இலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப்: "எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்"" பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும். வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும். பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. " 

இவ்வாறு 25-06-1973 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில் நடந்த " பூரணி" காலாண்டிதழ் விமர்சன அரங்கில் உரையாற்றிய ஒரு மாணவர் பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த குமாரசாமி விநோதன். அவர்தான் அச்சமயத்தில் தமிழ் மன்றத்தின் தலைவர். அவர் தலைமையுரையாற்றத்தொடங்கியதுமே அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்துகொண்டிருந்தார் ஶ்ரீகாந்தா என்ற மற்றும் ஒரு மாணவர். இவர் குதர்க்கம் பேசி தலைவருக்கு சினமூட்டிக்கொண்டிருந்தார்.  எனினும் சினம்கொள்ளாமல் பவ்வியமாக நிகழ்ச்சியை விநோதன் நடத்தினார். இந்த விமர்சன அரங்கிற்கு பூரணி இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்களுடன் சென்றிருந்தேன். சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.  எழுத்தாளர்கள் இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், எச்.எம்.பி. மொஹிதீன் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்.எச்.எம் அஷ்ரப், பெரி. சுந்தரலிங்கம், மனோகரன், வரதராஜா, சிவராஜா ஆகியோரும் உரையாற்றினர். பின்னாளில் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்த செல்வி சகுந்தலா சிவசுப்பிரமணியமும் சபையில் அமர்ந்திருந்தார். அவரும் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்தவர்.

ஏறக்குறைய நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த விமர்சன அரங்கை நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைக்கத்தூண்டியவர்தான் எம்.எச். எம் அஷ்ரப். இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் எழுதியிருக்கும் அந்தவரிகளைப்பேசியவர்தான் அஷ்ரப்.  இவர் சட்டக்கல்லூரி மாணவராக அன்று எனக்கு அறிமுகமான இலக்கியவாதி. கவிஞர். பேச்சாளர். 1983 மார்ச் வரையில் இந்த இலக்கியத்தளத்தில்தான் எனக்கு இவர் நெருக்கமானவர்.  1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணி காலாண்டிதழ் கொழும்பில் வெளியாகத்தொடங்கியது. அதன் வெளியீட்டுவிழா கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்தவேளையில் அங்குசென்றதனால் பல இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.  பூரணியிலும் எழுதுவதற்கு களம் கிடைத்தது. இணை ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் - க.சட்டநாதன், பூரணி குழுவினர் மு.நேமிநாதன், த. தங்கவேல், இமையவன், இரா. சிவச்சந்திரன், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோரும் அறிமுகமாகி இலக்கிய நண்பர்களானார்கள்.  சட்டக்கல்லூரி தமிழ் மன்றம் பூரணிக்காக ஒரு விமர்சன அரங்கை நடத்தும் செய்தியறிந்து, அங்கு சென்றதனால் சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த எச்.எம்.பி. மொஹிதீனையும் பூரணி விமர்சன அரங்கில் சந்தித்தேன். பூரணி அந்த அரங்குவரையில் மூன்று இதழ்களைத்தான் வெளியிட்டிருந்தது. குறிப்பிட்ட விமர்சன அரங்கு தொடர்பான விரிவான செய்தியை பூரணி ஆடி - புரட்டாசி 1973 இதழில் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தேன்.

அதன்பின்னர் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் விநோதனும் அஷ்ரப்பும் சகுந்தலா சிவசுப்பிரமணியமும் இணைந்தனர். அன்று சட்டக்கல்லூரியில் விநோதனுடன் தர்க்கமாடிய மாணவர் என். ஶ்ரீகாந்தா இன்றும் அரசியல் (சதுரங்கத்தில்) அரங்கில் தர்க்கமாடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதியாக டெலோ இயக்கத்தின் செயலாளராக திகழுகிறார். விநோதன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். சகுந்தலா சிவசுப்பிரமணியம் திருமணத்தின் பின்னர் எதிர்பாராதவிதமாக ஒரு விமானப்பயணத்தின்போது திடீரென சுகவீனமுற்று மறைந்தார். அஷ்ரப் 1983 இற்குப்பின்னர் முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்து இலங்கை அரசியலில் பிரகாசித்து, எதிர்பாராத விதமாக 16-09-2000 ஆம் திகதி சனிக்கிழமை திடீரென மறைந்தார்.
அவரும், அவருடன் பயணித்த14 பேரும் சென்ற எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் அரநாயக்கா பகுதியில் "பைபிள் ரொக்" என்ற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதுவிபத்தா, திட்டமிட்ட சதியா என்பது இன்றுவரையில் புலனாகவில்லை. விசாரிக்குமாறு கோரும் வேண்டுகோள்களும் ஊடகங்களில் செய்திகளாக தொடருகின்றன.

