காலத்தால் அழியாத கானம்: "மயக்கும் மாலைப்பொழுதே நீ போ" - ஊர்க்குருவி -
குலேபகாவலி (1955) திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடலைப்பாடியுள்ளவர்கள் ஜிக்கி & ஏ.எம்.ராஜா. இப்பாடலை எழுதியவர் எழுத்தாளர் விந்தன். கூண்டுக்கிளிக்காக எழுதிய பாடலிது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். ஆனால் இப்பாடல் இடம் பெற்றதோ குலேபகாவலி திரைப்படத்தில். அதன் இசையமைப்பாளர் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள். அதனால் இப்பாடலின் இசையையும் அவர்கள் பெயரில் போட்டுவிட்டார் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிக்ஸ்சர்ஸின் உரிமையாளரான டி.ஆர்.ராமண்ணா. அதுபோல் இப்பாடலை எழுதிய விந்தனின் பெயரும் மறைக்கப்பட்டு குலேபகாவலி பாடலுக்குப் பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸின் பெயரிலேயே இப்பாடலும் வெளியானது.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. உச்சநட்சத்திரமாக எம்ஜிஆர் உருவாகக் காரணமாகவிருந்த திரைப்படங்களிலொன்று இத்திரைப்படம். அக்காலகட்டத்தில் இடம் பெற்றுள்ள இத்திரைப்படத்தில் இப்பாடற் காட்சியின்போது நடிகை ஜி.வரலட்சுமியும், எம்ஜிஆரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்திருப்பார்கள். கம்பீரமும் வனப்பும் மிக்க ஜி.வரலட்சுமியும் . வசீகரம் மிக்க எம்ஜிஆரும் பாடலின் இசைக்கேற்ப நிதானமாகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
இலங்கையில் எம்ஜிஆரின் பல பழைய திரைப்படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. பாக்தாத்திருடன், ஒளிவிளக்கு அத்தகைய திரைப்படங்கள். இத்திரைப்படம் கொழும்பில் பதின்மூன்றாவது தடவையாகத் திரையிடப்பட்டபோது 60 நாட்களைக் கடந்து ஓடியது நினைவிலுள்ளது. அவ்விதமே பத்திரிகை விளம்பரத்தில் போட்டிருந்தார்கள். கொழும்பில் ஜெஸீமா திரையரங்கில் என்று நினைவு.