திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனை - இல்லறம் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வுச் சுருக்கம்தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது
குறிச்சொல் – திருக்குறள், இல்லறம், அறம், துறவறம், மனத்தூய்மை, தர்மம், நீதி, நேர்மை.
முன்னுரை
அறம் என்ற சொல்லுக்கு ‘தருமம், புண்ணியம், இல்லறம், அறக்கடவுள்’ என்ற பல பொருள்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக நேர்மையாக இருப்பது, மனசாட்சிப்படி நடந்து கொள்வது, நீதி நெறிப்படி வாழ்வது என்பன போன்ற தனிமனித - சமூக ஒழுக்கம் சார்ந்த நடத்தையைப் பற்றிக் குறிக்கும் சொல்லாக உள்ளது. அதாவது மனம், சொல், செயல் என்ற மூன்று முறைகளில் மனிதனிடம் வெளிப்படும் ஒழுக்கப்பண்பே அறம் எனப்படுகின்றது. இது இல்லறம் துறவறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றது. இவற்றில் இல்லறத்தைப் பற்றியும் அவ்வறத்தின் மேன்மை பற்றியும் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. துறவறத்திற்கும் அத்துறவறத்தை மேற்கொள்ளும் துறவிக்கும் உற்ற உதவிகளைச் செய்யும் இல்லறத்தின் மேன்மை குறித்த ஒரு பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.