அத்தியாயம் 
              பத்து: வழி தவறிய பாலைவனத்து ஒட்டகங்கள்!
  
  
              
  
               நியூயார்க் 
  பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையிலிருந்த பழையதொரு ஆபிஸ் கட்டடத்தின் இரண்டாம் 
  தளத்தில் அமைந்திருந்தது முகவன் பீற்றரின் வேலை காரியாலயம். அவன், அவனது 
  அந்தரங்கக் காரியதரிசி கிறிஸ்டினா (கிறிஸ்டினா அவனது மனைவி கூட), காரியாலயப் 
  பணியாளான வயது முதிர்ந்த கூன் முதுகுடன் கூடிய ஹென்றி இவர்கள் மூவரும்தான் அங்கு 
  பணி புரியும் மூலவர்கள். கண்ணாடித் த்டுப்புடன் கூடிய ஆறையில் பீற்றரும், 
  கிறிஸ்டினாவுமிருக்க, அறை வாசலில் வெளிப்புறமாக ஹென்றிக்கு மேசையும் கதிரையும் 
  போடப் பட்டிருந்தது. வேலை தேடும் மூன்றாம் உலகத்துச் சட்டவிரோதக் குடிமக்கள் 
  கூடத்தில் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் பீற்றர் 
  எடுத்துத்தரப்போகும் 'ஹிட்டார் அடி' வேலைக்காகக் காத்து நிற்பார்கள். அந்த ஒரு 
  வேலையைத்தான் பீற்றரால் எடுத்துக் கொடுக்க முடியும். நியூயார்க், நியூ ஜேர்சி 
  என்ற இரு மாநிலங்களிலும் அவனது சேவையினைப்
நியூயார்க் 
  பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையிலிருந்த பழையதொரு ஆபிஸ் கட்டடத்தின் இரண்டாம் 
  தளத்தில் அமைந்திருந்தது முகவன் பீற்றரின் வேலை காரியாலயம். அவன், அவனது 
  அந்தரங்கக் காரியதரிசி கிறிஸ்டினா (கிறிஸ்டினா அவனது மனைவி கூட), காரியாலயப் 
  பணியாளான வயது முதிர்ந்த கூன் முதுகுடன் கூடிய ஹென்றி இவர்கள் மூவரும்தான் அங்கு 
  பணி புரியும் மூலவர்கள். கண்ணாடித் த்டுப்புடன் கூடிய ஆறையில் பீற்றரும், 
  கிறிஸ்டினாவுமிருக்க, அறை வாசலில் வெளிப்புறமாக ஹென்றிக்கு மேசையும் கதிரையும் 
  போடப் பட்டிருந்தது. வேலை தேடும் மூன்றாம் உலகத்துச் சட்டவிரோதக் குடிமக்கள் 
  கூடத்தில் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் பீற்றர் 
  எடுத்துத்தரப்போகும் 'ஹிட்டார் அடி' வேலைக்காகக் காத்து நிற்பார்கள். அந்த ஒரு 
  வேலையைத்தான் பீற்றரால் எடுத்துக் கொடுக்க முடியும். நியூயார்க், நியூ ஜேர்சி 
  என்ற இரு மாநிலங்களிலும் அவனது சேவையினைப் 
  பயன்படுத்துவதற்கு நூற்றுக் கணக்கான் கிரேக்க உணவகங்கள் காத்திருந்தன. 
  அமெரிக்காவில் இத்தகைய வேலைகளெல்லாம் அங்கு வாழும் சட்டவிரோதக் குடிமக்களால்தான் 
  செய்யப்படுகின்றன. இத்தகைய தொழிலாளர்களின் சட்டவிரோத நிலையினைத் தமக்குச் 
  சாதகமாக்கிச் சில உணவக உரிமையாளர்கள் தொழிலாளர்களை வதக்கியெடுப்பதுமுண்டு. 
  எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சட்டவிரோதக் குடிகாரர்களான மேற்படி மூன்றாமுலக 
  நாயகர்கள் குழந்தை, மனைவி, குடும்பம் பற்றிய வருங்காலக் கனவுகளுடன் 
  மாடுகளாக உழைப்பதற்கு எவ்வளவுதூரம் தயாராயிருக்கிறார்களென்பதை வேலை வாய்ப்பு 
  முகவன் பீற்றரின் அலுவலகத்தின் ஒரு நாள் நடை முறையினை அவதானிப்பதன் மூலம் நன்கு 
  அறிந்து கொள்ள முடியும். 
  
