ஆய்வு: முல்லைக்கலியில், கொல்லேறு தழுவுதலும் கோவலர் மாண்பும்.ஏறு தழுவுதல் என்பது முல்லைநில மக்களின் மற மாண்பையும் குடிச் சால்பையும் பறைசாற்றி நிற்கும் வீர விளையாட்டாகும். முல்லை நிலத்து ஆடவா்களின் ஆண்மைத்திறப் புலப்பாடாக அமைந்த இந்த விளையாட்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நில மக்கள் வழங்கிய கொடையாகவே கருத வேண்டும். இந்த ஏறுதழுவுதல் விளையாட்டானது அன்றைய பதிவுகளின் நீட்சியாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இந்நிகழ்வு ஏறுகோடல், ஏறு தழுவுதல், ஏறுகோள், ஏறு விடுதல் என்னும் பெயா்களில் முல்லைக் கலியிலும், இக்காலத்தில் சல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடித்தல், கூளிபிடித்தல், கூளியாடுதல் என்னும் பெயா்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஏறுதழுலுதல் குறித்துக் கலித்தொகையில் முல்லைக்கலி பாடல்கள் புலப்படுத்துவனவற்றை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

முல்லைக் கலியில் ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதலாவது வலிமைமிக்க ஏற்றைத் தழுவியடக்குதல் எனும் பொருளைப் புலப்படுத்துகினறது. ஏறுகோடல், ஏறுகோள் என்பனவும் அதே பொருளை உணா்த்துகின்றன.1

ஆவினங்களையே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லை நிலச் சமுதாயத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் அவ் ஆவினங்களை முன்நிறுத்தியே மேற்கொள்ளப் பட்டுள்ளமை அறியற்பாலது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில் முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவுதலைப் பற்றியே பேசுகின்றன. ஆறாவது பாடல் தவிர மற்ற பாடல்கள் தொழுவத்தில் நிகழும் ஏறு தழுவுதலைப் பற்றியும் , ஆறாம் பாடல் வியன்புலம் என்று சொல்லப் படுகின்ற மேய்ச்சல் நிலத்தில் தற்செயலாக நிகழும் ஏறுதழுவுதல் பற்றியும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இரண்டு வகையான ஏறுதழுவுதல்கள் குறித்த செய்திகள் முல்லைக் கலியில் இடம் பெற்றுள்ளன.

ஆயர்தம் குலமரபு
கொல்லும்  தன்மையுடைய ஏற்றினைத் தழுவியடக்கும் ஆயர்குல வீர மறவனே, அக்குலத்தில் பிறந்த கற்புடைய மங்கையை மணக்கத் தகுதியானவன் எனும் மரபார்ந்த வழக்கத்தையுடையவா்கள் ஆயர்கள். அவ்வழக்கப்படி ஆயர் குலத்தில் ஒரு பெண் பிறந்தவுடனேயே தம் தொழுவத்தில் ஒரு ஆனேற்றுக் கன்றையும் வளா்க்கத் தொடங்குவா். அவளுக்குரிய அவ்வேற்றினை அடக்கியே அவளை மணக்க விரும்புவோர் மணக்க முடியும்.

அவ் ஆய்மகளை விரும்பும் ஆயரிளைஞன்தான் அவளை முறைப்படி ஏறுதழுவிப் பின் மணம்செய்து கொள்வதாகத் தன் பெற்றோர்க்கு  அறிவிப்பான். இவ்விளைஞனின் விருப்பத்தினை அறிந்த அவளுடைய பெற்றோர் ஏறுதழுவுதல் நிகழ்வுக்குரிய நாளை முடிவுசெய்துகொண்டு, அவ்விளைஞனேயன்றித் தம் சுற்றத்தாருள், பெண்ணை மணக்கும் முறைமையுடைய இளைஞர்களுக்கும் ஏறுதழுவுவதற்கு உரிய நாளைப் பறையறைந்து தெரிவிப்பா். ஆயரினமக்கள் ஏற்றினைத் தழுவியடக்கவியலாத ஒருவன் ஆயா்குலப் பெண்ணைத் தீண்டவியலாது என்பதனை வரைமுறையாகக் கொண்டொழுகினா்.

