சிறுகதை:  கனவுகள் திருடு போன கதை!அவன் மெளனமாக அமர்ந்திருந்திருந்தான்.சுற்றிலும் நண்பர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அதற்கு சொந்தக்காரர் நீங்களா..? நம்ப முடியல்லையே..."

"வேறொருத்தர..சொல்றாங்களே..? அதுவும் இறந்து போன..புகழ்பெற்ற .. சினிமா மெட்டில்..அரசியல் கலந்து..தேர்தல் களங்களில்..அரசியல் மேடைகளில்.. பாடும் பாடகர் பெயரை குறிப்பிடுகிறார்களே..?"

"உண்மையா..இல்லை..புகழ்ச்சிக்காக நீங்கள் இட்டுக்கட்டியதா...?"

"இன்னைக்கி..இந்த மாதிரி ..சொல்லிக்கிட்டு..நிறையப் பேர்..கோர்ட்..வழக்குக்குன்னு...நாட்ல..நிறைய நிகழ்வுகள்..அன்றாடம் நடந்துக்கிட்டிருக்கு..."

இன்னும் சிலர் அவனை சொல் என்ற மொன்னையான கத்தியால் கீறி தங்களின் அடிமன இச்சைகளை தீர்த்துக் கொண்டிருந்தனர்.

எல்லாவற்றையும் சிறு புன்னகையில் சுவீகரித்துக் கொண்டிருந்த அவன் முப்பது வருடங்களுக்கு முன் தன் கல்லூரிக் காலத்திற்குள் பயணித்தான்.

கூழாங்காறு என்ற கூவலிங்க ஆற்றின் தென்கரையில்..புளியமரங்கள் சூழ்ந்து அந்த கல்லூரி இருந்தது. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும்,தெற்கில் தனித்து நின்ற குன்றின் மேல் சிவன் கோவிலும், மானாவாரி புழுதிக்காடுகளுமாக அதன் எல்லைகள் இருந்தன.

ஆறு மிகப் பெரிதானதாய் இல்லாமல் நீரோடை போல இருக்கும். அதன் இருகரைகளிலும் தென்னந்தோப்புகள்..பார்ப்பதற்கு..மிக அழகான சோலைவனம் போல் காட்சியளிக்கும்.

"நண்பா..நண்பா..என யாரோ தன்னைத் தொட்டு உலுக்கிய போது தான் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பினான் அவன்.

எதிரே கோபமும் சீற்றமும் நிரம்பித் ததும்பும் முகங்களோடிருக்கும் நண்பர்களைக் கண்டதும் அவனுக்குள் பதட்டம் பரவியது.

அவசரமாக பேசத் தொடங்கினான்," மன்னியுங்கள் நண்பர்களே..உங்களின் கேள்விகள் என்னை..பழைய காலத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டது..அதான்..நான்..என்னை மறந்த நிலைக்குள் இருந்து விட்டேன்..மற்றபடி உங்களின் கேள்விகளை அலட்சியப் படுத்திட நான் முனையவில்லை..மன்னியுங்கள்.."

"சரி..சரி..நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையே..?" என்றார் ஒருவர்.

அந்தக் கசப்பை என் வாயால் கக்க நீங்கள் விரும்புகிறீர்கள்..பரவாயில்லை..உங்கள் எதிர்பார்ப்புகளாவது நிறைவேறட்டும் என அவன் சொல்லத் தொடங்கினான்," அப்போது நான் புகுமுக வகுப்பு படித்துவிட்டு மேற்க் கொண்டு படிக்கமுடியாமலும் வேலை ஏதுமற்றும் அல்லாடிக் கொண்டிருந்த நிலையில் ஒரே அடைக்கலமாக நூலகமே கதியென கிடந்தேன்.

அவ்வப்போது ஏதோ சில கவிதைகளும் எழுதி வந்தேன். ஆனால் எந்த பத்திரிக்கைகளுக்கும் அனுப்பாமல் நண்பர்களிடம் காட்டுவேன். அவர்கள் அதுபற்றி எந்த அபிப்ராயங்களும் சொல்லாவிட்டாலும் நல்லா இருக்கு என்பார்கள்.

ஒருநாள் என் நண்பன் முத்துவிஜயன் தேடி வந்தான். அவன் அப்பா ஒரு பழைய கம்யூனிஸ்ட். பிறகு இந்திரா காங்கிரஸில் நல்ல செல்வாக்குடன் இருந்தார்.

அவன் என்னை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வசந்தவிகார் லாட்ஜுக்குக் கூட்டிட்டு வந்தான். நான் ஏன்? எனக் கேட்டதற்கு பேசாமல் வாடா என்றான்.

நானும் சரி என்று அவனோடு போனேன்.

அங்கு ஏழாம் எண்ணுள்ள அறைக்குள் என்னை அழைத்துச் சென்றான்.ஒரே புகைமண்டலும் பிராந்தி நாற்றமுமாய் இருந்தது.

கட்டிலின் மேல் இருவர் கைலிகள்கட்டியிருந்தனர்.மேல் சட்டையில்லாமல் சிகப்பாக ஒருவர் இருந்தார்.அவர் நெஞ்சில் கனமான தங்கச்சங்கிலி கிடந்தது. மற்றவர் கறுப்பாக ஒல்லியாக சட்டையோடு இருந்தார்.இருவர் கண்களும் பழுத்த தக்காளிப் பழங்கள் போலிருந்தன.

முத்துவிஜயன் அவர்களை வணங்கியதோடு என்னையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான். நானும் ஏதும் புரியாமல் அமைதியாய் நின்றிருந்தேன்.

இருவரில் சிகப்பாய் இருந்தவரிடம் சொன்னான், " ஸார்..இவன். கவிதைகள் எழுதுவான்.." என என்னைக் காட்டியபடி சொன்னான்.

அவர் சொன்னார், " தமிழ்நாட்டுல தடுக்கி விழுந்தா..ஏதாவது ஒரு கவிஞன் மேல தான்..போய் விழுகணும்..இவன்..என்னத்த எழுதிறப் போறான்...?

எனக்குள் யாரோ காறி உமிழ்வது போலிருக்கவே...நான் சொன்னேன்," என்னை வேண்டுமானால்..பரிசோதித்துப் பாருங்கள்..."

"சரி..நான் ஒரு காட்சி சொல்கிறேன்..அதற்கு உன்னால் ஒரு கவிதை எழுதிட முடியுமா..? "

"நானும் சொல்லுங்கள்..." என்றேன்.

அவர் சொல்லத் தொடங்கினார், " ஒருவன் தன் காதலியைப் பிரிந்து நெடிய மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த ஒரு அழகான சோலை வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.

வழியில் தன் காதலியை சந்தித்த..முத்தமிட்ட..ஓடி ஆடித் திரிந்த..இடங்களெல்லாம் எதிர்ப்பட்டன. அப்போது அவன் மனதில் எழும் உணர்வுகளை ஒரு கவிதையாகச் சொல் என்றார்.

உடனே நான் நான்கு வரிகளில் ஒரு கவிதை சொன்னேன்.

அதைக் கேட்டதும் அவர் அப்படியே என்னைக் கட்டிக் கொண்டார்.அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. கூட இருந்தவரும் உணர்ச்சிவயப்பட்டவராய் தெரிந்தார்.என்நண்பன்சந்தோஷத்தில் கத்தி விட்டான்.

"என் கதையவே நான்கு வரிகளில் சொல்லிட்டேயப்பா..." என்றபடி தலையணைக்கருகில் இருந்த சில்லறைப் பணத்தை என் கைகளில் திணித்தார் அந்த சிகப்பானவர்.

நான் சொல்வதைக் கேட்டபடியிருந்த நண்பர்கள் , " அப்புறம் என்ன நடந்துச்சு.."என்றார்கள்.