  காலை ஆறு மணிக்கெல்லாம் பணியாள் ஹென்றி வந்து விடுவான். காரியாலயத்தைத் திறந்து 
  விடுவதெல்லாம் அவனது 
  பணிகளிலொன்றுதான். வேலை தேடும் குடிமக்களெல்லாரும் அவனது வருகைக்காகக் 
  காத்துநிற்பார்கள். காலை உணவை முடித்து விட்டுக் கைகளில் 'காப்பி'யுடன் காத்து 
  நிற்பார்கள். எழு மணிக்கெல்லாம் முகவன் பீற்றர் வந்துவிடுவான். அதன்பிறகு எட்டு 
  மணியளவில்தான் கிறிஸ்டினா வருவாள். பீற்றர் வந்து விட்டால் ஒருவருமே அடிக்கடி 
  இயற்கையின் கட்டாயத் தேவைகளுக்காக,  உணவுக்காக அல்லது 'காப்பி'க்காகவென்று 
  அடிக்கடி வெளியில் செல்ல விரும்புவதில்லை. அதற்கொரு காரணமும் இருக்கத்தான் 
  செய்தது. பீற்றர் வேலைக்குத் தெரிவு செய்யும்போது சில நடைமுறைகளைக் கைக்கொள்வான். 
  அவற்றில் அவனது அவர்கள் மீதான அவதானிப்பும் அடங்கும். நாள் முழுக்க வேலைக்கான 
  அழைப்புக்காகக் காத்து நிற்கும்போது அவனது பார்வை அடிக்கடி கூடத்தில் காத்து 
  நிற்கும் அவர்கள் மீது படிந்து செல்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் அவன் 
  அவர்களது குணாதிசயங்களை எடை போட்டு வைத்துக் 
  கொள்வான். அவனது சேவைக்காகக் குரல் கொடுக்கும் பலவேறு வகையான உணவகங்களின் 
  உரிமையாளர்களைப் பற்றி அவர்களது குணாதிசயங்களைப் பற்றியெல்லாம் தனது அனுபவத்தின் 
  வாயிலாக அறிந்து வைத்திருந்த அவனுக்கு அவர்களுக்கேற்ற பணியாட்களைத் தெரிவு 
  செய்வதற்கு அவனது இத்தகைய அவதானிப்புகள் கை கொடுத்தன. யாரெவர் மிகவும் அமைதியாகப் 
  பொறுமையுடன் எப்பொழுதும் கலகலப்பான முகவாகுடன் இருக்கிறாரோ அத்தகையவர்களுக்கு 
  அவனது நல்ல உணவகங்களில் வேலை செய்வதற்குரிய அதிருஷ்ட்டம் அடிக்கும். அடிக்கடி 
  பொறுமையிழந்து வெளியில் போய் வருவோருக்கு, எந்த நேரமும் பேசிக்கொண்டிருப்போருக்கு
  
  சிரமத்தைத் தரக்கூடியதென்று கருதப்படும் உணவகங்களில்தான் வேலை வாய்ப்பு 
  கிடைப்பதற்குரிய சந்தர்ப்ம் அமைவது வழக்கம். இது பற்றி கோஷ் இளங்கோவுக்கு முன்னரே 
  எச்சரித்திருந்தான். இதன்பொருட்டுத்தான் பீற்றரின் பார்வையில் நன்மதிப்பைப் 
  பெறுவதன் பொருட்டு இயலுமானவரையில் பொறுமையாகக் காத்திருக்கப் பழகியிருந்தார்கள் 
  அவனிடம் வேலை பெறுவதற்காகக் காத்திருக்கும் குடிமக்களில் பலர். ஒரு சிலர் ஒரு 
  நாளுடன் பொறுமையிழந்து அவனும் அவனது வேலையுமென்று முயற்சி செய்வதை விட்டு 
  விட்டுப் போய் விடுவார்கள். இன்னும் சிலர் இரண்டாம் நாளுடன் பொறுமையிழந்து 
  விடுவார்கள். இவ்விதமாக நாளொன்றுக்கு ஆளாளுக்குக் கழன்றுவிடப் நிலைத்து 
  நிற்பவர்களில் சிலருக்கு அதிருஷடம் அடிக்கும். ஒரு சிலருக்கு ஒரு நாளிலும் 
  அவ்விதமான அதிருஷடம் 
  அடிப்பதுமுண்டு. இவ்விதமான அதிருஷ்ட்ட தேவதையின் கடாட்சம் பெற்றவர்களைப் பஸ் 
  நிலையத்தில் அல்லது பாதாள் இரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று வழியனுப்புவது 
  பணியாள் ஹென்றியின் பிரதான பணிகளிலொன்று. அத்தகைய சமயங்களில் சில சமயங்களில் வேலை 
  பெற்றுச் செல்லும் பணியாளர்களுக்குத் தனது அறிவுரைக்ளைக் கூறுவான் ஹென்றி. அவன் 
  அபூர்வமாக வாய் திறக்கும் சந்தர்ப்பங்களவை.
  