இதனை,

”பொருபுகல் நல்லேறு கொள்பவரல்லால்
திருமாமெய் தீண்டலர்”
2

எனும் முல்லைக்கலிப் பாடலடிகளால் அறியலாம்.

மூவினத்து ஆயரும் ஏறுதழுவுதல்
முல்லைக் கலியில் மூவினத்து ஆயரிளைஞா்கள் ஏற்றினைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்கள் கோட்டினத்தாயர், கோவினத்தாயா், புல்லினத்தாயர் எனப்பட்டனா்.இது,

”கோட்டினத்தாயர் மகனன்றே மீட்டோரான்”3
”கோவினத்தாயர் மகனன்றே ஓவான்”4

எனும் அடிகளால் புலனாகிறது. கோட்டினத்தாயர்கள் எனப்படுபவா் கோடுகளையுடைய எருமைத் திரளுக்கு உரியவா்களாவா். கோவினத்தாயர்கள் பசுத்திரளையுடையவர்களாவா். புல்லினத்தாயா்கள் எனப்படுபவா்கள் ஆட்டுமந்தையையுடையவா்களாவா். இவ்வாறு மூவினத்து ஆயரிளைஞா்களும் ஏறுகளைத் தழுவுகின்றனர்.

தொழுவத்தின் காட்சி
ஆயா், மணிகளையுடைய மலையிடத்திலிருந்து விழுகின்ற அருவியின் அழகை விஞ்சும் வெள்ளிய கால்களையுடைய ஏற்றினையும், அந்திகாலத்து மேகத்தையுடைய சிவந்த தோற்றம் கொண்ட ஆகாளம் போல ஒளிபடர்ந்துப் புள்ளிகள் வெள்ளையாய் இருக்கின்ற சிவந்த ஏற்றினையும், கொலைத்தொழிலையுடைய இறைவன் சூடிய பிறைத் திங்களைப் போல வளைந்து நிறைந்தக் கொம்புகளையுடைய ஏற்றினையும் ஒருசேரத் தொழுவத்திலே புகுதவிட்டமையாலும், நறுமணப் புகையை பரப்பினமையினாலும் அத்தொழுவமானது சிங்கமும், குதிரையும், யானைகளும், முதலையில் ஒரு சாதியாகிய காரமும் பெரிய மலையின் முகடிடத்தே சேரத் திரளப்பட்டு பெய்கின்ற மலையிடத்தை ஒக்கும்.

அரிமாவும் பரிமாவும் களிறுங் காரமும்
பெருமலை விரகத் தொருங்குடன் குழீஇப்
படுமழை யாகும் வரையகம் போலும்
கொடிநறை சூழ்ந்த தொழூஉ”5

என்று முல்லைக்கலி பாடலடிகள் பதிவுசெய்கின்றன.

ஏறுகளுக்கு ஒப்பனை செய்தல்
ஆயர்குலம் ஆடுமாடுகளை ஆதாரமாகக் கொண்ட வாழ்வியலையுடையது. எனவே அவா்களின் எல்லா நிகழ்வுகளும் அவற்றைச் சார்ந்தே நிகழ்ந்தன. தம் வாழ்வோடு ஒட்டி அவற்றையும் இயைபுறுத்தியே வாழ்ந்தனர். அவற்றிற்கு கொம்பு சீவுதல், பொட்டிடுதல், சலங்கைகட்டுதல், சுட்டியணிவித்தல், கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுதல் போன்ற ஒப்பனைகளைச் செய்து மகிழ்ந்தனர். இது,

”மயிலெருத் துறழணி மணிநிலத்துப் பிறழ”6
சுடா்விரித்தன்ன சுரிநெற்றிக் காரி”7

போன்ற முல்லைக்கலி பாடல் வரிகளால் அறியலாம்.