அந்த சிகப்பானவர் ஒரு வக்கீல் திருவனந்தபுரத்தில் பிராக்டிஸ் செய்து வருகிறார். தன் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து சினிமாப் படம் எடுப்பதற்காக ..லொக்கேஷன் வந்திருக்கிறார்.அவர் என் நண்பனுடைய அப்பாவிற்கு நண்பர்.அந்த வகையில் அங்கு எனக்கு பாடல் எழுத.. வாய்ப்புக் கேட்க என் நண்பன் என்னை அழைத்து வந்திருக்கிறான். உடன் இருந்த கருப்பானவர் இசையமைப்பாளராம். அவர் பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளரின் அண்ணன் மகனாம். இது தான் அவரின் முதல் படமாம்.

அடுத்த வரிகளைச் சொல்லுமாறு இருவரும் வற்புறுத்த...நான் பிறகு சொல்கிறேன் என்றபடி நண்பனுடன் அறையை விட்டு வெளியேறினேன்.

எல்லாவற்றையும் கேட்டபடியிருந்த நண்பர்கள் மெளனமாய்அமர்ந்திருந்தார்கள்.

அன்று மாலை என் நண்பன் தேடி வந்தான்..வந்ததும் தன் அப்பா கூப்பிடுகிறார் என்றான்.

அங்கு நான் போன போது அந்த இருவர் இருந்தனர். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தனர்.
நானும் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

என் நண்பனுடைய அப்பா , " ஏன்டா..அந்த மீதிக் கவிதையை இவங்களுக்கு எழுதிக்குடுக்காம வந்திட்டாயம்ல்ல..அத.. எழுதிக்குடுடா..." என்றார்.

அவர் மேல் மிகுந்த மரியாதை எனக்கு எப்பவும் இருக்கும். எனவே சரியென்று மீதி பதினாங்கு வரிகளை எழுதி அந்த சிகப்பானவரிடம் கொடுத்தேன்.
வாங்கிப் படித்துப் பார்த்த அவர் கடைசி இரண்டு வரிகளை வேண்டாம் என்று தன்னிடமிருந்த பேனாவால் அடித்துவிட்டு அருகிலிருந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த அவரும் நல்லாருக்கு என்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு சினிமா படப்பிடிப்புக்கு வந்த அவர்கள் உன் பாட்டை இசையோடு பதிவு செய்திருக்கிறோம்.கேள் என்று டேப் ரிக்கார்டரில் போட்டுக் காண்பித்தார்கள். இசை மிகவும் பழசாவும் எரிச்சலூட்டக்கூடியதாவுமாக இருந்தது.யாரோ இளையவர் பாடியிருந்தார். அவர் ஒரு பிரபல்யமான நடிகருக்கு பின் குரல் கொடுப்பவராம். எனக்கு பறப்பது போலிருந்தது.

காலங்கள் மறைந்தோடின.வயிற்றுப்பாட்டிகாக தேசமெல்லாம் அலைந்து திரிந்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு என்னோடு படித்த சேது என்னை தேடிவந்து, " டேய்...உன் பாட்டு ரிக்கார்டா வந்திருக்கு..." என்றான்.

ஆவலாய் போய் பார்த்தேன். அந்த ரிக்கார்டில் பாடியவர் பெயர் புகழ்பெற்ற மலையாள மொழிப் பாடகர் பெயரும், பாடல் எழுதியவராக நீங்கள் குறிப்பிட்ட சினிமா பாடல்கள் மெட்டில் அரசியல் மேடைப் பாடகர் பெயரும் இருந்தது. இசை அமைப்பாளராக அதே பழையவர் தான்.

மனது வெடித்துப் போனது. ஆங்காரமும், கோபமுமாக வந்தது. நண்பர் ஒருவர் இசை அமைப்பாளருக்கு இதனைச்சுட்டிக்காட்டி அதாவது பாடல் எழுதியது நானிருக்க வேறொருவர் பெயரை நீங்கள்இசைத்தட்டில் போட்டிருப்பது நியாயமா? எனக் கேட்டு கடிதம் எழுதச் சொல்லி அவரே எழுதியும் கொடுத்தார்.

கடிதம் அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும் எந்தவித பதிலும் வராததால் நேரடியாக இசையமைப்பாளரை சந்திக்கலாமென்று நான் நண்பன் ஒருவனுடன் போனேன்.