அன்று 1972 - 1973 காலப்பகுதியில் கொழும்பு சட்டக்கல்லூரி மாணவர்களாக திகழ்ந்த சகுந்தலா சிவசுப்பிரமணியம், பெரி. சுந்தரலிங்கம், குமாரசாமி விநோதன், எம். எச்.எம். அஷ்ரப் ஆகியோர் அடுத்தடுத்து வேறு வேறு சந்தர்ப்பங்களில் மறைந்தமையால் ஈழத்து இலக்கிய உலகிற்கு இழப்பு நேர்ந்ததாகவே கருதுகின்றேன். இவர்கள் நால்வர் பற்றியும் தனித்தனி கட்டுரைகள் எழுதமுடியும். பெரி. சுந்தரலிங்கத்தை தவிர்த்து, ஏனைய மூவரும் ஏதோ விதத்தில் எனது இலக்கிய வாழ்வில் தவிர்க்கமுடியாதவர்கள். 

அன்று சட்டக்கல்லூரியில் ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும் எனப்பேசிய அஷ்ரப், பின்னாளில் கவிஞராகவே மலர்ந்தவர். தினமும் ஒரு கவிதை எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தவர். அரசியல் தலைவராகி தேர்தலில் நின்று வெற்றிகளை குவித்து, அமைச்சரானதன் பின்னரும் தினமும் ஒரு கவிதையாதல் எழுதியவர். 1973 இல் சட்டக்கல்லூரியில் அவர் இலக்கியம் பேசிய தோரணையைப்பார்த்தபோது எதிர்காலத்தில் புகழ்பெற்ற இலக்கியப்படைப்பாளியாகத்தான் வருவார் என்று கருதினேன். ஆனால், காலம் அவரை மாற்றியது. தான் விரும்பிய ஆழ்ந்து நேசித்த கவிதைகளை தினமும் எழுதிக்கொண்டே, நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை எழுப்பினார்.

" இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைப்பற்றி எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டபோது, அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன என்பதை நாம் விளங்கிக்கொள்ளத்தவறிவிட்டோம். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதாக எல்லோரும் நினைக்கின்றனர். அது அவ்வாறல்ல. இந்த ஒப்பந்தத்தைக் கூர்ந்து நோக்கினால், அதில் இரண்டு அம்சங்கள் உண்டு என்பதை உணரலாம். முக்கியமாக, இந்தியா - இலங்கை தொடர்பாக குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் முன்னுரையிலுள்ள ஒரு பந்தியை வாசிக்கின்றேன்!

" ஶ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள மரபு முறை நட்பை மேலும் பலப்படுத்தி வளர்த்து, தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மேற்கொண்டு இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதின் அத்தியாவசியத்தையும் ஒப்புக்கொண்டு, இதனால் ஏற்பட்ட வன்முறைகளின் விளைவுகளையும் சீர்தூக்கி ஶ்ரீலங்காவின் சகல இன சமூகங்களின் பாதுகாப்பு, சுபீட்சம், செழிப்பு முதலியவற்றையும் உறுதிப்படுத்துவது" 

" ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அரசியல் அதிகாரம் வழங்குவதையே இந்த உடன்படிக்கை தன்னகத்தே உள்ளடக்கியிருக்கிறது என்பதையும் சமுதாயங்களுக்கல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விஷயத்தில்தான் இந்த உடன்படிக்கை முற்றாகத்தோல்வி அடைகின்றது. நிர்மூலமாகின்றது. வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு பிராந்தியமாக கணிக்கப்படுகின்றது. அரசியல் அதிகாரம் அந்தப்பிராந்தியத்திற்குத்தான் அளிக்கப்படுகிறது. அந்தப்பிரதேசத்தில் அரசியலில் வேறுபட்ட, அரசியல் அபிலாஷைகளில் வித்தியாசப்பட்ட புறம்பான சமுதாயங்கள் அங்கே வாழ்கின்றனர் என்ற உண்மையை நாம் உணராமல் விட்டுவிட்டோம்" 

இந்த உரையை 09-12-1989 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அஷ்ரப் நிகழ்த்தும்போது, முன்னர் 1973 இல் அவரது இலக்கிய உரையை எழுத்தில் பதிவுசெய்தமை போன்று நேரில் கேட்டு நான் எழுதவில்லை. இந்த அரசியல் உரை அரசின் பதிவேட்டில் (Hans art) இருக்கிறது.

