- வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!
               [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் அமெரிக்கா 
-II அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின்  இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும்.- வ.ந.கி 
  ]
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் தமிழகத்திலிருந்து ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் அமெரிக்கா 
-II அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின்  இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும்.- வ.ந.கி 
  ]
அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில 
              ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 
              'விதேசிகள் 
              ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ 
              உயிரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு 
              இருக்கின்ற உரிமைகள் கூட எனக்கில்லையே' இவ்விதமாக அந்தக் கணத்திலும் 
              இளங்கோவின் சிந்தையிலொரு எண்ணம் கோடு கிழித்தது. கொழும்பிலிருந்து 
              காலிக்குச் செல்லும் புகையிரதக் கடவைகள் வழியாகக் குண்டர்களின் 
              நடமாட்டம் சிறிது அதிகமாகவிருந்ததை அவதானித்தவன் கடற்கரை மணலினுள் 
              இறங்கியவனாகக் கடலையும், அதன் வனப்பையும், அங்கு நீராடிக் 
              கொண்டிருந்தவர்களையும் பார்த்தவனாக இராமகிருஷ்ண மடமிருந்த திக்கை 
              நோக்கி நடந்தான். அடிக்கொருதரம் திரும்பி நண்பன் பின்தொடர்வதை உறுதி 
              செய்து கொண்டான். நண்பனைப் பொறுத்தவரையில் பார்வைக்குக் கிராமத்துச் 
              சிங்கள இளைஞனைப் போன்று சிறிது வெண்ணிறமான தோற்றத்தில் சுருண்ட 
              தலைமயிருடனிருந்தான். சிங்களம் வேறு மிகவும் இயல்பாகக் 
              கதைக்குமாற்றல் பெற்றவன். தப்பி விடுவான். இவனைப் பொறுத்தவரையில் 
              நிலமை வேறு. 'ஒயாகே நம மொக்கத?', 'டிக்கக் டிக்கக் தன்னவா' போன்ற ஒரு 
              சில ஆரம்பச் சிங்கள வார்த்தைகளைத் தவிர சுட்டுப் போட்டாலும் 
              இவனுக்குச் சிங்களம் வராது. ஒரு முறை இவனது பல்கலைக் 
              கழக வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சம்பவம் இவனது சிங்கள மேதமையினை 
              வெளிப்படுத்தவல்லது. ஒருமுறை இவனை பகிடிவதை செய்த மாணவர்கள் சிலர் 
              இவனிடம் அரை இறாத்தல் சீனி வாங்கி வரும்படி கூறியிருந்தனர். 
              அப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலிருந்த சிங்கள்வரொருவரின் 
              பலசரக்குக் கடைக்குச் சென்றவன் 'எக்கா மாறா'வென்று ஒன்றரை இறாத்தல் 
              பாணுக்குக் கூறுவது நினைவுக்கு வரவே அரை இறாத்தல் சீனிக்கு 'சீனி 
              மாறா'வென்று ('சீனி பாகயா' என்றுதான் கூறவேண்டும்) கேட்டு 
              அங்கிருந்தவர்களின் சிரிப்புக்காளானான். மேலுமின்னுமொரு சம்பவம் 
              அவனது இரயில் பயணத்தில் நடைபெற்றிருந்தது. ஒரு முறை யாழ்தேவியில் 
              கொழும்புக் கோட்டையிலிருந்து யாழ்நகர் நோக்கிச் சென்று 
              கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த உணவகத்தில் 'மட்டன் 
              ரோ'லொன்று வாங்கியுண்ணவேண்டுமென்று விருப்பம் வந்தது. அந்த உணவகமோ 
              சிங்களவரொருவரால் நடாத்தப்பட்டதுணவகம். 
