‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஒரு தலைவன் தாம் சார்ந்த மக்களுக்கு நல்லதைச் சொல்பவனாக இருக்க வேண்டும்; சொன்ன நல்லதைச் செய்பவனாக இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாதவன், ஒரு சிறந்த தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நல்லனவற்றைச் சொன்னது மட்டுமன்றி, தாம் சொன்ன நல்லனவற்றை நடைமுறைப்படுத்தி, வாழ்ந்து காட்டிய ஒரு தலைமகனை நினைவு கூருவதற்கென்று நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம்.
சராசரி மனிதர்கள் போலன்றி, மாறுபட்ட விதத்தில் சிந்திக்கவும் செயற்படவும் துணிச்சல் பெற்றவர்களால்தான், மனித முன்னேற்றம் சாத்தியமாகின்றது. அத்தகைய சிந்தனைத் தெளிவும், செயற் திறனும் கொண்டவராக வாழ்ந்துவந்த பிரேம்ஜி அவர்கள், சமூகம், இலக்கியம், அரசியல் ஆகிய முக்கிய தளங்களில் ஆற்றிய பணிகள் குறித்துக் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால், இங்கு தரப்பட்ட நேரத்தை மனதிற்கொண்டு எனது கருத்துகளை “பிரேம்ஜியும் நானும்” என மிகச் சிக்கனமாகவும், “பிரேம்ஜியும் அவரது அரசியல் நிலைப்பாடும்” எனச் சற்றே விரிவாகவும் வகைப்படுத்தி உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
பிரேம்ஜி என்றே பெரிதும் அறியப்பட்டு வந்தவரான ஞானசுந்தரம் அவர்களை நான் ஏற்கனவே அறிந்திருந்த போதிலும், 1975ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்போது தான் முதன் முதலாக நேரில் கண்டேன். நன்கு திட்டமிடப்பட்டு அன்றைய தினம் விளைவிக்கப்பட்ட தடையூறுகளைத் தாண்டிக்கடந்த மாநாட்டு ஏற்பாடுகள், துணிச்சலான செயற்பாடுகள், திடமும் தீட்ஷண்யமும் மிகுந்த உரையாடல்கள், இனத்துவ ஒருமைப்பாட்டை இலக்காகக்கொண்டு முன்யோசனையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 12 அம்சத் திட்டங்கள் போன்றன ஊடாக பிரேம்ஜி என்ற ஆளுமையின் பிரமாண்டத்தையும், அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த மனிதர் என்ற உண்மையையும் அன்று நான் நேரில் கண்டுகொண்டேன்.