  இளங்கோவைப் பொறுத்தவரையில் இவ்விதமாக முகவன் பீற்றரின் காரியாலயத்தில் 
  வேலைக்காகக் காத்துநின்று மூன்று நாட்களைக் கடந்து விட்டன. அன்று நான்காவது நாள். 
  இன்னும் ஒரு நாள் மட்டும் முயற்சி செய்வதற்கு முடிவு செய்து கொண்டிருந்தான். 
  காலையிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் நீண்ட நேரமாக அவ்விதம் காத்துநிற்பது 
  பெரிதும் சலிப்பினைத் தந்தது. இந்த வாரம் எவ்விதமாவது ஒரு வேலை எடுத்து விட 
  வேண்டும். ஒரு சில வாரங்கள் செய்தாலே போதுமானது. அதன் மூலம் கிடைக்கும் 
  வருமானத்தை அடித்தளமாக வைத்து அடுத்த முயற்சியில் இறங்கி விடும் திட்டத்தில் 
  அவனிருந்தான்.
  
  இந்த மூன்று நாட்களில் அவனுக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்தபாவும், கானாவைச் 
  சேர்ந்த மைக்கலும் பேசிப் பொழுதினைக் கழிப்பதற்குரிய நண்பர்களாகவிருந்தார்கள். 
  முஸ்தபா ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக நாட்டை விட்டு நீங்கிப் பல்வேறு நாடுகளைக் 
  கடந்து ஒரு வழியாக அமெரிக்க மண்ணில் சட்டவிரோதமாகக் காலடி எடுத்து 
  வைத்திருந்தான். மைக்கல் படிப்பதற்காக வந்தவன் அது முடிந்த நிலையில் திரும்பிச் 
  செல்ல விரும்பாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தான். எல்லோருக்குமே இப்புவியுலகின் 
  சொர்க்கபுரியில் பணத்தை அள்ளிக் கோண்டு நாடு திரும்பவேண்டுமென்ற கனவிருந்தது.
  
  மைக்கலும் சிறிது பொறுமையிழந்திருந்தான். அது அவர்களுடனான அவனது உரையாடலிலும் 
  சிறிது தொனித்தது: "நண்பர்களே! இந்த மூன்று நாட்களாக இவ்விதம் காத்திருந்து இந்த 
  வேலைக்குச் செல்ல வேண்டுமாவென்றிருக்கிறது. ஏதோ அவசரத்துக்கு விரைவாகக் 
  கிடைக்குமென்று வந்தால்... இவ்விதம் நாட்களை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறானே. 
  இவ்விதம் தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்."
  
  அதற்கு முஸ்தபா இவ்விதம் தனது கருத்தினை முன்வைத்தான்: " நீ சொல்வதும் சரிதான் 
  மைக்கல். ஆனால் எங்கேயென்று வேலை 
  தேடுவது. எங்கு போனாலும் சமூகக் காப்புறுதி இலக்கம் கேட்கிறார்களே.."
  
  அதற்கு மைக்கல் இவ்விதம் கூறினான்: "இரு நூறு டாலர்கள் கொடுத்தால் கூறுகிற 
  பெயரில் சமூகக் காப்புறுதி அட்டையையே இங்கு எடுத்து விடலாம். என் கையிலிருந்த 
  காசெல்லாம் முடிந்து விட்டதால் குறுகிய காலத்தில் கொஞ்ச பணம் சம்பாதிக்கலாமென்று 
  இவனிடம் வந்தேன். கையில் போதிய பணம் இருப்பில் வந்ததும் நான் அந்த வழியில்தான் 
  செல்லப் போகின்றேன். இருப்பதே சட்ட விரோதமாக. அதில் இன்னுமொரு சட்டவிரோதச் 
  செயலைச் செய்வதாலென்ன மேலதிக நஷ்ட்டம் வந்து விடப் போகிறது? சமூகக் காப்புறுதி 
  இலக்கமிருந்தால் இப்பொழுது கூடத் தொழிற்சாலையொன்றில் மிகவும் இலகுவாக 
  வேலையொன்றினை எடுத்து விடலாம்."
  
