ராசமணியும் பள்ளிக்கூடமும் - முனைவர் பெ.இசக்கிராஜா , உதவிப்பேராசிரியர் -
காலங்காலமாக ஆரம்பநிலை பள்ளியின் சுவர்கள் பாசிக் கரைபடிந்த சுவர்களோடு காட்சியளித்தன. மேற்கூரை ஒழுகும் வண்ணமாக உடைந்த ஓடுகளாய் சொருகியிருந்தன. பள்ளியின் வலது புறம் ஆசிரியர்களுக்கென்று.. ஒரே ஒரு கழிவறை மட்டும் அதுவும் நிரந்தப் பூசனம் பூத்ததாய் நிராகரிக்கப்பட்டிருந்தது. கழிவறையை ஒட்டி உயரமாக வளர்ந்து நின்ற ஒற்றை புளியமரம். புளியமரத்திற்கென்று தனி வரலாறும் உண்டு.. புளிய மரத்தின் கதையைக் கேட்கும் போதெல்லாம் ராசமணி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு.
சக ஆசிரியர்களுக்கும் அவரிடம் படித்த மாணவர்களுக்கும் ஊர்காரர்களும் அவ்வப்போது இக்கதையை வாயில் போட்டு மெல்வதுண்டு. குப்பை மேடாகக் கிடந்த பள்ளியை சீரமைக்கத் தொடங்கிய காலம் என்பது, ராசமணி பள்ளிக்கு ஆசிரியராக பொறுப்பேற்று வந்த நாள் தான் பள்ளிக்கு விடிவுகாலம் ஆரம்பித்தன என்பது தான் அன்றைய அவ்வூரின் வரலாறு. கிழக்கு எப்போது விடியும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் குறியீடு. ஆனால் மனிதப்பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டைத் தாண்டித்தான் அவ்வூரின் ஒரு நுழைவாயில். வழிநெடுக புன்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருக்கும் ராஜபாட்டை தான் அவ்வூரின் கிழக்கு எல்லை. மேற்கின் எல்லையாக சுந்தரநாச்சியம்மன் கோயில் இருக்கும். வடக்கேயும் தெற்கேயும் கழனிகளும் தோப்புகளுமே எல்லைகளாக விரிவடைந்திருக்கும்.
எங்கும் பச்சை வண்ணம் வாழ் சுழற்றியபடியே இருந்தது. தெற்கு தேயாமலும் வடக்கு வாடாமலும் பார்ப்பதற்கே குளிர்ச்சியாகவும் ரசிப்பதாகவும் இருந்தது. வயகாட்டுக்குச் செல்லவும் நாற்று நடவ, தண்ணீர் பாய்ச்ச என எல்லாவற்றிற்கும் நாச்சியாத்தாளை வழிபட்டு பிள்ளையார் சுழி யிட்டுச் செல்வது தான் வழக்கம். முப்போகமும் செழித்து வளர நாச்சியாத்தா எப்போதும் குறை வைத்ததில்லை அவ்வூருக்கு ஆகவே நாச்சியம்மாளை போற்றும் விதமாக பெண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும் சுந்தரநாச்சியார், வள்ளி, வீரநாச்சி, வீராத்தாள் என பெயர் சூட்டுவது வழக்கமாகவே தொன்று தொட்டு வருகின்றது.