- வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் ஐந்து: இளங்கோவின்
நாட்குறிப்பிலிருந்து......
இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......
சரஸ்வதி
முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என்
பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து
தொண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம். அதன் பின் அனைவரும் தமிழக அரசினால்
அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல அனுப்பபட்ட சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம்
செல்லும்வரையில் அம்முகாமிலேயே தங்கியிருந்து தொண்டர்களாகப் பணிபுரிந்தோம்.
சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் வீட்டாருக்கு நான்
உயிருடனிருக்கும் விடயமே தெரிந்திருக்கவில்லை. அகதி முகாமிலிருந்து ஏற்கனவே
இலங்கை அரசின் 'லங்காரத்னா' சரக்குக் கப்பலில் ஊர் திரும்பியிருந்த ஊரவனொருவனிடம்
என் நிலைமையினை வீட்டாருக்குத் தெரியப்படுத்தும்படி கூறியிருந்ததேன். யாழ்ப்பாணம்
திரும்பிய அவன் அவனது உறவினருடன் கைதடியிலேயே நின்று விட்டதால் உடனடியாக விடயத்தை
வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியவில்லை. நான் சிதம்பரம் கப்பலில் திரும்பிய
பின்னரே அவன் ஊர் திரும்பி விடயத்தை என் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவதற்காக
வந்திருந்தான்.
முதன் முதலாகச் சொந்த நாட்டிலேயே அகதியான அனுபவம் மனோரீதியீல் பெரிதும் பாதிப்பை
ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வந்ததொரு
வாழ்வுதான். சொந்தமாக அனுபவித்தலென்பது பெரிதும் வித்தியாசமானது. உண்மையிலேயே
இந்தக் கலவரத்தில் நானும், நண்பனும் தப்பியது மயிரிழையில்தானென்பது சரஸ்வதி
முகாமில் பின்னர் சந்தித்த அகதிகள், சர்வதேச பத்திரிகை, வானொலிச் செய்திகள்
போன்றவற்றிலிருந்து நன்கு புரிந்தது. வழக்கமாகக் கலவரங்கள் நாட்டின் ஏனைய
பாகங்களில் பெருமளவுக்குப் பற்றியெரியும். தலைநகர் அநேகமாகத் தப்பிவிடும். ஆனால்
இம்முறை.. தலைநகரான கொழும்பே பற்றியெரிந்தது. நாங்கள் அரச வாகனத்தில், இந்தியப்
பொறியியலாளரின் புண்ணியத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தபொழுது கொழும்பில்
மினிவானொன்றினுள் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் பெற்றோலூற்றித் துடிதுடிக்கக்
கொழுத்தியிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியொன்றில் வந்து கொண்டிருந்த
தமிழனொருவனையிழுத்து அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். இன்னுமொருவனை
நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி எரியூட்டியிருக்கின்றார்கள். கிருலப்பனையில்
இளம்பெண்ணொருத்தியின் கண் முன்னாலேயே அவளது பிஞ்சுச் சகோதரியைக் கொன்று,
சித்தப்பிரமையாக்கிப் பலர் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கின்றார்கள்.
வழக்கம்போல் மலையகத்தில் இம்முறையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களான
தமிழர்கள்மேல் பரந்த அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.
இவற்றிற்கெல்லாம் காரணமாக ஜூலை 23இல் யாழ் திண்ணைவேலியில் நடந்த பதின்மூன்று
இராணுவத்தினரின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலேயென்று ஜே.ஆர். தலைமையிலான
அரசு பழி கூறியது. அதனையொரு சாட்டாக வைத்துக் கலவரத்தை ஏற்கனவே திட்டமிட்ட
வகையில் ஊதிப் பெரிதாக்கியது சிறில் மைத்தியூ, காமினி திசாநாயக்க போன்ற
அமைச்சர்களின் அரவணைப்பிலியங்கிய காடையர் கும்பலே. இத்தகைய சூழலிலும் எத்தனையோ
சிங்கள மக்கள் தம் அயலில் வசித்த தமிழர்களைக் காடையர்களிலிருந்து
காப்பாற்றியிருக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கைப் பிரதமராக 1977இல் பதவியேற்றதுமே மிகப்பெரிய
இனக்கலவரமொன்று நடைபெற்றது. அதனைத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக்
கூட்டணிக்கு வாக்களித்ததற்காக 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று
ஊதிப் பெரிதாக்கினார் இன்றைய ஜனாதிபதி. அரசியலில் பழுத்த தந்திரம் மிக்க
குள்ளநரியென்று ஜே.ஆரைக் கூறுவது நன்கு பொருத்தமானதே. அன்றைய பிரதமர்
பண்டாரநாயக்காவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்குமிடையிலேற்பட்ட ஒப்பந்தத்தைக்
கண்டிக்குப் பாதயாத்திரை சென்று கிழித்தெறிய வைத்தவரிவர்.அதிகாரத்தை வைத்து
அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் சமர்த்தர். முன்னாள் பிரதமர் சிறிமா
அம்மையாரின் அரசியலுரிமையையே பறித்தவரிவர். இம்முறை இவரது அரச அமைச்சர்கள்
தலைமையிலேயே திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் அவ்வப்போது
கட்டவிழ்த்து விடப்பட்டன. 1981இல் யாழ் நாச்சிமார் கோவில் முன்றலில் நடந்த
தேர்தல் கூட்டத்தில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து
அமைச்சர்களான காமினி திசாநாயாக்கா போன்றவர்கள் யாழ் கோட்டையிலிருக்கையிலேயே
யாழ்நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.
ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீக்கிரையானது. இம்முறையும் கலவரத்தைத்
தணிப்பதற்குப் பதில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதனை நியாயப்
படுத்தியிருக்கின்றார். திண்ணைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு
முன்னரே இன்னுமொரு இனக்கலவரம் பெரிய அளவில் நடைபெறுவதற்கான சூழல் நாட்டில் தோன்றி
விட்டது. இக்கலவரத்தைச் சாக்காக வைத்துத் தமிழ் அரசியற் கைதிகளைக்
கொல்லுவதற்கும், தமிழரின் பொருளாதாரத்தை உடைப்பதற்கும் அதே சமயம் ஜே.வி.பி. போன்ற
தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும் ஜே.ஆர். அரசு திட்டமிட்டுச்
செயற்பட்டது போல்தான் தெரிகின்றது. அத்துடன் இன்னுமொரு திட்டத்தையும்
இக்கலவரத்தைச் சாக்காக வைத்து நிறைவேற்றியது. அது.. 1977இல் ஏற்பட்ட
இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கின் எல்லைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த
மலையகத்தமிழர்களின் குடியேற்றத் திட்டங்களைச் சீர்குலைப்பது. அதனால்தான்
இக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவ்வகையான குடியேற்றத்
திட்டங்களில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றை சிறிலங்கா
இராணுவம் பலவந்தமாக மீண்டும் மலையகத்துக் கொண்டுவந்து பற்றியெரிந்து கொண்டிருந்த
கலவரத்தின் நடுவில் தத்தளிக்க விட்டது போலும். அதனால்தான் இத்தகைய குடியேற்றங்களை
நடாத்திய 'காந்தியம்' போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தர்கள் பலரைக் கலவரம்
தொடங்குவதற்கு முன்னரே அரசு கைது செய்து சிறைகளில் அடைத்ததுச் சித்திரவதை செய்தது
போலும்.
இம்முறை கலவரத்தின் தன்மையும், தலைநகரிலேயே அது சுவாலை விட்டெரிந்ததும்,
செய்மதித் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் உலகம்
முழுவதும் பரவியதும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முக்கியமானதொரு சர்வதேசப்
பிரச்சினையாக்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சகல அரசியற் கட்சிகளும்
ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்தியப் பிரதமர் இந்திரா
காந்தி இம்முறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மிகவும் ஈடுபாடு காட்டினார்.
அதனால்தான் ஜூலை 15இல் 'டெய்லி டெலிகிறாப்' என்ற பிரித்தானியப் பத்திரிகையில்
தனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ கவலையில்லை. அது
பற்றித் தான் சிந்திப்பதற்கில்லையென்று ஜே.ஆர். நேர்காணலொன்றில் கூறியதைத்
தொடர்ந்து பாரதப் பிரமர் இந்திரா காந்தி சீர்கெட்டுவரும் ஈழத்து நிலைமைகளையிட்டு
இந்தியாவின் கவலையினை வெளிப்படுத்தினார். அதனையும் 'டெய்லி டெலிகிறாப்' ஜூலைக்
கலவரம் ஆரம்பமாவதற்குச் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது.
நாம் அகதிகளாக சரஸ்வதி முகாமில் இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி தனது
வெளியுறவுத்துறை அமைச்சரான நரசிம்மராவை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பினார்.
தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப்
போராட்டங்களும் நடைபெற்றன. சாஜகான் என்னுமொரு இஸ்லாமியத் தமிழரொருவர் தமிழகத்தில்
ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தீக்குளித்தார். எம்.ஜி.ஆர் தலையிலான தமிழக அரசு தனது
சிதம்பரம் கப்பலை அனுப்பி உதவியது. இக்கலவரத்தில் ஈழத்துக் சுற்றுலாப் பயணியாக
வந்திருந்த தனபதி என்னுமொரு தமிழகத் தமிழரைக் கதிர்காமத்தில் சிங்கள சிகை
அலங்கரிப்பாளரொருவர் கழுத்தை வெட்டிக் கொலை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து
எம்ஜீஆர் அரசு ஜெயவர்த்தனே அரசிடம் நஷ்ட்ட ஈடு கோரியது.
சரஸ்வதி அகதி முகாம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன்.
ஆரம்பத்தில் சில நாட்கள் அகதிகள் அனைவரும் உண்பதற்கெதுவுமில்லாமல் பட்டினி
கிடந்தார்கள். அந்தச் சமயத்தில் அருகிலிருந்த பம்பலபிட்டிக் கதிரேசன் ஆலயத்துக்
குருக்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து வந்தவர்களுக்கு வழங்கினார்.
அதனைப் பெறுவதற்காகத் தள்ளாத வயதிலிருந்த தமிழ் மூதாட்டிகள் கூட சரஸ்வதி அகதி
முகாமிலிருந்து மதிலேறிக் கதிரேசன் குருக்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
ஏனையவர்கள் வளவிலிருந்த தென்னை போன்றவற்றிலிருந்து தேங்காய், இளநீர் ஆகிய
கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வயிறாறினார்கள்.
நாங்கள் அகதி முகாமில் இருந்த சமயத்தில் ஜூலை 27இல் மீண்டும் வெலிக்கடைச்
சிறையில் மேலும் பல தமிழக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏற்கனவே
குட்டிமணி, தங்கத்துரையுட்படப் பலர் ஜூலை 25இல் வெலிக்கடைச் சிறையில்
கொல்லப்பட்டிருந்தார்கள்.
கலவரம் சிறிது தணிந்திருந்த சமயம் நானும், நண்பனும் அகதி முகாமில் தங்கியிருப்பதை
அறிந்த எம் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள்
பார்ப்பதற்கு வந்திருந்தனர். அவர்ளை வாசலியேயே வைத்துச் சந்தித்தோம். நடைபெற்ற
சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். தங்களுடன் வந்து தங்கியிருக்க
விரும்பினால் வரலாமென அழைப்பும் விடுத்தார்கள். நாங்கள் அவர்களது வருகைக்கும்,
அழைப்புக்கும் நன்றி தெரிவித்தோம். முகாமில் இருப்பதே எங்களுக்கும் அவர்களுக்கும்
நல்லதெனக் கூறினோம். நாம் அவர்களுடன் தங்கியிருந்தால் காடையர்களினால்
அவர்களுக்கும் ஆபத்து வரலாமென்றும் கூறினோம். நாங்கள் அவ்விதம் அவர்களது
அழைப்பினையேற்றுச் செல்லாதது நல்லதென்பதைப் பின்னர் உணர்ந்தோம். அடுத்தநாளே,
வெள்ளிக்கிழமையென்று நினைக்கின்றேன், கொழும்பில் 'கொட்டியா வந்திட்டுது' என்ற
வதந்தி பரவியது. 'கொட்டியா' என்பது புலிக்குரிய சிங்களச் சொல். நகரில் சிங்கள மக்கள
அவ் வதந்தியால் அன்று தப்பியோடினார்கள். வெள்ளவத்தையிலோ தெகிவளையிலோர் வசித்த
தமிழரொருவரின் அயலில் வசித்த சிங்களக் குடும்பமொன்று அவரது வீட்டிற்கு அடைக்கலம்
தேடி ஓடி வந்த அதிசயமும் நடந்தது. முதலிரு நாட்களில் நடைபெற்ற கலவரத்தில் அவரை
சிங்களக் காடையரிலிருந்து அந்தச் சிங்களக் குடும்பம் காப்பாற்றியிருந்தது. இந்த
வதந்தியைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் பலமாக வெடித்தது. ஓரளவுக்குச் சீரடைந்து
கொண்டிருந்த நிலைமை மீண்டும் 'கொட்டியா' வதந்தியால் சீர்கெட்டது. சீரடைந்திருந்த
நிலைமையை நம்பி நண்பன் கிருலப்பனையிலிருந்த வீடொன்றிற்குக் குளிப்பதற்குச்
சென்றிருந்தவன் தலை தப்பினால் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்தான். வந்தவன்
தான் தப்பி வந்த பாட்டையெல்லாம் கதைகதையாக விபரித்தான். ஏற்கனவே தப்பியிருந்த
தமிழர்கள் பலர் , சீரடைந்து கொண்டிருந்த நிலைமையினைச் சாக்காக வைத்து மீண்டும்
தத்தமது இல்லங்களின் நிலையறிவதற்காகத் திரும்பியபோது மேற்படி வதந்தி ஏற்படுத்திய
கலவரச் சூழலில் சிக்கி உயிரிழந்தார்கள். 'கொட்டியா' என்ற சொல் எவ்வளவு
தூரத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியது என்பதையும்
மேற்படிச் சம்பவம் எடுத்துக் காட்டியது.