வடக்கு - கிழக்கு இணைப்பு உடன்படிக்கையை பிரபாகரனும் மறுத்தார். பிரேமதாசவும் எதிர்த்தார். அதற்காக நடந்த தேர்தலையும் இவர்கள் இருவரும் ஏற்கவில்லை. இந்திய - இலங்கை உடன்படிக்கையை அடிமைச்சாசனமாகவும் அவசரக்கோலமாகவும் கருதிய பிரேமதாச, புலிகளை My Boys என அரவணைத்து ஆயுதங்களும் வழங்கினார். வடக்கு - கிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் தனிநாடு பிரகடனப்படுத்திவிட்டு அமைதிப்படையுடன் (?) இந்தியாவுக்கு கப்பல் ஏறினார். இன்று உள்ளுராட்சிக்காக வந்துள்ளார். அரவணைத்தவர்களினாலேயே அழிக்கப்பட்டார் பிரேமதாச. 

அரசியல் அரங்கில் காட்சிகள் மாறிவிட்டன. இந்தியக்கொடி வடக்கு - கிழக்கில் பறந்துவிடும் என்றுதான் பிரபாகரன், பிரமேதாச , அஷ்ரப் உட்பட பலரும் பயந்தனர். இன்று தென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் சீனாவின் கொடி பறக்கிறது. இந்தக்காட்சியை காணாமல் இவர்கள் மூவரும் அவச்சாவை சந்தித்து பரலோகம் சென்றுவிட்டனர். இவ்வாறுதான் இலங்கை அரசியல் வரலாற்றில் துன்பியல் பதிவாகியிருக்கிறது. 

எம்.எச். எம். அஷ்ரப் (முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப்)  அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் முகம்மது உசைன் - மதீனா உம்மா தம்பதியரின் ஏக புதல்வன். 1948 இல் பிறந்த அஷ்ரப், கல்முனைக்குடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, இடைநிலைக்கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும் உயர்தரத்தை வெஸ்லியிலும் முடித்துக்கொண்டு, கொழும்பு சட்டக்கல்லூரிக்கு படிக்கச்சென்றார். அங்குதான் பூரணி விமர்சன அரங்கில் முதல் முதலில் சந்தித்தேன்.
அவர் கிழக்கிலங்கையில் தனது வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டிருந்த வேளையில் 1982 - 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு வந்தது. எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்தபோது கல்முனை, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலும் கண்காட்சிகளையும் விழாக்களையும் நடத்தியது. கிழக்கிலங்கை நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதனும் இலங்கையின் மூத்த நாவலாசிரியர் இளங்கீரனும் நானும் உரையாற்றினோம். அந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு பார்வையாளராகவே அஷ்ரப் வருகைதந்து கலந்துகொண்டார். டொக்டர் முருகேசம் பிள்ளை அவர்களின் கல்முனை இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்துக்கும் வந்தார். இங்குதான் அவரை ரகுநாதனுக்கு அறிமுகப்படுத்தினேன்.

அஷ்ரப்பின் மந்திரப்புன்னகை தவழும் முகத்தை மறக்கமுடியவில்லை. கலந்துரையாடல்களில் அமைதியும் நிதானமும் அவரிடம் காணப்பட்ட குணவியல்புகள். ரகுநாதனுடன் கவிதை தொடர்பாக அஷ்ரப் பேசியது குறைவு. ஆனால், கேட்டுத்தெரிந்துகொண்டது அநேகம். புதுக்கவிதையை ரகுநாதன் தீவிரமாக எதிர்த்தவர். அஷ்ரப் மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் விரும்பியவர். எழுதியவர். இந்தச்சந்திப்பு நடந்த காலத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அஷ்ரப் உருவாக்கியிருந்தார். எனினும் அவர் அன்று எம்முடன் அரசியல் பேசவில்லை. அவரது அரசியல் தொடர்பான பல செய்திகளை வீரகேசரியில் எழுதியிருந்தாலும், எனக்கு அவரது இலக்கியப்பக்கம்தான் பிடித்தமானது. இனம்சார்ந்த அரசியல் குறித்து எதிர்வினைச்சிந்தனைகளை நான் அப்போது கொண்டிருந்ததாலோ என்னவோ,  அவரது அரசியல் பிரவேசம்,  ஒரு நல்ல கவிஞனின் அஸ்த்தமனத்துக்கு காரணமாகிவிடும் என்றுதான் எண்ணினேன். ஆனால், அந்த அரசியல் பிரவேசமே அவரது உயிரின் அஸ்த்தமனத்துக்கு காரணமாகும் என அன்று எண்ணவில்லை.  ஆனால், அவரோ தினமும் கவிதையும் எழுதிக்கொண்டு அரசியல் பணிகளிலும் தீவிரமாகியிருந்தார்.