              அவரிடம் 'ரோல் கீயத'வென்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் 
              வினாத்தொடுத்தான். அதற்கவர் 'எக்கா விசிப்பகா' என்றார். உடனேயே 
              இவனுக்கோ ஆனந்தம் தலைவிரித்தாடியது. ஊரில் கூட ஒரு 'ரோல்' ஒரு ரூபா 
              இருபத்தியைந்து சதத்திற்கு விற்பனயாகும்போது இங்கு எவ்வளவு குறைந்த 
              விலையில் ஒன்று இருபத்தியைந்துக்கு விற்கிறானே என்று 
              சந்தோசப்பட்டவனாக இரண்டு ரோல்களை வாங்கி ஆசை 
              தீர உண்டு விட்டு அதற்குரிய பணமாக ஐம்பது சதத்தை எடுத்துக் 
              கொடுத்தான். அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அந்தச் சிங்களவரின் 
              முறைப்பிற்குப் பின்னர்தான் ரோலின் விலை 'ஒரு ரோல் இருபத்தியைந்து 
              சதமல்ல ஒரு ரோல் ஒரு ரூபா இருபத்தியைந்து சதமென்பதே' அவனுக்கு 
              விளங்கியது. இந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகச் 
              சிங்களம் படிப்பதிலேயே அவனுக்கு ஆர்வமற்றுப் போயிற்று. சிங்கள 
              மொழியில் இவ்விதமானதொரு பாண்டித்தியம் பெற்றவனின் மொழியறிவினை இந்தச் 
              சமயம் பார்த்து யாராவது சிங்களக் காடையன் வந்து பரீட்சித்துப் 
              பார்த்தால் அவனது கதி அதோ கதிதான். அவனது எண்ணமெல்லாம் எப்படியாவது 
              இராமகிருஷ்ண மடத்தினுள் சென்று விட்டால் போதுமென்பதாகத்தான் 
              அச்சமயத்திலிருந்தது. காடையர்கள் கடந்த 
              கலவரத்தில் விட்டு வைத்ததைப் போல் இம்முறையும் இராமகிருஷ்ண மடத்தை 
              விட்டு வைப்பார்களென்று அவனது மனம் ஏனோ அச்சமயத்தில் நம்பியது. ஒரு 
              வழியாக அவனும் நண்பனும் இராமகிருஷ்ண மண்டபத்தை அடைந்து விட்டார்கள். 
              ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலைதான். இராமகிருஷ்ண 
              மண்டபத்தின் முன்புற வாசற் கதவு பூட்டப் பட்டிருந்தது. வாசலின் 
              முன்புறமாக இராமகிருஷ்ண வீதியில் காடையர் கும்பலொன்று நின்று 
              மண்டபத்தையே வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அவனும் நண்பனும் 
              அவர்களோடு அவர்களாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் பாவனை 
              செய்தார்கள். அடிக்கொருதரம் கொழும்புத் தமிழர்கள் சிலர் வாகனங்களில் 
              வந்து மடத்தின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் 
              வந்தவர்களை உள்ளிருந்து வந்த பாதுகாவல் அதிகாரி அடிக்கொருதரம் வாசற் 
              கதவினைத் திறந்து உள்ளே விட்டு விட்டு மீண்டும் மூடிக் 
              கொண்டிருந்தான். அத்தகையதொரு 
              சமயததில் அவனும் நண்பனும் அபயம் தேடி வந்த பாதிக்கப்பட்ட 
              தமிழர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து விட்டார்கள்.
              மண்டபத்தினுள் மேலும் பல தமிழர்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோவென்ற 
              பயப்பிராந்தியிருந்தார்கள். வெளியில் இன்னும் 
              காடையர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தபடியேயிருந்தது. வரவர அவர்களது 
              கூட்டமும் அதிகரித்தபடியேயிருந்தது. உள்ளிருந்த 
              தமிழர்களில் தமது தேன்நிலவினைக் கொண்டாட வந்து அங்கு தங்கியிருந்த 
              இளந்தம்பதியொன்றுமிருந்தது. பார்க்கப் பாவமாகவிருந்தது.
              