இது இன்னுமொரு உளவியல் உண்மையினையும் எடுத்துக் காட்டியது. இலங்கைத் தீவில்
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கொரு சிறுபான்மை உணர்வு
இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் நாலரைக் கோடித் தமிழகத்
தமிழர்கள். எங்கே ஈழத்துத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து தங்களைச்
சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக்கி விடுவார்களோவென்றதொரு தேவையற்ற அச்ச உணர்வு.
கடந்த காலத்து ஈழத்து வரலாறும், அடிக்கடி ஈழத்தின் மேலேற்பட்ட தமிழக மன்னர்களின்
படையெடுப்புகளும் அவர்களது இந்த அச்சத்தினை அதிகரிக்க வைத்தன போலும். 'புலி'
உருவம் அவர்களது உள்ளத்தில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்குக் காரணகார்த்தாக்கள்
அன்றைய சோழர்கள். சோழர்களின் புலிக்கொடி ஒரு காலத்தில் ஈழம் முழுவதும் பறந்தது.
முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் இலங்கை சோழர்களிடம் சோழ மன்னனான எல்லாலனுக்குப்
பின்னர் அடிமைப்பட்டது. அதன் பின் அவனது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன்
காலத்தில் ஒளிந்தோடிய சிங்கள மன்னன் மகிந்தனிடமிருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு
நாடு முற்றாக அடிமைப்படுத்தப் பட்டது. சோழர்கள் காலத்திலேற்பட்ட நிகழ்வுகளை
மகாவம்சம் போன்ற சிங்கள நூல்கள் விபரிக்கும். தமிழ் மன்னர்களில் சோழர்கள் காலத்தில்தான் இலங்கை முழுவதும் முற்றாக, நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கைகளிலிருந்தது. சோழர்களின் இலங்கை மீதான ஆட்சிக் காலகட்டத்தைத்தான் பெளத்த மதமும், சிங்கள மொழியும் முற்றாக முடங்கிக் கிடந்ததொரு காலகட்டமாகச் சிங்களவர்கள் கருதுகின்றார்கள் போலும். சிறுவயதில் படுத்திருக்கும்போது சிறுவனான துட்டகைமுனு குடங்கிப் படுத்திருப்பானாம். அதற்கு அவன் கூறும் காரணம் வடக்கில் தமிழரசும், தெற்கில் கடலுமிருக்கையில் எவ்விதம் குடங்காமல் படுப்பது என்பானாம். அதனால்தான் சோழ மன்னனான எல்லாளனை அவன் வெற்ற வரலாறு மிகப்பெரிய சிங்கள வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் போலும் புலிக்கொடியுடன்
கூடிய சோழர்களைக் கண்டு அஞ்சிய , வெறுத்த சிங்களவர்கள் மீன் கொடியுடன் கூடிய
பாண்டியர்களைக் கண்டு அஞ்சவில்லை போலும். உண்மையில் பாண்டிய மன்னர்கள் சிலர்
ஈழத்தின்மேல் படைபெடுத்திருந்தபோதிலும் கூட அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கும்,
அவர்களிடத்தில் பெண்ணெடுப்பதற்கும் சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்போ , அச்சமோ
எற்பட்டதில்லை. இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவையற்ற அச்சங்கள். இவ்வகையான
அச்சங்கள் சுவாலை விட்டு எரிவதற்கு அடிப்படைக் காரணிகள் சமூக, அரசியல்,
பொருளாதாரக் காரணங்களே. ஆயினும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை.