  இளங்கோவில் நிலையில் அவ்விதம் வேலை செய்வதில் சிறிது சிக்கலிருந்தது. அவன் 
  இவ்விதம் தன் நிலையினை அவர்களுக்கு 
  எடுத்துரைத்தான்: "நானும் தற்பொழுது இங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்தாலும் 
  சட்டரீதியாக நாட்டினுள் அடியெடுத்து வைத்தவன்.  அதனால் இப்பொழுது 
  சட்டவிரோதச் செயலைச் செய்து தற்செயலாக அகப்பட்டு விட்டால் என் அகதிக் கோரிக்கை 
  உடனடியாகவே நிராகரிக்கப்பட்டு விடலாம். ஆனால் அந்த வழி எனக்குச் சரி வந்து 
  விடாது. ஆனால் மைக்கல் சொல்வது சரிதான். எனக்கும் தெரிந்த என் நாட்டவனொருவன் 
  கப்பலில் வந்து இங்கு இறங்கியவன் இப்பொழுது அவ்விதம்தான் சமூகக் காப்புறுதி 
  அட்டையெடுத்துத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றான்"
  
  இவ்விதமாகச் சிலநேரம் அவர்கள் ஏனைய வழிமுறைகள பற்றித் தமக்கிடையில் 
  உரையாடிக்கொண்டார்கள். இன்னுமொரு சமயம் 
  முகவன் பீற்றரைப் பற்றி, கோப்பை கழுவும் பணி பற்றி, நியூயார்க் பற்றியெல்லாம் 
  பல்வேறு விதமான தமது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். மேலும் சில சமயங்களில் 
  பேசுவதற்குரிய பொருளெதுவுமின்றி சிநதனையில் ஆழ்ந்து கொள்வார்கள். அத்தகைய 
  சமயங்களில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய , ஊரில் விட்டு விட்டு வந்த 
  குடும்பத்தவர், உற்றார் உறவினரைப் பற்றி, நாட்டு நிலைமையைப் பற்றி எனப் பல்வேறு 
  விடயங்களைப் பற்றிய சிந்தனைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். ஆதிச் சமூகநிலை 
  நிலவிய 
  அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரையில் புலம்பெயர்தலென்பது மானுட 
  சமுதாயத்தின் தப்பிப் பிழைத்தலுக்குரிய தவிர்க்க முடியாததொரு செயலாகத்தானிருந்து 
  வருகிறது. சிலம்பு கூறும் 'கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்களி'லிருந்து இன்று 
  வரையில் எத்தனையோ காரணங்களுக்காகப் புலம்பெயர்தல் தொடரத்தான் செய்கிறது. சமூக, 
  அரசியல், பொருளியல் காரணங்களுக்காக 
  இன்றைய புலம்பெயர்தல் தொடர்கிறது. இவ்விதமான எண்ணங்கள் அவனை ஆக்கிரமித்தன. 
  ஈழத்துக் கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலனின் 
  கவிதையொன்றின் சில வரிகள் ஞாபகத்திலெழுந்தன.
  
  'நானோ
  வழிதவறி அலாஸ்கா
  வந்து விட்ட ஒட்டகம்போல்
  ஒஸ்லோவில்'
  
  தற்போதைய அரசியல் சூழல்களால புலம்பெயர்ந்திருக்கும் அனைத்து நாட்டவர்களுக்கும் 
  பொருந்தக் கூடிய கவிதை. முஸ்தபாவும் சரி, மைக்கலும் சரி ஏன் அவனும் சரி இத்தகைய 
  வழி தவறி வந்து விட்ட ஒட்டகங்களாகத்தான் இளங்கோவுக்கு அச்சமயம் தென்பட்டார்கள். 
  ஆனால் நிஜ வாழ்வில் வழிதப்பி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகங்கள் பிழைக்குமோ இல்லையோ 
  இந்த மானுட ஒட்டகங்கள் நிச்சயம் பிழைத்துக் கொள்ளும். அல்லது பிழைத்துக் 
  கொள்வதற்காவது வழிவகைகளை முடிந்த வரையில் முயன்று பார்க்கும்.
  
