேரியிலிருந்து 
              காடையர் கும்பலொன்று கைகளில் கத்திகள், பொல்லுகளென்று ஆரவாரித்தபடி, 
              சிங்களத்தில் ஏதோ கத்தியபடி இவர்களளிருந்த திக்கை நோக்கி வந்து 
              கொண்டிருந்தார்கள். சிந்திப்பதற்கு நேரமில்லை. மீண்டும் இருவரும் 
              சொல்லி வைத்த மாதிரி மீண்டும் வாகனத்திற்குள் பாய்ந்தேறினார்கள். 
              ஓரளவு ஆசுவாசப்பட்ட இமெல்டா மீண்டும் அழத் தொடங்கி விட்டாள். இளங்கோ 
              சாரதியிடம் தெகிவளையில் இறக்கி விடும்படி கூறினான். வேண்டா 
              வெறுப்பாகச் சாரதி வாகனத்தை மீண்டும் செலுத்தத் தொடங்கினான். 
              நல்லவேளை கும்பல் வாகனத்தை நிறுத்தித் தொல்லை தரவில்லை. தெகிவளை 
              அண்மித்ததும், கொழும்பு மிருக காட்சிச் சாலைக்குச் செல்லும் 
              வீதியுடனான சந்திப்பில் மீண்டும் வாகனத்தை நிறுத்தி விட்டான் சாரதி. 
              சந்தியில் இரு சிங்களக் காவற்துறையினர் ஒரு சில குண்டர்களைப் போன்ற 
              தோற்றத்தில் காணப்பட்ட சிங்களவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததை 
              அப்பொழுது இளங்கோ அவதானித்தான். அத்துடன் சாரதியிடம் கேட்டான்:
              
              "எதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டாய். இமெல்டாவை விட்டு விட்டு வரும் 
              வழியில் எங்களிருவரையும் இராமகிருஷ்ண மண்டபத்தில் கொண்டு சென்று விட 
              முடியுமா?"
              
              அதற்கு அந்த வாகனச் சாரதி சிறிது உரத்த குரலில் பதிலிறுத்தான்: 
              "என்னுடைய உயிருக்கு யார் உத்தரவாதன்?" 
              
              இளங்கோ (நண்பனை நோக்கி): "இஅவன் இப்படியே உரக்கக் கதைத்து அந்தக் 
              குண்டர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவான். 
              அதற்குள் இறங்குவதே புத்திசாலித்தனம். சே. நாங்களும் கந்தரட்ணத்துடன் 
              ஓட்டல் ஒபராயிலேயே இறங்கி விட்டிருக்கலாம்."
              
              வாகனச் சாரதிக்கும், இமெல்டாவுக்கும் நன்றி கூறிவிட்டு எதிர்ப்புறம் 
              கடற்புறமாகவிருந்த வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினான் இளங்கோ. 
              அத்துடன் நண்பனுக்கு இவ்விதம் கூறினான்: "என்னுடன் ஒன்றுமே 
              கதைக்காதே. அபப்டியே என்னைப் பின் தொடர்ந்து வா எந்தவிதப் 
              பதட்டமுமில்லாத தோற்றத்துடன். நான் இப்படியே தெகிவ்லை நூலக வீதியால் 
              கடற்கரைக்குச் சென்று கடற்கரை வழியாக அப்படியே இராமகிருஷ்ண 
              மண்டபத்துக்குச் சென்று விடலாம். கடற்கரை வழியால் செல்லும் போது நான் 
              கடலை, அலையையெல்லாம் இரசித்து வந்தால் ஆச்சரியப்பட்டு விடாதே. 
              புகையிரதக் கடவை வழியாகக் கூண்டர்கள் யாரும் வந்தால் சந்தேகப் 
              படமாட்டார்கள். ஆக உச்சக் கட்டமாகக் கடலில் குளித்தாலும் 
              குளிப்பேன்." இவ்விதம் கூறிவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்ற 
              இளங்கோவைச் சிறிது தொலைவில் பின் தொடர்ந்தான் நண்பன்.
[தொடரும் ]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




