வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் 8!
அவர் ஒரு கொடுங்கோலராக இருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி எல்லாப் பிள்ளைகளையும் அந்தக் கோல் மூலமாகவே கட்டுப்பாட்டிலும், பயத்திலும் வைத்திருந்தார். உக்கு பண்டாரவுக்கு அந்த இயலாத உடம்பில் தொங்கிக்கொண்டிருந்த மெலிந்த கைகளினால் எவ்வாறு இலக்கு வைத்து ஓடிக்கொண்டிருக்கிறவர்ளை கோலினால் தாக்கமுடிகிறதென்ற ஒரு வினா எப்போதும் இருந்துகொண்டிருந்தது.
அந்தச் சுற்றாடலிலுள்ள குழந்தைகள் விளையாடக் கூடுமிடம் அந்த வீட்டு முற்றமாக இருந்தது. அவர் தவிர வீட்டில் வேறு யாருமில்லையென்பதுடன், மறைவதற்கு அடி பருத்த பெரிய பெரிய கித்துள் மரங்களும், கூடலாய் வளர்ந்த கட்டையான ஈரப்பலா மரங்களும்கொண்ட விசாலமான வளவும் கொண்டிருந்தது. அந்த கொடுங்கோலுக்குப் பயந்துதான் முனசிங்க மாமாவின் மகன் சரத்சந்ர மொட்டையடிக்க தன்னை ஒப்புக்கொடுத்து மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு புத்த சங்கத்திலே சேர்ந்து போனான். குசுமவதிகூட ஒருபோது அந்தக் கொடுங்கோலினால் விளாசல் பெற்றிருக்கிறாள். ‘வா, குசும இவ்விடம்’ என்று உறுக்கியதற்கு நெளித்துக்கொண்டு அப்பால் ஓடி குசுமவதி தவிர்ந்துகொண்டாள். ‘உங்களையெல்லாம் நல்லாய் உதைக்கவேணுமடி. உங்களால்தான் பிக்கு ஆகவேண்டிய பையன்களெல்லாம் பித்துப்பிடித்து அலைந்துகொண்டிருக்கிறான்கள். என் கையிலே அகப்படு, அப்போ பார்த்துக்கொள்கிறேன்’ என்று மஹாபத்திர தாத்தா திட்டினார்.
அன்று மாலைக்குள்ளேயே குசும அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டாள். தூங்குவதுபோலத்தான் கண்ணை மூடி, கழுத்தைச் சரித்து தாத்தா சாய்மனையில் படுத்திருந்தார். கூடத்துக்குள் நீரருந்த திண்ணையிலேறி படபடப்புச் சத்தமுமின்றி ஒரு பறவைபோல காற்றைக் கிழித்துக்கொண்டு குசும ஓடிப் போனாள். ஆனாலும் தாத்தா தூங்குவதாக நினைத்ததால் போதுமான வேகத்தை அவள் அதில் பிரயோகித்திருக்கவில்லை. வாசலை அவள் நெருங்க காத்திருந்த தாத்தா திடீரென கண்விழித்து பட்டென கொடுங்கோலை எடுத்து வீசினார். சளாரென்ற சத்தத்துடன் முதுகில் விளாசல் இறங்கிய குசும வீரிட்டுக் கத்தினாள். அபூர்வமாய்க் காட்டும் அந்தச் சிரிப்புடன் கொடுங்கோலை மறுபடி அருகே வைத்துக்கொண்டு சாய்மனையில் சாய்ந்தார் தாத்தா. ஒரு நிமிடம் துள்ளி, ஒரு நிமிடம் நெளிந்து முதுகைத் தடவியபடி அழுது அடங்கிய குசும வெளியேறும்போது, ‘நீ கெட்ட தாத்தா. அனோமா மாமியோட உன்னை உரிஞ்சானாய்க் கண்டன்’ எனக் கத்திவிட்டு ஓடிப்போனாள். அதைக் கேட்டு தாத்தா கடகடவெனச் சிரித்தார். பின் தனது தலையை நிமிர்த்தி மீசையை முறுக்கினார். அவரது கண்கள் சிவந்திருந்தன. முடியில்லாத ராஜா ஶ்ரீராஜசிங்கன்போல அப்போது அவர் உக்கு பண்டாரவுக்குத் தோன்றினார். குசும அதன் பிறகு அந்த வீட்டுக்கு விளையாட எந்த நாளும் வந்ததில்லை.