              இத்தகையதொரு சூழலில் அங்கிருந்தவர்களில் சிறிது உயரமாகத் 
              திடகாத்திரமாகவிருந்த தமிழ் இளைஞனொருவன் அங்கிருந்த 
              இளைஞர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்:
              
              "இன்னும் கொஞ்ச நேரத்திலை வெளியிலை வேடிக்கை பார்க்கிற குண்டர்கள் 
              உள்ளுக்குள் வந்து விடுவான்கள். நாங்கள் பயப்படக் 
              கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும்." நடைமுறைச் சாத்தியமற்ற 
              துணிச்சலாக அது அவனுக்குப் பட்டது. இத்தகைய சமயங்களில் 
              ஆத்திரப்படாமல், சமயயோசிதமாக, நிதானத்துடன் சிந்தித்துப் பிரச்சினையை 
              அணுக வேண்டும். அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதென்று 
              இவனுக்குப் பட்டது. அவ்விதம் கூறிய அந்த இளைஞன் உள்ளே சென்று 
              எங்கிருந்தோ 'அலவாங்கு' அளவிலிருந்த இரும்புத் துண்டங்களைக் கொண்டு 
              வந்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கொடுத்தான்.
              
              வெளியில் காடையர்களின் அட்டகாசம் வினாடிக்கு வினாடி 
              அதிகரித்தபடியேயிருந்தது. அதனை அடிக்கொருதரம் ஜீப்புகளில் வந்து 
              'ஜெயவீவா' கோசமிட்டுச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உற்சாகமும் 
              அதிகரிக்க வைப்பதாகவிருந்தது. இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்னால் 
              நின்று ஸ்ரீலங்காக் காவற்படையினர் சிலர் வேடிக்கை பார்த்துக் 
              கொண்டிருந்தனர். இவற்றால் மேலும் உற்சாகமுற்ற காடையர் கூட்டம் 
              மண்டபத்தினுள் நுழைய முற்பட்டது. பாதுகாவல் அதிகாரிகளும் நிலைமை 
              கட்டு மீறவே ஓடிப்போய் விட்டார்கள். காடையர்கள் உள்ளே வரமுற்படுவதைக் 
              கண்டதும் மண்டபத்தினுள்ளிருந்த தமிழர்கள் ஆளுக்கொன்றாய் பிரிபட்டு 
              மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமாய் ஓடினார்கள். அதுவரையில் இளைஞர்களுக்கு 
              எதிர்த்து நிற்கும்படி ஆலோசனை வழங்கிய இளைஞன்தான் முதலில் ஓடி 
              மறைந்தவன். மற்றவர்களும் கைகளிலிருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு 
              விட்டு ஆளுக்கொருபக்கம் ஓடி விட்டார்கள். இவ்விதமாக ஓடியதில் 
              நண்பனும் இவனும் பிரிபட்டுப் போனார்கள். பெண்களெல்லாரும் படிகள் 
              வழியாக மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றார்கள். அவ்விதம் சென்றவர்கள் 
              ஒளிவதற்கு இடமில்லாத நிலையில் தண்ணீர்த் தாங்கிக்கும் மொட்டை 
              மாடித்தரைக்குமிடையிலிருந்த சிறியதிடத்தில் நெருக்கியடித்து 
              குடங்கிக் கொண்டார்கள். 
              
              இளங்கோ மொட்டை மாடிக்கு வந்தபோது மொட்டை மாடியில் நீட்டிக் 
              கொண்டடிருந்த தூண்களைத் தவிர ஒளிவதற்கென்று ஏதுமில்லை. 
              தண்ணீர்த்தாங்கிக்கடியில் குடங்கிக் கிடந்த பெண்களின் நிலை 
              பரிதாபமாகவிருந்தது. வயது முதிர்ந்த தமிழரொருவர் வருவது வரட்டுமென்ற 
              நிலையில் மொட்டை மாடிக்குள் நீட்டிக் கொண்டிருந்த தூணொன்றின் 
              பின்னால் சாய்ந்தவராக வானத்தையே பார்த்தபடியிருந்தார். அகதிகளாக 
              விண்ணில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பபதுபோல் பட்டது. அப்பொழுதுதான் 
              அவன் ஆரம்பத்தில் ஆயுதம் தந்து விரைந்து மறைந்து போன இளைஞன் 
              நீர்த்தாங்கியின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையே 
              நோக்கியபடியிருந்ததை 
              அவதானித்தான். அவ்விதம் அவன் படுத்திருப்பதைக் கீழிருப்பவர்கள் 
              யாரும் இலேசில் பார்த்து விடமுடியாது. 
              