  சிந்தனைகள் மேலும் மேலும் விரிந்தன. பால்ய காலத்து நினைவுகள் எப்பொழுதுமே 
  அழியாதவை; பசுமையானவை. அதிகாலைகளில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புப் 
  பரீட்சைகளுக்காக நேரத்துடனெழுந்து படிப்பது நினைவுக்கு வந்தது. அப்பொழுதெல்லாம் 
  அப்பா தவறாமல் தூக்கத்தினின்றும் எழுப்பி விடுவார். அம்மா சுடச்சுட பால் நிறைய 
  விட்டுக் கலந்த தேநீர் கொண்டு வந்து தருவார். வளவிலிருந்த மாவிலிருந்து 
  குயிலொன்று எப்பொழுதும் கூவும். புள்ளினங்களின் அதிகாலை ஆரவாரங்களால் சூழல் 
  நிறைந்திருக்கும் இரம்மியமான காலைப் பொழுதுகள். அவ்வதிகாலைப் பொழுதுகளில் 
  சுழன்றடிக்கும் காற்றில் அசைந்தாடும் பனைகளினோசைகள் 
  மெல்லக் காதில் வந்து விழும். மெல்லிய தென்றல் ஜன்னைலினூடு உள்ளே வந்து 
  தாலாட்டும் தருணங்களில் தொலைவில் தெரியும் நிலாவின் தண்ணொளியில் நனைந்தபடி 
  படிப்பதிலுள்ள சுகமிருக்கிறதே... இப்பொழுது அம்மா இங்கிருந்தால் என்ன 
  நினைப்பாரென்றொரு எண்ணமும் எழுந்தது. இளங்கோவின் இதழ்க்கோடியில் மெல்லியதொரு 
  சிரிப்பு எழுந்து மறைந்தது. கோப்பை கழுவும் வேலையொன்றை எடுப்பதற்காக ஆடுமிந்த 
  ஆட்டத்தை நினைத்தால் சிரிக்காமல் என்ன செய்வது? இந்த இருப்பில் எதுவும் 
  எப்பொழுதும் சாத்தியப்படலாம். 
  நடக்க முடியாதென்று நினைப்பவற்றையெல்லாம் காலம் மிக இலகுவாக மாற்றி வைத்து 
  விடுமாற்றல் மிக்கதென்பதைப் புரிய 
  வைப்பதாக அவனது நிகழ்காலமிருந்தது.
  
  ஒருவழியாக ஐந்தாவது நாள், வெள்ளிக் கிழமை நண்பகல், முகவன் பீற்றரின் கடாட்சம் 
  அவன் பக்கம் வீழ்ந்தது. அவன் அழைத்தபோது இளங்கோவின் மனநிலையினை விபரிப்பதற்கு 
  வார்த்தைகளேது. அந்தக் குறுகிய நேரத்தில் அவன் மனது பின்வருமாறு 
  எதிர்காலத்திட்டம் பற்றிய கணக்குகளைப் போட்டது:
  
  1. இந்த வேலையை இயலுமானவரையில் தக்க வைத்துக் கொள்வது.
  2. ஆகக் குறைந்தது ஒருவாரமாவது செய்தால்தான் அடுத்த சில வாரங்களுக்குத் தப்பிப் 
  பிழைக்கலாம். 
              3. வேலை புரியும் சூழல் பிடிக்குமிடத்தில் சிறிது காலம் அங்கு வேலை 
              செய்து இயலுமானவரையில் காசைக் கொஞ்சம் சேமிப்பது.
              4. அதே சமயம் சமூகக் காப்புறுதி இலக்கத்தினை சட்டரீதியான முறையில் 
              பெறுவதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்வது.
              5. அகதிக் கோரிக்கைக்கான வழக்கினை இலாபநோக்கற்று சட்ட உதவிகளை 
              வழங்கும் அமைப்பொன்றிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலம் சிறிதளவு 
              பணத்தினையாவது சேமிக்கலாம்.
              6. சமூகக் காப்புறுதி இலக்கம் கிடைத்ததும் ஓரளவுக்கு அவனது கல்வித் 
              தகைமைகளுக்குரிய வேலைகளை முடிந்தவரையில் தேடுவது.
              7. குறைந்தது ஒரு வருடமாவது அமெரிக்காவில் தங்கி முடிந்தவரையில் 
              பொருளியல் ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
              8. அவ்விதமான திட்டம் நிறைவேறாது விடும்பட்சத்தில் கனடாவுக்குச் 
              சென்று விடவேண்டும்.
              9. மீண்டும் அங்கு தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டத்தினைத் தொடங்க 
              வேண்டும்.
              
