எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றுகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
ஜனவரி 19 எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:
"தமிழ் உருவாக்கிய முக்கியமான பத்து எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய மகத்தான எழுத்தாளர்."
ஜெயமோகனின் விமர்சனப் பார்வையில் இவ்விதமான முக்கியமானதோர் இடத்தைப்பிடித்துள்ள எழுத்தாளர் அவர். ஆனால் ஜெயமோகனின் மேற்படி கூற்றில் எனக்குப் பெரிதும் உடன்பாடில்லை. 'தமிழ் உருவாக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய சிறந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர்.' என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமமில்லை.
ஜெயமோகன் அதிகமாக வாசிப்பவர். அதிகமாக எழுதுபவர். அவரது வாசிப்பும், எழுத்து வேகமும் பிரமிக்க வைப்பவை. அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது. ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை.