சுவாமி விபுலானந்தர்: இல்லறத்தைத் துறந்தார் இன்பத்தமிழ் இணைத்தார்! ஜூலை 19 சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்! - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து -
"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "
என்னும் மனப்பாங்கினைப் பெற்று - ' என்கடன் பணி செய்து கிடப் பதே ' என்னும் விசாலித்த நோக்குடன் ; இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.
காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும் , என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்றால் - அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவற த்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம்.1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் , மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் , உள்ளத்தாலும். தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து - துறவியாய் பிறப்பெடுத்த நாள் எனலாம்.