தொழுவம் புகுமுன் தெய்வம் பரவுதல்
ஏறுதழுவச் செல்லும்முன் ஆயா்குல இளைஞர் பலவாறான கண்ணிகளைச் சூடிக்கொண்டுத் தெய்வத்திற்குச் செய்ய வேண்டிய முறைமைகளைத் தவறாமல் செய்து, நீர்துறையிலும், ஆலமரம், மாமரம் ஆகியவற்றின் கீழ் உறையும் கடவுளா்களைத் தொழுவர், அதன் பின்னே தொழுவத்திற்குச் செல்வர் இதனை,

”துறையும் ஆலமுந்தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய்”8

எனும் வரிகள் புலப்படுத்துகின்றன.

ஏறுவிடுதல் விழா
ஏறுவிடுதல் விழாவிற்காக ஏறுகளை விடுவதற்குத் தொழுவம் அமைக்கப்பெற்றிருக்கும். அத்தொழுவத்தைச் சுற்றிலும் ஏறுதழுவுதலைக் காணுமாறு பரண்கள் கட்டப்பட்டிருக்கும். இப்பரண்கள் மீது ஏறுதழுவும் ஆயரிளைஞரின் சுற்றத்தார்களும், ஏறுதழுவியவர்க்குக் கொடுத்தற்குரிய மகளிரும், மகட்கொடை நேர்ந்த ஆயரும் அவர்தம் சுற்றத்தினரும் அணிஅணியாக நின்றிருப்பர். இதனை,

”நான் மீன்வாய்கூழ்ந்த மதிபோல் மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி”9

வழங்குமாறு கொண்டு வருபுவரு பீண்டி
நறையொடு துகளெழ நல்வ வரணி நிற்ப”10
என்ற வரிகளால் அறியலாம். விழாவினைக் காணத்துடிக்கும் ஆய மகளீர்தம் ஆர்வத்தினை,

”சாற்றுள், பெடையன்னார் கண்புத்து நோக்கும் வாயெல்லாம்
மிடையெறின் ஏராத் தகைத்து”11

என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.

ஆயரிளைஞர் ஏறுதழுவும் காட்சி
ஆயரிளைஞர்கள் ஏறுகளை அலைக்கின்ற காட்சியானது பல்லுயிரும் வருத்தத்தை அடைகின்ற ஊழி முடிவிலே பசிய நிறத்தைத் தன் பாகத்தேயுடைய உருத்திரன் வருத்தத்தைத் செய்ய, ஏறாகிய எருமையை ஏறுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சைப் பிளந்து போகுமாறு செய்து அவன் குடரைக் கூளிக்கிட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்றவனைப் போல இருந்தது.

இவ்வாறான கொடிய அச்சத்தைத் தருகின்றத் தோற்றங்களைக் கண்டும் அதனைப் பொருட்படுத்தாமல் ஆயரிளைஞர்கள் இடைவிடாது விரும்பி விரும்பி அத்தொழுவத்தில் பாய்ந்த வண்ணம் இருந்தனர். தம்மைத் தழுவப் புகும் இளைஞர்களைக் குத்தித் துன்புறுத்தும் ஏறுகள் இடையிடையே தம் பகை ஏறுகளையும் குத்தித் துன்புறுத்தி அவற்றின் குடல்களையும் சரியச் செய்தன. குருதி வடியவடிய சரிந்தக் குடல்களில் சில அவற்றின் கொம்புகளுக்கிடையே பின்னிக் கிடந்தன. இக்காட்சியானது பிறை விளங்கும் தன் சடைமுடியில் செந்நிற மலா்களைக் கொண்டுத் தொடுக்கப் பெற்ற மாலைகளை அணிந்து திகழும் சிவபெருமானைப் போன்றிருந்தது.

“எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவமாலை போலக்
குருதிக்  கோட்டோடு குடர்வலந்தன”
12   

இவ்வாறு குடல்கள் பின்னிக் கிடக்கும் கொம்புகளுடன் காணப்பட்ட அந்த ஏறு, ஒரு ஆயரிளைஞனை நோக்கிப் பாய்ந்து வந்தது. தன்மேல் பாயவந்த அந்த ஏற்றினைத் தன் இரு கைகளிலும் எடுத்தெடுத்துத் தன் வயிற்றினைச் சுற்றியிடுகின்ற காட்சியானது, சிவந்த நூற்கழியை ஒருவன் இரண்டு கையிலும் கோர்த்துப் பிடித்திருக்க அந்நூலை மூன்று நூலாகக் கொள்கின்றவனைப் போல் இருந்தது.

ஆயமகளிரின் வீர முனைப்பு
ஆயரின மகளிர், கொல்லேற்றின் சீற்றத்திற்கு அஞ்சி அதனைத்தழுவாது விலகி நிற்கும் ஆயனின் தோளினைப் பெண்ணாம் தன்மை பொருந்திய காரிகையின் தோள்களாகவே இகழ்ந்து பேசுவா். அத்தகையவனின் தோள்களைக் காமுறுதல் ஆயர்குல வழக்கத்திலேயே இல்லை. ஏறுகளைத் தழுவியடக்கும் வீர மறவனையே அவர்கள் எஞ்ஞான்றும் மணக்க விரும்பினர்.

”கொல்லேற்றுக் கோடஞ்சு  வானை மறுமையிலும்
புல்லாளே ஆய மகள்”13

எனும் வரிகள் ஆயர்குல மகளிரின் மறமாண்பையும், வீர முனைப்பையும் எடுத்தியம்புகின்றன.
ஏறுகளின் மறப்பண்பு


ஏறுதழுவுதலைத் துணிந்த, புகழ்கெடாத வண்ணம் எக்காலமும் ஏறு தழுவுதலிலேயே மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஆயனொருவன் பிறா் ஏறுகொள்ளுமாற்றைக் கடந்து சென்றுத் தழுவித் தன் உடல் சோர்வினாலே ஏறுகொள்ளும் நிலைத் தப்பி ஏற்றின் முன்னே விழ, அவனைப் பொருதாமல் மீளுகின்ற ஒரு புகர்நிற ஏறு, இத்தகையச் செய்கையானது தன் கைகளிளே வாளோடே அகப்பட்ட ஒரு மறவனை இவன் எனக்கு ஒவ்வானென்று வெட்டாமல் மீளும் கூற்றுவனையொத்தப் பகை மறவனை ஒத்திருந்தது.

”தா ளெழு துணிபிணி யிசைதவர் பின்றித் தலைச்சென்று
தோள்வலி துணிபிணி துறந்திறந் தெய்தி மெய்சாய்ந்து
மீளும் புகலேற்றுத் தோற்றங்காண் மண்டமருள்
வாளகப் பட்டானை யொவ்வா னெனப்பெயரும்”14

எனும் இவ் முல்லைக்கலி வரிகள் ஏறுகளின் வீரப் பண்பினை உணர்த்துகின்றன.
ஆயரிளைஞர் ஏறுகளுடன் பொருதக் காட்சி

”எழுந்தன துகள்
ஏற்றனா் மார்பு
கலங்கினர் பலர்”15

என்ற முல்லைக்கலியடிகள் ஆயரிளைஞர்கள் ஏறுதழுவுகின்றக் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. ஆய மங்கையரையும் அவரவர்குரிய ஏறுகளையும் அறிவித்த பின்புப் பறைகளை முழக்கினர். பரண்களின் மேல் வீற்றிருந்தவர்கள் ஆராவாரம் எழுப்பினர். இவ்வொலிகள் தொழுவிலுள்ள ஏறுகளுக்கு மருட்சியும், கடுஞ்சினத்தையும் தோற்றுவித்து அவை வெகுண்டெழக் காரணமாயின. ஆயரிளைஞர்கள் அத்தகைய ஏறுகளைத் தழுவியடக்க வீரத்துடன் பாய்ந்து சென்றனர். தம்மைத் தழுவியடக்கப் போந்த வீரா்களை நோக்கி அவைகளும் பாய்ந்து சென்று பொருதன. அத்தொழுவத்தினுள்ளே அவ்வேறுகளைத் தழுவுவதற்கு விரும்பி விரும்பி குதித்தப் பொதுவரைத் தெரிந்து அவ்வேறுகள் குத்தின. இவ்வாறு அத்தொழுவமானது ஒரு போர்க்களத்தை ஒத்திருந்தது. இதனை,