              இச்சமயம் நகரில் கலவரம் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருப்பதை 
              வெள்ளவத்தைப் பக்கமிருந்து வந்த புகைப் படலம் தெரியப்படுத்தியது. 
              அதனைத் தொடர்ந்து புகையிரத்தப் பாதைகள் வழியாகத் தமிழர்கள் தெகிவளைப் 
              பக்கம் நோக்கி ஓடிக் 
              கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வயது முதிர்ந்த பெண்கள் 
              சேலைகளை முழங்கால்கள் வரையில் தூக்கியபடி ஓட 
              முடியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எதிரிலிருந்த 'ஓட்டல் 
              பிரைட்டனி'ல் தங்கியிருந்த உல்லாசப்பயணிகள் சிலர் அருகில் நடப்பதை 
              வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பல்வேறு விதமான 
              புகைப்படக் கருவிகள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதே 
              சமயம் இராமகிருஷ்ண மடத்தின் முன்பாக அதன் வளாகத்தில் தரித்து நின்ற 
              யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றைக் 
              காடையர்கள் எரியூட்டினார்கள். இன்னுமொரு ஜீப் வண்டியை மண்டபத்தின் 
              கீழ்த்தளக் கண்ணாடிச் சுவரொன்றுடன் மோதினார்கள். அத்துடன் 
              மண்டபத்தினுள் காடையர்கள் நுழைந்து விட்டார்கள். அவர்களொருவன் மொட்டை 
              மாடிக்கு 
              வந்து எட்டிப் பார்த்தான். பார்த்தவன் "உத்தா இன்னவா" என்று கத்தி 
              சென்றான். மீண்டும் வந்து மொட்டை மாடியிலிருந்து கீழ்ச் 
              செல்லும் படிகளுக்கண்மையில் நின்றவனாக அனைவரையும் இறங்கும்படி சைகை 
              காட்டினான். அவ்விதம் இறங்கியவர்களின் 
              கைகளிலிருந்தவற்றை பிடுங்கி விட்டுத்தான் இறங்க அனுமதித்தான். பலர் 
              அவசர அவசரமாகத் தப்பி வந்தபொழுது கொண்டுவந்திருந்த நகைகள், பணம் 
              போன்ற பலதையும் இழந்தார்கள். உயிருக்கே உத்தரவாதமில்லா நிலையில் 
              யாருக்கு வேண்டும் உடமை?
              
              இவ்விதமாக இறங்கியவர்களை மீண்டும் மேலே கலைத்தது கீழிருந்து வந்த 
              காடையர்களின் கூச்சல். மீண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்காக 
              ஓடினார்கள். பலர் ஒவ்வொரு தளங்களிலுமிருந்த கழிவறைகளில், 
              குளியலறைகளிலெல்லாம் ஓடி ஒளிந்து நின்றார்கள். அவ்விதமாகக் 
              கழிவறையொன்றினுள் அவனும் அந்தப் புதுமணத்தம்பதியினரும் சிறிதுநேரம் 
              அகப்பட்டுக் கொண்டார்கள். பயத்தால் கதி கலங்கிப் போயிருந்தனர் அந்தப் 
              புதுமணத் தம்பதியினர்.
              
              காடையர்களில் சிலர் இராமகிருஷ்ண மண்டபத்தையும் எரியூட்ட 
              முனைந்தார்கள். அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 
              காவற்துறையினரில் சிலர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். அத்துடன் 
              அம்முயற்சியினைக் கைவிட்ட காடையர்கள் வளாகத்துக்கு வெளியில் நின்று 
              மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அச்சமயத்தில் 
              அருகிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையெல்லாம் உடைத்து 
              அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் 
              சிறுவர்களும் வீதி வழியாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஓடிக் 
              கொண்டிருந்தவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அடிக்கொருதரம் 
              இராணுவச் 
              சிப்பாய்கள் 'ஜெயவீவா' கோசமிட்டபடி ஜீப்புகளில் விரைந்து 
              கொண்டிருந்தார்கள்.
              
