ஆய்வு: மில்மன் பாரி (Milmanparry) – ஆல்பட் பெட்ஸ் லார்டின் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு – ஒர் அறிமுகம்! - முனைவர். கோ. புஷ்பவள்ளி -
மொழியை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் கலை பல்வேறு வடிவங்களையுடையது. அவை வாய்மொழியாகவும் பாட்டு வடிவமாகவும் கதை வடிவமாகவும் நாடகமாகவும் உரைநடை வடிவமாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். மனித இன நாகரிக வளர்ச்சியில் நெடுங்காலமாகப் படைக்கப்பட்டுக் கலைத் தன்மையோடு கூடியவையை இலக்கியமாக கருதும் எண்ணப்போக்கு உருவாகியதை உணர முடிகிறது. ‘இலக்கியம் எழுத்து வடிவத்தை வெளிப்படுத்தும் கலை’ என இலக்கிய இயல்பு நூலாசிரியர் விளக்கமளிக்கிறார். ஆனால் இன்றளவும் மக்களோடு கலந்த காவியமாகத் திகழும் நாட்டார் வழக்காற்றில் வாய்மொழி மரபான பாடல்களும் (Oral literature) இவையும் வாய்மொழி இலக்கியமாகவே கருதப்படுகின்றன. எனவே ஏட்டிலக்கிய வடிவத்திற்கு மூலகர்த்தாவாக இருப்பது வாய்மொழி இலக்கியமே என்பதை நம்மால் மறுக்க முடியாது. இவ்வாறு வாழ்க்கையின் விழுமியமாக விளங்குகின்ற இலக்கியங்களை 20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு ஆராயும் நிலை இலக்கிய உலகில் தோற்றம் பெற்றது. இத்தகைய ஓப்பியல் ஆராய்ச்சியின் விளைவாக ஏட்டிலக்கியத்திற்கு அடிப்படையாக வாய்மொழி இலக்கியமே அடிப்படைத் தரவாக அமைந்தது என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.