1987 இல் நானும் புலம்பெயர்ந்துவிட்டதனால், அவருடனான இலக்கிய உறவும் அஸ்தமித்துவிட்டது. 1997 இல் இலங்கை வந்திருந்தபோது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார் என்ற செய்தி அறிந்து பல வருட இடைவெளிக்குப்பின்னர் அவரைப்பார்ப்பதற்காகச்சென்றேன். அப்பொழுது அவர் அமைச்சர். மண்டபம் தீவிர பாதுகாப்புக்குட்பட்டிருந்தது. அவர் வருவதற்கு முன்னரே, அங்கு பிரவேசித்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் , மண்டபத்தை அங்குலம் அங்குலமாக சோதித்தனர். மேடைக்குச்சென்று, கம்பன் கழகத்தின் அலங்காரங்களையும் பெரிய பூச்சாடிகளையும் ஆராய்ந்தனர். சபையில் இருந்த ஆசனங்களில் கிடந்த உடமைகளையும் திறந்து பார்த்தனர். நான் அமர்ந்திருந்த ஆசனத்தில் எனது ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு, வெளியே காற்றாட நின்ற மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனது ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்த எனது தங்கையிடம் "அந்த ஹேண்ட் பேக் யாருடையது..?" என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி வந்து கேட்டார். தங்கை வெளியில் நின்ற என்னைக்காட்டினாள். அந்த அதிகாரி என்னை அழைத்தார். அவரிடத்திலும் அஷ்ரப்பின் மந்திரப்புன்னகைதான் தவழ்ந்தது. மண்டபத்தின் உள்ளே வந்து ஹேண்ட்பேக்கை எடுத்து திறந்து காண்பித்தேன். அவர் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார்.  மீண்டும் வெளியே வந்தேன். சற்று நேரத்தில் அமைச்சர் அஷ்ரப் காரில் வந்து இறங்கினார். அதிலிருந்து முதலில் குதித்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு முதுகைக்காண்பித்துக்கொண்டு, விறைத்தவாறு நின்றனர். மேலும் சிலர் அவரை மண்டபத்தின் முன்வரிசைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தனர்.

அவுஸ்திரேலியாவில் நான் சம்பந்தப்பட்ட தமிழ் அகதிகள் கழகத்தின் விழாக்களுக்கு அவுஸ்திரேலிய அமைச்சர்களையும் அழைத்திருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். அத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கு இல்லை.
அதனால் அன்று அமைச்சர் அஷ்ரப்பிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எனக்கு அதிசயமாகவும் விநோதமாகவும் பட்டது. நீண்ட காலத்தின் பின்னர் அவரது இலக்கிய உரையை செவிமடுத்துவிட்டு, அன்று அவரை சந்திக்காமல் திரும்பிவிட்டேன்.
1973 இல் சட்டக்கல்லூரியிலும், 1983 இல் கல்முனையிலும் நான் பார்த்த அஷ்ரப் ஒரு இலக்கியவாதி. 1997 இல் மீண்டும் பார்க்கவிரும்பியபோது அவர் அரசியல்வாதி, அமைச்சர். எனினும் அன்று கம்பன் விழா மேடையிலும், அன்று வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தான் எழுதிய கவிதையையும் வாசித்தார்.  அன்றைய விழா முடிந்தபின்னர், மற்றும் ஒருநாள் மினுவாங்கொடையில் நண்பர் எழுத்தாளர் மு. பஷீரைச்சந்தித்தபோது நான் கண்ட காட்சிகளைச்சொன்னேன். அவர்தான் மினுவாங்கொடை கள்ளொழுவை பிரதேசத்தில் அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பஷீர் - அஷ்ரப்பிடம் சொல்லியிருக்கிறார். "தனக்கு Fax மூலம் தகவல் தந்திருப்பின் பார்த்திருக்கலாமே! அடுத்த முறை வரும்போது மறக்காமல் சந்திக்கச்சொல்லுங்கள்" என்றாராம்.  ஆனால், அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் வரவேயில்லை. 

ஒரு கம்பன் விழாவுக்கு வருவதற்கு முன்னர் அவரது பாதுகாப்புக்குறித்து அவ்வளவு தூரம் அக்கறை எடுத்த பாதுகாப்பு அதிகாரிகள், பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் உட்பட அஷ்ரப்பும் பயணித்த அந்த ஹெலிகொப்டர் குறித்த பாதுகாப்பில் எவ்வாறு கோட்டை விட்டனர் என்பதுதான் எனது தீராக்கவலை. கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் அவரது ஜனாசா அடக்கமாகியிருக்கிறது. அவரது மரணம் தொடர்பான விசாரணையும் அடங்கியிருக்கிறது.  ஆனால், அவரது நாமத்தை வைத்து நடக்கும் அரசியலோ அடங்காமல் தொடருகிறது!!! அந்த நாமத்தின் அஸ்தமனத்தில் உதயம்  தோன்றுமா..?