நாங்கள் போன நேரம் இசையமைப்பாளர் வீட்டில் இல்லை. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்து ஒருவழியாக ஊரின் மேற்குப்புறத்திலுள்ள ஆலமரத்தடியில் சந்தித்தோம். அவர் ததும்பும் போதையில் இருந்தார். விஷயத்தைக் கேட்டு அவர் சொன்னார், " நானே முதல்படம் இங்க ரிலீஸாகாம சிங்கப்பூர்ல கேஸட்டாக வந்துருச்சுன்னு கவலையில இருக்கேன்.. நீங்க வேற வந்துக்கிட்டு..போங்கடான்னு..அந்த ஆலமரமே கிடுகிடுன்னு ஆடுற மாதிரி கத்துனதும்..நாங்கள் எதுவும் பேசாம திரும்பிட்டோம்.

ஊரில் நிறைய பேருக்கு நான் பாட்டு எழுதுன விவகாரம் தெரிஞ்சுருக்கு. நான் போன இடத்துலயெல்லாம் துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க.. .நீயெல்லாம் விவரமில்லாமா ஏமாந்துட்டியேன்னு...பரிதாபப்பட்டாங்க... அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒருநாள் மதுரைக்குப் போய்ட்டு பேருந்தில் வருகிற போது..பேருந்தில் அந்த பாட்டு(நான் எழுதிய) கேட்டதும் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் கைகளால் தாளம் போட்டபடி வந்தார். அவரிடம் இந்த பாட்டு எந்தப் படத்தில் வருகிறது ஸார்..என்றேன். அதற்கு அவர் ஏதோ ஒரு படத்தைச் சொல்லி... அதன் இயக்குநர் அகில இந்திய புகழ் பெற்றவர் என்றும் அப்பாட்டுக்கு இசையமைத்தவர் பிரசித்தி பெற்றவர் என்றும் பாடலை பாடியவரும் புகழ்வாய்ந்த தெலுங்கு பாடகர் என்றும் கூறியபடி பாடலை ரசித்தபடி இருந்தார்.

நான் பாடலைக் கேட்டேன். மிகவும் ரசிப்பிற்குரியதாய் இருந்தது. இசையும் பிரமிப்பூட்டியது. எனக்குள் இனம் புரியாத வேதனை.

நீண்ட நேரமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் கேட்டார்," நண்பர் சொல்லுகிற அந்த பாடல் ஒரு தொகுப்பில் வந்துள்ளது. அந்த தொகுப்பும் மேற்கண்ட அரசியல் மேடைப் பாடகரின் பெயரிலே வந்திருக்கிறதே..?

நானும் கேள்விப்பட்டேன்..அதைத் தொகுத்தவரை நேரில் சந்தித்துக் கேட்டபோது," என்னிடம் அந்த பாடலைக் கொடுத்தார்கள். நான் தொகுப்பில் சேர்த்தேன் மற்றபடி வேறு எதுவும் எனக்குத் தெரியாது..."என்றார். நான் ஒன்றும் பேசாமல் வெளியேறிய போது நானே பல பாடல்களை இழந்திருக்கிறேன்.. இதெல்லாம் சினிமா உலகில் சகஜமான நடைமுறை என்றும் சொன்னார்.

வழக்குத் தொடுக்க முடியுமாவென நண்பர்கள் முயற்சித்த போது சரியான அத்தாட்சி இல்லாமல் முடியாதென தெரிந்தது.

பாடலை வாங்கியவரும், பாடலை எழுதிக் கொடுக்கச் சொன்னவரும், பாடல் வாய்ப்பு வாங்கித்தர அழைத்துச் சென்ற என் நண்பனும், முதலில் பாடலுக்கு இசை அமைத்த இசையப்பாளரும் இன்று இவ்வுலகில் இல்லை. அந்தப்பாட்டு மட்டும் இதயங்களைத் திருடித் தின்று கொண்டு காற்றில் உலா வந்து கொண்டிருக்கிறது.


எழுதியவர்: - வசந்ததீபன் (போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்) -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R