கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (4) - ஜோதிகுமார் -
4
இதே போன்று, கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில், மற்றுமொரு முக்கிய பாத்திரம் - வெலண்டைன். அதி அற்புதமான சித்திரிப்பு எனலாம். கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் - முகம் வேறு பூசணியைப் போல் - கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்… “உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம், கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.
“விடயத்தை பாருங்கள்… என் மனைவி ஓடி விட்டாள், என்னை விட்டு… புறாக்கள் தான் காரணம்… நான் என்ன செய்ய…”
“அவள் ஏதோ ஒரு ஜிம்னேசியத்தில் படித்தவள்தான்… தெரியாதா… இளம், பதின்வயது நங்கைகளை…ஏராளமான காதல் காவியங்களை படித்துக் குவித்திருப்பாள் போலும் - நண்பிகளுடன். எனது பெயரோ, ‘வெலண்டைன்’. இது போதாதா – அவள் தன் கற்பனைக் குதிரையை தட்டி விட. அதாவது, என்னை அவள் காதலித்திருக்க மாட்டாள்… என் பெயரைத்தான் காதலித்திருப்பாள் - ஆனால், பாருங்கள், ‘வெலண்டைன்’ என்ற காந்தர்வ பெயருக்கும் எனக்கும் உள்ள ஒட்டுறவை… அட கடவுளே…”
இப்படியாய் கிளிம்முடன் ஏனோ அவன் மனம் விட்டு பேசத் தொடங்குகிறான் - தனித்து இருப்பதால் போலும்!. பின் அவன், தான் புறாக்கள் வளர்ப்பது ஏன் என்பதையும் மிக கிரமமாக கிளிம்முக்கு எடுத்துரைக்கின்றான்.
“பாருங்கள்… நான், ஒரு அசடு… முட்டாள்… கற்பனை செய்யுங்கள்… தெளிவான நீல வானம்… அதன் கீழே நான்…என் புறாக்களை மேலே பறக்க விடுகிறேன்… அவை வட்டமடித்து வட்டமடித்து உயர, உயர வானில் படிப்படியாக பறந்து ஏறுகின்றன… மேலே… மேலே… அவற்றுடன் என் பாவப்பட்ட ஆத்மாவும் கூடவே சிறகடித்துப் பறக்கின்றது, அவற்றை தொடர்ந்து… விளங்குகிறதா… என் ஆன்மா… இங்கேத்தான் அந்தப் புள்ளி – அதாவது… என் இதயத்தை வெடிக்க செய்யும், அப்புள்ளி… மயக்கம் கூட வந்துவிடும்…அப்போது ஒரு வகை அச்சம் வேறு எழுகிறது… அவை வராவிட்டால்…திரும்பாவிட்டால்”