தமிழ்த்தேசியம், ஈழத் தமிழனுக்கு ஒரு நாடு என்றெல்லாம் பேசும் தமிழ்த் தலைவர்கள், ஈழத்து தமிழ் இலக்கியத்திற்காக எதனையும் செய்யவில்லை.  அஷ்ரப் செய்தார். தனது இனத்திற்கான அரசியலும் பேசிக்கொண்டு, ஈழத்து இலக்கியத்தையும் நேசித்தார். எழுத்தாளர்களை அரவணைத்தார். மல்லிகை இலக்கிய இதழுக்கு எத்தனை தமிழ்த்தலைவர்கள் சந்தா செலுத்தி வரவழைத்து வாசித்து ஆதரித்தார்கள்..?  அஷ்ரப் மாத்திரமல்ல அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் அஸ்வரும் மல்லிகையை நேசித்தார். மல்லிகை ஜீவாவை ஆதரித்தார்கள். அஷ்ரப்பின் நான் எனும் நீ என்ற பெரியதொரு கவிதைத்தொகுப்பு அவரது கவியாளுமையை பேசிக்கொண்டிருக்கிறது. அரசியலில் அவரது இழப்பால் நேர்ந்த பெரிய வெற்றிடத்தை அவரது சமூகம் பேசிக்கொண்டிருக்கிறது.  இந்நூல் பற்றி கலைஞர் மு. கருணாநிதி, கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் எம். ஏ. நுஃமான் ஆகியோர் தமது மதிப்புரைகளை வழங்கியிருக்கிறார்கள். 

அஷ்ரப் - போரியல் தம்பதியிருக்கும் ஒரே ஒரு புதல்வன். 
முகம்மது உசைன் - மதீனா உம்மாவுக்கும் அஷ்ரப்தான் ஒரே ஒரு புதல்வன். 
இந்த ஏகபுதல்வன் அஷ்ரப் 16-09-2000 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

இவருடன் கொல்லப்பட்டவர்கள்:
கதிர்காமத்தம்பி - அம்பாறை மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர்.
செல்வி பெரியதம்பி - சுருக்கெழுத்தாளர்.
அஜித் விதானகே - மெய்ப்பாதுகாவலர்.
சந்தன சில்வா - மெய்ப்பாதுகாவலர்.
நிஃமதுல்லாஹ் - தினகரன் அம்பாறை நிருபர்.
ரபீயூடீன் - பொலிஸ் உத்தியோகத்தர்.
சாதீக் - பொலிஸ் உத்தியோகத்தர்.
அஸீஸ் - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன்.
விமானிகள் இருவர், சிப்பந்திகள் மூவர்.

"கவிதை பூவுலகம், அரசியல் முள்ளுலகம். இரண்டும் எதிரெதிரானவை. அரசியல்வாதி கவிஞனாக இருப்பது அல்லது கவிஞன் அரசியல்வாதியாக இருப்பது, வினோதமான நிகழ்வு. நாடாளுபவனே ஏடாளுபவனாகவும் இருப்பது, வரலாற்றில் அபூர்வமாகவே நிகழுகிறது. சங்க காலத்தில் காவலர் சிலர் பாவலராகவும் இருந்திருக்கின்றனர். பின்னர் அமைச்சர் சேக்கிழார், அதிவீரராம பாண்டியன் என்று சிலர். உலக அளவில் மாவோவும் ஹோசிமினும், செனகல் நாட்டு அதிபராக இருந்த செங்கோரும் இலக்கியவரலாற்றிலும் இடம்பெறுபவர்களாக இருந்தனர். நம் காலத்துச் சான்றுகள் தமிழகத்தில் கலைஞர். இலங்கையில் அஷ்ரப்.

அஷ்ரப் அடிப்படையில் ஒரு கவிஞர். எரிமலையாகக் கொந்தளிக்கும் இலங்கையின் சூழல் ஒரு கவிஞனை அரசியல்வாதியாக்கிவிட்டது. கவிஞரின் தொடக்க காலக் கவிதைகளிலிருந்து அண்மைக்காலக்கவிதைகள் வரை ஒன்றாகத்திரட்டித்தரும் இந்தத்தொகுதி அவருடைய பரிமாணத்தையும் பரிணாமத்தையும் பார்க்க உதவுகிறது"  இவ்வாறு தமிழகத்தின் மூத்த கவிஞர் 'கவிக்கோ' அப்துல் ரகுமான், அஷ்ரப்பின் கவிதைகளின் முழுத்தொகுப்பான ' நான் எனும் நீ' என்ற நூல் பற்றி விதந்திருக்கிறார்.

புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகத்தால் இந் நூல் 1999 ஆம் ஆண்டு வெளியானது. " இக்கவிதையை யாத்திட அவன் நாடியபோது தாளாக அமைந்த என் தாய்க்கும் கோலாக அமைந்த என் தந்தைக்கும் " என்று பெற்றவர்களை விளித்து இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் அஷ்ரப். இலங்கையில் தமிழ்ச்சூழலில் கவிஞர்கள் அரசியல்வாதிகளாவது அபூர்வம். சிங்களவர் மத்தியில் டி.பி. இலங்கரத்னா, டி.பி. தென்னக்கோன், குணதாச அமரசேகர, சோமவீர சந்திரசிறி ஆகியோர் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் வளர்ந்து பின்னாளில் அரசியல் செயற்பாட்டாளர்களாக மாறியவர்கள். குணதாச அமரசேகர சிங்கள கடும்போக்காளராக அறியப்படுபவர். இவர் இலங்கை அரசியலில் இன்றும் சர்ச்சைக்குரியவர். இவருடைய "கருமக்காரயோ" என்ற சர்ச்சைக்குரிய கதை திரைப்படமாகவும் வெளியானது. டி.பி இலங்கரத்னாவின் பல நாவல்கள் சிங்கள இலக்கிய உலகில் இன்றும் பேசப்படுபவை. அவரது அம்ப    யஹலுவோ தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. டி.பி. தென்னக்கோன் கலாசார அமைச்சராகவும் பணியாற்றியவர். தேர்தலில் தோற்றபின்னர் தெருவில் நின்று தான் எழுதிய கவிதைப்பிரசுரங்களை இராகத்துடன் பாடியவர். " கவிகொல காரயா" என்ற பெயரும் பெற்றவர்.

இலங்கையில் கவிஞர்களாகவும் அரசியல்வாதிகளாகவும் சில சிங்கள அன்பர்கள் இவ்வாறு திகழ்ந்திருப்பது ஒரு புறமிருக்க, தமிழ்ச்சூழலில் அஷ்ரப் அவர்களின் இலக்கியப்பிரவேசத்தையும் அரசியல் வாழ்வையும் அவதானிக்கலாம். இலக்கியத்தில் குறிப்பாக கவிதைத்துறை அவரது வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது.

அஷ்ரப் எழுதியிருக்கும் 180 இற்கும் மேற்பட்ட கவிதைகள் "நான் எனும் நீ" யில் இடம்பெற்றுள்ளன. ஆழியில் எழுந்த அலைகள், வாழ்த்துக்களும் இரங்கலும், குழந்தைப்பாடல்கள், கவிதைக்கடிதங்கள், இசைப்பாடல்கள் முதலான தலைப்புகளில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் அப்துல்ரகுமான் பதிவுசெய்துள்ள செய்தி சுவாரஸ்யமானது.

" அட்டாளைச்சேனையில் தேசிய மீலாத் விழா (19-06-1997) கவியரங்கத்திற்காகச் சென்றிருந்தேன். அமைச்சர் அஷ்ரப் என் தலைமையில் பாடுகிறார் என அறிந்தபோது, வியப்பு ஏற்பட்டது. கவிதை எழுதத்தெரியாவிட்டாலும் அமைச்சராக இருப்பதனாலேயே கவியரங்கத்திற்கு தலைமைதாங்கும் அமைச்சர்களைக்கண்டவன் நான். அதனால்தான் வியப்பு.

உண்மையில் அமைச்சர் அஷ்ரப்பைத்தான் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். " கவிக்கோ தலைமைதாங்கும் கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்குவதா..?அவர் தலைமையில் பாடுவதற்கு வாயப்புக்கிடைத்தால் அதுவே எனக்குப்பெருமை." என்று அவர் கூறியதாகக்கேட்டபோது அஷ்ரப் அவர்கள் பணிவால் உயர்ந்த மனிதர் என்பதை அறிந்தேன்."

இந்நூலில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் கருத்துக்கள், கவிதையும் அரசியலும் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அவரது குறிப்புகள் அஷ்ரப்பிற்கு மட்டுமல்லாது அனைத்து படைப்பாளிகளுக்கும் பொருந்துவன. அதன் பொதுத்தன்மையிலிருக்கும் செறிவையும் ஆழத்தையும் இங்கு சொல்லியாகவேண்டும். 

