- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -முன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.

காப்பியம் விளக்கம்
காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.

காப்பியம் என்பதில் 'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

காப்பிய இலக்கணம்
தமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி…  (தண்டியலங்காரம், நூற்பா -8)

கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)

சிறுகாப்பியம்
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றேனும், இரண்டேனும், மூன்றேனும் குறைந்து வருவது காப்பியமாகும். தண்டியலங்காரம் கூறும் காப்பியம் என்பது சிறுகாப்பியத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அறமுதல் நான்கினுங் குறைபாடுடையது காப்பியம் என்று கருதப் படுமே
(தண்டியலங்காரம், நூற்பா -10)

மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும் உரைநடை கலந்தும் பிறமொழி கலந்தும் வரலாம்.
அவைதாம்

ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே (தண்டியலங்காரம், நூற்பா -11)

மேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.

பாவிகம்
காப்பியத்தினுடைய பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது.

பாவிகம் என்பது காப்பியப் பண்பே (தண்டியலங்காரம், நூற்பா - 91)

காப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.

பிற நூல்களில் காப்பிய இலக்கணம்
வீரசோழியம் புராணத்திற்கும் காப்பியத்திற்கும் மிகுந்த வேறுபாடு இல்லை என்னும் அடிப்படையில், காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது. பன்னிரு பாட்டியல் காப்பியத்தைத் தலை, இடை, கடை என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றது. மாறனலங்காரம், வச்சணந்தி மாலை, நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்களிலும் காப்பிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.

உலக மொழி -  காப்பியங்கள்
உலக மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

காப்பியத்தின் பெயர்                                 மொழி/நாடு             ஆசிரியர்


இலியாது, ஒதீஸி                                       கிரேக்க மொழி        ஹோமர்   
ஆர்லண்டோ இன்ன மராட்டோ                 இத்தாலி                  பயர்டோ   
ஷாநாமா                                                    பாரசீகம்                   அபுல்காசிம் மன்சூர்   
மே                                                              செக்மொழி               மெக்கா   
வாண்டன் ஓஸ்ரெய்னால்ட்                       டச்சு மொழி              பிளீமிஷ்   

இந்திய மொழிக் காப்பியங்கள்
இந்திய மொழிகளிலும் பழங்காலம் முதல் காப்பியப் படைப்புகள் தோன்றி வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

காப்பியத்தின் பெயர்                                         மொழி            ஆசிரியர்


இராமாயணம்                                                    வடமொழி      வால்மீகி   
மகாபாரதம்                                                        வடமொழி      வியாசர்   
இராம சரித மானஸ்                                          ஹிந்தி          துளசிதாசர்   
குமாரசம்பவம், இரகு வம்சம்                            வடமொழி     காளிதாசர்   
நூர் நாமா                                                           பாரசீகம்        அமீர் குஸ்ரு   
சுதாம சரித்திரம்                                                 குஜராத்தி      பக்தசிரோமணி   
பத்மாவதி                                                           வங்காளம்     ஆலாவுல்   
பிரபுலிங்க லீலை                                               கன்னடம்       சாமரசன்   
குமார சம்பவம்                                                  தெலுங்கு       நன்னிசோட   

தமிழ் மொழியில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ் காப்பியங்கள்
நல்சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன. தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது.

இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும். தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் முதனமை எடுத்துக்காட்டாக விளங்குவது சிலப்பதிகாரம் ஆகும். இங்கு ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றிச் சிறப்பு நிலையில் கீழே காண்போம்.

சிலப்பதிகாரம்
சிலம்பு எனப்படும் சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலைநகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும் அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் (சிலம்பு.பதிகம் 55-57)

என்ற பதிக அடிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் வேறு பெயர்கள்: தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம், குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ), புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ்த் தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக்காப்பியம், ·    சிறப்பதிகாரம்(உ.வே.சா), பைந்தமிழ் காப்பியம் என்பவைகளாகும்.

மணிமேகலை
இக்காப்பியநூல் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்                     (மணி. 25-228)

நூலின் வேறு பெயர்கள்: மணிமேகலைத் துறவு, முதல் சமயக் காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக்காப்பியம், குறிக்கோள் காப்பியம், புரட்சிக்காப்பியம், சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம், கதை களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், இயற்றமிழ்க் காப்பியம், துறவுக் காப்பியம் என்பதாகும்.

சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவகசிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவகசிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்கதேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவகசிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட 3,145 செய்யுட்கள் உடையது.

விமலையார் இலம்பகத்தில் சீவகன் ஏமாங்கத நாடு செல்லும் போது காட்டினைக் கடந்து சென்றான். அங்குக் காணப்பட்ட இயற்கையழகைத் திருத்தக்கதேவர் சுவைபட வருணித்துள்ளார்.

அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின்
ஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே (சீவக. 11)

சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்: மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்), இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி போன்றவையாகும்.

வளையாபதி

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற செவ்விலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி,

பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. (வளையாபதி.8)

என்று விளக்குகிறது. இந்நூலின் செய்யுட்களை அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள்   உரையில் எடுத்தாண்டுள்ளனர்.

குண்டலகேசி
தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன. தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும். பாலகன் இளைஞனாகிறான், இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம்? அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்? என நாதகுத்தனார் வினவுகிறார்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின் றாமால் நமக்கு நாம் அழாதது என்னோ!    (குண்டலகேசி 9)

ஐஞ்சிறு காப்பியம்
பெருங்காப்பியத்திற்கு இலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் சிறுகாப்பியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். ஆனால், சிறு காப்பியம் எனும் சொல்லைப் பயன்படுத்தாமல் காப்பியம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறார். முதன் முதலாக, சி.வை.தாமோதரம் பிள்ளையே தமது சூளாமணி முகவுரையில் சிறுகாப்பியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற பிரிவில் வருவனவாகும்.

1. உதயணகுமார காவியம்
வத்தவம் என்னும் நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம். 6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல். கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் அறியக் கிடைக்கவில்லை. இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது.

2. நாககுமார காவியம்
நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும் இந்நூல் ஒரு சமண நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகத நாட்டு அரசன் நாககுமாரனின் கதையைக் கூறுவதால் இது நாககுமார காவியமானது. விருத்தப்பாவில் அமைந்த 170 பாடல்களை உடையது. ஐந்து சருக்கங்களைக் கொண்டது. இக்காப்பியத்தில் நாககுமாரனின் பிறப்பு, வளர்ப்பு, அவனுடைய வீரச் செயல்கள், பஞ்சமி நோன்பின் சிறப்பு, துறவின் மேன்மை ஆகியன போற்றப்படுகின்றன. மன்னன் சிரோனிகராசனுக்குக் கௌதம முனிவர் கூறும் பஞ்சமி கதையாக இக்கதை அமைகின்றது. அம்மன்னன் அருகக் கடவுளைப் போற்றிப் பாடும் பாடல் உள்ளம் உருக்குவதாகும்.

அறவனீ யமலனீ யாதி நீயே
ஆரியனீ சீரீயனீ யனந்த னீயே
திரிலோக லோகமொடு தேய னீயே
தேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே (நாககுமார.18:1-2)

3. யசோதர காவியம்
தமிழில் ‘யசோதர காவியம்’ படைத்த ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்து சமயத்தில் ஒரு காலத்தில் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. எனினும் பிற்காலத்தில் இதில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி உயிர்களுக்குப் பதிலாக மாவினால் செய்த அவற்றின் உருவங்களை வைத்துப் பலி கொடுப்பது போல் பாவனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. உயிர்ப்பலியைத் தீவிரமாக எதிர்த்த சமண சமயம், இப் பாவனை செய்யும் முறையும் கொலையை ஒத்ததே எனவும் இதிலும் கொலை செய்யும் எண்ணம் இருப்பதால் கொலை செய்வதால் ஏற்படும் கர்ம வினைப்பயன்கள் பாவனைக் கொலையிலும் ஏற்படும் என்றும் வலியுறுத்தியது. ஐந்து சருக்கமும் 320 செய்யுட்களும் பெற்று அமைகிறது. ஒரு பாடலைக் கொண்டு இந்நூல் ஆசிரியர் வெண்ணாவலுடையார் என்பர்.

4. நீலகேசி
தமிழில் தோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நூல். யாப்பருங்கல விருத்தி எனும் நூல் இதனை நீலம் எனக் கூறும். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 10 சருக்கங்களையும் 894 பாடல்களையும் உடைய நூல் இது. பாஞ்சால நாட்டிலுள்ள பலாலயம் சுடுகாட்டில் காளிக்கு இடப்படும் பலியை முனிச்சந்திரர் என்னும் சமணத் துறவி தடுக்கிறார். காளி பழையனூர் நீலியை அனுப்பி முனிவரை விரட்டச் சொல்கிறாள். முனிவரை விரட்ட வந்த நீலி வாதத்தில் முனிவரிடம் தோற்று அவரது மனைவியாகிறாள். வாதத்தில் பலரையும் வென்றுபௌத்தத் துறவியான குண்டலகேசியையும் புத்தரையும் வாதத்தில் வெல்கிறாள். நீலகேசியை ஓலைச் சுவடிகளில் இருந்து சமய திவாகர வாமன முனிவர் உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தவர் கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் திரு. அ. சக்கரவர்த்தி நயினார் ஆவார். 1936இல் வெளிவந்த இப்பதிப்பை 1984இல் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக் கழகம் நிழல்படப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