              அதன் பின்னர் உள் நுழைந்த காவற்துறையினர் அனைவரையும் அங்கிருந்து 
              செல்லும்படி பணித்தார்கள். வெளியில் காடையர்களின் 
              அட்டகாசமிருக்கையில் எங்கு போவது? அனைவரும் அருகிலிருந்த இராமகிருஷ்ண 
              மடத்துத் தலைவரான துறவியின் வீட்டினுள் நுழைந்து கொண்டார்கள். இதே 
              சமயம் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மடத்திலிருந்து தப்பியோடுகையில் பலர் 
              அருகிலிருந்த தென்னைகளைப் பிடித்து வெளிப்புறமாகத் தப்பியோடினார்கள். 
              அவ்விதம் ஓடியவர்களில் ஒருவனாகத்தான் அவனது நண்பனுமிருக்க வேண்டும். 
              இராமகிருஷ்ண மடத் துறவியின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தவர்களில் 
              அவனைக் காணவில்லை.
              
              பிரச்சினை அத்துடன் ஓயவில்லை. மீண்டும் தமிழர்கள் துறவியில் 
              இல்லத்திலிருப்பதை அவதானித்து வைத்த காடையர்கள் சிலர் 
              துறவியின் இல்லத்தைச் சுற்றிச் சுற்றியெ வந்து கொண்டிருந்தார்கள். 
              உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் கொழும்பில் செல்வாக்கான 
              தமிழர்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பாவித்து மேலிடங்கள் 
              பலவற்றுடன் தொடர்பு கொள்ள முயன்று களைத்துப் போனார்கள். எந்தச் 
              சமயத்திலும் காடையர்கள் உள் நுழைந்து விடலாமென்ற நிலை.... எதிர்காலம் 
              நிச்சயமற்றிருந்த நிலையில் அனைவருமிருந்தார்கள். ஒரு சில காடையர்கள் 
              ஆயுதங்களுடன் துறவியின் வீட்டினுள் நுழைய முற்பட்டார்கள். 
              உள்ளிருந்து வெளியில் நடப்பதை அனைவரும் அவதானித்துக் 
              கொண்டிருந்தார்கள்.
              
              அந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் துறவி 
              உயர்ந்த ஆகிருதி படைத்தவர். கம்பீரமான தோற்றம் மிக்கவர். மிகுந்த 
              துணிவும் நெஞ்சுரமும் மிக்கவரென்பதை அப்பொழுதுதான் அவன் 
              அவதானித்தான். நீண்டதொரு சாய்வு நாற்காலியினை இல்லத்துக் கதவின் 
              முன்னால் இழுத்துப் போட்டு விட்டுக் காடையர்கள் யாரும் உள் நுழைய 
              முடியாத வகையில் மிகவும் சாவதானமாக அந்நாற்காலியில் சாய்ந்து 
              கொண்டார். அந்தக் காடையர்களைப் பார்த்து என்னை வெட்டிப் போட்டு 
              விட்டு வேண்டுமானால் உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அவ்விதமாக 
              அவர் நடுவில் மறித்து நின்றது உள்ளே நுழைய முற்பட்ட காடையர்களை ஏதோ 
              விததில் கட்டிப் போட்டு விட்டது. அந்த மதகுரு மட்டும் அன்று அவ்விதம் 
              தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ? அன்று மாலை வரை இந்நிலை 
              நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் 
              அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் 
              அங்கிருந்த வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் 
              இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து 
              தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் 
              சந்தித்தான். 'என்ன நடந்தது?' என்றவனுக்கு அவன் 
              'அதுவொரு பெருங் கதை. தப்பிப் பிழைத்ததே அருந்தப்புத்தான். பிறகு 
              விபரமாகச் சொல்லுகிறேன்' என்றான். அதன் பின்னர் 
              அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் உணவு தயாரித்துப் 
              பகிர்ந்துண்டார்கள். இரவாகி விட்டது. அன்றிரவே லொறிகளில் 
              ஆடுமாடுகளைப் போல் அனைவரையும் திணித்து பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி 
              மண்டபத்தினுள் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள். 
              [தொடரும் ]



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