ஆங்க…ஏறும் பொதுவரு மாறுற்ற மாறா
இருபெரு வேந்தரும் இகலிக்கண்ணுற்ற
பொருகளம் போலுந் தொழுஉ”16

என்று முல்லைக்கலி பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

ஏறுதழுவுதல் அன்றையத் தமிழ்ப் பாரம்பரியத்தின் இன்றைய நீட்சி
ஏறுதழுவுதல் நிகழ்வானது   முல்லைக்கலி தவிர சங்க இலக்கியங்கள் வேறெதிலும் பதிவுசெய்யப்படவில்லை. ஆயினும் ஏறுதழுவுதல் எனும் வீர விளையாட்டு அன்றையத் தமிழ்ப் பாரம்பரியத்தின்  எச்சங்களாக, இன்றைய சமுகத்தின் மரபு மீட்டுருவாக்க முயற்சியாகத் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. சங்க காலத்தில் முல்லைநிலத்தில் மட்டுமே நிகழ்ந்த  இந்நிகழ்வானது தென்மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து  நிகழும் தமிழர் மற மாண்பைப் பறை சாற்றி நிற்கும் வீர விளையாட்டாகத் திகழ்கின்றது. சி.சு.செல்லப்பா வாடிவாசல் எனும் புதினத்தில் இன்றைய ஏறுதழுவுதல் நிகழ்வை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். சங்க காலத்தில் மங்கையரை மணப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட இந்த வீர விளையாட்டு, இன்றைய காலச்சூழலுக்கேற்பப் பரிசுப்பொருட்களுக்காகவும், வீர உணர்வைப் புலப்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு, கூளிபிடித்தல், மாடுபிடித்தல் என்று பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வானது தை மாதம் மாட்டுப்பொங்களன்று துவங்கி வைகாசி மாதம் வரை நடைபெற்று வருகிறது.

சான்றெண்விளக்கம்
1.முனைவர் அ.முத்துசாமி,சங்க இலக்கியத்தில்ஆயர்.ப.112
2..முல்லைக்கலி. பா.எண் 102.  10-11
3. முல்லைக்கலி. பா.எண் 103.  32
4. முல்லைக்கலி. பா.எண் 103.  37
5. முல்லைக்கலி. பா.எண் 102.  21
6. முல்லைக்கலி. பா.எண் 102.  21
7. முல்லைக்கலி. பா.எண் 101.  21
8. முல்லைக்கலி. பா.எண் 101. 13-14
9. முல்லைக்கலி. பா.எண் 104.  27-28
10. முல்லைக்கலி. பா.எண் 101.  11-16
11. முல்லைக்கலி. பா.எண் 102.  15-27
12. முல்லைக்கலி. பா.எண் 102.  25-27
13. முல்லைக்கலி. பா.எண் 102.  21
14. முல்லைக்கலி. பா.எண் 104.  45-49
15. முல்லைக்கலி. பா.எண் 102.  21-25
16. முல்லைக்கலி. பா.எண் 105.  45-49

துணைநூற்பட்டியல்
சங்க இலக்கியத்தில் ஆயர் –   அ.முத்துசாமி, இராணி பதிப்பகம்
21/16 பீட்டர்சாலைக் குடியிருப்பு
சென்னை. 1988
கலித்தொகை -  நச்சினார்க்கினியர் மூன்றாம் பதிப்பு
கழக வெளியீடு – 1957

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: முனைவர் ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர்,,தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R