5. சூளாமணி
சூளாமணி என்பது மகுடத்தின் முடிமணி. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும் நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். இதனைச் சூடாமணி என்றும் அழைப்பர். சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி இருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் எனப் பெரியோர்கள் கருதுகின்றனர். இது ஒரு சமண சமயக் காப்பியம். ஆசிரியர் தோலாமொழித் தேவர். 12 சருக்கங்கள், 2131 பாடல்களை உடையது.  ஸ்ரீபுராணம் என்னும் மகாபுராணத்தைத் தழுவிய கதை இது என்பர். இக்கதை பாகவதத்தை ஒத்துள்ளது என்பது மு.வ.வின் கருத்து. பலராமனையும் கண்ணனையும் போல இக்கதையில் திவிட்டன், விசயன் எனும் இரு மன்னர்கள் வருகின்றனர்.
வாழ்க்கை துன்பங்களே நிறைந்தது. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பம் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மையை எவ்வளவு எளிமையாக, சுவையாகக் காட்டி விட்டார் தோலாமொழித் தேவர்.

தற்காலக் காப்பியங்கள்
பண்பட்ட மொழியில் காலந்தோறும் புதிய இலக்கிய படைப்புகள் தோன்றுவது இயல்பேயாகும். அவ்வகையில், தமிழ்க் காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில் பல காப்பியங்கள் எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக் காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள். கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல் காப்பியங்களாகவும் காணப்படுகின்றன.

சைவ காப்பியங்கள்: பெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·
வைணவக் காப்பியங்கள்: கம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்
இசுலாமியப் பெரும் காப்பியங்கள்    : கனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · இராச நாயகம் · குத்பு நாயகம் · திருக்காரணப் புராணம் · குத்பு நாயகம் · முகைதீன் புராணம் · திருமணி மாலை · இறவுசுல் கூல் படைப்போர் · புதூகுசா அம் · தீன் விளக்கம் · நவமணி மாலை · நாகூர்ப் புராணம் · ஆரிபு நாயகம்
இசுலாமியச் சிறு காப்பியங்கள்: மிகுராசு மாலை · பொன்னரிய மாலை · சாதுலி நாயகம் · மூசாநபி புராணம் · அபூ ­கமா மாலை · இராசமணி மாலை · செய்யிதத்துப் படைப்போர் · யூசுபு நபி கிசா · சைத்தூன் கிசா
கிறித்தவக் காப்பியங்கள்: தேவ அருள் வேதபுராணம் · தேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · யோசேப்புப் புராணம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஆதி நந்தவனப் புராணம் · ஆதி நந்தவன மீட்சி · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · பூங்காவனப் பிரளயம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவர்க்க நீக்கம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அருள் அவதாரம் · அறநெறி பாடிய வீரகாவியம் · எஸ்தர் காவியம் · மோட்சப் பயணக் காவியம் · அன்னை தெரசா காவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · புவியில் ஒரு புனித மலர் · அருட்காவியம் · நற்செய்திக் காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · உலக சோதி · திருத்தொண்டர் காப்பியம் · மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்
ஈழத்துக் காப்பியங்கள்: கண்ணகி வழக்குரைக் காவியம்
சமணக் காப்பியங்கள்: சீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி  · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம்  · சூளாமணி ·
பிற காப்பியங்கள்: பாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் · மௌன மயக்கமும் · ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·

நிறைவுரை

காப்பிய   இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று. இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும் இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன. நாமும் காப்பியங்களைக் கற்று நற்கருத்தினைப் போற்றி மகிழ்வோம்.

துணை நூற்கள்
கு.அம்பலவாணபிள்ளை(ப.ஆ) தண்டியலங்காரம் மூலமும் உரையும், 1920
சுப்பிரமணியன்., ச.வே., காப்பியப் புனைதிறன், தமிழ்ப் பதிப்பகம்,சென்னை. 1979
சுப்பிரமணியன்., ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
ச.வே.சு.., ந. கடிகாசலம்., பதிப்பித்த ஆய்வுக்கோவை., தமிழிலக்கியக் கொள்கைகள்., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்., சென்னை.20., 1981
தமிழ் இலக்கிய வரலாறு – சதாசிவ பண்டாரத்தார்
Shipley, Joseph Twadell. Dictionary of world literature: criticism, forms, technique. Taylor & Francis, 1964. p. 109. Web. 15 October 2011.

*கட்டுரையாளர்  - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R