மக்களின் உணர்வுகளை வைத்துப் பிழைப்பினை நடாத்தும் அரசியல்வாதிகள் மட்டும் நன்கு
புரிந்து கொண்டு, அவ்வுணர்வுகளை ஊதிப் பூதாகாரப்படுத்தி, அதிலவர்கள் குளிர்
காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றால் தூண்டப்படுவதும், பாதிக்கப்படுவதும்
சாதாரண மக்களே. இந்த அழகான தீவில் மீண்டும் அமைதியெப்போது வரும்? மக்கள்
ஒருவருகொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும்? சேர்ந்தோ,
பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு
சூழல் மீண்டுமெப்போது வரும்? வருமா?
***** **** **** **** ***** **** **** **** ***** ****
"என்ன கொட்டக் கொட்ட முழித்திருக்கிறாய்? நித்திரை வரவில்லையா?" அருகிலிருந்த
இருதட்டுப் படுக்கையின் மேற்தட்டில் படுத்திருந்த நண்பன் அருள்ராசாதான் இவ்விதம்
கேட்டவன்.
"இன்று விடிய வெளியிலைப் போக இருக்கிறமல்லவா? அதுதான் மனசு கிடந்து அலைபாயிது
போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன்.
உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது.?"
"எல்லாத்துக்கும் காரணம் மனசுதான். இது உனக்குப் பெரியதொரு விசயமாகப் படுகுது.
அதுதான் மனசும் கிடந்து இப்படி அலை பாயுது. அது சரி வெளியிலை போனதும் என்ன
பிளான்? உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டிய தேவையிருக்கா?"
"நேற்றே இது பற்றிக் கதைத்திருக்கிறம். முதலிலை அந்த இந்திய வீட்டு
அறையெப்படியென்று போய்ப் பார்ப்பம். பிடிச்சிருந்தால் அங்கேயே இருந்து கொண்டு ஒரு
வேலையொன்று தேடுவம். அதுதான் முதல் வேலை. அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.?
"அது சரி. எங்களுக்கோ வேலை செய்வதற்குரிய சட்டரீதியான ஆவணங்கள் ஒன்றுமில்லை.
முதலிலை வெளியிலை போனதும், 'சமூகக் காப்புறுதி நம்பர்' எடுக்க முடியுமாவென்று
பார்க்க வேண்டும். அதிருந்தால்தான் வேலை பார்க்கலாம். இல்லாவிட்டால் நல்ல
வேலையெதுவும் எடுக்க முடியாது. உணவகங்களில் கள்ளமாக வேலை செய்ய வேண்டியதுதான்.
எனக்கென்றால் எந்த வேலையும் சமாளிக்கலாம். உன்னாலை முடியுமாவென்றுதான்
யோசிக்கிறன்."
"என்ன பகிடியா விடுறாய். எந்த வேலையென்றாலும் என்னாலை செய்ய முடியும்.
இதுக்கெல்லாம் வெட்கம் பார்க்கிற ஆளில்லை நான். செய்யும் தொழிலே தெய்வம். இதுதான்
அடியேனின்ற தாரக மந்திரம். இவ்விதமாக நண்பர்களிருவரும் பல்வேறு விடயங்களைக்
குறிப்பாக வெளியில் சென்றதும் , புதிய சூழலை எவ்விதம் வெற்றிகரமாக எதிர்கொள்வது,
இருப்பினை எவ்விதம் உறுதியாகத் தப்ப வைத்துக் கொள்வது, வாழ்வின் எதிர்காலத்
திட்டங்களை எவ்விதம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது?, அவ்வப்போது சோர்ந்து,
தளர்ந்து போய் விடும் மனதினையெவ்விதம் மீண்டும் மீண்டும் துள்ளியெழ வைப்பது,..
இவ்விதம் பல்வேறு விடயங்களை நண்பர்களிருவரும் பரிமாறி, ஆராய்ந்து கொண்டிருந்த
வேளையில் நகரத்துப் பொழுதும் தனக்கேயுரிய ஆரவாரங்களுடன் விடிந்தது. ஊரிலென்றால்
இந்நேரம் சேவல்களின் சங்கீதக் கச்சேரியால் ஊரே கலங்கி விட்டிருக்கும்.
புள்ளினத்தின் காலைப் பண்ணிசையில் நெஞ்சமெல்லாம் களி பொங்கி வழிந்திருக்கும்.
இருந்தாலும் விடிவு எப்பொழுதுமே மகிழ்ச்சியினைத் தந்து விடுவதாகத்தானிருந்து
விடுகிறது.
[தொடரும் ]