              இவ்விதமான எதிர்காலத்திட்டங்களுடன் முகவன் பீற்றரின் அறையினுள் 
              நுழைந்தான் இளங்கோ. அவனை வரவேற்ற முகவன் பீற்றர் அருகிலிருந்த 
              ஆசனத்தில் அமரும்படி வேண்டினான்: "எனது இளம் நண்பனே! இங்கு ஆறுதலாக 
              அமருவாயாக"
              
              இளங்கோ ஆசனத்திலமர்ந்தவனாக முகவன் பீற்றரை நோக்கிக் காத்திருந்தான்.
              
              முகவன் பீற்றர் தொடர்ந்தான்: "நண்பனே! உனக்கு நல்லதிருஷ்ட்டம் அடிக்க 
              ஆரம்பமாகி விட்டது. இனி உன்பாட்டில் இராஜ யோகம்தான்."
              
              இவ்விதம் கூறிய முகவன் பீற்றர் மேலும் தொடர்ந்தான்: "நான் உன்னை 
              நியூஜேர்சி நகரிலுள்ள உணவகமொன்றுக்கு அனுப்பப் 
              போகின்றேன். நல்ல உணவகம். கடல் உணவு தயாரிப்பில் சிற்ந்து 
              விளங்குமொரு உணவகம். அதன் உரிமையாளரான நெப்போலியனே அங்கு பிரதான 
              சமையல்காரனாகவும் பணி புரிகின்றான். அவனுக்குக் கீழ்தான் நீ வேலை 
              செய்யப் போகின்றாய்".
              
              இளங்கோ: "அபப்டியா. மிகவும் நன்றி. என்னால் முடிந்த வரையில் 
              நேர்மையாக, உங்களுக்கு விசுவாசமாக, உங்கள் பெயருக்குப் 
              பங்கமெதுவும் ஏற்படாமல், கடுமையாக வேலை செய்ய முயற்சிப்பேன்"
              
              முகவன் பீற்றர்: "உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 
              குறிப்பாகக் 'கடுமையாக வேலை செய்ய முயற்சிப்பேன்' என்று கூறினாயே அது 
              எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. செய்வேனென்று கூறாமல் 
              முயற்சிப்பேன்று கூறுவதில் உண்மை அதிகம் கலந்திருக்கிறது. நீ 
              பிழைத்துக் கொள்வாய். நெப்போலியன் மிகவும் நல்லவன். ஆனால் சிறிது 
              கண்டிப்பானவன். நன்கு வேலை செய்யும் பணியாட்களை அவன் மிகவும் மதித்து 
              நடப்பவன். இன்னுமொன்று..."
              
              என்ன என்பது போல் முகவன் பீற்றரை நோக்கினான் இளங்கோ. முகவன் பீற்றர் 
              தொடர்ந்தான்:
              
              "மூன்று நேரச் சாப்பாடும், தங்குவதற்குரிய இருப்பிட வசதியும் இலவசம். 
              நீ செல்லும்போது உனக்காக அங்கு நெப்போலியன் போதிய தயாரிப்புகளுடன் 
              காத்திருப்பான். உன்னை உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவான். 
              வேலை பற்றிய அத்த்தனை விபரங்களையும் விரிவாக விளக்குவான். வேலையில் 
              ஏதாவது பிரச்சினைகளென்றால் நீ அவனிடம் முரண்டு பிடிக்காதே. எனக்கு 
              நேரடியாகத் தொலைபேசியில் அழை. வேறென்ன. எண்பது டொலர்களைக் 
              கிறிஸ்டினாவிடம் கொடுத்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு நீ 
              போகலாம். ஹென்றி உன்னைப் பஸ் நிலையம் அவரையில் வந்து வழியனுப்பி 
              வைப்பான். உனக்கு என் வாழ்த்துக்கள். வேறு ஏதாவது 
              கேள்விகளிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு."
              
              பதிலுக்கு இளங்கோ "தற்போது எதுவுமில்லை. பின்னர் ஏதாவது 
              தேவைப்பட்டால் உங்களுடன் தொடர்பு கொள்வேன். இந்த வேலை 
              எடுத்துத் தந்ததற்கு என் நன்றி" என்று கூறிவிட்டுக் கிறிஸ்டினாவிடம் 
              எண்பது டொலர்கள் கொடுத்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு, 
              ஹென்றியுடன் நியூயார்க் பஸ்நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான்.
[தொடரும்]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




