ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான விவேகி! தேர்ந்த வாசகர்களையும் ஆற்றல்மிக்க படைப்பாளிகளையும் உருவாக்கிய சிற்றிதழ்! - முருகபூபதி -
ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
இன, மத, கட்சி சார்பற்ற இதழ் என்ற மகுட வாக்கியத்துடன் விவேகி இதழ், இலக்கம் 32, கண்டி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியிலிருந்து 1960 களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. விவேகியின் கௌரவ ஆசிரியர்: மு.வி. ஆசிர்வாதம், நிர்வாக ஆசிரியர்: மாட்டின் . ஆசிரியர்கள்: செம்பியன்செல்வன், செங்கை ஆழியான். இதனை வெளியிட்டவர்கள் மட்டுமல்ல, இதில் எழுதிய பலரும் தற்போது நினைவுகளாகிவிட்டனர். சிலர் பின்னாளில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளாகவும் விளங்கினர். சிலர் புலம்பெயர்ந்தனர்.