" ஆசிரியனின் அந்தஸ்தை கவனத்தில்கொள்ளாது, அவனது படைப்பை மதிப்பிடவேண்டும் என்பது இலக்கிய விமர்சனத்தின் அரிச்சுவடி. ஒரு படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்கியபின் அதன்மீதுள்ள ஆதிக்கத்தை இழந்துவிடுகிறான். அது வாசகனுக்கு உரியதாகின்றது. வாசகன் படைப்பாளியின் ஆளுமையினால் பாதிக்கப்படாது, அந்தப்படைப்பை வாசித்து புரிந்துகொள்ளவும், மதிப்பிடவும் வேண்டும். இதையே ஆசிரியனின் மரணம் (Death of the author)  என பிரெஞ்சு விமர்சகர் றோலன் பார்த் அறிவித்தார். கடந்த இருபது - முப்பது ஆண்டுகளாக இலக்கிய விமர்சன உலகில் இக்கருத்து செல்வாக்குச்செலுத்தி வருகிறது. ஒரு படைப்பை பற்றிய மதிப்பீட்டில் அதன் ஆசிரியரின் ஆளுமைக்கு இடம் இல்லை என்பதே இக்கருத்தின் சாராம்சமாகும்"

அஷ்ரப்பினதும் ஏனைய அரசியல்வாதிகளினதும் அரசியலுக்கு அப்பால், முற்றாக வெளியே நிற்பவர்தான் நுஃமான். இதனை நன்கு தெரிந்திருப்பவர் அஷ்ரப். அவ்வாறிருந்தும் நுஃமானின் கருத்துக்களும் தமது நூலில் இடம்பெறவேண்டும் என விரும்பியிருக்கிறார்.

கிழக்கிலங்கையில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல கவிஞர்களை நன்கு இனம்கண்டு அவர்கள் மீதான மதிப்பீடுகளை முன்வைத்தவர் நுஃமான். 

நான் எனும் நீ நூலில் நுஃமான் எழுதியிருக்கும் அணிந்துரையின் இறுதியில் இடம்பெறும்வரிகள், அஷ்ரப் எம்மத்தியில் இல்லாத சூழலிலும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிதே.

" சுதந்திரத்திற்குப்பின்னரான நமது அரசியல் இலங்கை மக்களை ஆழமாகப்பிளவுபடுத்தி இருக்கிறது. சுரண்டலையும் சமூக முரண்பாடுகளையும் வளர்த்து சமூக நீதியை சமத்துவத்தை புறந்தள்ளி இருக்கின்றது. இனமுரண்பாட்டையும் மோதலையும் உக்கிரப்படுத்தி இருக்கின்றது. நம் வாசற் படிகளை இரத்தத்தால் கறைபடுத்தி இருக்கின்றது. ஆனால், நமது கவிதையோ மனித ஆன்மாவின் குரல் என்ற வகையில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகவும் ஓங்கி ஒலிக்கின்றது. மனிதர்களை ஒன்றுபடுத்தவும், இன ஐக்கியத்தைப்பேணவும், சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றை வளர்க்கவும் சமூக நீதியை நிலைநிறுத்தவும், இரத்தக்கறையைத் துடைத்து, மனிதநேயத்தை அதன்மீது கம்பளமாய் விரிக்கவும் அது நம்மைத் தயார்படுத்துகிறது. நமது அரசியலுக்கும் நமது கவிதைக்கும் இடையிலான இந்த முரண்பாடு மறைந்து நமது அரசியல் நமது கவிதையின் குரலுக்குச் செவிசாய்க்கும் காலம் வரவேண்டும். நண்பர் அஷ்ரப் ஒரு கவிஞராயும் அரசியல்வாதியாயும் இருக்கிறார். அவரது கவிதைகளின் குரல் நமது அரசியல் எதிர்காலத்தைச் செப்பனிட உதவவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு" 

நான் எனும் நீ - 1999 செப்டெம்பர் 26 ஆம் திகதி வெளிவருகிறது. சரியாக ஒருவருடம் நிறைவடைவதற்கு முன்பே 2000 செப்டெம்பர் 16 ஆம் திகதி அஷ்ரப் கொல்லப்படுகிறார். வாசல்படிகளை இரத்தக்கறைகள் முத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அரசியல் சதுரங்கத்தில் நம்மவர் கவிதைகள் மூர்ச்சையாகிக்கிடக்கின்றன. இதுதான் நாம் கடந்துவரும் துன்பியல்காட்சிகள்.

அஷ்ரப் இந்த நூலை வெளியிட ஏறத்தாழ 16 வருடங்கள் காத்திருந்திருந்துள்ளார் என்பது அவருடைய நீண்ட முன்னுரையிலிருந்து தெரிகிறது. ஒரு மனிதனின் வாக்குமூலம் என்ற தலைப்பில், தனது பள்ளிப்பருவகால கவிதைகள் தொடக்கம் கையெழுத்து இதழ்களில் எழுதிப்பயின்றது, கவியரங்கு மேடைகளில் தோன்றி கவிதைகள் பாடியது முதலான செய்திகளையும் சொல்கிறார்.

"எனது பிறப்பால் பலர் மகிழ்ந்திருப்பார்கள். எனது வாழ்வும் பலருக்கு மகிழ்ச்சியூட்டும். சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கலாம். எனினும்கூட எனது மரணத்தில் மானிடம் கலங்குமாக இருந்தால் அது எனக்கு கிடைக்கும் பேரதிர்ஷ்டமாகும். அந்த அதிர்ஷ்டத்தை பணமோ, பதவியோ, பட்டங்களோ தரமுடியாது. எழுத்துக்கள் மாத்திரமே என்னை என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும். ஆகவே மரணிக்கும்வரையில் எழுதவேண்டுமென்று ஆசிக்கின்றேன்" எனவும் பதிந்துவைத்துள்ளார்.

தமது மரணம் பற்றி இந்த நீண்ட முன்னுரையில் இரண்டு பந்திகளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தான் சார்ந்திருக்கும் அரசியலினால் மரணம் எந்தநேரத்திலும் தனது வாசல்படிகளை தட்டும் என்ற குருட்டுணர்வில் அவர் வாழ்ந்திருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. கவிஞராக இருந்தமையால் அந்த மரண அச்சுறுத்தலையும் மறைபொருளாக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்.
தமது மனைவிக்கு நன்றி தெரிவிக்கும்போதும் அவரையறியாமலேயே அந்தச் சொல் வந்துவிழுந்திருக்கிறதா...?

" எனது கவிதைப்பணிகளாலும் சிலவேளை எனது கவிதைகளாலும் எனது அரசியல் நடவடிக்கைகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர் எனது அன்பு மனைவி ஃபேரியல் மாத்திரம்தான். எனது ஆளுமையைச்சீர்படுத்தியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. எனது மனைவியின் பொறுமை இமய மலையையே வென்றுவிடும். அவர் மீது மரணம் வரை எனக்கிருக்கும் மாறாத தூய்மையான அன்பையும் இரக்கத்தையும் கூட இங்கு பதியவேண்டியது மானிடத்திற்குச் செய்யவேண்டிய பெரியதொரு கடமைப்பாடாகும்" என்று எழுதியிருக்கிறார்.

இந்த வரிகளை அஷ்ரப்பின் மரணத்தின்பின்னர் படிக்கும்போது நெகிழ்ந்துவிடுகின்றோம். நான் எனும் அகந்தைக்கு எதிராக குரல்கொடுத்து கவிதை யாத்து, நான் எனும் நீ என்ற தலைப்பில் பெரியதொரு கவிதைத்தொகுப்பினை வரவாக்கிவிட்டுச்சென்றுள்ள அஷ்ரப் பற்றி, 

"நீ விரும்பப்படுவாய், உன் மூச்சில் சமத்துவ நறுமணம் வீசட்டும்
உன்பேச்சில் சகோதரத்துவம் தழைக்கட்டும்
மறு உலகிலும் நீ விரும்பப்படுவாய் "

என்று கவிஞர் வேதாந்தி மு.ஹ. ஷெய்கு இஸ்ஸதீன், 1988 - 10- 23 ஆம் திகதி அஷ்ரப்புக்கு பிறந்த தினக்கவிதை எழுதியிருக்கிறார்.

ஆம்!!! மறுஉலகிலும் விரும்பப்படுபவர்தான் எங்கள் அஷ்ரப். 
அவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியதே!!!
இலக்கிய வாசகர்கள் அஷ்ரப்பின் இந்தக்கவிதை நூலைப்பற்றி மறுவாசிப்புச்செய்வதன்மூலம் இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும், கவிஞனாகவே வாழ விரும்பிய மானுட நேசிப்பாளனை நினைவுகூரலாம்.
(பிற்குறிப்பு: திருமதி ஃபேரியல் அஷ்ரப் அவர்களை அண்மையில் மெல்பனில் சந்தித்தேன். அவரிடமும் அஷ்ரப் பற்றிய இந்தப்பதிவை வழங்கினேன்) 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R